யார் நரகத்திற்குப் போகிறார்கள்?
பைபிள் தரும் பதில்
நரகம் (பைபிளின் மூலமொழிகளில், “ஷியோல்” மற்றும் “ஹேடீஸ்”) என்பது ஆட்களை நெருப்பில் சித்திரவதை செய்யும் இடம் கிடையாது, அது வெறுமனே கல்லறையைக் குறிக்கிறது. அப்படியானால், யார் நரகத்திற்குப் போகிறார்கள்? நல்லவர்களும் போகிறார்கள், கெட்டவர்களும் போகிறார்கள். (யோபு 14:13; சங்கீதம் 9:17) இந்த நரகத்தைத்தான், அதாவது பொதுக் கல்லறையைத்தான், ‘எல்லாரும் கடைசியில் போய்ச் சேரும் இடம்’ என பைபிள் அழைக்கிறது.—யோபு 30:23.
இயேசு இறந்தபோது, அவரும்கூட நரகத்திற்குப் போனார். ஆனாலும், கடவுள் அவரை உயிர்த்தெழுப்பியதால் அவர் “தொடர்ந்து நரகத்திலே வைக்கப்படவில்லை.”—அப்போஸ்தலர் 2:31, 32, த பைபிள் இன் பேஸிக் இங்கிலிஷ்.
நரகம் என்றென்றும் இருக்குமா?
நரகத்திற்குப் போகிற எல்லாரையும் கடவுளுடைய வல்லமையின் மூலம் இயேசு திரும்ப உயிரோடு வெளியே கொண்டுவரப்போகிறார். (யோவான் 5:28, 29; அப்போஸ்தலர் 24:15) எதிர்காலத்தில் நடக்கப்போகிற அந்த உயிர்த்தெழுதலைப் பற்றி வெளிப்படுத்துதல் 20:13 இப்படிச் சொல்கிறது: “மரணமும் நரகமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன.” (கிங் ஜேம்ஸ் வர்ஷன், ஆங்கிலம்) நரகம் எல்லாரையும் ஒப்புவித்த பிறகு, அதாவது காலியான பிறகு, அது இல்லாமல் போய்விடும்; “இனிமேல் மரணம் இருக்காது” என்பதால் யாருமே அந்த நரகத்திற்குப் போக மாட்டார்கள்.—வெளிப்படுத்துதல் 21:3, 4; 20:14.
என்றாலும், இறந்துபோகிற எல்லாருமே நரகத்திற்குப் போவதில்லை. சிலர், நித்திய அழிவுக்கு அடையாளமாக இருக்கிற கெஹென்னாவுக்குப் போகிறார்கள். (மத்தேயு 5:29, 30) ஏனென்றால், அவர்கள் மனம் திருந்தவே திருந்தாத பொல்லாதவர்கள் என்று பைபிள் சொல்கிறது. (எபிரெயர் 10:26, 27) உதாரணத்திற்கு, தன் காலத்தில் வாழ்ந்த வெளிவேஷக்கார மதத் தலைவர்கள் சிலர் கெஹென்னாவுக்குப் போவார்கள் என்பதை இயேசு சுட்டிக்காட்டினார்.—மத்தேயு 23:27-33.