வெறுப்பு சங்கிலியை உடைப்பது எப்படி?
4 | கடவுளின் உதவியோடு வெறுப்பை வெல்லுங்கள்
பைபிள் போதனை:
“கடவுளுடைய சக்தியால் உண்டாகிற குணங்கள் அன்பு, சந்தோஷம், சமாதானம், பொறுமை, கருணை, நல்மனம், விசுவாசம், சாந்தம், சுயக்கட்டுப்பாடு ஆகியவையே.”—கலாத்தியர் 5:22, 23.
போதனையின் அர்த்தம்:
கடவுளின் உதவி இருந்தால்தான் வெறுப்பின் சங்கிலியை உடைக்க முடியும். சொந்த சக்தியால் வளர்த்துக்கொள்ள முடியாத குணங்களை வளர்த்துக்கொள்ள கடவுளுடைய சக்தி உதவும். வெறுப்பை வெல்ல தனியாகப் போராடாதீர்கள். கடவுளின் உதவியை ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போஸ்தலன் பவுலும் அப்படிச் செய்தார். அவர் சொல்கிறார்: “என்னைப் பலப்படுத்துகிறவர் மூலம் எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பலம் இருக்கிறது.” (பிலிப்பியர் 4:13) அவரைப் போலவே நாமும் செய்தால், “யெகோவாவிடமிருந்தே எனக்கு உதவி வரும்” என்று சொல்லலாம்.—சங்கீதம் 121:2.
நீங்கள் இப்படிச் செய்யலாம்:
“சண்டக்காரனா இருந்த என்னை யெகோவா சாதுவா மாத்தியிருக்காரு!”—வால்டோ
யெகோவாவிடம் அவருடைய சக்தியை தரச் சொல்லி மனதார வேண்டுங்கள். (லூக்கா 11:13) நல்ல குணங்களைக் காட்ட உதவ சொல்லி அவரிடம் கேளுங்கள். வெறுப்பை வெல்ல உதவி செய்யும் அன்பு, சமாதானம், பொறுமை, சுயக்கட்டுப்பாடு போன்ற குணங்களைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதைப் படியுங்கள். இந்தக் குணங்களைக் காட்டுவதற்கான வாய்ப்புகளைத் தேடிக்கொண்டே இருங்கள். இதுபோன்ற குணங்களைக் காட்ட விரும்புகிற ஆட்களோடு பழகுங்கள். ‘அன்பு காட்டுவதற்கும் நல்ல செயல்கள் செய்வதற்கும் [அவர்கள் உங்களை] உற்சாகப்படுத்துவர்கள்.’—எபிரெயர் 10:24.