Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிள்ளைகள் வேதனையில் வாடும்போது

பிள்ளைகள் வேதனையில் வாடும்போது

குடும்பத்தில் யாரையாவது பறிகொடுத்த வேதனையில் தவிக்கிறீர்களா? அப்படியென்றால், அந்த வேதனையில் இருந்து நீங்கள் எப்படி மீண்டு வரலாம்? இதே சூழ்நிலையில் இருந்த மூன்று இளைஞர்களுக்கு பைபிள் எப்படி உதவி செய்தது என்று கவனியுங்கள்.

டேமியின் அனுபவம்

டேமி

ஒருநாள் அப்பா தலைவலியினால் கஷ்டப்பட்டார். ஆரம்பத்தில், அது சாதாரண தலைவலி என்று நினைத்தோம். ஆனால், போகப்போக அவர் வலியால் துடித்தார். அம்மா உடனே ஆம்புலன்ஸை வரவழைத்தார். ஆம்புலன்ஸில் இருந்த முதல் உதவி குழுவினர் அப்பாவைக் கொண்டுபோன காட்சி இன்னும் என் கண் முன்னாடி இருக்கிறது. மறுபடியும் அப்பாவை உயிரோடு பார்க்க முடியாது என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. அவருக்கு பிரையின் அன்யுரிஸம் என்ற வியாதி இருந்ததைக் கண்டுபிடித்தார்கள். மூன்று நாட்களுக்கு பிறகு அப்பா இறந்துவிட்டார். அப்போது எனக்கு 6 வயதுதான்.

முதல் உதவி குழுவினர் அப்பாவைக் கொண்டுபோன காட்சியை சில நேரங்களில் யோசித்துப் பார்ப்பேன். ‘அந்த சமயத்துல நான் ஏன் ஒன்னும் செய்யாம சும்மா நின்னுட்டு இருந்தேன்’ ‘ஏதாவது செஞ்சிருக்கலாம்ல’ என்றெல்லாம் யோசிப்பேன். அதனால் அப்பா இறந்ததுக்கு நான்தான் காரணம் என்று நினைத்து அடிக்கடி கவலைப்பட்டேன். உடம்பு முடியாத வயதானவர்களைப் பார்க்கும்போது, ‘இவங்கெல்லாம் உயிரோட இருக்காங்க. ஆனா, எங்க அப்பா மட்டும் இல்லயே’ என்ற நினைத்து வேதனைப்படுவேன். என் மனதில் இருக்கும் வேதனைகளை எல்லாம் கொட்டித்தீர்க்க அம்மா எனக்கு உதவி செய்தார். அதோடு, நாங்கள் ஒரு யெகோவாவின் சாட்சியாக இருந்ததால், சபையில் இருந்தவர்களும் எங்களுக்கு தேவையான உதவிகளைச் செய்தார்கள்.

சோகமான சம்பவம் நடக்கும்போது வேதனையில் மூழ்கிவிடுவது இயல்புதான். ஆனால், நாட்கள் போகப்போக அந்த வலி குறைந்துவிடும் என்று சிலர் சொல்கிறார்கள். என்னுடைய விஷயத்தில் அப்படி நடக்கவில்லை. அப்பா இறந்தபோது, அது எவ்வளவு பெரிய இழப்பு என்று எனக்கு தெரியவில்லை. கிட்டத்தட்ட 15 வயதில்தான் அந்த வேதனையை நான் உணர ஆரம்பித்தேன்.

அப்பா அல்லது அம்மாவை பறிகொடுத்த பிள்ளைகளுக்கு நான் சொல்ல விரும்புவது இதுதான்: “உங்க மனசுல ரொம்ப நாள் வேதனைய அடக்கி வைக்காதீங்க. சீக்கிரத்துல அத யார்க்கிட்டயாவது சொல்லிடுங்க. அப்போதான் உங்க மன பாரம் குறையும்.”

வாழ்க்கையின் முக்கியமான தருணங்களில் அப்பா என்னோடு இல்லாதது எனக்கு கஷ்டமாக இருந்தது. இருந்தாலும், வெளிப்படுத்துதல் 21:4-ல் கடவுள் கொடுத்த வாக்குறுதி எனக்கு ஆறுதலாக இருந்தது. கடவுள் சீக்கிரத்தில் மக்களுடைய “கண்ணீரையெல்லாம் துடைத்துவிடுவார். இனிமேல் மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது.”

டெரிக்கின் அனுபவம்

டெரிக்

அப்பாவோடு சேர்ந்து மீன் பிடித்தது... மலைகளில் தங்கியிருந்தது... இதெல்லாம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவங்கள். அவருக்கு மலைகள் என்றால் ரொம்ப பிடிக்கும்.

அப்பாவுக்கு ரொம்ப நாளாகவே இதய நோய் இருந்தது. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை எடுத்துக்கொண்டு இருந்தபோது ஒன்று இரண்டு தடவை நான் அவரைப் போய் பார்த்திருக்கிறேன். அப்போது நான் ரொம்ப சின்ன பிள்ளையாக இருந்தேன். அவருக்கு வந்தது பெரிய வியாதி என்று அப்போது எனக்கு தெரியாது. ஆனால், அவர் அந்த வியாதியால் இறந்துவிட்டார். அப்போது எனக்கு 9 வயதுதான்.

அப்பா இறந்தபிறகு, ஒவ்வொரு நாளும் நான் அழுதுகொண்டே இருந்தேன். ‘என்னால யார்கிட்டயும் சகஜமா பழகவோ பேசவோ முடியல. இந்தளவுக்கு நான் சோகமா இருந்ததே இல்ல. எனக்கு எதுவுமே செய்ய பிடிக்கல.’ சர்ச்சிலுள்ள இளைஞர் குழுவை சேர்ந்தவர்கள் என்மேல் அக்கறை காட்டினார்கள். ஆனால், அதுவும் கொஞ்ச நாளைக்குத்தான். அவர்களில் சிலர், “உங்க அப்பா சாகணும்கிறது விதி,” “அவர கடவுள் எடுத்துக்கிட்டாரு,” “இப்ப அவர் பரலோகத்துல இருக்காரு” என்றெல்லாம் சொன்னார்கள். அவர்கள் சொன்னது எனக்கு ஆறுதலாக இல்லை. அதேசமயத்தில், இதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்றும் எனக்கு தெரியவில்லை.

அம்மா யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்தார். பிறகு, அண்ணனும் நானும் அவர்களோடு சேர்ந்துகொண்டோம். இறந்தவர்களுடைய நிலையைப் பற்றியும் அவர்களை கடவுள் மறுபடியும் உயிரோடு கொண்டுவருவார் என்பதைப் பற்றியும் பைபிளில் இருந்து தெரிந்துகொண்டோம். (யோவான் 5:28, 29) ஏசாயா 41:10 எனக்கு ரொம்ப ஆறுதலாக இருந்தது. அதில் கடவுள், “பயப்படாதே, நான் உன்னோடு இருக்கிறேன். கவலைப்படாதே, நான் உன் கடவுள். நான் உன்னைப் பலப்படுத்துவேன், உனக்கு உதவி செய்வேன்” என்று சொல்லியிருக்கிறார். வேதனையில் சிக்கி தவித்தபோது, யெகோவா எனக்கு பக்கபலமாக இருந்ததை நான் உணர்ந்தேன். இப்போதும் நான் அப்படித்தான் உணருகிறேன்.

ஜினியின் அனுபவம்

ஜினி

எனக்கு 7 வயது இருக்கும்போது, அம்மா புற்றுநோயால் இறந்துவிட்டார். அன்று நடந்த சம்பவங்கள் ஏதோ கனவுபோல் இருக்கிறது. ‘அம்மா வீட்டிலயே இறந்துட்டாங்க. அப்போ, தாத்தா-பாட்டி என் கூடத்தான் இருந்தாங்க. என்னை சுத்தி எல்லாரும் ரொம்ப சோகமா இருந்தாங்க. இந்த சம்பவம் என்னோட வாழ்க்கையே புரட்டி போட்டுருச்சு.’

என்னுடைய தங்கைக்காக நான் தைரியமாக இருக்க வேண்டும் என்று நினைத்து வேதனையை எல்லாம் மனதிலேயே அடக்கி வைத்தேன். இப்போதும் சில சமயங்களில் அப்படித்தான் செய்கிறேன். ஆனால், அப்படி செய்வது சரியில்லை என்று எனக்கு தெரியும்.

யெகோவாவின் சாட்சிகள் எங்கள்மீது காட்டின அன்பையும் அவர்கள் செய்த உதவியையும் எங்களால் மறக்கவே முடியாது. அவர்களுடைய கூட்டங்களுக்கு நாங்கள் போக ஆரம்பித்து கொஞ்ச நாட்கள்தான் ஆகியிருந்தது. இருந்தாலும், அங்கு இருந்தவர்கள் சொந்தக்காரர்களைப் போல் எங்களிடம் பழகினார்கள், சுற்றி நின்று நலம் விசாரித்தார்கள். ஒரு வருஷம் முழுவதும் சபையில் இருந்தவர்கள் ராத்திரியில் எங்களுக்கு சாப்பாடு கொண்டுவந்தார்கள். அதனால், அப்பா சமைக்க வேண்டிய அவசியமே வரவில்லை.

சங்கீதம் 25:16, 17-ல் உள்ள வார்த்தைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதன் எழுத்தாளர் கடவுளிடம் இப்படிக் கெஞ்சி கேட்கிறார்: “உதவிக்கு யாரும் இல்லாமல் நான் தனியாகத் தவிக்கிறேன். அதனால், உங்கள் முகத்தை என் பக்கமாகத் திருப்பி, எனக்குக் கருணை காட்டுங்கள். என் இதயத்தின் வேதனைகள் பெருகிவிட்டன. இந்தத் தவிப்பிலிருந்து என்னை விடுவியுங்கள்.” வேதனையில் சிக்கி தவிக்கும்போது கடவுள் நம்மை தனியாக விட்டுவிடுவதில்லை. அவர் நம் கூடவே இருக்கிறார் என்று நினைக்கும்போது ஆறுதலாக இருக்கிறது. முடங்கிப்போய்விடாமல் இருக்கவும் கடவுள் கொடுத்த வாக்குறுதிகள்மீது நம்பிக்கை வைக்கவும் பைபிள் எனக்கு உதவுகிறது. முக்கியமாக, இறந்தவர்களை கடவுள் உயிரோடு கொண்டுவருவார் என்ற நம்பிக்கையைத் தருகிறது. பூஞ்சோலை பூமியில் அம்மாவை நல்ல ஆரோக்கியத்தோடு பார்க்க ஆசையாக காத்திருக்கிறேன்.—2 பேதுரு 3:13.

வேதனையில் சிக்கி தவிப்பவர்களுக்கு பைபிள் என்ன ஆறுதல் அளிக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? அப்படியென்றால், “நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில்” என்ற பிரசுரத்தை இலவசமாக டவுன்லோட் செய்துகொள்ளுங்கள். இது www.mt1130.com-ல் வெளியீடுகள் > புத்தகங்கள், சிறு புத்தகங்கள் என்ற பகுதியில் இருக்கிறது.