கடவுள் எங்கும் இருப்பார், எதிலும் இருப்பார் என்பது உண்மையா?
பைபிள் தரும் பதில்
கடவுள் எங்கும் இருப்பார், எதிலும் இருப்பார் என்று பைபிள் கற்பிப்பது இல்லை. அதற்குப் பதிலாக, கடவுள் ஒரு நிஜ நபர், குடியிருக்க அவருக்கென்று ஒரு தனி இடம் இருக்கிறது என்று அது கற்பிக்கிறது. அதுமட்டுமல்ல, கடவுளால் எல்லாவற்றையும் பார்க்க முடியும், எங்கிருந்து வேண்டுமானாலும் செயல்பட முடியும் என்றும் அது கற்பிக்கிறது.—நீதிமொழிகள் 15:3; எபிரெயர் 4:13.
கடவுளுடைய உருவம்: கடவுள் ஓர் ஆவி நபராக இருக்கிறார். (யோவான் 4:24) மனிதர்களால் அவரைப் பார்க்க முடியாது. (யோவான் 1:18) பைபிளில் பதிவுசெய்யப்பட்டுள்ள எல்லா தரிசனக் காட்சிகளும் அவர் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருப்பதாகவே காட்டுகின்றன. அவர் எல்லா இடத்திலும் இருப்பதாக ஒருபோதும் காட்டுவதில்லை.—ஏசாயா 6:1, 2; வெளிப்படுத்துதல் 4:2, 3, 8.
கடவுளுடைய குடியிருப்பு: வானத்தையும் தாண்டி... மனிதக் கண்களுக்கு அப்பாற்பட்ட ஒரு இடத்தில் கடவுள் குடியிருக்கிறார். ‘பரலோகம்’ என்ற அந்த இடத்தில், கடவுள் ‘குடியிருப்பதற்கென்று’ ஒரு இடம் இருக்கிறது. (1 ராஜாக்கள் 8:30) ஒருசமயம், “தேவதூதர்கள் யெகோவாவின் a முன்னால் வந்து நின்றார்கள்” என்று பைபிள் சொல்கிறது; அப்படியானால், கடவுளுக்கென்று ஒரு தனி இடம் இருக்கிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.—யோபு 1:6.
கடவுள் எல்லா இடத்திலும் இல்லையென்றால், தனிப்பட்ட விதத்தில் அவரால் என்மேல் அக்கறை காட்ட முடியுமா?
முடியும். ஒவ்வொரு நபர்மேலும் அவர் அக்கறையாக இருக்கிறார். பரலோகத்தில் குடியிருந்தாலும், பூமியில் தனக்குப் பிரியமாக நடக்க உள்ளப்பூர்வமாக விரும்புகிறவர்களை உன்னிப்பாகக் கவனிக்கிறார், அவர்களுக்காக நிறைய காரியங்களைச் செய்கிறார். (1 ராஜாக்கள் 8:39; 2 நாளாகமம் 16:9) தன்னை உண்மையாக வணங்குபவர்களிடம் யெகோவா எப்படிக் கரிசனையாக நடந்துகொள்கிறார் என்று பாருங்கள்:
ஜெபம் செய்யும்போது: நீங்கள் ஜெபம் செய்கிற அந்த நொடியே யெகோவாவால் அதைக் கேட்க முடியும்.—2 நாளாகமம் 18:31.
மனச்சோர்வாய் இருக்கும்போது: “உள்ளம் உடைந்துபோனவர்களின் பக்கத்திலேயே யெகோவா இருக்கிறார். மனம் நொந்துபோனவர்களை அவர் காப்பாற்றுகிறார்.”—சங்கீதம் 34:18.
வழிநடத்துதல் தேவைப்படும்போது: யெகோவா தன் வார்த்தையாகிய பைபிள் மூலம் உங்களுக்கு ‘விவேகத்தை தந்து . . . ஆலோசனை சொல்வார்.’—சங்கீதம் 32:8.
கடவுள் எங்கும் இருப்பார், எதிலும் இருப்பார் என்ற தவறான கருத்தைப் பற்றி...
தவறான கருத்து: எல்லா இடங்களிலும் எல்லா படைப்புகளிலும் கடவுள் இருக்கிறார்.
உண்மை: கடவுள் இந்தப் பூமியிலும் குடியிருப்பதில்லை இந்தப் பிரபஞ்சத்தில் வேறெந்த இடத்திலும் குடியிருப்பதில்லை. (1 ராஜாக்கள் 8:27) நட்சத்திரங்களும் மற்ற படைப்புகளும் ‘கடவுளுடைய மகிமையைச் சொல்கின்றன’ என்பது உண்மைதான். (சங்கீதம் 19:1) ஆனால், அந்தப் படைப்புகளில் அவர் குடியிருப்பதில்லை; ஒரு ஓவியர் தான் வரைந்த ஓவியத்தில் குடியிருப்பாரா என்ன? ஆனால், அந்த ஓவியம் அந்த ஓவியரைப் பற்றி ஏதாவது சொல்லும். அதுபோலத்தான், நாம் பார்க்கிற இந்த உலகம் நம் படைப்பாளருடைய ‘பார்க்க முடியாத குணங்களை,’ அதாவது அவருடைய வல்லமை, ஞானம், அன்பு போன்ற குணங்களை, பற்றி நிறையவே சொல்கிறது.—ரோமர் 1:20.
தவறான கருத்து: எல்லாவற்றையும் புரிந்துகொள்வதற்கும் சர்வவல்லமை உள்ளவராக இருப்பதற்கும் கடவுள் எங்கும் எதிலும் இருக்க வேண்டும்.
உண்மை: கடவுளுடைய பரிசுத்த ஆவி, அதாவது கடவுளுடைய சக்தி, அவருடைய செயலாற்றும் வல்லமையாக இருக்கிறது. அந்தச் சக்தியின் மூலம் கடவுள் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும், எதை வேண்டுமானாலும் புரிந்துகொள்ளலாம், எதை வேண்டுமானாலும் செய்யலாம்; குறிப்பிட்ட இடத்திற்கு நேரடியாகப் போக வேண்டுமென்ற அவசியமில்லை.—சங்கீதம் 139:7.
தவறான கருத்து: “நான் வானத்துக்கு ஏறினாலும் நீங்கள் அங்கே இருப்பீர்கள். நான் கல்லறையில் படுக்கை போட்டாலும் நீங்கள் அங்கே இருப்பீர்கள்” என்று சங்கீதம் 139:8 சொல்வதால், கடவுள் எல்லா இடத்திலும் இருக்கிறார் என்று அர்த்தம்.
உண்மை: கடவுள் குடியிருக்கிற இடத்தைப் பற்றி இந்த வசனம் சொல்வதில்லை. அதற்குப் பதிலாக, கடவுள் எவ்வளவு தூரமான இடத்தில் இருந்தாலும் சரி, நம்முடைய சார்பில் அவரால் செயல்பட முடியும் என்பதைத்தான் கவிதை நடையில் எடுத்துச் சொல்கிறது.
a கடவுளுடைய பெயர் யெகோவா என்று பைபிள் சொல்கிறது.