Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இயேசு பார்ப்பதற்கு உண்மையிலேயே எப்படி இருந்தார்?

இயேசு பார்ப்பதற்கு உண்மையிலேயே எப்படி இருந்தார்?

இயேசுவின் புகைப்படம் யாரிடமும் இல்லை! அவர் உயிரோடு இருந்தபோது, அவரை வைத்து யாரும் ஓவியம் வரையவும் இல்லை, அவரைச் சிலையாக செதுக்கவும் இல்லை. இருந்தாலும் பல நூற்றாண்டுகளாக, நிறைய கலைஞர்களுடைய கலை வேலைகளில் இயேசுவின் உருவத்தை நம்மால் பார்க்க முடிகிறது.

இயேசு பார்ப்பதற்கு எப்படி இருந்தார் என்று இந்தக் கலைஞர்களுக்கும் தெரியாது. கலாச்சாரம், மத நம்பிக்கைகள், கலை வேலைப்பாடுகளை வாங்குபவர்களின் விருப்பம் ஆகியவற்றின் அடிப்படையில்தான் இவர்கள் இயேசுவின் உருவத்தைச் சித்தரித்திருக்கிறார்கள். இந்தக் கலை வேலைப்பாடுகள், இயேசுமேலும், அவருடைய போதனைகள்மேலும் மக்களுக்கு இருக்கும் கண்ணோட்டத்தை ரொம்பவே பாதிக்கின்றன.

சில கலைஞர்கள், இயேசுவைப் பலவீனமான ஒரு நபராகச் சித்தரித்திருக்கிறார்கள். அவருக்கு நீண்ட முடியும், தாடியும் இருப்பது போலவும், அவர் சோகமாக இருப்பது போலவும் சித்தரித்திருக்கிறார்கள். இன்னும் சிலர், அவரை ஒரு தேவதூதரைப் போலவும், அவரைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் இருப்பது போலவும், மற்றவர்களோடு சகஜமாகப் பழகாத ஒரு நபரைப் போலவும் சித்தரித்திருக்கிறார்கள். இவர்கள் இயேசுவை இப்படிச் சித்தரித்திருப்பது சரியா? இதை எப்படித் தெரிந்துகொள்ளலாம்? அதற்கு ஒரு வழி, பைபிளைப் படிப்பதாகும்! அப்படிப் படிக்கும்போது, இயேசு பார்ப்பதற்கு எப்படி இருந்திருப்பார் என்று நம்மால் ஓரளவு தெரிந்துகொள்ள முடியும். அதோடு, அவரைச் சரியான கண்ணோட்டத்தில் பார்க்கவும் முடியும்.

“எனக்காக ஓர் உடலைத் தயார்படுத்தினீர்கள்”

இயேசு ஞானஸ்நானம் எடுத்த சமயத்தில், தன்னுடைய அப்பாவிடம் ஜெபம் செய்தபோது மேலே இருக்கும் வார்த்தைகளைச் சொன்னார். (எபிரெயர் 10:5; மத்தேயு 3:13-17) அவருடைய உடலமைப்பு எப்படி இருந்தது? சுமார் 30 வருஷங்களுக்கு முன்பு, காபிரியேல் தூதன் மரியாளிடம், ‘நீ கர்ப்பமாகி ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். உனக்குப் பிறக்கப்போகும் குழந்தை கடவுளுடைய மகன் என்று அழைக்கப்படும்’ என்று சொன்னார். (லூக்கா 1:31, 35) படைக்கப்பட்ட சமயத்தில் ஆதாம் பரிபூரண மனிதனாக இருந்தது போலவே, இயேசுவும் ஒரு பரிபூரண மனிதராக இருந்தார். (லூக்கா 3:38; 1 கொரிந்தியர் 15:45) இயேசு பார்ப்பதற்கு அழகாக இருந்திருப்பார்; தோற்றத்தில் யூத பெண்ணான அவருடைய அம்மா, மரியாளைப் போலவே இருந்திருப்பார்.

பொதுவாக, ரோமர்கள் தாடி வைத்திருக்க மாட்டார்கள். ஆனால், யூதர்கள் தாடி வைத்திருந்தார்கள். இயேசு ஒரு யூதராக இருந்ததால், அவரும் தாடி வைத்திருந்தார். தாடி வைப்பது கண்ணியத்துக்கும் மரியாதைக்கும் அடையாளமாக இருந்தது; அது குட்டையாகவும் சீராகவும் இருந்தது. இயேசு நிச்சயம் தன்னுடைய தாடியையும் முடியையும் நேர்த்தியாக வெட்டியிருப்பார். நசரேயராக இருந்தவர்கள் மட்டும்தான் தங்களுடைய முடியை வெட்டவில்லை; அதில் சிம்சோனும் ஒருவர்!—எண்ணாகமம் 6:5; நியாயாதிபதிகள் 13:5.

சுமார் 30 வருஷங்களுக்கு, எந்த நவீனக் கருவிகளும் இல்லாமல் இயேசு தச்சு வேலை செய்தார். (மாற்கு 6:3) அதனால், அவருக்கு நல்ல உடல் கட்டமைப்பு இருந்திருக்க வேண்டும். இயேசு ஒரு தனி ஆளாக, தன்னுடைய ஊழியத்தின் ஆரம்பக் காலங்களில், “ஆடு மாடுகளோடு சேர்த்து அவர்கள் எல்லாரையும் ஆலயத்திலிருந்து விரட்டினார்; காசு மாற்றுபவர்களின் காசுகளைக் கீழே கொட்டி, அவர்களுடைய மேஜைகளைக் கவிழ்த்துப்போட்டார்.” (யோவான் 2:14-17) பலமான, வலிமையான ஒரு நபரால்தான் இதுபோன்ற ஒரு செயலைச் செய்ய முடியும். கடவுள் கொடுத்த உடலை, கடவுளுடைய வேலையைச் செய்வதற்காகவே அவர் பயன்படுத்தினார். “நான் மற்ற நகரங்களிலும் கடவுளுடைய அரசாங்கத்தை பற்றிய நல்ல செய்தியை அறிவிக்க வேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டிருக்கிறேன்” என்று சொன்னார். (லூக்கா 4:43) பாலஸ்தீனா முழுவதும் நடந்தே போய், இந்தச் செய்தியைச் சொல்ல அதிக பலம் தேவைப்பட்டிருக்கும்.

“என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்குப் புத்துணர்ச்சி கொடுப்பேன்”

இயேசுவின் முகபாவமும், அவர் மற்றவர்களிடம் பழகிய விதமும், ‘உழைத்துக் களைத்துப்போனவர்களையும், பாரமான சுமையைச் சுமக்கிறவர்களையும்’ அவரிடம் கவர்ந்திருக்கும். (மத்தேயு 11:28-30) அவர் அன்பாகவும் கனிவாகவும் நடந்துகொண்டது, அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள ஆசைப்பட்டவர்களுக்கு நிச்சயம் புத்துணர்ச்சியைத் தந்திருக்கும். சின்ன பிள்ளைகளும்கூட இயேசுவிடம் நெருக்கமாக இருக்க விரும்பினார்கள்; ‘சின்னப் பிள்ளைகளை [இயேசு] அணைத்துக்கொண்டார்’ என்று பைபிள் சொல்கிறது.—மாற்கு 10:13-16.

இயேசு இறப்பதற்கு முன்பு துக்கமாக இருந்திருந்தாலும், அவர் எப்போதுமே துக்கமாக இருந்ததில்லை. உதாரணத்துக்கு, கானா ஊரில் நடந்த ஒரு கல்யாண விருந்தில், இயேசு தண்ணீரைத் திராட்சமதுவாக மாற்றினார். (யோவான் 2:1-11) மற்ற சமயங்களிலும், மறக்க முடியாத சில பாடங்களை அவர் கற்றுக்கொடுத்தார்.—மத்தேயு 9:9-13; யோவான் 12:1-8.

எல்லாவற்றுக்கும் மேலாக, இயேசுவின் செய்தியைக் கேட்ட எல்லாருக்கும் என்றென்றும் வாழும் வாய்ப்பு இருந்தது. (யோவான் 11:25, 26; 17:3) ஒருசமயம், அவருடைய சீஷர்கள் 70 பேர், ஊழியத்தில் தங்களுக்குக் கிடைத்த அனுபவங்களைச் சொன்னார்கள். அப்போது, ‘உங்களுடைய பெயர்கள் பரலோகத்தில் எழுதப்பட்டிருப்பதை நினைத்து சந்தோஷப்படுங்கள்’ என்று சொல்லி அவரும் ‘சந்தோஷப்பட்டார்.’—லூக்கா 10:20, 21.

“நீங்களோ அப்படி இருக்கக் கூடாது”

இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மதத் தலைவர்கள், மக்களைத் தங்களிடம் கவர்ந்திழுப்பதற்காகவும், தங்களுக்கு அதிகாரம் இருப்பதைக் காட்டுவதற்காகவும் தந்திரமான வழிகளைத் தேடினார்கள். (எண்ணாகமம் 15:38-40; மத்தேயு 23:5-7) ஆனால், அவர்களைப் போல ‘அடக்கி ஆளுகிறவர்களாக’ இருக்கக் கூடாது என்று இயேசு தன்னுடைய அப்போஸ்தலர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். (லூக்கா 22:25, 26) சொல்லப்போனால், “வேத அறிஞர்களைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்; அவர்கள் நீளமான அங்கிகளைப் போட்டுக்கொண்டு திரிய விரும்புகிறார்கள்; சந்தைகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் சொல்ல வேண்டுமென்று விரும்புகிறார்கள்” என்றும் இயேசு எச்சரித்தார்.—மாற்கு 12:38.

அன்றிருந்த மதத் தலைவர்களைப் போல இல்லாமல், இயேசு மக்களோடு மக்களாக இருந்தார்; ஒருசமயம், அவரை யாரும் அடையாளம் கண்டுகொள்ளவில்லை. (யோவான் 7:10, 11) சொல்லப்போனால், தோற்றத்திலும் தன் உண்மையுள்ள 11 அப்போஸ்தலர்களிலிருந்து அவர் வித்தியாசமாக இருக்கவில்லை. அதனால்தான் காட்டிக்கொடுத்தவனான யூதாஸ், தான் ‘சொல்லி வைத்திருந்தபடியே’ இயேசுவுக்கு முத்தம் கொடுத்து அவரை அடையாளம் காட்டினான்.—மாற்கு 14:44, 45.

நமக்கு எல்லா தகவல்களும் தெரியவில்லை என்றாலும், பொதுவாக, மக்கள் அவரைச் சித்தரிப்பது போல அவர் இருந்திருக்க மாட்டார் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. இயேசு பார்ப்பதற்கு உண்மையிலேயே எப்படி இருந்தார் என்பதைவிட, நாம் அவரை இன்று எப்படிப் பார்க்கிறோம் என்பதுதான் முக்கியம்.

“இன்னும் கொஞ்சக் காலத்தில் உலகம் என்னைப் பார்க்காது”

இந்த வார்த்தைகளைச் சொன்ன அதே நாளில், இயேசு மரணமடைந்தார்; பிறகு, அடக்கம் செய்யப்பட்டார். (யோவான் 14:19) “பலருடைய உயிருக்கு ஈடாக,” இயேசு தன்னுடைய உயிரையே கொடுத்தார். (மத்தேயு 20:28) மூன்றாவது நாள், கடவுள் அவரை “பரலோகத்துக்குரிய உடலில்” உயிரோடு எழுப்பி, அவருடைய சீஷர்கள் சிலருக்கு முன் “தோன்ற வைத்தார்.” (1 பேதுரு 3:18; அப்போஸ்தலர் 10:40) சீஷர்களுக்கு முன் தோன்றியபோது, அந்தச் சமயத்தில் இயேசு எப்படி இருந்தார்? தோற்றத்தில் அவர் முன்பு இருந்ததைப் போல் இருந்திருக்க மாட்டார். அதனால்தான், அவருடைய சீஷர்களால்கூட அவரை உடனே அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. மகதலேனா மரியாள் அவரைத் தோட்டக்காரர் என்று நினைத்தார்; எம்மாவுக்குப் போய்க்கொண்டிருந்த இரண்டு சீஷர்கள் அவரை அன்னியர் என்று நினைத்தார்கள்.—லூக்கா 24:13-18; யோவான் 20:1, 14, 15.

இன்று இயேசுவை நாம் எப்படிப் பார்க்க வேண்டும்? இயேசு இறந்து 60 வருஷங்களுக்குப் பிறகு, அவருடைய அன்புக்குரிய அப்போஸ்தலனான யோவான், அவரைத் தரிசனங்களில் பார்த்தார். அதில், இயேசு சிலுவையில் அறையப்பட்டது போல அவர் பார்க்கவில்லை. மாறாக, கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாவாக இருக்கிற இயேசுவை, ‘ராஜாக்களுக்கெல்லாம் ராஜாவாகவும், எஜமான்களுக்கெல்லாம் எஜமானாகவும்தான்’ அவர் பார்த்தார். இயேசு, சீக்கிரத்திலேயே கடவுளை எதிர்க்கும் பேய்களையும், மக்களையும் அழிப்பார், மனிதர்களுக்கு முடிவில்லாத ஆசீர்வாதங்களையும் கொடுப்பார்.—வெளிப்படுத்துதல் 19:16; 21:3, 4. ▪