சந்தோஷப் பாதையில் செல்ல...
அந்தப் பாதையைக் கண்டுபிடிக்க...
நீங்கள் ஒரு சந்தோஷமான நபர் என்று நினைக்கிறீர்களா? ஆம் என்றால், எது உங்களைச் சந்தோஷப்படுத்துகிறது? உங்கள் குடும்பமா, வேலையா, மத நம்பிக்கையா? உங்களைச் சந்தோஷப்படுத்தும் ஏதோவொன்றுக்காக... ஒருவேளை பள்ளிப் படிப்பை முடிப்பதற்காக, நல்ல வேலை கிடைப்பதற்காக, அல்லது புதிய கார் வாங்குவதற்காக ஆசையாய்க் காத்திருக்கிறீர்களா?
குறிப்பிட்ட ஒரு லட்சியத்தை அடையும்போது அல்லது ஆசைப்பட்ட ஒரு பொருளை வாங்கும்போது நிறைய பேருடைய மனதில் சந்தோஷ அலைகள் பொங்கியெழுகின்றன. ஆனால், அந்தச் சந்தோஷ அலைகள் எவ்வளவு நேரத்துக்கு நீடிக்கின்றன? பெரும்பாலும், கொஞ்ச நேரத்துக்குத்தான்! இது ஒருவேளை ஏமாற்றம் அளிப்பதாக இருக்கலாம்!
சந்தோஷம் என்பது ‘நல்லபடியாக வாழ்கிறோம்... இப்படியே கடைசிவரை வாழ்வோம்’ என்ற மனநிலை, மனத்திருப்தியோடு இருப்பது தொடங்கி வாழ்க்கையில் உச்சக்கட்ட மகிழ்ச்சியை அடைவதுவரை ஏற்படுகிற பல்வேறு உணர்ச்சிகள், அந்த மகிழ்ச்சி தொடர வேண்டுமென்ற இயல்பான ஆசை என்றெல்லாம் விளக்கப்படுகிறது.
ஆகவே, சந்தோஷம் என்பது ஒரு தொடர் பயணம், அதற்கு ஒரு முடிவே இல்லை, அதை அடைந்துவிட்டோம் என்று சொல்லவே முடியாது. அதனால், “இது இருந்தாதான்... இத செய்யும்போதுதான்... நான் சந்தோஷமா இருப்பேன்” என்று சொல்வது, சந்தோஷத்தைத் தள்ளிப்போடுவதுபோல் ஆகிவிடும்.
இதைப் புரிந்துகொள்வதற்கு, சந்தோஷத்தை ஆரோக்கியத்தோடு ஒப்பிடலாம். நாம் எப்போது ஆரோக்கியமாக இருப்போம்? உணவு, உடற்பயிற்சி, அன்றாட வாழ்க்கைமுறை ஆகிய விஷயங்களில் சரியான வழியில் தொடர்ந்து நடந்தால்தான் நாம் ஆரோக்கியமாக இருப்போம். அதுபோலவே, நம்பகமான நெறிமுறைகளின்படி தொடர்ந்து நல்ல வழியில் நடந்தால்தான் நாம் சந்தோஷமாக இருப்போம்.
சந்தோஷப் பாதையில் செல்ல என்னென்ன நெறிமுறைகள் நமக்கு உதவும்? சந்தோஷமாக இருக்க சில விஷயங்கள் முக்கியம் என்றாலும், பின்வரும் நெறிமுறைகள் மிகமிக முக்கியமானவை:
-
மனத்திருப்தியும் தாராள குணமும்
-
உடல் ஆரோக்கியமும் மன உறுதியும்
-
அன்பு
-
மன்னிப்பு
-
வாழ்க்கையில் ஒரு நோக்கம்
-
நம்பிக்கை
ஞானமான வார்த்தைகள் அடங்கிய மதிப்புமிக்க ஒரு புத்தகம் இப்படிச் சொல்கிறது: “குற்றமற்றவர்களாக வாழ்கிறவர்கள் சந்தோஷமானவர்கள்.” ஆம், குற்றமற்ற வாழ்க்கைப் பாதையில் நடக்கிறவர்களே சந்தோஷமானவர்கள். (சங்கீதம் 119:1) அந்தப் பாதையைப் பற்றி இப்போது சிந்திக்கலாம்.