Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

Brais Seara/Moment via Getty Images

விழிப்புடன் இருங்கள்!

கடும் வறட்சி—பைபிள் என்ன சொல்கிறது?

கடும் வறட்சி—பைபிள் என்ன சொல்கிறது?
  •   “சீனாவில், இந்த கோடைகாலத்தில் ‘படுபயங்கரமான’ வெப்ப அலை பதிவாகியிருக்கிறது. இதுவரை பதிவு செய்யப்பட்டிருக்கும் வறண்ட கோடைகாலங்களில், இது மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது.”—தி கார்டியன், செப்டம்பர் 7, 2022.

  •   “ஆப்பிரிக்காவின் பெரிய கொம்பு என அழைக்கப்படுகிற பகுதியில், தொடர்ந்து ஐந்தாவது வருஷமாக இந்த வருஷமும் வறட்சி இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது.”—யூஎன் நியூஸ், ஆகஸ்ட் 26, 2022.

  •   “ஐரோப்பாவில் மூன்றில் இரண்டு பங்கு நிலப்பரப்பு, ஏதோவொரு விதமான வறட்சியால் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த 500 வருஷங்களில் இல்லாத மோசமான ஒரு நிலை இப்போது வந்திருப்பதாக தெரிகிறது.”—பிபிசி நியூஸ், ஆகஸ்ட் 23, 2022.

 வரப்போகும் காலங்களில் இதுபோன்ற வறட்சி கண்டிப்பாக தொடரும் என்றும், இன்னும் மோசமாக ஆகும் என்றும் நிறைய நிபுணர்கள் சொல்கிறார்கள். இந்த நிலைமை இப்படியேதான் இருக்குமா? என்றைக்காவது சரியாகுமா? இதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

வறட்சியும் பைபிள் தீர்க்கதரிசனமும்

 நாம் வாழும் காலத்தைப் பற்றி பைபிள் இப்படிச் சொல்கிறது:

  •   ‘அடுத்தடுத்து பல இடங்களில் பஞ்சங்கள் . . . உண்டாகும்.’லூக்கா 21:11.

 வறட்சியால் பஞ்சம் ஏற்படுகிறது. பஞ்சத்தால் மக்கள் அவதிப்படுகிறார்கள், சிலர் இறந்தும் போகிறார்கள். இவையெல்லாம் பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றம்தான்!—வெளிப்படுத்துதல் 6:6, 8.

வறட்சி ஏன் இன்னும் கடுமையாகிக்கொண்டே போகிறது?

 வறட்சி அதிகமாகிக்கொண்டே போவதற்கான முக்கிய காரணத்தைப் பற்றி பைபிள் சொல்கிறது:

  •   “மனுஷனுக்கு . . . தன் காலடிகளை நடத்தும் அதிகாரம் இல்லை.”எரேமியா 10:23.

 மனிதர்களுக்கு தங்களுடைய “காலடிகளை நடத்தும்” திறமை கிடையாது, அதாவது அவர்களால் தங்களையே நல்லபடியாக ஆட்சி செய்துகொள்ள முடியாது என்பதை பைபிள் காட்டுகிறது. மனிதர்கள் நிறைய விஷயங்களை சரியாக செய்யாததால் வறட்சியும் தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்படுகிறது.

  •   மனிதர்கள் செய்யும் சில விஷயங்களால் பூமியின் வெப்பநிலை அதிகமாகிறது என்று விஞ்ஞானிகளும் ஒத்துக்கொள்கிறார்கள். இதனால், உலகம் முழுவதும் வறட்சி அதிகமாகிக்கொண்டே போகிறது.

  •   மனிதனின் பேராசையாலும் எதிர்காலத்தைப் பற்றி யோசிக்காமல் போடப்படுகிற திட்டங்களாலும் காடுகள் அழிகின்றன, மாசு ஏற்படுகிறது, இயற்கை வளங்களும் வீணாகின்றன. இதனால், முக்கியமான நீர் நிலைகளும் அழிந்துகொண்டே வருகிறது.

 ஆனால், பைபிள் நம்பிக்கை கொடுக்கிறது!

எதிர்காலத்தில் இவையெல்லாம் சரியாகுமா?

 இப்போது இருக்கும் தண்ணீர் தட்டுப்பாட்டை கடவுள் சரி செய்வார் என்று பைபிள் வாக்கு கொடுக்கிறது. அவர் அதை எப்படிச் செய்வார்?

  1.  1. கடவுள், ‘பூமியை நாசமாக்குகிறவர்களை நாசமாக்குவார்.’ (வெளிப்படுத்துதல் 11:18) இன்றைக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு ஒரு முக்கிய காரணம், மோசமான பேராசைபிடித்த மக்கள்தான்! (2 தீமோத்தேயு 3:1, 2) இவர்கள் சுற்றுச்சூழலை கெடுக்கிறார்கள். இப்படிப்பட்ட மக்களை கடவுள் அழித்துவிடுவார்.

  2.  2. “வறண்ட நிலம் நாணல் நிறைந்த குளமாக மாறும்.” (ஏசாயா 35:1, 6, 7) வறட்சியால் இந்த பூமியில் ஏற்பட்ட பாதிப்புகளை கடவுள் சரி செய்வார். பொட்டல் காடுகளை நீர் நிரம்பி வழியும் சோலையாக மாற்றுவார்.

  3.  3. “நீங்கள் பூமியை அக்கறையோடு கவனித்துக்கொள்கிறீர்கள். அதைச் செழிப்பாக்குகிறீர்கள், அமோகமாக விளைய வைக்கிறீர்கள்.” (சங்கீதம் 65:9) எதிர்காலத்தில், இந்த பூமியில் இருக்கிற எல்லாருக்கும் ஆரோக்கியமான உணவும் சுத்தமான தண்ணீரும் கிடைக்கும்படி கடவுள் செய்வார்.