Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்கள் எதிர்காலம், உங்கள் கையில்!

உங்கள் எதிர்காலம், உங்கள் கையில்!

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்தான் இருக்கிறதா? சிலர், தங்கள் வாழ்க்கை தங்கள் கையில் இல்லை என்றும், அது விதியின் கையில்தான் இருக்கிறது என்றும் நம்புகிறார்கள். தங்கள் லட்சியங்களை எட்ட முடியாமல் போகும்போது, ‘என்ன செய்யறது! என் தலையில எழுதியிருக்கறபடிதான் நடக்கும்’ என்று அவர்கள் சொல்கிறார்கள்.

வேறு சிலர், அநியாயமும் அக்கிரமும் நிறைந்த இந்த உலகத்தில் வாழ வேண்டியிருப்பதை நினைத்து நொந்துபோகிறார்கள். நல்லபடியாக வாழ அவர்கள் முயற்சி செய்தாலும் போர், குற்றச்செயல், இயற்கைப் பேரழிவு, வியாதி போன்றவை மாறிமாறி வந்து அவர்களுடைய எதிர்காலத் திட்டங்களை முறியடித்துவிடுகின்றன. அதனால், ‘எதுக்கு வீணா முயற்சி எடுக்கணும்?’ என்று சலித்துக்கொள்கிறார்கள்.

உண்மைதான், சில சூழ்நிலைகள் உங்களுடைய எதிர்காலத் திட்டங்களை ரொம்பவே பாதிக்கும். (பிரசங்கி 9:11) ஆனால், முடிவில்லாத வாழ்வைப் பெறுவதற்கு நீங்கள்தான் சரியான தீர்மானத்தை எடுக்க வேண்டும். ஆம், உங்கள் எதிர்காலம் உங்கள் கையில் இருக்கிறது என்பதை பைபிள் காட்டுகிறது. அது என்ன சொல்கிறது என்று கவனியுங்கள்.

“உங்கள் முன்னால் நான் வாழ்வையும் சாவையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் வைக்கிறேன். நீங்களும் உங்கள் சந்ததிகளும் பிழைப்பதற்காக, நீங்கள் உங்கள் கடவுளாகிய யெகோவாமேல் அன்பு காட்டி, அவருடைய பேச்சைக் கேட்டு நடந்து, அவருக்கு உண்மையாக [அதாவது, அவரோடு நெருக்கமாக] இருப்பதன் மூலம் வாழ்வைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.” (உபாகமம் 30:15, 19, 20) பூர்வ இஸ்ரவேலர்கள், கடவுள் வாக்குக்கொடுத்திருந்த தேசத்துக்குள் நுழைவதற்குச் சற்றுமுன்பு, அவர்களுடைய தலைவரான மோசே சொன்ன வார்த்தைகள்தான் இவை!

‘உங்கள் முன்னால் நான் வாழ்வையும் சாவையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் வைக்கிறேன். நீங்கள் வாழ்வைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.’—உபாகமம் 30:19, 20

கடவுள், எகிப்தில் அடிமைகளாக இருந்த இஸ்ரவேலர்களை விடுவித்து, தான் வாக்குக்கொடுத்திருந்த தேசத்தில் சுதந்திரமாகவும் சந்தோஷமாகவும் வாழ்கிற வாய்ப்பை அவர்களுக்குக் கொடுத்தார். ஆனால், இதெல்லாம் அவர்களுக்குத் தானாகவே கிடைத்துவிடும் என்று அவர் சொல்லவில்லை. இந்த ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கு, அவர்கள் “வாழ்வைத் தேர்ந்தெடுக்க” வேண்டியிருந்தது. எப்படி? ‘கடவுள்மேல் அன்பு காட்டி, அவருடைய பேச்சைக் கேட்டு நடந்து, அவரோடு நெருக்கமாக இருப்பதன் மூலம்’ வாழ்வைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது.

இன்றும், இதுபோன்ற ஒரு தீர்மானத்தை நீங்கள் எடுக்க வேண்டியிருக்கிறது. உங்களுடைய தீர்மானத்தைப் பொறுத்துதான் உங்கள் எதிர்காலம் இருக்கும். கடவுள்மேல் அன்பு காட்டி, அவருடைய பேச்சைக் கேட்டு நடந்து, அவரோடு நெருக்கமாக இருப்பதன் மூலம் நீங்கள் வாழ்வைத் தேர்ந்தெடுப்பீர்கள்; அதாவது, பூஞ்சோலை பூமியில் என்றென்றும் வாழ்கிற வாழ்வைத் தேர்ந்தெடுப்பீர்கள். ஆனால், அந்த மூன்று படிகளிலும் என்ன உட்பட்டிருக்கிறது?

கடவுள்மேல் அன்பு காட்டுங்கள்

கடவுளுடைய முக்கியமான குணமே அன்புதான். “கடவுள் அன்பாகவே இருக்கிறார்” என்று அப்போஸ்தலன் யோவான் கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் எழுதினார். (1 யோவான் 4:8) மிக முக்கியமான கட்டளை எதுவென்று ஒருவர் இயேசுவிடம் கேட்டபோது, “உன் கடவுளாகிய யெகோவாமேல் உன் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் முழு மனதோடும் அன்பு காட்ட வேண்டும்” என்று அவர் சொன்னார். (மத்தேயு 22:37) ஆம், யெகோவாவோடு நமக்குள்ள அருமையான பந்தம் அன்பின் அடிப்படையில் இருக்க வேண்டும், பயத்தின் அடிப்படையிலோ குருட்டுத்தனமான கீழ்ப்படிதலின் அடிப்படையிலோ இருக்கக் கூடாது. ஆனால், நாம் ஏன் கடவுள்மேல் அன்பு காட்ட வேண்டும்?

மனிதர்கள்மேல் யெகோவா வைத்திருக்கும் அன்பை, பிள்ளைகள்மேல் பெற்றோர் வைத்திருக்கும் அன்போடு ஒப்பிடலாம். அன்பான பெற்றோர்கள் தவறுசெய்யும் இயல்புள்ளவர்களாக இருந்தால்கூட, தங்களுடைய பிள்ளைகளுக்கு அறிவுரை சொல்லி, அவர்களை உற்சாகப்படுத்தி, அரவணைத்து, கண்டித்துத் திருத்துகிறார்கள். பிள்ளைகள் சந்தோஷமாகவும், சீரும் சிறப்புமாகவும் வாழ வேண்டுமென்பதற்காக அப்படிச் செய்கிறார்கள். இதற்கெல்லாம் என்ன கைமாறு எதிர்பார்க்கிறார்கள்? பிள்ளைகள் தங்கள்மேல் அன்பு காட்ட வேண்டும் என்றும், தங்களுடைய பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும் என்றும்தான் எதிர்பார்க்கிறார்கள். நம்முடைய பரலோக அப்பா நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்? அவர் நமக்காகச் செய்திருக்கிற எல்லாவற்றையும் நன்றியோடு ஏற்றுக்கொண்டு அவர்மேல் அன்புகாட்ட வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்; அது நியாயம்தானே?

அவருடைய பேச்சைக் கேட்டு நடங்கள்

“கேட்டு நட” என்பதற்கான பைபிளின் மூல மொழி வார்த்தை, பெரும்பாலும் “கீழ்ப்படி” என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது. இதே அர்த்தத்தில்தான் ஒரு பிள்ளையிடம், “அப்பா அம்மா பேச்ச கேட்டு நடக்கணும்” என்று சொல்வோம். அதனால், கடவுளுடைய பேச்சைக் கேட்டு நடப்பது என்பது அவர் சொல்வதைக் கேட்டு கற்றுக்கொள்வதையும், அதற்குக் கீழ்ப்படிவதையும் அர்த்தப்படுத்துகிறது. கடவுளுடைய குரலை இன்று நம்மால் கேட்க முடியாது, ஆனால், அவருடைய வார்த்தையான பைபிளை வாசித்து அதிலுள்ள விஷயங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் அவர் சொல்வதைக் கேட்கிறோம்.—1 யோவான் 5:3.

கடவுளுடைய பேச்சைக் கேட்டு நடப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்ட இயேசு ஒருசமயம் இப்படிச் சொன்னார்: “உணவால் மட்டுமல்ல, யெகோவாவின் வாயிலிருந்து வருகிற ஒவ்வொரு வார்த்தையாலும் மனுஷன் உயிர்வாழ்வான்.” (மத்தேயு 4:4) உணவு நமக்கு எந்தளவு முக்கியமோ, அந்தளவு கடவுளைப் பற்றிய அறிவு முக்கியம், ஏன் அதைவிட ரொம்பவே முக்கியம். ஞானமுள்ள ராஜாவான சாலொமோன் இப்படி விளக்கினார்: “பணம் பாதுகாப்பு தருவதுபோல் ஞானமும் பாதுகாப்பு தரும். ஆனால், பணத்தைவிட சிறந்தது அறிவும் ஞானமும்தான். ஏனென்றால், அவை ஒருவருடைய உயிரையே காப்பாற்றும்.” (பிரசங்கி 7:12) கடவுள் கொடுக்கிற அறிவும் ஞானமும் இன்று நமக்குப் பாதுகாப்பு தருகிறது; அதோடு, முடிவில்லாத வாழ்வுக்கு வழிநடத்துகிற ஞானமான தீர்மானத்தை எடுக்கவும் உதவுகிறது.

அவரோடு நெருக்கமாக இருங்கள்

முந்தின கட்டுரையில் உள்ள இயேசுவின் உதாரணத்தை யோசித்துப் பாருங்கள்: “முடிவில்லாத வாழ்வுக்குப் போகிற வாசல் இடுக்கமானது, அதன் பாதை குறுகலானது; சிலர்தான் அதைக் கண்டுபிடிக்கிறார்கள்.” (மத்தேயு 7:13, 14) அப்படிப்பட்ட பாதையில் போகும்போது, திறமையுள்ள ஒரு வழிகாட்டி நமக்குத் தேவை. அந்த வழிகாட்டியோடு கூடவே இருப்பது, நெருங்கியிருப்பது ரொம்பவும் முக்கியம். அப்போதுதான், போக வேண்டிய இடத்துக்கு போய்ச் சேர முடியும். அதுபோலவே, முடிவில்லாத வாழ்வைப் பெற வேண்டுமென்றால் கடவுளோடு நெருங்கியிருப்பது ரொம்பவும் முக்கியம். (சங்கீதம் 16:8) ஆனால், கடவுளோடு எப்படி நெருங்கியிருக்க முடியும்?

ஒவ்வொரு நாளும், நாம் செய்ய வேண்டிய... செய்ய ஆசைப்படுகிற... விஷயங்கள் நிறைய இருக்கின்றன. இப்படிப்பட்ட விஷயங்கள் நம்முடைய நேரத்தை அளவுக்கு அதிகமாக உறிஞ்சிவிடுவதால், கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கிற விஷயங்களைப் பற்றி யோசிக்கக்கூட நமக்கு நேரமில்லாமல் போய்விடுகிறது. அதனால்தான் பைபிள் இப்படி நினைப்பூட்டுகிறது: “நீங்கள் ஞானமில்லாதவர்களாக நடக்காமல், ஞானமுள்ளவர்களாக நடப்பதற்கு அதிக கவனம் செலுத்துங்கள். உங்கள் நேரத்தை மிக நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஏனென்றால், நாட்கள் மிகவும் மோசமாக இருக்கின்றன.” (எபேசியர் 5:15, 16) நம் வாழ்க்கையில் மற்ற எல்லா விஷயங்களுக்கும் மேலாக, கடவுளோடுள்ள பந்தத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் நாம் அவரோடு நெருங்கியிருக்க முடியும்.—மத்தேயு 6:33.

தீர்மானம் உங்கள் கையில்!

உங்களுடைய கடந்த காலத்தை உங்களால் மாற்ற முடியாதென்றாலும், உங்களுக்கும் உங்கள் அன்பானவர்களுக்கும் ஒரு நல்ல எதிர்காலம் கிடைப்பதற்காக உங்களால் சில விஷயங்களைச் செய்ய முடியும். நம்மை மிகவும் நேசிக்கிற நம் பரலோகத் தகப்பனான யெகோவா, நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதைப் பற்றி மீகா தீர்க்கதரிசி மூலம் பைபிளில் இப்படி வெளிப்படுத்தியிருக்கிறார்:

“மனுஷனே, நல்லது எதுவென்று அவர் உனக்குச் சொல்லியிருக்கிறார். யெகோவா உன்னிடம் என்ன கேட்கிறார்? நியாயத்தைக் கடைப்பிடித்து, உண்மைத்தன்மையை நெஞ்சார நேசித்து, அடக்கத்தோடு உன் கடவுளுடைய வழியில் நடக்க வேண்டும் என்றுதானே கேட்கிறார்!”மீகா 6:8.

யெகோவாவின் வழியில் நடந்து, அவரிடமிருந்து நிரந்தர ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காக அவர் உங்களை அழைக்கிறார். அவருடைய அழைப்பை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? தீர்மானம் உங்கள் கையில்!