“இயேசுவை நம்புங்கள்”—மீட்பு கிடைப்பதற்கு இயேசுவை நம்பினால் போதுமா?
பைபிள் தரும் பதில்
மனிதர்களுடைய பாவங்களைப் போக்குவதற்கு இயேசு இறந்தார் என்று கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். (1 பேதுரு 3:18) ஆனால், இயேசுதான் மீட்பர் என்று நம்பினால் மட்டுமே மீட்பு கிடைத்துவிடாது. இயேசுதான் “கடவுளுடைய மகன்” என்று பேய்களுக்குக்கூடத் தெரியும். ஆனால், பேய்களுக்கு அழிவுதான் காத்திருக்கிறது, மீட்பு அல்ல.—லூக்கா 4:41; யூதா 6.
மீட்பு கிடைப்பதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?
நம்முடைய பாவங்களைப் போக்குவதற்காக இயேசு தன் உயிரைத் தியாகம் செய்ததை நீங்கள் நம்ப வேண்டும். (அப்போஸ்தலர் 16:30, 31; 1 யோவான் 2:2) அப்படியென்றால், இயேசு நிஜமாகவே வாழ்ந்தார் என்பதையும், அவரைப் பற்றி பைபிள் சொல்கிற எல்லாமே உண்மைதான் என்பதையும் நீங்கள் நம்ப வேண்டும்.
பைபிள் உண்மையிலேயே என்ன சொல்கிறது என்று கற்றுக்கொள்ளுங்கள். (2 தீமோத்தேயு 3:15) அப்போஸ்தலன் பவுலும் சீலாவும் ஒரு சிறைக்காவலனிடம், ‘எஜமானாகிய இயேசுவை நம்பு, அப்போது நீ . . . மீட்புப் பெறுவாய்’ என்று சொன்னார்கள். பிறகு, அவனுக்கு “யெகோவாவின் வார்த்தையை” a கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார்கள். (அப்போஸ்தலர் 16:31, 32) அப்படியென்றால், அந்த சிறைக்காவலனால் கடவுளுடைய வார்த்தையை சரியாகப் புரிந்துகொள்ளாமல் இயேசுவை நம்பியிருக்க முடியாது. வேதவசனங்களில் இருக்கும் விஷயங்களை அவன் திருத்தமாகத் தெரிந்துகொள்ள வேண்டியிருந்தது.—1 தீமோத்தேயு 2:3, 4.
மனம் திருந்துங்கள். (அப்போஸ்தலர் 3:19) முன்பு நீங்கள் ஒருவேளை கெட்ட விஷயங்களை யோசித்திருக்கலாம் அல்லது செய்திருக்கலாம். அதற்காக நீங்கள் இப்போது மிகவும் வருத்தப்பட வேண்டும், அதாவது மனம் திருந்த வேண்டும். கடவுளுக்குப் பிடிக்காத பழக்கவழக்கங்களை விட்டுவிட்டு, ‘மனம் திருந்தியதைச் செயலில் காட்டும்போது,’ நீங்கள் மாறியிருப்பது எல்லாருக்கும் தெரியவரும்.—அப்போஸ்தலர் 26:20.
ஞானஸ்நானம் எடுங்கள். (மத்தேயு 28:19) தன்னுடைய சீஷர்களாக ஆகிறவர்கள் ஞானஸ்நானம் எடுப்பார்கள் என்று இயேசு சொன்னார். முன்பு குறிப்பிடப்பட்ட சிறைக்காவலனும் ஞானஸ்நானம் எடுத்தான். (அப்போஸ்தலர் 16:33) அதேபோல், அப்போஸ்தலன் பேதுரு இயேசுவைப் பற்றிய உண்மையை ஒரு பெரிய கூட்டத்துக்குக் கற்றுக்கொடுத்தபோது, “அவர் சொன்னதைச் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் எடுத்தார்கள்.”—அப்போஸ்தலர் 2:40, 41.
இயேசுவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியுங்கள். (எபிரெயர் 5:9) இயேசு கட்டளை கொடுத்த ‘எல்லாவற்றையும் கடைப்பிடிக்கிறவர்கள்’ இயேசுவைப் பின்பற்றுவதைத் தாங்கள் வாழும் விதத்தின் மூலம் காட்டுவார்கள். (மத்தேயு 28:20) அவர்கள் ‘கடவுளுடைய வார்த்தையைக் கேட்பது’ மட்டுமல்லாமல், “அந்த வார்த்தையின்படி செய்கிறவர்களாகவும்” இருப்பார்கள்.—யாக்கோபு 1:22.
கடைசிவரை சகித்திருங்கள். (மாற்கு 13:13) மீட்புப் பெறுவதற்கு இயேசுவின் சீஷர்கள் “சகித்திருப்பது அவசியம்.” (எபிரெயர் 10:36) அப்போஸ்தலன் பவுல் இதற்கு ஒரு நல்ல உதாரணம். கிறிஸ்தவராக மாறிய நாள்முதல் இறக்கும்வரை, இயேசுவின் போதனைகளுக்கு அவர் அப்படியே கீழ்ப்படிந்தார், கடவுளுக்கு உண்மையாக இருந்தார்.—1 கொரிந்தியர் 9:27.
“பாவிகளின் ஜெபம்” உதவி செய்யுமா?
சில மதங்களில், “பாவிகளின் ஜெபம்,” “இரட்சிப்பின் ஜெபம்” போன்ற ஜெபங்களை மக்கள் செய்கிறார்கள். அப்படிப்பட்ட ஜெபங்களைச் செய்கிறவர்கள், தாங்கள் பாவிகள் என்பதை ஒத்துக்கொள்கிறார்கள், தங்களுடைய பாவங்களுக்காக இயேசு இறந்ததை நம்புகிறார்கள். அதோடு, தங்கள் இதயத்தில் அல்லது வாழ்க்கையில் ‘வரும்படி’ இயேசுவை அழைக்கிறார்கள். ஆனால், அப்படிப்பட்ட “பாவிகளின் ஜெபத்தை” பற்றி பைபிள் குறிப்பிடுவதும் இல்லை, அதை சிபாரிசு செய்வதும் இல்லை.
“பாவிகளின் ஜெபத்தில்” இருக்கிற வார்த்தைகளைச் சொன்னால் கண்டிப்பாக மீட்பு கிடைக்கும் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், ஜெபம் செய்தால் மட்டுமே ஒருவருக்கு மீட்பு கிடைத்துவிடாது. ஏனென்றால், பாவ இயல்பின் காரணமாக நாம் அடிக்கடி தவறுகள் செய்கிறோம். (1 யோவான் 1:8) அதனால்தான், பாவங்களுக்கு மன்னிப்பைக் கேட்டுத் தவறாமல் ஜெபம் செய்யும்படி இயேசு தன் சீஷர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். (லூக்கா 11:2, 4) அதுமட்டுமல்ல, மீட்பின் வழியில் போய்க்கொண்டிருந்த சில கிறிஸ்தவர்கள்கூட கடவுளைவிட்டு விலகிப்போனதால் மீட்பைப் பெறும் வாய்ப்பை இழந்துவிட்டார்கள்.—எபிரெயர் 6:4-6; 2 பேதுரு 2:20, 21.
“பாவிகளின் ஜெபம்” எப்படி ஆரம்பமானது?
இதைப் பற்றி சரித்திர நிபுணர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. புராட்டஸ்டன்ட் மத சீர்திருத்தத்தின்போது இந்தப் பாரம்பரியம் ஆரம்பமானதாக சிலர் சொல்கிறார்கள். ஆனால், 18-வது நூற்றாண்டிலும் 19-வது நூற்றாண்டிலும் புதிய மத கருத்துகள் தோன்றியபோது இது ஆரம்பமானதாக மற்றவர்கள் நம்புகிறார்கள். எப்படியிருந்தாலும் சரி, பைபிள் இந்தப் பழக்கத்தை ஆதரிப்பது கிடையாது. சொல்லப்போனால், இதுபோல் ஜெபம் செய்யக் கூடாது என்றுதான் பைபிள் சொல்கிறது.
a யெகோவா என்பது கடவுளுடைய பெயர் என்று பைபிள் சொல்கிறது.