உங்களுக்குத் தெரியுமா?
ஜெபக்கூடங்களின் ஆரம்பம் என்ன?
“ஜெபக்கூடம்” என்ற வார்த்தை, “கூட்டம்” அல்லது “ஒன்றுகூடி வருவது” என்ற அர்த்தத்தைத் தருகிற கிரேக்க வார்த்தையிலிருந்து வருகிறது. பழங்காலத்திலிருந்தே, யூத சமுதாயங்களில், கற்றுக்கொள்வதற்கும் வழிபடுவதற்கும் மக்கள் கூடிவந்த இடங்களாக ஜெபக்கூடங்கள் இருந்தன. அதனால், ஜெபக்கூடம் என்ற பெயர் பொருத்தமாகவே இருக்கிறது. ஜெபக்கூடங்களைப் பற்றி எபிரெய வேதாகமத்தில் தெளிவாக எதுவும் சொல்லப்படவில்லை. ஆனால், கிரேக்க வேதாகமத்திலிருந்து ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. அதாவது, கி.பி. முதல் நூற்றாண்டுக்குள், மக்கள் கூடிவருவதற்கான இதுபோன்ற இடங்கள் ஏற்கெனவே நிறுவப்பட்டிருந்தன!
யூதர்கள் பாபிலோனின் சிறையிருப்பில் இருந்தபோது ஜெபக்கூடங்கள் ஆரம்பமாகியிருக்க வேண்டும் என்று அறிஞர்கள் நிறைய பேர் நம்புகிறார்கள். என்ஸைக்ளோப்பீடியா ஜூடைக்கா இப்படிக் குறிப்பிடுகிறது: “அவர்கள் சிறைபிடித்துக்கொண்டு போகப்பட்ட அன்னிய நாட்டில் ஆலயம் இருக்கவில்லை. வேதனையில் தவித்துக்கொண்டிருந்த அவர்கள் ஆறுதலுக்காக அவ்வப்போது ஒன்றுகூடி வந்து, வேதவசனங்களை வாசித்தார்கள். ஓய்வு நாட்களில் அவர்கள் அப்படி ஒன்றுகூடி வந்திருக்கலாம்.” விடுதலையான பிறகும், ஜெபம் செய்வதற்காகவும் வேதவசனங்களை வாசிப்பதற்காகவும் அவர்கள் தொடர்ந்து ஒன்றுகூடி வந்ததாகத் தெரிகிறது. அதோடு, அவர்கள் குடியேறிய இடங்களிலெல்லாம் ஜெபக்கூடங்களை ஆரம்பித்தார்கள்.
கி.பி. முதல் நூற்றாண்டுக்குள், மத்தியதரைக் கடலைச் சுற்றியும், மத்தியக் கிழக்குப் பகுதி முழுவதிலும், இஸ்ரேலிலும் பரவியிருந்த யூதர்களின் சமூக மற்றும் மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களின் மையமாக ஜெபக்கூடங்கள் ஆகியிருந்தன. “படிப்பதற்கும், புனித விருந்தைச் சாப்பிடுவதற்கும், நீதிமன்ற வழக்குகளை நடத்துவதற்குமான இடமாக [ஜெபக்கூடம்] இருந்தது. அதோடு, சமுதாய நிதியைச் சேமித்து வைப்பதற்கான இடமாகவும் அரசியல் மற்றும் சமுதாயக் கூட்டங்களுக்கான இடமாகவும் இருந்தது” என்று ஹீப்ரூ யுனிவர்சிட்டி ஆஃப் ஜெரூசலேம் என்ற பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லீ லெவன் சொல்கிறார். “மிக முக்கியமாக, மதம் சம்பந்தப்பட்ட வேலைகளைச் செய்வதற்கான இடமாக அது இருந்தது” என்றும் அவர் சொல்கிறார். அதனால்தான், இயேசு அடிக்கடி ஜெபக்கூடங்களுக்குப் போனதில் எந்த ஆச்சரியமும் இல்லை. (மாற். 1:21; 6:2; லூக். 4:16) அங்கே இருந்தவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார், அறிவுரைகளைக் கொடுத்தார், அவர்களை உற்சாகப்படுத்தினார். கிறிஸ்தவ சபை ஆரம்பிக்கப்பட்ட பிறகு, அப்போஸ்தலன் பவுலும் ஜெபக்கூடங்களில் அதிகமாகப் பிரசங்கித்தார். கடவுளிடம் நெருங்கிப் போக விரும்பியவர்கள் ஜெபக்கூடங்களுக்குப் போனார்கள். அதனால், பவுல் ஒரு நகரத்துக்குள் நுழையும்போது, முதலில் ஜெபக்கூடத்துக்குப் போவதும், அங்கே பிரசங்கிப்பதும் அவருடைய வழக்கமாக இருந்தது.—அப். 17:1, 2; 18:4.