மனச்சோர்வு ஏற்பட்டால் பைபிள் எனக்கு உதவுமா?
பைபிள் தரும் பதில்
ஆம், “மனச்சோர்வடைந்தவர்களுக்கு ஆறுதலும், உற்சாகமும், புத்துணர்ச்சியும், சந்தோஷமும் தருகிற கடவுளால்” மிகச் சிறந்த உதவியை அளிக்க முடியும்.—2 கொரிந்தியர் 7:6, தி ஆம்ப்ளிஃபைட் பைபிள்.
மனச்சோர்வடைந்தவர்களுக்கு உதவ கடவுள் தருகிற “மருந்துகள்”
பலம். உங்களுடைய எல்லா பிரச்சினைகளையும் நீக்குவதன் மூலமல்ல, ஆனால் அவற்றைச் சமாளிக்க பலம் தரும்படி கேட்டு நீங்கள் செய்கிற ஜெபங்களுக்குப் பதிலளிப்பதன் மூலம் கடவுள் உங்களுக்கு “புத்துணர்ச்சியும் சந்தோஷமும்” தருகிறார். (பிலிப்பியர் 4:13) உங்கள் ஜெபங்களைக் கேட்க அவர் தயாராய் இருக்கிறார் என்பதில் நீங்கள் நிச்சயமாய் இருக்கலாம்; ஏனென்றால், “உள்ளம் உடைந்துபோனவர்களின் பக்கத்திலேயே யெகோவா இருக்கிறார். மனம் நொந்துபோனவர்களை அவர் காப்பாற்றுகிறார்” என்கிறது பைபிள். (சங்கீதம் 34:18) சொல்லப்போனால், உங்கள் உணர்ச்சிகளை வார்த்தைகளால் கடவுளிடம் தெரிவிக்க முடியாவிட்டால்கூட, உங்களுடைய உள்ளக் குமுறலை அவரால் கேட்க முடியும்.—ரோமர் 8:26, 27.
நல்ல முன்மாதிரிகள். “ஆழ்ந்த வேதனையில் உங்களைக் கூப்பிடுகிறேன்” என்று ஒரு பைபிள் எழுத்தாளர் கடவுளிடம் ஜெபம் செய்தார். நமக்குக் குற்றவுணர்ச்சியைக் கொடுத்து கடவுள் நம் மனதைப் பாரமாக்குவதில்லை என்ற விஷயத்தை நினைத்துப் பார்ப்பதன் மூலம் அந்த பைபிள் எழுத்தாளர் தன்னுடைய மனச்சோர்வை சமாளிக்க முயன்றார். கடவுளிடம் அவர் இப்படிச் சொன்னார்: “நீங்கள் குற்றங்களைக் கவனிக்க ஆரம்பித்தால், . . . யார் உங்கள் முன்னால் நிற்க முடியும்? நீங்கள் மனதார மன்னிக்கிறீர்கள். அதனால் உங்கள்மேல் பயபக்தி உண்டாகிறது.”—சங்கீதம் 130:1, அடிக்குறிப்பு, 3, 4.
நம்பிக்கை. இப்போதைக்கு ஆறுதலளிப்பது மட்டுமல்லாமல், மனச்சோர்வுக்குக் காரணமாக இருக்கிற எல்லா பிரச்சினைகளையும் நீக்கப்போவதாகக் கடவுள் வாக்குறுதி அளித்திருக்கிறார். அவர் அதை நிறைவேற்றுகிறபோது, மனச்சோர்வு உட்பட “முன்பு பட்ட கஷ்டங்கள் இனி யாருடைய மனதுக்கும் வராது. யாருடைய நெஞ்சத்தையும் வாட்டாது.”—ஏசாயா 65:17.
உங்கள் கவனத்திற்கு: கடவுள் உதவி செய்வார் என்று யெகோவாவின் சாட்சிகளாகிய நாங்கள் நம்பினாலும், மனச்சோர்வு போன்ற நோய்களுக்கு மருத்துவ சிகிச்சையையும் எடுத்துக்கொள்கிறோம். (மாற்கு 2:17) ஆனாலும், குறிப்பிட்ட எந்தவொரு மருத்துவ சிகிச்சையையும் நாங்கள் பரிந்துரை செய்வதில்லை; இப்படிப்பட்ட விஷயங்களில் அவரவர் சொந்தமாகத் தீர்மானம் எடுக்க வேண்டுமென்று விரும்புகிறோம்.