அட்டைப்படக் கட்டுரை | இயேசு ஏன் கஷ்டப்பட்டு இறந்தார்?
அது நிஜமாகவே நடந்ததா?
கி.பி. 33-ஆம் வருடம். நாசரேத் ஊரைச் சேர்ந்த இயேசு தேசத்துரோகி என்று பொய்க் குற்றம் சாட்டப்பட்டு கண்மூடித்தனமாக அடிக்கப்பட்டார். கடைசியில், மரக் கம்பத்தில் அறைந்து கொல்லப்பட்டார். அவர் வலியால் துடிதுடித்து உயிரை விட்டார். ஆனால், கடவுள் அவரை திரும்பவும் உயிருக்கு கொண்டுவந்தார். அவர் இறந்து 40 நாட்களுக்குப் பிறகு பரலோகத்துக்குப் போனார்.
இந்த சம்பவங்களைப் பற்றி பைபிளில் உள்ள புதிய ஏற்பாட்டில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், அதெல்லாம் உண்மையிலேயே நடந்ததா? இந்தக் கேள்விக்கு பதில் தெரிந்துகொள்வது ரொம்ப முக்கியம். ஏன்? அந்த சம்பவங்கள் உண்மையிலேயே நடக்கவில்லை என்றால், கிறிஸ்தவர்களுடைய நம்பிக்கை எல்லாமே வீணாகிப் போய்விடும். அதாவது, இந்தப் பூமி ஒரு அழகிய தோட்டமாக மாறும், அதில் எல்லாரும் சாவே இல்லாமல் வாழ்வார்கள் என்று அவர்கள் நம்புவது வீணாகிப் போய்விடும். (1 கொரிந்தியர் 15:14) ஆனால், இந்த சம்பவங்கள் உண்மையிலேயே நடந்திருந்தால், நம் எல்லாருக்கும் ஒரு சந்தோஷமான வாழ்க்கை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. சரி, இந்த சம்பவங்கள் உண்மையிலேயே நடந்ததா இல்லையா என்று முதலில் தெரிந்துகொள்ளலாம்.
நடந்தது உண்மையா?
இயேசுவின் வாழ்க்கையைப் பற்றி பைபிள் சொல்வது வெறும் கற்பனையோ கட்டுக்கதையோ கிடையாது. பைபிளை எழுதியவர்கள், நடந்ததை அப்படியே எழுதியிருக்கிறார்கள். உதாரணமாக, பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் இடங்கள் இன்றும் இருக்கிறது. நீங்களும்கூட அதைப் போய் பார்க்க முடியும். அதில் சொல்லப்பட்டிருக்கும் ஆட்களும் உண்மையாகவே வாழ்ந்தவர்கள். இதை வரலாற்று எழுத்தாளர்களும் ஒத்துக்கொள்கிறார்கள்.—லூக்கா 3:1, 2, 23.
* (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) ரோம நாட்டு முறைப்படி இயேசுவுக்கு மரண தண்டனை கிடைத்தது. இயேசு அப்படித்தான் இறந்தார் என்று பைபிளும் சொல்கிறது. நடந்த சம்பவங்களை பைபிள் மறைக்காமல் அப்படியே சொல்கிறது. சொல்லப்போனால், இயேசுவின் சீடர்கள் செய்த தவறுகளையும்கூட மறைக்காமல் சொல்கிறது. (மத்தேயு 26:56; லூக்கா 22:24-26; யோவான் 18:10, 11) இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, இயேசுவின் வாழ்க்கையைப் பற்றி எழுதியவர்கள் உண்மையில் என்ன நடந்ததோ அதை மறைக்காமல் அப்படியே பைபிளில் எழுதியிருக்கிறார்கள் என்று தெரிகிறது.
இயேசுவைப் பற்றி அவர் வாழ்ந்த நூற்றாண்டில் இருந்த எழுத்தாளர்களும், அதற்குப் பிறகு வந்த எழுத்தாளர்களும்கூட எழுதி இருக்கிறார்கள்.இயேசு மறுபடியும் உயிரோடு வந்தாரா?
நிறைய பேர், இயேசு பூமியில் வாழ்ந்தார் என்பதை நம்புகிறார்கள். ஆனால், அவர் இறந்த பிறகு மறுபடியும் உயிரோடு வந்தாரா இல்லையா என்பதில்தான் சிலருக்கு சந்தேகம். அவருடைய சீடர்கள்கூட இயேசு உயிரோடு வந்ததை ஆரம்பத்தில் நம்பவில்லை. (லூக்கா 24:11) ஆனால், இயேசு மறுபடியும் உயிரோடு வந்ததை அவர்களும் மற்ற சீடர்களும் வித்தியாசமான சந்தர்ப்பங்களில் பார்த்தார்கள். ஒரு சமயம், 500-க்கும் அதிகமான பேர் இயேசுவைப் பார்த்தார்கள். இப்படி பார்த்ததால், இயேசு உயிரோடு வந்துவிட்டார் என்று சீடர்கள் நம்பினார்கள்.—1 கொரிந்தியர் 15:6.
இயேசு மறுபடியும் உயிரோடு வந்ததை சீடர்கள் எல்லாரிடமும் தைரியமாக சொன்னார்கள். இயேசுவை கொலை செய்தவர்களிடமும் சொன்னார்கள். அதற்காக கைது செய்யப்படுவார்கள், கொலை செய்யப்படுவார்கள் என்று தெரிந்தும் அவர்கள் பயப்படவில்லை. (அப்போஸ்தலர் 4:1-3, 10, 19, 20; 5:27-32) இயேசு மறுபடியும் உயிரோடு வந்தது நூற்றுக்கு நூறு உண்மை என்பது சீடர்களுக்கு தெரியும். அதனால்தான், அவர்களால் அந்தளவு தைரியமாக பேச முடிந்தது. அன்றும் சரி இன்றும் சரி, கிறிஸ்தவர்களின் நம்பிக்கைக்கு அடிப்படையாக இருப்பதே இயேசு மறுபடியும் உயிரோடு வந்ததுதான்!
அதனால், இயேசு இறந்ததைப் பற்றி... அவர் மறுபடியும் உயிரோடு வந்ததைப் பற்றி... பைபிள் சொல்வதெல்லாம் வெறும் கற்பனையோ கட்டுக்கதையோ கிடையாது. அது எல்லாமே நிஜம்! இதை யாராலும் மறுக்க முடியாது. நீங்களும் இந்த சம்பவங்களை கவனமாக படித்தால், இதெல்லாமே நிஜம் என்பதை ஒத்துக்கொள்வீர்கள். ஆனால், இந்த சம்பவங்கள் எல்லாம் ஏன் நடந்தன? இதை நீங்கள் புரிந்துகொண்டால், உங்கள் நம்பிக்கை இன்னும் பலப்படும். அடுத்த கட்டுரை இந்தக் கேள்விக்கு பதில் அளிக்கும். (w16-E No.2)
^ பாரா. 7 சுமார் கி.பி. 55-ல் பிறந்த டசிட்டஸ் என்பவர் இப்படி எழுதினார்: “கிறிஸ்து என்ற பெயரில் இருந்துதான் [கிறிஸ்தவர்கள்] என்ற பெயர் வந்தது. திபேரியு ஆட்சி செய்த காலத்தில், எங்கள் மாகாண அதிகாரியாக பொந்தியு பிலாத்து இருந்தபோது கிறிஸ்துவுக்கு அதிக பட்ச தண்டனை வழங்கப்பட்டது.” சுடோனியஸ் (கி.பி. 69-ல் பிறந்தவர்), யூத வரலாற்று ஆசிரியர் ஜொஸிஃபஸ் (கி.பி. 37 அல்லது 38-ல் பிறந்தவர்), பித்தினியாவின் ஆளுநர் இளைய பிளைனி (கி.பி. 61 அல்லது 62-ல் பிறந்தவர்) போன்றவர்களும் இயேசுவைப் பற்றி குறிப்பிட்டு இருக்கிறார்கள்.