தலைமைத் தூதராகிய மிகாவேல் யார்?
பைபிள் தரும் பதில்
மிகாவேலை சில மதத்தினர் “செயின்ட் மைக்கேல்” என்று அழைக்கிறார்கள். பூமிக்கு வருவதற்கு முன்பும் பின்பும் இயேசுவுக்குக் கொடுக்கப்பட்ட பெயர்தான் இது. a மோசே இறந்த பிறகு, சாத்தானோடு மிகாவேல் விவாதித்தார், தானியேல் தீர்க்கதரிசிக்குக் கடவுளுடைய செய்தியைத் தெரிவிக்க ஒரு தேவதூதருக்கு உதவினார். (தானியேல் 10:13, 21; யூதா 9) “கடவுளைப் போன்றவர் யார்?” என்பதுதான் மிகாவேல் என்ற பெயருக்கு அர்த்தம். இந்தப் பெயரின் அர்த்தத்துக்கு ஏற்ப மிகாவேல் வாழ்கிறார்... ஆம், கடவுளுடைய அரசாட்சியின் சார்பாக அவர் போராடுகிறார், கடவுளுடைய எதிரிகளுக்கு எதிராகப் போரிடுகிறார்.—தானியேல் 12:1; வெளிப்படுத்துதல் 12:7.
இயேசுதான் தலைமைத் தூதராகிய மிகாவேல் என்ற நியாயமான முடிவுக்குவர உதவுகிற குறிப்புகளைக் கவனியுங்கள்
இயேசுதான் ‘தலைமைத் தூதர்.’ (யூதா 9) “தலைமைத் தூதர்” என்ற பட்டப்பெயருக்கு “தேவதூதர்களின் தலைவர்” என்று அர்த்தம். பைபிளில் இரண்டு வசனங்களில் மட்டுமே இது வருகிறது. அந்த இரண்டு வசனங்களிலுமே இது ஒருமையில் கொடுக்கப்பட்டிருக்கிறது, அப்படியானால் ஒரேவொரு தேவதூதருக்கு மட்டுமே அந்தப் பட்டப்பெயர் இருக்கிறதென்பது தெளிவாகத் தெரிகிறது. உயிர்த்தெழுப்பப்பட்ட எஜமானாகிய இயேசு “அதிகார தொனியோடும், தலைமைத் தூதருக்குரிய குரலோடும், . . . பரலோகத்திலிருந்து இறங்கி வருவார்” என்று அதில் ஒரு வசனம் சொல்கிறது. (1 தெசலோனிக்கேயர் 4:16) இயேசுவுக்கு “தலைமைத் தூதருக்குரிய” குரல் இருக்கிறது, அதற்குக் காரணம் அவர்தான் தலைமைத் தூதராகிய மிகாவேல்.
மிகாவேல் தேவதூதர்களின் படைக்குத் அதிகாரியாக இருக்கிறார். “மிகாவேலும் அவருடைய தூதர்களும் ராட்சதப் பாம்போடு [சாத்தானோடு] போர் செய்தார்கள்.” (வெளிப்படுத்துதல் 12:7) தேவதூதர்களின் மேல் மிகாவேலுக்கு மிகுந்த அதிகாரம் இருக்கிறது, அதனால்தான் அவர் ‘பெரிய அதிபதிகளில் ஒருவர்’ என்றும், “மகா அதிபதி” என்றும் அழைக்கப்படுகிறார். (தானியேல் 10:13, 21; 12:1) மிகாவேல் “தேவதூதர்களின் படைத்தளபதியாக” இருந்தார் என்பதை இந்தப் பட்டப்பெயர்கள் குறித்துக் காட்டுவதாக புதிய ஏற்பாட்டின் அறிஞரான டேவிட் இ. ஆவுன் சொல்கிறார்.
தேவதூதர்களுடைய படையின்மேல் அதிகாரமுள்ள இன்னும் ஒரேவொரு நபரின் பெயரை பைபிள் குறிப்பிடுகிறது. ‘நம் எஜமானாகிய இயேசு . . . தன்னுடைய வல்லமைமிக்க தேவதூதர்களோடு பரலோகத்திலிருந்து வெளிப்படும்போது, . . . பழிவாங்குவார்’ என்று அது விவரிக்கிறது. (2 தெசலோனிக்கேயர் 1:7, 8; மத்தேயு 16:27) இயேசு “பரலோகத்துக்குப் போய், இப்போது கடவுளுடைய வலது பக்கத்தில் இருக்கிறார்; தேவதூதர்களும் அதிகாரத்தில் இருப்பவர்களும் வல்லமையுள்ளவர்களும் அவருடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு இருக்கிறார்கள்.” (1 பேதுரு 3:21, 22) தேவதூதர்களின் படைக்கு இயேசு, மிகாவேல் என்ற இரண்டு வெவ்வேறு நபர்களைப் போட்டித் தளபதிகளாகக் கடவுள் நியமித்திருக்க வாய்ப்பில்லை. ஆகவே, இயேசு என்ற பெயரும் மிகாவேல் என்ற பெயரும் ஒரே நபரைத்தான் குறிக்கின்றன என்ற நியாயமான முடிவுக்கு நாம் வரலாம்.
இதுவரை வந்திருக்காத “மிக வேதனையான காலம்” வரும்போது மிகாவேல் “எழுந்துநிற்பார்.” (தானியேல் 12:1, அடிக்குறிப்பு.) “எழுந்துநிற்பது” என்பதற்கான எபிரெய வார்த்தை தானியேல் புத்தகத்தில் அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ளது; ஒரு முக்கியமான நடவடிக்கை எடுப்பதற்காக ஒரு ராஜா எழுந்துநிற்பதைக் குறிப்பதற்கு அது பயன்படுத்தப்பட்டுள்ளது. (தானியேல் 11:2-4, 21) “கடவுளுடைய வார்த்தை” என்று அழைக்கப்படுகிற இயேசு கிறிஸ்து, கடவுளுடைய எல்லா எதிரிகளையும் அழித்து, கடவுளுடைய மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்போகிறார்; ‘ராஜாக்களுக்கெல்லாம் ராஜாவான’ அவர் இந்த முக்கியமான நடவடிக்கையை எடுக்கப்போகிறார். (வெளிப்படுத்துதல் 19:11-16) ‘உலகத்தின் ஆரம்பம்முதல் இதுவரை வந்திருக்காத’ இனிமேலும் வராத மிகுந்த உபத்திரவக் காலத்தின்போது அவர் அப்படி நடவடிக்கை எடுக்கப்போகிறார்.—மத்தேயு 24:21, 42.
a பைபிள் சில நபர்களை வேறு பெயர்களால் குறிப்பிடுகிறது. உதாரணத்திற்கு, யாக்கோபு (இஸ்ரவேல்), பேதுரு (சீமோன்), ததேயு (யூதாஸ்).—ஆதியாகமம் 49:1, 2; மத்தேயு 10:2, 3; மாற்கு 3:18; அப்போஸ்தலர் 1:13.