Skip to content

இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்

அப்பா-அம்மா போடுகிற கட்டுப்பாடுகள் என்னைக் கட்டுப்படுத்துகிறதா?

அப்பா-அம்மா போடுகிற கட்டுப்பாடுகள் என்னைக் கட்டுப்படுத்துகிறதா?

பெற்றோர் போடுகிற கட்டுப்பாடு உங்களைக் கட்டிப்போடுவதாக நினைக்கிறீர்களா? அப்படியென்றால் இதைப் பற்றி உங்கள் அப்பா-அம்மாவிடம் பேசுவதற்கு இந்தக் கட்டுரையும் இதோடு சேர்ந்து வருகிற ஒர்க் ஷீட்டும் உங்களுக்கு உதவும்.

 சரியான கண்ணோட்டத்தில் பார்ப்பது

தவறான கருத்து: வீட்டில் இருக்கிற வரைக்கும்தான் உங்களுக்கு இந்தக் கட்டுப்பாடுகளெல்லாம். வீட்டை விட்டு வெளியே போய்விட்டீர்கள் என்றால் நீங்கள் ஒரு சுதந்திர பறவை.

உண்மை: நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தாலும் சரி, வீட்டை விட்டு வெளியே வந்து தனியாக வாழ்ந்தாலும் சரி, சில விஷயங்களுக்கு கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும், சில விஷயங்களுக்கு யாருக்காவது பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். ஒருவேளை அது உங்களுடைய முதலாளியாக இருக்கலாம், வீட்டு ஓனராக இருக்கலாம், அரசாங்க அதிகாரிகளாக கூட இருக்கலாம். 19 வயது டேனியல் இப்படிச் சொல்கிறார்: “அப்பா-அம்மா போடுகிற கட்டுப்பாட்டை மதித்து நடக்காத பிள்ளைகள் அவர்கள் சொந்தக் காலில் நிற்கும்போது திக்குமுக்காடி போய்விடுவார்கள்.”

பைபிள் இப்படிச் சொல்கிறது: “அரசாங்கங்களுக்கும் அதிகாரிகளுக்கும் . . . கீழ்ப்படிய வேண்டும்.” (தீத்து 3:1) அப்பா-அம்மா போடுகிற கட்டுப்பாடுகளுக்கு கீழ்ப்படிய கற்றுக்கொண்டால், நீங்கள் பெரியவர்களாகும்போது நிறைய விஷயங்களுக்கு அது ஒரு நல்ல பயிற்சியாக இருக்கும்.

நீங்கள் என்ன செய்யலாம்: அப்பா-அம்மா போடுகிற கட்டுப்பாடுகளால் உங்களுக்கு என்ன நன்மை இருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள். ஜெரமி என்ற ஒரு இளைஞர் என்ன சொல்கிறார் என்றால், “என்னுடைய அப்பா-அம்மா போட்ட கட்டுப்பாடுகள் என்னுடைய நல்லதுக்குத்தான் என்பதை புரிந்துகொண்டேன். நல்ல நண்பர்களைக் கண்டுபிடிப்பதற்கும், என்னுடைய நேரத்தை சரியாகப் பயன்படுத்துவதற்கும் அது எனக்கு உதவி செய்திருக்கிறது. அதுமட்டுமல்ல, அளவுக்கு மீறி டிவி பார்க்காமல் இருப்பதற்கும்... வீடியோ கேம்ஸே கதி என்று கிடக்காமல் இருப்பதற்கும்... எனக்கு உதவி செய்திருக்கிறது. அதனால்தான் நேரத்தை பிரயோஜனமான விஷயங்களில் செலவு செய்கிறேன். இப்போதும் கூட அந்த விஷயங்களை நான் என்ஜாய் பண்ணி செய்கிறேன்.”

 சரியான விதத்தில் கையாளுவது

உங்கள் அப்பா-அம்மா போடுகிற கட்டுப்பாட்டைப் பற்றி ‘இது கொஞ்சம் ஓவரா இருக்கு’ என்று நீங்கள் என்றைக்காவது நினைத்திருக்கிறீர்களா? தமாரா என்ற ஒரு இளம்பெண் இப்படிச் சொல்கிறார்: “நான் வேறொரு நாட்டுக்கு போய்விட்டு வரவா என்று கேட்டபோது கூட என் அப்பா-அம்மா என்னை அனுப்பிவைத்தார்கள். ஆனால் இப்போது வெறுமனே 20 நிமிடம் தூரத்தில் இருக்கிற இடத்துக்குப் போக கூட என்னை விடுவதில்லை.”

உங்கள் நிலைமையும் இது தானா? அப்படியென்றால் இதைப் பற்றி அப்பா-அம்மாவிடம் பேசுவதே தப்பா? இல்லை. அதைப் பற்றி நீங்கள் பேசலாம். அது தப்பு இல்லை. ஆனால் எப்போது பேசப் போகிறீர்கள், எப்படிப் பேசப் போகிறீர்கள் என்பதை நீங்கள் தெரிந்துவைத்திருப்பது ரொம்ப முக்கியம்.

எப்போது பேசுவது? “நீங்கள் நிறைய விஷயங்களில் பொறுப்பாக நடந்து, உங்கள் அப்பா-அம்மாவுடைய நம்பிக்கையை சம்பாதித்த பின்புதான் அவர்கள் போட்ட கட்டுப்பாடுகள் சிலவற்றை மாற்றச் சொல்லி உங்களால் அவர்களிடம் பேச முடியும்” என்று டீனேஜரான அமென்டா சொல்கிறார்.

டேரியா என்ற பெண்ணும் இதை ஒத்துக்கொள்கிறாள். அவள் சொல்கிறாள்: “என் அம்மாவின் பேச்சை நான் தட்டுவதே இல்லை என்பதை என் அம்மா புரிந்துகொண்ட பின்புதான், சில கட்டுப்பாடுகளை மாற்றலாம் என்று யோசிக்கவே ஆரம்பித்தார்கள்.” இதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். நம்பிக்கையை நீங்கள் சம்பாதிக்க வேண்டும். அதை வற்புறுத்தி வாங்க முடியாது.

போக்குவரத்து சட்டங்களே இல்லாத விமான நிலையத்தில் ஒரு விமானத்தை தரை இருக்கிற மாதிரிதான், அப்பா-அம்மா போடுகிற கட்டுப்பாடுகளை மதிக்காத வீட்டில் வாழ்வதும்

பைபிள் இப்படிச் சொல்கிறது: “உன் அப்பா கொடுக்கிற கட்டளைக்குக் கீழ்ப்படி. உன் அம்மா கொடுக்கிற அறிவுரையை ஒதுக்கித்தள்ளாதே.” (நீதிமொழிகள் 6:20) பைபிள் சொல்கிற இந்த அறிவுரையின்படி நீங்கள் நடந்தால், அப்பா-அம்மாவுடைய நம்பிக்கையை உங்களால் சம்பாதிக்க முடியும். அப்போதுதான் அவர்களிடம் பேசுவதும் உங்களுக்கு ஈசியாக இருக்கும்.

எப்படிப் பேசவது? “உங்கள் அப்பா-அம்மாவிடம் கத்தி கூச்சல் போடுவதற்கு பதிலாக நிதானமாக, மரியாதையாக பேசுவதுதான் ரொம்ப நல்லது” என்று ஸ்டீவன் என்ற இளைஞர் சொல்கிறார்.

முன்பு பார்த்த டேரியாவும் அதை ஒத்துக்கொள்கிறாள். அவள் இப்படிச் சொல்கிறாள்: “என் அம்மாவிடம் வாக்குவாதம் பண்ணுவதால் ஒன்றும் நடக்கப் போவதில்லை. உண்மையை சொல்ல வேண்டும் என்றால், அவர்கள் போட்ட கட்டுப்பாட்டை இன்னமும் கெடுபிடி ஆக்கிவிடுவார்கள்.”

பைபிள் இப்படிச் சொல்கிறது: “முட்டாள் தன்னுடைய உணர்ச்சிகளையெல்லாம் கொட்டித் தீர்த்துவிடுகிறான். ஆனால், ஞானமுள்ளவன் தன் உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு அமைதியாக இருக்கிறான்.” (நீதிமொழிகள் 29:11) நமக்கு நாமே சில கட்டுப்பாடுகளைப் போட பழகிக்கொள்வது வீட்டில்... ஸ்கூலில்... வேலை செய்கிற இடத்தில் மட்டுமல்ல, எல்லா இடத்திலும் நமக்குத்தான் ரொம்ப நல்லது.

நீங்கள் என்ன செய்யலாம்: பேசுவதற்கு முன்பு யோசித்துப் பேசுங்கள். நீங்கள் ஒருதடவை கோபப்பட்டு கத்தினால் கூட, இவ்வளவு நாள் சம்பாதித்த நல்ல பெயர் எல்லாம் ஒரே நொடியில் தவிடுபொடி ஆகிவிடும். “பகுத்தறிவு நிறைந்தவன் சட்டெனக் கோபப்பட மாட்டான்” என்று பைபிள் சொல்வது ரொம்பவே உண்மை.—நீதிமொழிகள் 14:29.

டிப்ஸ்: அப்பா-அம்மா ஏன் கட்டுப்பாடுகள் போடுகிறார்கள் என்பதை தெரிந்துகொள்வதற்கும், தேவைப்பட்டால் அதைப் பற்றி அவர்களிடம் பேசுவதற்கும் இந்த ஒர்க் ஷீட்டைப் பயன்படுத்துங்கள்.