தொற்றுநோய்... பயத்தையும் சோர்வையும் சமாளித்தல்
தொற்றுநோய் அதிகமாக பரவுவதால் அதைப் பார்த்து பயப்படுகிறீர்களா? நிறைய பேருக்கு இந்தப் பயம் இருக்கிறது. இந்தத் தொற்றுநோய் உங்களை போலவே நிறைய பேருடைய வாழ்க்கையை தலைக்கீழாக மாற்றியிருக்கிறது. ”கோவிட் பரவுவதை தடுப்பதற்காக நிறைய பேர் நிறைய விஷயங்களை விட்டுக்கொடுத்திருக்கிறார்கள். இந்த மாதிரி சமயத்தில் விரக்தியோ சோர்வோ வருவது இயல்புதான்“ என்று ஐரோப்பா உலகச் சுகாதர அமைப்பின் இயக்குநர் டாக்டர் ஹான்ட்ஸ் க்ளூக் சொல்கிறார்.
இந்தத் தொற்றுநோய் பயத்தினால் நீங்களும் சோர்ந்துபோய் இருக்கிறீர்களா? பயப்படாதீர்கள், தைரியமாக இருங்கள். இந்தக் கஷ்டமான சமயத்தை சமாளிக்க நிறைய பேருக்கு பைபிள் உதவியிருக்கிறது. அது உங்களுக்கும் நிச்சயம் உதவி செய்யும்.
தொற்றுநோய் பயத்தால் வரும் சோர்வு ஒரு நோயா?
இல்லை. இது ஒரு நோய் கிடையாது. தொற்றுநோய் அதிகமாகிக்கொண்டே போவதாலும் அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாததாலும் வரும் சோர்வு. இந்தச் சோர்வு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக வரும். ஆனால் பொதுவான அறிகுறிகள் இதோ:
எதிலும் ஈடுபாடு இல்லாமல் இருப்பது
தூங்குவதிலும் சாப்பாட்டு பழக்கங்களிலும் மாற்றம்
எரிச்சலடைவது
பொதுவாக விரும்பிச் செய்யும் வேலைகளைக்கூட சரியாக செய்ய முடியாமல் போவது
கவனச்சிதறல்
நம்பிக்கை இழப்பது
இப்படிச் சோர்ந்துபோவதில் ஆபத்து இருக்கிறதா?
ஆம்! நாம் சோர்ந்துபோய்விட்டால் நமக்கும் ஆபத்து, மற்றவர்களுக்கும் ஆபத்து! நாம் சோர்ந்துபோய்விட்டோம் என்றால் இந்தத் தொற்றுநோயிலிருந்து நம்மை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவிடும். அதை அப்படியே விட்டுவிட்டால், தொற்றுநோய் அதிகமாகப் பரவி, அதனால் நிறையபேர் இறந்துபோனாலும் நாம் அலட்சியமாகவே இருப்போம். கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் சாதரணமாக வாழ ஆசைப்படுவோம். இதனால் நமக்கும் மற்றவர்களுக்கும் ஆபத்து வரலாம்.
“இக்கட்டில் தவிக்கிற நாளில் நீ சோர்ந்துபோனால், உன் பலம் குறைந்துவிடும்” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 24:10) இது ரொம்ப உண்மை என்று இப்போது நிறையபேர் புரிந்துகொண்டார்கள். சோர்வை சமாளிப்பதற்கு, அதுவும் இந்தத் தொற்றுநோயால் வரும் சோர்வை சமாளிப்பதற்கு பைபிளில் நிறைய ஆலோசனைகள் இருக்கின்றன.
இந்தச் சோர்வை சமாளிக்க பைபிள் எப்படி உங்களுக்கு உதவி செய்யும்?
தனியாக இருங்கள், ஆனால் தனிமையில் இருக்காதீர்கள்
பைபிள் என்ன சொல்கிறது: “உண்மையான நண்பன் . . . கஷ்ட காலங்களில் உதவுவதற்காகப் பிறந்த சகோதரனாக இருக்கிறான்.”—நீதிமொழிகள் 17:17.
இது ஏன் முக்கியம்: உண்மையான நண்பர்கள் நம்மை பலப்படுத்துவார்கள். (1 தெசலோனிக்கேயர் 5:11) ஆனால் ரொம்ப நாள் தனிமையிலேயே இருப்பது நம்முடைய உடல்நலத்துக்கு உலைவைத்துவிடும்.—நீதிமொழிகள் 18:1.
இப்படிச் செய்து பாருங்கள்: நேரில் பார்க்க முடியவில்லையென்றாலும் உங்கள் நண்பர்களுக்கு ஃபோன் பண்ணிப் பேசுங்கள், வீடியோ கால் செய்யுங்கள், மெசேஜ் அனுப்புங்கள். உங்களுக்கு ஏதாவது கஷ்டமாக இருந்தால் உடனே உங்கள் நண்பர்களிடம் பேசுங்கள். அதேமாதிரி அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதையும் அடிக்கடி கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். இந்தத் தொற்றுநோயை சமாளிக்க நீங்கள் என்னவெல்லாம் செய்கிறீர்கள் என்பதையும் அவர்களுக்குச் சொல்லுங்கள். உங்கள் நண்பர்கள் யாருக்காவது ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று பாருங்கள். அப்போது நீங்களும் சந்தோஷமாக இருப்பீர்கள், அவர்களும் சந்தோஷமாக இருப்பார்கள்.
இந்தச் சூழ்நிலையில் உங்களால் எதை செய்ய முடியுமோ அதை செய்யுங்கள்
பைபிள் என்ன சொல்கிறது: “உங்கள் நேரத்தை மிக நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.”—எபேசியர் 5:16.
இது ஏன் முக்கியம்: நேரத்தை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டால் தேவையில்லாமல் கவலைப்பட மாட்டோம், நம்பிக்கையோடு இருப்போம்.—லூக்கா 12:25.
இப்படிச் செய்து பாருங்கள்: செய்ய முடியாததை நினைத்து கவலைப்படாமல், இந்தச் சூழ்நிலையில் எதை செய்ய முடியுமோ அதை செய்யுங்கள். உங்களுக்கு பிடித்த ஒரு விஷயத்தை செய்ய ஆரம்பித்து அதை முடிக்காமல் வைத்திருக்கிறீர்களா? குடும்பத்துக்காக இன்னும் நிறைய நேரம் ஒதுக்க ஆசைப்படுகிறீர்களா? அதையெல்லாம் இப்போது செய்யுங்கள்.
ஒரு பழக்கத்தை வழக்கமாகச் செய்யுங்கள்
பைபிள் என்ன சொல்கிறது: ‘எல்லா காரியங்களும் . . . ஒழுங்காக நடக்க வேண்டும்.’—1 கொரிந்தியர் 14:40.
இது ஏன் முக்கியம்: ஒரு விஷயத்தை தவறாமல் செய்யும்போது சந்தோஷமாக திருப்தியாக இருப்பதாக நிறையப்பேர் சொல்கிறார்கள்.
இப்படிச் செய்து பாருங்கள்: இப்போது இருக்கிற சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி ஒரு அட்டவணையை போடுங்கள். பள்ளிப் பாடங்களை படிக்க, வேலை செய்ய, வீட்டு வேலைகளை செய்ய என ஒவ்வொன்றுக்கும் அதற்கென நேரத்தை ஒதுக்குங்கள். கடவுளிடம் நெருங்கி போவதற்கும் நேரத்தை ஒதுக்குங்கள். உங்கள் மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்துகொள்ள உங்கள் குடும்பத்தோடு சந்தோஷமாக இருங்கள். உடற்பயிற்சியும் செய்யுங்கள். இந்த அட்டவணையை அவ்வப்போது சரிபார்த்து தேவையான மாற்றங்களை செய்துகொள்ளுங்கள்.
பருவக் காலங்கள் மாறும்போது நீங்களும் மாறுங்கள்
பைபிள் என்ன சொல்கிறது: “சாமர்த்தியசாலி ஆபத்தைப் பார்த்து மறைந்துகொள்கிறான்.”—நீதிமொழிகள் 22:3.
இது ஏன் முக்கியம்: நம்முடைய உடலும் மனதும் ஆரோக்கியமாக இருப்பதற்கு சூரிய ஒளியும், சுத்தமான காற்றும் ரொம்ப முக்கியம். ஆனால் எல்லா பருவக் காலங்களிலும் இவை கிடைப்பதில்லை.
இப்படிச் செய்து பாருங்கள்: குளிர்காலம் வரப்போகிறதா? அப்படியென்றால் நீங்கள் வேலை செய்யும் இடத்திலும், உங்கள் வீட்டிலும் சூரிய வெளிச்சம் கிடைக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். குளிர்காலத்திலும் உங்களால் என்ன உடற்பயிற்சி செய்ய முடியும் என்று முன்பே யோசியுங்கள். குளிர்காலத்துக்கு தேவையான உடைகளையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்.
வெயில் காலம் வரப்போகிறதா? இந்தச் சமயத்தில் பெரும்பாலும் மக்கள் வெளியில்தான் இருப்பார்கள். அதனால் கவனமாக இருங்கள். ஒருவேளை வெளியே போக வேண்டியிருந்தால் எப்போது கூட்டம் அதிகமாக இருக்காதோ அப்போது போங்கள்.
கோவிட் பாதுகாப்பு முறைகளை கடைப்பிடியுங்கள்
பைபிள் என்ன சொல்கிறது: “முட்டாள் அளவுக்கு மீறிய தன்னம்பிக்கையோடு கண்மூடித்தனமாக நடந்துகொள்கிறான்.”—நீதிமொழிகள் 14:16.
இது ஏன் முக்கியம்: கோவிட்-19 ஒரு உயிர்க்கொல்லி நோய். நாம் கவனமாக இல்லையென்றால் நம்முடைய உயிரையே அது பறித்துவிடும்.
இப்படிச் செய்து பாருங்கள்: கோவிட் தொற்றிலிருந்து பாதுகாப்பது சம்பந்தமாக கொடுக்கப்படும் ஆலோசனைகளை பின்பற்றுகிறீர்களா என்று அடிக்கடி உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். ஒருவேளை நீங்கள் கவனமாக இல்லையென்றால் அது உங்களையும், உங்கள் குடும்பத்தையும், மற்றவர்களையும் எப்படிப் பாதிக்கும் என்று யோசித்துபாருங்கள்.
கடவுள்மேல் நம்பிக்கை வையுங்கள்
பைபிள் என்ன சொல்கிறது: “கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அப்போது அவர் உங்களிடம் நெருங்கி வருவார்.”—யாக்கோபு 4:8.
இது ஏன் முக்கியம்: எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் அதை சமாளிப்பதற்கு கடவுளால் மட்டும்தான் நமக்கு உதவ முடியும்.—ஏசாயா 41:13.
இப்படிச் செய்து பாருங்கள்: தினமும் கடவுளுடைய வார்த்தையான பைபிளை கொஞ்ச நேரம் படியுங்கள். அதை ஆரம்பிக்க, பைபிள் படிப்பதற்கான அட்டவணை உங்களுக்கு உதவும்.
இந்த கோவிட் பெருந்தொற்று சமயத்திலும் யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்கள் எப்படி நடக்கின்றன, அதிலிருந்து அவர்கள் எப்படி பயனடைகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள அவர்களை தொடர்புகொள்ளுங்கள். உலகம் முழுவதும் இருக்கிற யெகோவாவின் சாட்சிகள், கூட்டங்களையும் இயேசுவின் மரண நினைவுநாள் நிகழ்ச்சியையும் மாநாடுகளையும் வீடியோ கான்ஃபரன்ஸிங்கில் நடத்துகிறார்கள்.
தொற்றுநோய் பயத்தையும் சோர்வையும் சமாளிக்க உதவும் பைபிள் வசனங்கள்
ஏசாயா 30:15: “நீங்கள் பதட்டம் அடையாமல் என்மேல் நம்பிக்கை வைத்தால் பலமாக இருப்பீர்கள்.”
அர்த்தம்: கடவுள் சொல்கிற ஆலோசனைகளை கேட்டு நடக்கும்போது, கஷ்டமான சூழ்நிலைகளிலும் நம்மால் பதட்டப்படாமல் இருக்க முடியும்.
நீதிமொழிகள் 15:15: “கஷ்டத்தில் தவிப்பவனுக்கு எல்லா நாளும் திண்டாட்டம்தான். ஆனால், இதயத்தில் சந்தோஷமாக இருப்பவனுக்கு எப்போதும் விருந்துக் கொண்டாட்டம்தான்.”
அர்த்தம்: நல்ல விஷயங்களை செய்வதும் அதைப் பற்றி யோசிப்பதும், கஷ்டமான சமயத்திலும் சந்தோஷமாக இருக்க உதவும்.
நீதிமொழிகள் 14:15: “விவரம் தெரியாதவன் யார் எதைச் சொன்னாலும் நம்பிவிடுகிறான். ஆனால், சாமர்த்தியமாக நடக்கிறவன் ஒவ்வொரு அடியையும் யோசித்துதான் எடுத்து வைக்கிறான்.”
அர்த்தம்: பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். கட்டுப்பாடுகள் எல்லாம் தேவையில்லை என்று அலட்சியமாக இருக்கக்கூடாது.
ஏசாயா 33:24: “‘எனக்கு உடம்பு சரியில்லை’ என்று யாருமே சொல்ல மாட்டார்கள்.”
அர்த்தம்: சீக்கிரத்தில் எல்லா நோய்களையும் சரிசெய்யப்போவதாக கடவுள் சொல்லியிருக்கிறார்.