இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்
ஆபாசத்தை ஏன் ஒதுக்கித்தள்ள வேண்டும்?
அதை ஒதுக்கித்தள்ள உங்களால் முடியுமா?
நீங்கள் இன்டர்நெட்டை அலசிக்கொண்டிருந்தீர்கள் என்றால், ஆபாசமான ஏதாவது ஒரு விஷயம் உங்கள் கண்ணில் படத்தான் செய்யும். “இப்போதெல்லாம் நீங்கள் அதை தேடிப் போக வேண்டுமென்ற அவசியம் இல்லை. அதுவே உங்களைத் தேடி வரும்” என்று 17 வயது ஹேய்லி சொல்கிறார்.
ஆபாசத்தைப் பார்க்கவே கூடாது என்று உறுதியாக இருப்பவர்கள்கூட அதன் வலையில் விழ வாய்ப்பிருக்கிறது. 18 வயது கிரெக் என்ன சொல்கிறார் என்றால், “இந்த விஷயத்தில் நான் ரொம்ப உஷாராக இருப்பேன் என்று நினைத்தேன். ஆனால் நானும் மாட்டிக்கொண்டேன். அதனால் ‘நானெல்லாம் இதில் சிக்கவே மாட்டேன்’ என்று சொல்லாதீர்கள்.”
ஆபாசத்தை பார்ப்பது வேறெந்தக் காலத்தையும் விட இப்போது எளிதாகிவிட்டது. அதுவும் செக்ஸ்டிங் வந்த பின்பு, அதாவது மொபைல் மூலம் ஆபாசமான விஷயங்களை மற்றவர்களுக்கு அனுப்பும் பழக்கம் வந்த பின்பு, நிறைய இளைஞர்கள் தங்களுடைய ஆபாச படங்களை மற்றவர்களுக்கு அனுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.
சுருக்கமாக சொன்னால்: உங்களுடைய அப்பா-அம்மாவோ உங்களுடைய தாத்தா-பாட்டியோ உங்கள் வயதில் இருந்தபோது ஆபாசத்தைப் பார்க்காமல் இருக்க போராடியதை விட, நீங்கள் அதிகமாகவே போராட வேண்டியிருக்கிறது. அதனால் கேள்வி என்னவென்றால், ஆபாசத்தை உங்களால் உண்மையிலேயே ஒதுக்கித்தள்ள முடியுமா?—சங்கீதம் 97:10.
கண்டிப்பாக முடியும். அதுவும் நீங்கள் மனம் வைத்தால். ஆனால், அதற்கு ஆபாசம் மோசமானது என்பதை நீங்கள் முதலில் நம்ப வேண்டும். இந்த விஷயத்தில் நிறைய பேருக்கு இருக்கிற தவறான கருத்துக்களையும் உண்மைகளையும் பற்றி நாம் இப்போது பார்க்கலாம்.
தவறான கருத்துகளும் உண்மைகளும்
தவறான கருத்து: நான் ஆபாசத்தை சும்மா பார்க்கத்தானே செய்கிறேன், அது என்னை பாதிக்காது.
உண்மை: புகைப்பிடிப்பது எப்படி உங்களுடைய நுரையீரலை பாதிக்கிறதோ அதே மாதிரி ஆபாசத்தைப் பார்ப்பதும் உங்கள் மனதைப் பாதிக்கும். நீங்கள் அப்படிப் பார்த்தீர்கள் என்றால் உங்கள் மனதை அசிங்கமான விஷயங்களால் நிறைக்கிறீர்கள். கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் கடவுள் உருவாக்கிய ஆழமான, அழகான என்றென்றைக்கும் இருக்கிற பந்தத்தை ஆபாசம் கொச்சைப்படுத்துகிறது. (ஆதியாகமம் 2:24) அதனால் ஆபாசத்தைப் பார்க்கிறவர்களுக்கு போகப் போக எது சரி, எது தப்பு என்று புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு மனம் குழம்பி போய்விடும். உதாரணத்துக்கு, ஆபாசத்தைப் பழக்கமாக பார்க்கிற ஆண்கள், பெண்களைக் கொடுமைப்படுத்துவது கூட தப்பே இல்லை என்பதுபோல் யோசிக்க ஆரம்பித்துவிடுவார்கள் என்று சில நிபுணர்கள் சொல்கிறார்கள்.
‘ஒழுக்க உணர்வு துளிகூட இல்லாத’ ஆட்கள் இருப்பார்கள் என்று பைபிள் சொல்கிறது. (எபேசியர் 4:19) தப்பு பண்ணினால் கூட மனம் உறுத்தாத அளவுக்கு அவர்களுடைய மனசாட்சி மரத்துப் போய்விடுகிறது.
தவறான கருத்து: ஆபாசத்தைப் பார்க்கும்போது நாம் செக்ஸைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.
உண்மை: ஆபாசத்தைப் பார்க்கிற ஒருவருக்கு கட்டுக்கடங்காத காம பசிதான் உருவாகும். அவர்கள் மனிதர்களை மனிதர்களாகப் பார்க்காமல், அவர்களுடைய ஆசையைத் தீர்த்துக்கொள்கிற போகப்பொருளாக பார்க்க ஆரம்பித்துவிடுகிறார்கள். ஆபாசத்தை வழக்கமாக பார்க்கிற நபர்கள், அவர்களுடைய தாம்பத்தியத்தில் அவ்வளவு திருப்தியாக இருக்க வாய்ப்பில்லை என்று ஒரு ஆய்வு காட்டுகிறது.
“பாலியல் முறைகேடு, அசுத்தமான நடத்தை, கட்டுக்கடங்காத காமப்பசி, கெட்ட ஆசை, . . . பேராசை” இதையெல்லாம் கிறிஸ்தவர்கள் ஒதுக்கித்தள்ள வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. (கொலோசெயர் 3:5) ஆனால், ஆபாசம் இதற்கெல்லாம் உரம் போட்டு ஊட்டி வளர்க்கிறது.
தவறான கருத்து: செக்ஸைப் பற்றி பேசுவதற்கே கூச்சப்படுகிறவர்கள்தான், ஆபாசத்தைப் பார்ப்பதே தப்பு என்று நினைப்பார்கள்.
உண்மை: ஆபாசத்தை ஒதுக்கித்தள்ளுகிறவர்கள் புனிதமான கண்ணோட்டத்தில்தான் செக்ஸைப் பார்ப்பார்கள். கல்யாணம் செய்துகொண்டு, ‘உனக்கு நீ, எனக்கு நான்’ என்று வாழ்கிற ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கிற நெருக்கத்தை அதிகப்படுத்துவதற்காக கடவுள் கொடுத்த ஒரு பரிசாகத்தான் இதைப் பார்ப்பார்கள். அதனால் அவர்களுடைய தாம்பத்தியத்தில் அவர்கள் ரொம்பவே திருப்தியாக இருக்க வாய்ப்பிருக்கிறது.
பைபிள் செக்ஸைப் பற்றிப் பேசும்போது ஒளிவுமறைவு இல்லாமல் பேசுகிறது. உதாரணத்துக்கு, கணவர்களிடம் இப்படிச் சொல்கிறது: “இளவயதில் கைப்பிடித்த உன் மனைவியோடு சந்தோஷமாக இரு . . . அவளுடைய அன்பில் நீ எப்போதும் மயங்கியிரு.”—நீதிமொழிகள் 5:18, 19.
ஆபாசத்தை ஒதுக்கித்தள்ள என்ன செய்ய வேண்டும்?
ஆபாசத்தைப் பார்ப்பதற்கான ஆசையைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று உங்களுக்குத் தோன்றுகிறதா? அப்படியென்றால், “ஆபாசத்தை ஒதுக்கித்தள்ள என்ன செய்ய வேண்டும்?” என்ற ஒர்க் ஷீட் உங்களுக்கு உதவும்.
ஆபாசத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையை உங்கள் மனதில் இருந்து உங்களால் எடுத்துப்போட முடியும். இதைச் செய்ய உங்களால் கண்டிப்பாக முடியும். நீங்கள் ஆபாசத்தைப் பார்க்க தொடங்கியிருந்தால் கூட உங்களால் அதை நிச்சயம் நிறுத்த முடியும். அப்படிச் செய்வது உங்களுக்குத்தான் ரொம்பவே நல்லது.
இப்போது நாம் கெவின் என்பவரைப் பற்றிப் பார்க்கலாம். கிட்டத்தட்ட 13 வயதிலேயே ஆபாசத்தைப் பார்க்கிற பழக்கத்துக்கு அவர் அடிமையாகிவிட்டார். அவர் சொல்கிறார்: “எனக்கு அது தப்பு என்று தெரியும். ஆனால் அந்த ஆசையை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. அதைப் பார்த்த பின்பு என்னை நினைத்தே எனக்கு கேவலமாகத்தான் இருந்தது. ஒருநாள் என்னுடைய அப்பா அதைக் கண்டுபிடித்துவிட்டார். உண்மையை சொல்ல வேண்டும் என்றால், அது நல்லதில்தான் போய் முடிந்தது! ஏனென்றால், அந்தப் பழக்கத்தில் இருந்து வெளியே வருவதற்கு எனக்கு உதவி கிடைத்தது.”
கெவின் ஆபாசத்தை ஒதுக்கித்தள்ள கற்றுக்கொண்டார். அவர் இப்படிச் சொல்கிறார்: “நான் ஆபாசத்தை பார்த்தது ரொம்ப பெரிய தப்புதான். அதன் பின்விளைவுகளை இன்றைக்கும் அனுபவித்துக்கொண்டுதான் இருக்கிறேன். ஏனென்றால், நான் பார்த்த காட்சிகள் அவ்வப்போது என் கண் முன்னால் வந்து வந்து போகின்றன. திரும்பவும் அதை ஒரு தடவையாவது பார்த்தால் நன்றாக இருக்குமே என்றுகூட சில சமயங்களில் யோசிப்பேன். ஆனால் அப்படிப்பட்ட ஆசை வரும்போதெல்லாம் யெகோவாவுடைய பேச்சை கேட்டு நடக்கும்போது நான் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறேன்... என் மனம் எவ்வளவு சுத்தமாக இருக்கிறது... என்னுடைய எதிர்காலம் எவ்வளவு பிரகாசமாக இருக்கும் என்றெல்லாம் யோசித்துப் பார்க்கிறேன்.”