Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

2 | பைபிள் தரும் “ஆறுதல்”

2 | பைபிள் தரும் “ஆறுதல்”

பைபிள் சொல்கிறது: “அன்று எழுதப்பட்ட வேதவசனங்கள் எல்லாம் நமக்கு அறிவுரை கொடுப்பதற்காகவே எழுதப்பட்டன; அவை நமக்கு நம்பிக்கை தருகின்றன. ஏனென்றால், அவை நம்மை ஆறுதல்படுத்துகின்றன, சகித்திருக்க நமக்கு உதவுகின்றன.”—ரோமர் 15:4.

இதன் அர்த்தம் என்ன?

மோசமான எண்ணங்கள் மனதை ஆட்டிப்படைக்கும்போது அதை சமாளிக்க பைபிள் பலம் தரும். ஏனென்றால், பைபிளில் ஆறுதலான வார்த்தைகள் இருக்கின்றன. அதுமட்டுமல்ல, மனதில் எந்த ஒரு வலியோ வேதனையோ இல்லாத காலம் கண்டிப்பாக வரும் என்ற நம்பிக்கையையும் பைபிள் தருகிறது.

பைபிளை படிப்பது நமக்கு எப்படி உதவும்?

நாம் எல்லாருமே சிலசமயங்களில் சோர்ந்துபோய் விடுகிறோம். ஆனால், மன அழுத்தத்தாலோ மனப்பதற்றத்​தாலோ கஷ்டப்படுகிறவர்களுக்கு ஒவ்வொரு நாளை ஓட்டுவதே பெரிய பாடுதான்! அதற்கு பைபிள் எப்படி உதவும்?

  • மனதில் இருக்கிற கசப்பான எண்ணங்களை தூக்கிப்போட்டுவிட்டு, சந்தோஷமான எண்ணங்களால் நிரப்புவதற்கு பைபிள் உதவும். (பிலிப்பியர் 4:8) பைபிளை படிக்க படிக்க, இதமான இனிமையான எண்ணங்களால் உங்களுடைய மனது நிரம்பும். அது, உணர்ச்சிகளை கட்டுப்படுத்த உதவும்.​—சங்கீதம் 94:​18, 19.

  • ‘நான் எதற்குமே லாயக்கில்லை’ என்ற எண்ணத்தை மாற்றிக்கொள்ள பைபிள் உதவும்.​—லூக்கா 12:​6, 7.

  • நாம் தன்னந்தனியாக இல்லை என்பதையும் நம்மை படைத்த கடவுள் நம் உணர்வுகளை முழுமையாக புரிந்துகொள்கிறார் என்பதையும் பைபிள் வசனங்கள் காட்டுகின்றன.​—சங்கீதம் 34:18; 1 யோவான் 3:​19, 20.

  • மனதில் ஆறாத ரணங்களாக இருக்கும் நினைவுகளை கடவுள் ஆற்றிவிடுவார் என்ற நம்பிக்கையை பைபிள் கொடுக்கிறது. (ஏசாயா 65:17; வெளிப்படுத்துதல் 21:4) ‘வாழவே பிடிக்கவில்லை’ என்று தோன்றுகிறபோது, தொடர்ந்து வாழ்வதற்கான பலத்தை இந்த நம்பிக்கை கொடுக்கிறது.