Skip to content

இயேசு பார்ப்பதற்கு எப்படி இருந்தார்?

இயேசு பார்ப்பதற்கு எப்படி இருந்தார்?

பைபிள் தரும் பதில்

 இயேசு பார்ப்பதற்கு எப்படி இருந்தார் என்று யாருக்குமே சரியாகத் தெரியாது. ஏனென்றால், அவருடைய தோற்றத்தைப் பற்றி பைபிளும் விவரிப்பதில்லை. இதிலிருந்து இயேசுவுடைய தோற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை என்பது தெரிகிறது. ஆனாலும், இயேசு எப்படி இருந்திருப்பார் என்று பைபிளிலிருந்து ஓரளவு தெரிந்துகொள்ள முடியும்.

  •   முகத்தோற்றம்: இயேசுவின் அம்மா ஒரு யூதராக இருந்ததால், பொதுவாக யூதர்களுக்கு இருந்த முகச் சாயல் இவருக்கும் இருந்திருக்கலாம். (எபிரெயர் 7:14) மற்றவர்களிலிருந்து அவர் ரொம்ப வித்தியாசமாக இருந்திருக்கவும் வாய்ப்பில்லை. அதனால்தான் ஒரு சமயம், யாருடைய கண்ணிலும் படாமல் கலிலேயாவிலிருந்து எருசலேமுக்கு ரகசியமாக அவரால் போக முடிந்தது. (யோவான் 7:10, 11) தன்னுடைய நெருங்கிய சீஷர்களிடமிருந்துகூட அவர் ரொம்ப வித்தியாசமாகத் தெரிந்திருக்க மாட்டார். அதனால்தான் அவரைக் கைது செய்ய ஆயுதங்களோடு வந்த கும்பலுக்கு அவரை யூதாஸ் இஸ்காரியோத் அடையாளம் காட்ட வேண்டியிருந்தது.—மத்தேயு 26:47-49.

  •   முடி: இயேசுவுக்கு நீளமான முடி இருந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், “ஓர் ஆணுக்கு நீளமான தலைமுடி இருப்பது அவனுக்கு வெட்கக்கேடு” என்று பைபிள் சொல்கிறது.—1 கொரிந்தியர் 11:14.

  •   தாடி: இயேசு தாடி வைத்திருந்தார். “ஆண்கள் தாடியை வெட்டி அலங்கோலமாக்கக் கூடாது” என்ற யூதச் சட்டத்தை இயேசு கடைப்பிடித்தார். (லேவியராகமம் 19:27; கலாத்தியர் 4:4) அதோடு, இயேசுவுக்கு வரப்போகும் துன்புறுத்தலைப் பற்றிய பைபிள் தீர்க்கதரிசனத்தில், அவருடைய தாடியைப் பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறது.—ஏசாயா 50:6.

  •   உடல்: இயேசு பலசாலியாக இருந்திருப்பார் என்பதற்கு நிறைய அத்தாட்சிகளை சொல்லலாம். உதாரணத்துக்கு, ஊழியம் செய்வதற்காக அவர் பல மைல் தூரம் நடந்தார். (மத்தேயு 9:35) அவர் இரண்டு முறை யூதர்களுடைய ஆலயத்தைச் சுத்தப்படுத்திய சமயத்தில், காசு மாற்றுபவர்களுடைய மேஜைகளைக் கவிழ்த்து போட்டு, ஆடு மாடுகளைச் சாட்டையால் விரட்டினார். (லூக்கா 19:45, 46; யோவான் 2:14, 15) “[இயேசுவுக்கு] கட்டான உடலும் நல்ல ஆரோக்கியமும் இருந்ததையே சுவிசேஷ பதிவுகள் முழுவதும் சுட்டிக்காட்டுகின்றன” என்று மெக்லின்டாக் மற்றும் ஸ்ட்ராங்கின் சைக்ளோப்பீடியா கூறுகிறது.—தொகுதி IV, பக்கம் 884.

  •   முகபாவனை: இயேசு கனிவும் கரிசனையும் உள்ளவராக இருந்தார். இது அவருடைய முகபாவனையிலேயே பளிச்சென்று தெரிந்தது. (மத்தேயு 11:28, 29) ஆறுதலுக்காகவும் உதவிக்காகவும் எல்லா விதமான மக்களும் அவரைத் தேடி வந்தார்கள். (லூக்கா 5:12, 13; 7:37, 38) குழந்தைகள்கூட அவரிடம் போவதற்குப் பயப்படவில்லை.—மத்தேயு 19:13-15; மாற்கு 9:35-37.

இயேசுவின் தோற்றத்தைப் பற்றிய தவறான கருத்துகள்

 தவறான கருத்து: வெளிப்படுத்துதல் புத்தகம், இயேசுவின் முடியைக் கம்பளிக்கும் அவருடைய பாதத்தை ‘தகதகக்கும் சுத்தமான செம்புக்கும்’ ஒப்பிட்டுச் சொல்வதால், அவர் ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவராகத்தான் இருக்க வேண்டும் என்று சிலர் விடாப்பிடியாகச் சொல்கிறார்கள்.—வெளிப்படுத்துதல் 1:14, 15.

 உண்மை: வெளிப்படுத்துதல் புத்தகத்தில் இருக்கிற விஷயங்கள், “அடையாளங்கள்” மூலமாக கொடுக்கப்பட்டிருக்கின்றன. (வெளிப்படுத்துதல் 1:1) உயிர்த்தெழுந்த பிறகு இயேசுவுக்கு இருந்த குணங்களை விளக்குவதற்குத்தான் வெளிப்படுத்துதல் புத்தகத்தில் அவருடைய முடியையும் பாதங்களையும் பற்றி இப்படி அடையாள மொழியில் விவரிக்கப்பட்டிருக்கிறது. பூமியில் இருந்தபோது அவருடைய தோற்றம் எப்படி இருந்தது என்பதை இது விவரிக்கவில்லை. வெளிப்படுத்துதல் 1:14-ல் இயேசுவுடைய “தலைமுடி வெண்கம்பளியைப் போலவும், வெண்பனியைப் போலவும் வெள்ளையாக இருந்தது” என்று சொல்லப்பட்டிருக்கிறது. இது, அவருடைய முடி வெள்ளையாக இருந்தது என்பதைக் காட்டுகிறதே தவிர, சுருட்டையா இல்லையா என்பதைக் காட்டவில்லை. முதிர் வயதினால் பெற்றுக்கொண்ட ஞானத்துக்கு இது அடையாளமாக இருக்கிறது.—வெளிப்படுத்துதல் 3:14.

 இயேசுவின் பாதங்கள் “உலையில் தகதகக்கும் சுத்தமான செம்பைப் போல் இருந்தன.” (வெளிப்படுத்துதல் 1:15) அதோடு, அவருடைய முகம் “நடுப்பகலில் பிரகாசிக்கிற சூரியனைப் போல் இருந்தது.” (வெளிப்படுத்துதல் 1:16) எந்த இனத்தவருடைய நிறமும் இந்த விவரிப்போடு ஒத்துப்போகாது. அதனால், இந்தத் தரிசனம் அடையாள அர்த்தத்தில்தான் சொல்லப்பட்டிருக்க வேண்டும். உயிர்தெழுப்பப்பட்ட இயேசு “அணுக முடியாத ஒளியில் குடிகொண்டிருப்பவர்” என்பதைத்தான் இது காட்டுகிறது.—1 தீமோத்தேயு 6:16.

 தவறான கருத்து: இயேசு மெலிந்துபோய் பலவீனமாக இருந்தார்.

 உண்மை: இயேசு தைரியமானவராக பலசாலியாக இருந்தார். உதாரணத்துக்கு, அவரைக் கைது செய்ய ஆயுதங்களோடு ஒரு கும்பல் வந்தபோது, தன்னைத் தைரியமாக அடையாளம் காட்டினார். (யோவான் 18:4-8) தச்சு வேலைக்கான கருவிகளைப் பயன்படுத்தி அவர் வேலை செய்திருக்கிறார் என்றால், நிச்சயம் அவர் பலசாலியாக இருந்திருக்க வேண்டும்.—மாற்கு 6:3.

 ‘பிறகு ஏன் சித்திரவதைக் கம்பத்தைத் தூக்கிக்கொண்டு போவதற்கு அவருக்கு உதவி தேவைப்பட்டது? அவரோடு மரக்கம்பத்தில் அறையப்பட்ட மற்றவர்கள் இறப்பதற்கு முன்பே அவர் ஏன் இறந்தார்?’ என்றெல்லாம் சிலர் கேட்கலாம். (லூக்கா 23:26; யோவான் 19:31-33) இயேசுவை மரக்கம்பத்தில் அறைவதற்கு முன்பே அவருடைய தெம்பெல்லாம் போயிருந்தது. ஏனென்றால், ராத்திரி முழுவதும் அவர் தூங்கவே இல்லை. அதோடு, அவர் ரொம்பவே மனவேதனையில் இருந்தார். (லூக்கா 22:42-44) ராத்திரியில் யூதர்கள் அவரை ரொம்ப மோசமாக நடத்தினார்கள். மறுநாள் காலையில் ரோமர்கள் அவரை அடித்து துன்புறுத்தினார்கள். (மத்தேயு 26:67, 68; யோவான் 19:1-3) அவர் சீக்கிரமாக இறந்ததற்கு இதெல்லாம்தான் காரணமாக இருந்திருக்கும்.

 தவறான கருத்து: இயேசுவுடைய முகம் எப்போதும் சோகமாக, வாடிப்போய் இருந்தது.

 உண்மை: இயேசு தன்னுடைய பரலோகத் தகப்பனான யெகோவாவின் குணங்களை அப்படியே வெளிக்காட்டினார். யெகோவா “சந்தோஷமுள்ள கடவுள்” என்று பைபிள் சொல்கிறது. (1 தீமோத்தேயு 1:11; யோவான் 14:9) சொல்லப்போனால், எப்படி சந்தோஷமாக இருக்கலாம் என்று மற்றவர்களுக்கு அவர் கற்றுக்கொடுத்தார். (மத்தேயு 5:3-9; லூக்கா 11:28) இயேசுவின் முகத்தில் பெரும்பாலும் சந்தோஷம்தான் பளிச்சிட்டது என்பதை இந்த உண்மைகள் காட்டுகின்றன.