Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சந்தோஷப் பாதையில் செல்ல...

நம்பிக்கை

நம்பிக்கை

‘நீங்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன். உங்களுக்கு நல்ல எதிர்காலத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கவே ஆசைப்படுகிறேன்.’எரேமியா 29:11.

‘நம்பிக்கை என்பது நம் ஆன்மீக வாழ்வின் உயிர்நாடி’ என்கிறது ஹோப் இன் த ஏஜ் ஆஃப் ஆங்ஸைட்டி என்ற புத்தகம். “நிர்க்கதியாக நிற்பது போன்ற உணர்வையும், ஒதுக்கப்பட்டது போன்ற உணர்வையும், பயத்தையும் போக்குவதற்கான அருமருந்து நம்பிக்கைதான்” என்றும் அது சொல்கிறது.

நம்பிக்கை நமக்கு ரொம்பவே அவசியம் என்பதை பைபிள் வலியுறுத்துகிறது, அதேசமயம் போலியான நம்பிக்கைகளைக் குறித்து அது நம்மை எச்சரிக்கிறது. “அதிகாரிகளை நம்பாதீர்கள், மற்ற மனிதர்களையும் நம்பாதீர்கள். அவர்களால் உங்கள் உயிரைக் காப்பாற்ற முடியாது” என்று சங்கீதம் 146:3 சொல்கிறது. மனிதர்கள் நம்மைக் காப்பாற்றுவார்கள் என்று நம்புவதற்குப் பதிலாக, எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேற்ற சக்தியுள்ளவரான நம்முடைய படைப்பாளரை நம்புவது ஞானமாகும். அவர் நமக்கு என்ன வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கிறார்? பின்வரும் விஷயங்களைக் கவனியுங்கள்.

அக்கிரமம் முடிவுக்கு வரும்; அதன்பின், நல்லவர்களுக்கு நிரந்தர சமாதானம் கிடைக்கும்: “இன்னும் கொஞ்ச நேரம்தான், பொல்லாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். . . . ஆனால், தாழ்மையானவர்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள். அவர்கள் அளவில்லாத சமாதானத்தையும், முடிவில்லாத சந்தோஷத்தையும் அனுபவிப்பார்கள்” என்று சங்கீதம் 37:10, 11 சொல்கிறது. ‘நீதிமான்கள் இந்தப் பூமியில் என்றென்றும் வாழ்வார்கள்’ என்று 29-வது வசனம் சொல்கிறது.

போர்களுக்கு முடிவு கட்டப்படும்: “யெகோவா . . . பூமி முழுவதும் போர்களுக்கு முடிவுகட்டுகிறார். வில்லை உடைத்து, ஈட்டிகளை முறிக்கிறார். போர் ரதங்களை நெருப்பில் சுட்டெரிக்கிறார்.”—சங்கீதம் 46:8, 9.

வியாதி, கஷ்டம், மரணம் இனி இருக்காது: “அவர்களுடைய கண்ணீரையெல்லாம் கடவுள் துடைத்துவிடுவார். இனிமேல் மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது.”—வெளிப்படுத்துதல் 21:3, 4.

எல்லாருக்கும் ஏராளமான உணவு இருக்கும்: “பூமியில் ஏராளமாகத் தானியம் விளையும். மலைகளின் உச்சியில்கூட அது நிரம்பி வழியும்.”—சங்கீதம் 72:16.

ஒரே உலக அரசாங்கம், அதாவது கிறிஸ்துவின் அரசாங்கம், நீதியாக ஆட்சி செய்யும்: “எல்லா இனத்தினரும் தேசத்தினரும் மொழியினரும் [இயேசு கிறிஸ்துவுக்கு] சேவை செய்வதற்காக, அரசாட்சியும் மேன்மையும் ராஜ்யமும் இவருக்கே கொடுக்கப்பட்டன. இவருடைய அரசாட்சி என்றென்றும் நிலைத்திருக்கும், இவருடைய ராஜ்யம் அழிக்கப்படாது.”—தானியேல் 7:14.

இந்த வாக்குறுதிகள் நிறைவேறுமென்று நாம் எப்படி உறுதியாக நம்பலாம்? அந்த அரசாங்கத்தின் ராஜாவாக இருப்பதற்கு தான் முழு தகுதி பெற்றவர் என்பதை இயேசு பூமியில் இருந்தபோது நிரூபித்துக் காட்டினார். அவர் நோயாளிகளைக் குணப்படுத்தினார், ஏழைகளுக்கு உணவளித்தார், இறந்தவர்களை உயிரோடு எழுப்பினார். இவை எல்லாவற்றையும்விட அவருடைய போதனைகள் மிக முக்கியமானவை. ஏன் அப்படிச் சொல்கிறோம்? மக்கள் சமாதானமாக, ஒற்றுமையாக வாழ்வதற்கு உதவுகிற நெறிமுறைகள் அதில் இருக்கின்றன என்பதால்தான்! இயேசு எதிர்கால சம்பவங்களைப் பற்றியும், இந்த உலகத்தின் கடைசி நாட்களுக்கான அடையாளங்களைப் பற்றியும்கூட முன்னறிவித்தார்.

புயலுக்குப்பின் அமைதி

கடைசி நாட்களில் சமாதானமும் பாதுகாப்பும் இருப்பதற்குப் பதிலாக, படுமோசமான நிலைமைதான் இருக்கும் என்று இயேசு முன்னறிவித்தார். ‘இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டத்துக்கான’ கூட்டு அடையாளத்தைக் கொடுத்தபோது, உலகளவில் போர்கள், பஞ்சங்கள், கொள்ளைநோய்கள், பெரிய நிலநடுக்கங்கள் போன்றவை வருமென்றும் சொன்னார். (மத்தேயு 24:3, 7; லூக்கா 21:10, 11; வெளிப்படுத்துதல் 6:3-8) “அக்கிரமம் அதிகமாவதால் அநேகருடைய அன்பு குறைந்துவிடும்” என்றும்கூட சொன்னார்.—மத்தேயு 24:12.

ஜனங்கள் மத்தியில் அன்பு குறைந்திருப்பது பல விதங்களில் அப்பட்டமாகத் தெரிகிறது; என்னென்ன விதங்களில் என்று மற்றொரு பைபிள் எழுத்தாளர் முன்னறிவித்தார். 2 தீமோத்தேயு 3:1-5-ல் நாம் வாசிக்கிறபடி, “கடைசி நாட்களில்” ஜனங்கள் சுயநலக்காரர்களாக, பண ஆசைபிடித்தவர்களாக, சுகபோக வாழ்க்கையை நேசிக்கிறவர்களாக, ஆணவமுள்ளவர்களாக, கொடூரமானவர்களாக இருப்பார்கள். குடும்பத்தார் பந்தபாசம் இல்லாதவர்களாக, பிள்ளைகள் அப்பா அம்மாவுக்குக் கீழ்ப்படியாதவர்களாக இருப்பார்கள். அதோடு, ஏராளமானோர் பக்திமான்களைப் போல் வெளிவேஷம் போடுகிறவர்களாக இருப்பார்கள்.

புயல்போன்ற நிலைமைகள், இந்த உலகம் கடைசி நாட்களில் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்துகின்றன. அதோடு, கடவுளுடைய அரசாங்கத்தின் கீழ் அமைதி தவழப்போகிற காலம் சீக்கிரமாக வரும் என்பதை உறுதிப்படுத்துகின்றன. அதனால்தான், கடைசி நாட்களைப் பற்றிய தீர்க்கதரிசனத்தில் இயேசு இந்த உறுதியையும் தருகிறார்: “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த நல்ல செய்தி உலகம் முழுவதும் இருக்கிற எல்லா தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; பின்பு முடிவு வரும்.”—மத்தேயு 24:14.

அந்த நல்ல செய்தி, தவறு செய்கிறவர்களுக்கு எச்சரிப்பு கொடுக்கிறது, நல்லவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது, ஆம் கடவுளுடைய அருமையான வாக்குறுதிகள் விரைவில் நிஜமாகும் என்ற உறுதியை அளிக்கிறது. அந்த அருமையான வாக்குறுதிகளைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? ஆம் என்றால், தயவுசெய்து இந்தப் பத்திரிகையின் கடைசி பக்கத்தைப் பாருங்கள்.