Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாழ்க்கை சரிதை

கற்றுக்கொள்ளும் பயணம் ஓயவில்லை

கற்றுக்கொள்ளும் பயணம் ஓயவில்லை

யெகோவாதான் என் ‘மகத்தான போதகர்.’ (ஏசா. 30:20) அதற்காக நான் நன்றியோடு இருக்கிறேன். பைபிள் மூலமாக, பிரமிக்க வைக்கிற படைப்புகள் மூலமாக, தன்னுடைய அமைப்பு மூலமாக தன் மக்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார். சகோதர சகோதரிகளைப் பயன்படுத்தியும் அவர் நமக்கு உதவுகிறார். இப்போது எனக்குக் கிட்டத்தட்ட 100 வயசு! இருந்தாலும், யெகோவாவின் போதனையிலிருந்து இன்றுவரை பயனடைந்து வருகிறேன். என் கதையைச் சொல்கிறேன், கேளுங்கள்!

1948-ல் என் குடும்பத்தோடு

1927-ல் அமெரிக்காவில், சிகாகோவுக்குப் பக்கத்தில் ஒரு சின்ன ஊரில் நான் பிறந்தேன். எங்கள் வீட்டில் ஐந்து பிள்ளைகள். அக்கா ஜெத்தா, அண்ணன் டான், அப்புறம் நான், தம்பி கார்ல் மற்றும் தங்கை ஜாய். எங்களையே முழுதாக யெகோவாவுக்குக் கொடுக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். 1943-ல், இரண்டாவது கிலியட் பள்ளியில் ஜெத்தா கலந்துகொண்டாள். 1944-ல், புருக்லினில் இருக்கும் பெத்தேலுக்கு டான் போனான். 1947-ல் கார்லும், 1951-ல் ஜாயும் பெத்தேலுக்குப் போனார்கள். அவர்களும் என் அப்பா அம்மாவும் வைத்த முன்மாதிரிதான், முழுநேர சேவையைச் செய்ய என்னைத் தூண்டியது.

குடும்பமாக யெகோவாவைப் பற்றிக் கற்றுக்கொண்டோம்

அப்பா அம்மா தவறாமல் பைபிள் வாசிப்பார்கள். கடவுள்மேல் அவர்களுக்கு அன்பு இருந்தது. அந்த அன்பை எங்கள் மனதிலும் விதைத்தார்கள். ஆனால் ஐரோப்பாவில், முதல் உலகப் போரில் கலந்துகொண்ட பிறகு, அப்பாவுக்கு சர்ச்சுகள்மேல் இருந்த மதிப்பே போய்விட்டது. போரிலிருந்து அப்பா உயிரோடு திரும்பி வந்ததே சந்தோஷம் என்று அம்மா நினைத்தார். ஒருநாள், அப்பாவிடம் அம்மா, “என்னங்க, முன்னாடி மாதிரியே சர்ச்சுக்கு நாம் போகலாம் வாங்க” என்று கூப்பிட்டார். அதற்கு அப்பா, “உன்னை கூட்டிக்கொண்டு போய் விடுகிறேன். ஆனால், நான் வரப்போவதில்லை” என்று சொல்லிவிட்டார். “ஏன்?” என்றார் அம்மா. அதற்கு அப்பா, “போரில், சண்டை போட்டுக்கொண்ட இரண்டு நாட்டு போர் வீரர்களையும் அவர்களுடைய ஆயுதங்களையும் சர்ச் தலைவர்கள் ஆசீர்வதித்தார்கள். இரண்டு தலைவர்களும் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள். கடவுள் என்ன இரண்டு பக்கமுமா இருக்கிறார்?” என்றார்.

ஒரு தடவை அம்மா சர்ச்சில் இருந்தபோது, இரண்டு யெகோவாவின் சாட்சிகள் எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். அவர்கள் அப்பாவிடம் வெளிச்சம் என்ற புத்தகத்தின் இரண்டு தொகுதிகளைக் கொடுத்தார்கள். அதில் வெளிப்படுத்துதல் புத்தகத்தைப் பற்றிய விளக்கம் இருந்தது. அப்பாவுக்கு அந்தப் புத்தகங்கள் பிடித்திருந்ததால் அதை வாங்கிக்கொண்டார். அம்மா, வீட்டுக்கு வந்த பிறகு அந்தப் புத்தகங்களைப் பார்த்தார். அதைப் படிக்க ஆரம்பித்தார். ஒருநாள் செய்தித்தாளில் ஒரு விளம்பரம் வந்தது. வெளிச்சம் புத்தகங்களைப் பயன்படுத்தி பைபிளைப் படிக்க ஆர்வமாக இருக்கிறவர்கள் வரலாம் என்று அதில் அழைப்பு இருந்தது. அங்கே போக அம்மா முடிவு பண்ணினார். போய் கதவைத் தட்டியதும், வயதான ஒரு பெண்மணி கதவைத் திறந்தார். “இந்தப் புத்தகத்தை இங்கேதான் படிக்கிறீர்களா?” என்று வெளிச்சம் புத்தகத்தைக் காட்டி அம்மா கேட்டார். அதற்கு அந்தப் பெண்மணி, “ஆமாம். உள்ளே வாருங்கள்” என்றார். அடுத்த வாரம், எங்கள் ஐந்து பேரையும் அம்மா கூட்டிக்கொண்டு போனார். அன்றுமுதல் நாங்கள் தவறாமல் பைபிள் படிக்க போனோம்.

ஒருநாள், அந்தக் கூட்டத்தை நடத்தியவர் என்னை சங்கீதம் 144:15-ஐ வாசிக்க சொன்னார். யெகோவாவைக் கடவுளாக வணங்குகிற மக்கள் சந்தோஷமானவர்கள் என்று அது சொல்கிறது. அது எனக்கு ரொம்பப் பிடித்துவிட்டது, மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. அதோடு, 1 தீமோத்தேயு 1:11-ம் எபேசியர் 5:1-ம்கூட என் மனதைத் தொட்டன. யெகோவா “சந்தோஷமுள்ள கடவுள்,” “கடவுளுடைய முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்” என்று அந்த வசனங்கள் சொல்கின்றன. இந்த வசனங்களிலிருந்து, படைப்பாளருக்குச் சேவை செய்வதில் சந்தோஷப்பட வேண்டும் என்றும், அந்தக் கவுரவம் கிடைத்ததற்காக ரொம்ப நன்றியோடு இருக்க வேண்டும் என்றும் புரிந்துகொண்டேன். இந்த இரண்டு விஷயங்களும் என் வாழ்க்கையின் இரண்டு சக்கரங்களாக மாறிவிட்டன!

எங்கள் வீட்டுக்குப் பக்கத்திலிருந்த சபையே 32 கிலோமீட்டர் தள்ளி, சிகாகோவில் இருந்தது. இருந்தாலும் நாங்கள் தவறாமல் அங்கே போனோம். பைபிளைப் பற்றிய என் அறிவு வளர்ந்தது. ஒரு தடவை கூட்டத்தில் என் அக்கா ஜெத்தா கைதூக்கி பதில் சொன்னாள். அதைக் கேட்ட பிறகு, ‘எனக்கும் அந்தப் பதில் தெரியுமே. நானும் கைதூக்கியிருக்கலாமே’ என்று நினைத்தேன். அப்புறம், நன்றாகத் தயாரித்து சொந்தமாகப் பதில் சொல்ல ஆரம்பித்தேன். அதோடு, என்கூட பிறந்தவர்கள் மாதிரியே நானும் யெகோவாவிடம் நெருக்கமானேன்; 1941-ல் ஞானஸ்நானம் எடுத்தேன்.

மாநாடுகளிலிருந்து கற்றுக்கொண்டேன்

1942-ல் ஒஹாயோவிலுள்ள கிளீவ்லாண்டில் நடந்த மாநாடு இன்னும் என் மனதில் பசுமையாக இருக்கிறது. அமெரிக்காவில் 50-க்கும் அதிகமான இடங்களிலிருந்து ஃபோன் வழியாக நிறையப் பேர் அதில் கலந்துகொண்டார்கள். மாநாடு நடக்கிற இடத்துக்குப் பக்கத்தில் கூடாரம் போட்டுத் தங்குவதற்கு சகோதரர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். நாங்களும் அங்கேதான் தங்கினோம். அப்போது இரண்டாவது உலகப் போர் உக்கிரமாக நடந்துகொண்டிருந்தது. யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிர்ப்பும் அதிகமாக இருந்தது. சாயங்காலத்தில், பாதுகாப்புக்காக சில சகோதரர்களை ஏற்பாடு செய்திருந்தார்கள். அதாவது, அவர்களுடைய கார்களை வெளிப்பக்கம் பார்த்த மாதிரி நிறுத்தி வைத்து, ஒரு காருக்கு ஒரு ஆள் என்று ராத்திரி முழுக்க கண்விழித்து காவல் காத்தார்கள். ஏதாவது பிரச்சினை வந்தால் சகோதரர்கள் காரின் லைட்டை ஆன் செய்து எதிரிகளின் கண்ணைக் கூச செய்வார்கள். பிறகு, சத்தமாக ஹாரன் அடிப்பார்கள். அப்போது மற்ற சகோதரர்களும் ஓடி வந்து உதவ முடியும். இதையெல்லாம் பார்த்தபோது, யெகோவாவின் ஜனங்கள் எதையும் சந்திப்பதற்குத் தயாராக இருக்கிறார்கள் என்று தோன்றியது. அதனால், அன்றைக்கு ராத்திரி நிம்மதியாகத் தூங்கினேன். எந்தப் பிரச்சினையும் வரவில்லை.

அந்த மாநாட்டில் என் அம்மா எவ்வளவு தைரியமாக இருந்தார் என்பது இப்போதும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. அவருக்குக் கொஞ்சம்கூட கவலையோ பயமோ இல்லை. அம்மா வைத்த நல்ல முன்மாதிரியை என்றுமே நான் மறக்க மாட்டேன்.

இந்த மாநாட்டுக்கு முன்புதான் அம்மா ஒழுங்கான பயனியர் சேவையை ஆரம்பித்திருந்தார். அதனால், இந்த மாநாட்டில் முழுநேர சேவையைப் பற்றிக் கொடுத்த பேச்சுகளை நன்றாகக் கவனித்தார். நாங்கள் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது அம்மா எங்களிடம், “தொடர்ந்து பயனியராக சேவை செய்ய நினைக்கிறேன். ஆனால், பயனியர் சேவையையும் செய்துகொண்டு வீட்டையும் பார்த்துக்கொள்வது என்னால் முடியாது” என்று சொன்னார். அதனால், எங்களால் உதவ முடியுமா என்று கேட்டார். காலையில் சாப்பிடுவதற்கு முன்பு ஒவ்வொருவரையும் ஒன்று அல்லது இரண்டு ரூம்மை சுத்தம் பண்ண சொன்னார். நாங்கள் ஸ்கூலுக்குப் போன பிறகு வீடு ஒழுங்காக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு அம்மா ஊழியத்துக்குப் போவார். அம்மா, பம்பரமாகச் சுற்றிக்கொண்டு இருந்தார். ஆனாலும் எங்களைக் கவனிக்காமல் விட்டதே இல்லை. மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்தாலும் சரி, ஸ்கூல் முடிந்து வீட்டுக்கு வந்தாலும் சரி, எப்போதுமே அம்மா எங்களுக்காக இருப்பார். சிலசமயத்தில் ஸ்கூல் முடிந்த பிறகு அம்மாவோடு சேர்ந்து நாங்கள் ஊழியத்துக்குப் போவோம். அதனால், ஒரு பயனியராக இருப்பது என்றால் என்ன என்பதைக் கற்றுக்கொண்டோம்.

பயனியர் செய்ய ஆரம்பித்தேன்

16 வயதில் பயனியர் செய்ய ஆரம்பித்தேன். அந்தச் சமயத்தில் அப்பா ஒரு யெகோவாவின் சாட்சியாக ஆகவில்லை. இருந்தாலும் என் ஊழியம் எப்படிப் போகிறது என்று தெரிந்துகொள்வதில் ஆர்வமாக இருந்தார். எவ்வளவுதான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் எனக்கு ஒரு பைபிள் படிப்புகூட கிடைக்கவில்லை என்று ஒருநாள் சாயங்காலம் அவரிடம் சொல்லிக்கொண்டு இருந்தேன். ஒரு கணம் நிறுத்திவிட்டு, “அப்பா, நீங்கள் ஏன் என்னிடம் படிக்கக் கூடாது?” என்று கேட்டேன். அவரும் யோசித்தார். பிறகு, “வேண்டாம் என்று சொல்ல எனக்கு ஒரு காரணமும் தெரியவில்லை” என்றார். ஆமாம்! என் அப்பாதான் என்னுடைய முதல் பைபிள் படிப்பு. அப்பாவுக்கு பைபிளைச் சொல்லிக்கொடுத்ததை நினைத்து நான் பெருமைப்பட்டேன்.

“சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என்ற புத்தகத்திலிருந்து அப்பாவுக்கு பைபிள் படிப்பு எடுத்தேன். போகப்போகத்தான் ஒரு விஷயத்தைப் புரிந்துகொண்டேன்—நான் நன்றாக பைபிளைப் படிக்கவும், மற்றவர்களுக்கு நன்றாகச் சொல்லிக்கொடுக்கவும் அப்பா எனக்கு உதவி செய்துகொண்டு இருந்தார். உதாரணத்துக்கு, ஒருநாள் ஒரு பாராவை வாசித்த பிறகு அப்பா என்னிடம், “இந்தப் புத்தகம் என்ன சொல்கிறது என்று தெரிகிறது. ஆனால் இது சொல்வது உண்மை என்று உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டார். இந்தக் கேள்வியை நான் எதிர்பார்க்கவே இல்லை. அதனால் அப்பாவிடம், “எனக்குப் பதில் தெரியவில்லை. ஆனால் அடுத்த தடவை இந்தக் கேள்விக்குப் பதில் சொல்கிறேன்” என்றேன். சொன்ன மாதிரியே நான் பதில் சொன்னேன். நாங்கள் படித்துக்கொண்டிருந்த விஷயத்துக்கு அடிப்படையாக என்னென்ன வசனங்கள் இருக்கின்றன என்பதைக் கண்டுபிடித்து சொன்னேன். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு பைபிள் படிப்புக்கு நன்றாகத் தயாரித்தேன். ஆராய்ச்சி செய்து படிப்பதைக் கற்றுக்கொண்டேன். இப்படியெல்லாம் செய்ததால், பைபிளைப் பற்றி நானும் நன்றாகக் கற்றுக்கொண்டேன், அப்பாவுக்கும் நன்றாகச் சொல்லிக்கொடுத்தேன். கற்றுக்கொண்ட விஷயங்களை அப்பா கடைப்பிடித்தார். 1952-ல் ஞானஸ்நானம் எடுத்தார்.

கற்றுக்கொள்ளும் பயணம் தொடர்ந்தது

17 வயதில், தனியாக வாழ ஆரம்பித்தேன். என் அக்கா ஜெத்தா a ஒரு மிஷனரியாக ஆனார். டான், பெத்தேலில் சேவை செய்தான். அவர்கள் இரண்டு பேருக்குமே அந்தச் சேவை ரொம்பப் பிடித்திருந்தது. அதைப் பார்த்தபோது எனக்கு உற்சாகமாக இருந்தது. அதனால் பெத்தேல் சேவைக்கும், கிலியட் பள்ளியில் கலந்துகொள்வதற்கும் விண்ணப்பம் போட்டுவிட்டு, விஷயத்தை யெகோவா கையில் விட்டுவிட்டேன். பிறகு என்ன நடந்தது தெரியுமா? 1946-ல் என்னை பெத்தேலுக்குக் கூப்பிட்டார்கள்.

பெத்தேலில் வித்தியாசமான நியமிப்புகளைச் செய்திருக்கிறேன். புதுப்புது விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடிந்திருக்கிறது. நான் பெத்தேலுக்கு வந்து 75 வருஷம் ஆகிவிட்டது. அச்சடிப்பது, கணக்குவழக்குகளைப் பார்ப்பது போன்றவற்றைக் கற்றுக்கொண்டேன். பொருள்களை வாங்கவும், வேறு இடங்களுக்கு அனுப்பவும்கூட கற்றுக்கொண்டேன். எல்லாவற்றுக்கும்மேல் பெத்தேலில் கிடைக்கிற கல்வி எனக்கு ரொம்பப் பிடிக்கும். காலை வழிபாட்டிலிருந்தும், அங்கே கொடுக்கப்படுகிற பேச்சுகளிலிருந்தும் நான் பயனடைந்திருக்கிறேன்.

மூப்பர்களுக்கான பள்ளியில் சொல்லிக்கொடுத்தபோது

என் தம்பி கார்லிடமிருந்தும் நான் கற்றுக்கொண்டேன். அவன் 1947-ல் பெத்தேலுக்கு வந்தான். பைபிளை நன்றாக ஆராய்ச்சி செய்து படிப்பான். மற்றவர்களுக்கும் நன்றாகச் சொல்லிக்கொடுப்பான். ஒரு தடவை, பேச்சு கொடுக்க அவனுடைய உதவியை எடுத்துக்கொண்டேன். ‘எக்கச்சக்கமான குறிப்புகளை எடுத்துவைத்திருக்கிறேன். ஆனால், அவற்றை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியவில்லை’ என்று கார்லிடம் சொன்னேன். அப்போது அவன், “ஜோயல், நீ கொடுக்கப்போகிற பேச்சின் பொருள் என்ன?” என்று ஒரேவொரு கேள்வி கேட்டான். உடனே எனக்குப் பொறிதட்டியது. அதனால் அந்தப் பொருளுக்கு ஏற்றக் குறிப்புகளை மட்டும் வைத்துக்கொண்டு மற்றதை ஓரங்கட்டினேன். அன்று கற்றுக்கொண்ட பாடத்தை இன்றுவரை மறக்கவில்லை.

பெத்தேலில் சந்தோஷமாகச் சேவை செய்ய நன்றாக ஊழியம் செய்வது முக்கியம். அப்போதுதான் நல்ல நல்ல அனுபவங்கள் கிடைக்கும். ஒரு அனுபவம் இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. ஒருநாள் சாயங்காலம் ஒரு சகோதரரும் நானும் நியு யார்க்கில் ஒரு அம்மாவைப் போய் சந்தித்தோம். அந்த அம்மா ஏற்கனவே காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகையை வாங்கியிருந்தார். இந்தத் தடவை அவரைப் பார்த்தபோது, “பைபிளில் இருக்கிற நல்ல விஷயங்களைக் கற்றுக்கொள்ள மக்களுக்கு உதவுகிறோம்” என்றேன். உடனே அவர், “பைபிளைப் பற்றியா பேசுகிறீர்கள், அப்படியென்றால் முதலில் உள்ளே வாருங்கள்” என்று சொன்னார். கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றியும் புதிய உலகத்தைப் பற்றியும் நிறைய வசனங்களை வாசித்து சந்தோஷமாகப் பேசினோம். அந்த விஷயங்கள் அவருடைய மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. அதனால், அடுத்த தடவை அவரைப் போய் பார்த்தபோது அவருடைய நண்பர்கள் நிறைய பேரைக் கூப்பிட்டிருந்தார். பிறகு அவரும் அவருடைய கணவரும் யெகோவாவின் சாட்சியாக ஆனார்கள்.

மனைவியிடமிருந்து கற்றுக்கொண்டேன்

கல்யாணம் செய்வதற்காக கிட்டத்தட்ட 10 வருஷங்களாக பெண் தேடினேன். ஒரு நல்ல மனைவியைக் கண்டுபிடிக்க எனக்கு எது உதவியது தெரியுமா? ஒரு கேள்விதான்—“கல்யாணம் பண்ண பிறகு எங்கள் வாழ்க்கையில் நாங்கள் என்ன செய்ய போகிறோம்?” இதைப் பற்றி ஆழமாக யோசித்து, ஜெபம் செய்தேன்.

மேரியோடு வட்டார சேவையில் இருந்தபோது

1953-ல் யாங்கீ ஸ்டேடியத்தில் நடந்த மாநாட்டுக்குப் பிறகு, மேரி அன்யால் என்ற சகோதரியை நான் சந்தித்தேன். அவளும் என் அக்கா ஜெத்தாவும் கிலியட் பள்ளியின் இரண்டாவது வகுப்பில் படித்தவர்கள். அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து மிஷனரி ஊழியத்தைச் செய்தார்கள். மேரியிடம் பேசியபோது, கரீபியன் தீவில் ஊழியம் எவ்வளவு சுவாரஸ்யமாக இருந்தது என்று சொன்னாள். எத்தனை பைபிள் படிப்புகளை நடத்துகிறாள் என்றும் சொன்னாள். நாங்கள் பழகியபோது எங்கள் இரண்டு பேருக்குமே ஒரே குறிக்கோள்கள் இருப்பதைப் புரிந்துகொண்டோம். நாங்கள் காதலிக்க ஆரம்பித்தோம். ஏப்ரல், 1955-ல் கல்யாணம் செய்துகொண்டோம். மேரி, யெகோவா எனக்குக் கொடுத்த பரிசு. எந்த நியமிப்பாக இருந்தாலும் அதைச் சந்தோஷமாகச் செய்வாள், கடினமாக உழைப்பாள், மற்றவர்கள்மேல் உண்மையான அக்கறை காட்டுவாள். கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தபட்ட விஷயங்களுக்கு முதலிடம் கொடுப்பாள். (மத். 6:33) நாங்கள் மூன்று வருஷத்துக்கு வட்டார சேவையில் இருந்தோம். பிறகு, 1958-ல் எங்களை பெத்தேலுக்கு வர சொன்னார்கள்.

மேரியிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். உதாரணத்துக்கு, கல்யாணம் ஆன புதிதில் நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து பைபிளை வாசிக்க முடிவு செய்தோம். ஒவ்வொரு பகுதியைப் படித்தப் பிறகு அதைப் பற்றிக் கலந்துபேசுவோம். இப்படி, கிட்டத்தட்ட 15 வசனங்களை ஒருநாளில் படிப்போம். வாழ்க்கையில் அதை எப்படிக் கடைப்பிடிக்கலாம் என்று யோசிப்போம். கிலியட் பள்ளியில் அல்லது மிஷனரி சேவையில் கற்றுக்கொண்ட விஷயங்களை மேரி அடிக்கடி சொல்வாள். பைபிளை ஆழமாகப் புரிந்துகொள்ள இவையெல்லாம் எனக்கு உதவியது. நான் பேச்சு கொடுக்கும்போதும் மற்ற சகோதரிகளை உற்சாகப்படுத்தும்போதும் அந்தக் குறிப்புகள் எனக்குப் பிரயோஜனமாக இருந்தது.—நீதி. 25:11.

நான் நேசித்த என் மனைவி 2013-ல் இறந்துவிட்டாள். புதிய உலகத்தில் அவளைப் பார்க்க ஏங்கிக்கொண்டு இருக்கிறேன். ஆனால், அதுவரை யெகோவாவைப் பற்றித் தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும், அவர்மேல் முழு நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். (நீதி. 3:5, 6) புதிய உலகத்தில் யெகோவாவின் மக்கள் என்னவெல்லாம் செய்ய போகிறார்கள் என்பதைப் பற்றி யோசிக்கும்போதே எனக்குச் சந்தோஷமாக இருக்கிறது, மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது. நம் மகத்தான போதகரான யெகோவாவிடமிருந்து புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வோம். அவரைப் பற்றியும் நிறைய கற்றுக்கொள்வோம். என் வாழ்க்கையில் இதுவரை யெகோவா எனக்குச் சொல்லிக்கொடுத்த விஷயங்களுக்கும் அவர் காட்டிய அளவற்ற கருணைக்கும் என்ன சொல்லி நன்றி சொல்வேன்!

a ஜெத்தா சுனலுடைய வாழ்க்கை சரிதையை மார்ச் 1, 2003 காவற்கோபுரத்தில் பக். 23-29-ல் பாருங்கள்.