Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அட்டைப்படக் கட்டுரை

இயேசு உண்மையிலேயே வாழ்ந்தாரா?

இயேசு உண்மையிலேயே வாழ்ந்தாரா?

அவர் பெரிய பணக்காரரும் இல்லை, பெரிய அதிகாரியும் இல்லை. அவருக்கென்று சொந்த வீடுகூட இல்லை. இருந்தாலும், அவர் சொல்லித் தந்த விஷயங்கள் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது. இயேசு கிறிஸ்து உண்மையிலேயே வாழ்ந்தாரா? அதை பற்றி புகழ் பெற்ற சிலர் என்ன சொல்கிறார்கள்?

  • மைக்கேல் கிராண்ட். சரித்திர ஆசிரியர், பழங்கால நாகரிகங்களில் வல்லுநர். ‘சரித்திரப் பதிவுகளைக்கொண்ட பழங்காலத்து புத்தகங்களை எப்படிக் கருதுகிறோமோ அதே விதத்தில்தான் புதிய ஏற்பாட்டையும் கருத வேண்டும். கிறிஸ்தவர்களாக இல்லாத, பிரபலமான நிறைய பேர் அந்த சரித்திரப் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் வாழ்ந்ததை எப்படி யாராலும் மறுக்க முடியாதோ அதே மாதிரி இயேசு வாழ்ந்தார் என்ற உண்மையையும் யாராலும் மறுக்க முடியாது’ என்று இவர் சொன்னார்.

  • ருடாலஃப் புல்ட்மான். புதிய ஏற்பாட்டை ஆராய்ச்சி செய்யும் பேராசிரியர். “இயேசு உண்மையிலேயே வாழ்ந்தாரா என்று சந்தேகப்பட எந்த நியாயமான காரணமும் இல்லை. அதை நிரூபிக்க வேண்டிய அவசியமும் இல்லை. இயேசு, ஒரு சரித்திர புகழ் பெற்ற இயக்கத்தை ஆரம்பித்தார். பாலஸ்தீனாவின் மிக பழமையான [கிறிஸ்தவ] சமுதாயம் இதற்கு ஆதாரம். புத்தியுள்ள யாருமே இதை மறுக்க மாட்டார்கள்” என்று இவர் கூறினார்.

  • வில் டூரன்ட். சரித்திர ஆசிரியர், எழுத்தாளர் மற்றும் தத்துவஞானி. இவர் இப்படி எழுதினார்: ‘மனிதர்கள் அன்பாகவும் ஒற்றுமையாகவும் வாழ வேண்டும் என்று சொல்லிக்கொடுத்த... உயர்ந்த நெறிகளையும் மனதை கவரும் குணங்களையும் உடைய ஒரு நபரை, சில சாதாரண மனிதர்கள் [சுவிசேஷங்களை எழுதியவர்கள்] தங்களுடைய கற்பனையால் உருவாக்கியிருக்கவே முடியாது. அப்படி செய்திருந்தால் அது சுவிசேஷங்களில் எழுதப்பட்டிருக்கும் அற்புதங்களைவிட பெரிய அற்புதமாக இருந்திருக்கும்.’

  • ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ஜெர்மனியில் பிறந்த ஒரு விஞ்ஞானி. இவர் இப்படி சொன்னார்: “நான் ஒரு யூதனாக இருந்தாலும், நாசரேத் ஊரை சேர்ந்த இந்த பிரபலமான நபரை பார்த்து மெய்சிலிர்த்து போகிறேன்.” இயேசு உண்மையிலேயே வாழ்ந்ததாக நம்புகிறாரா என்று கேட்டதற்கு, “இதில் என்ன சந்தேகம்! சுவிசேஷங்களை படிக்கும்போது இயேசுவை ஒரு நிஜ நபராக உணர முடியும். அதிலிருக்கும் ஒவ்வொரு வார்த்தையிலும் அவருடைய குணங்கள் பளிச்சிடுகிறது. எந்த ஒரு கற்பனை கதையும் இவ்வளவு உயிரோட்டமாக இருக்க முடியாது” என்று சொன்னார்.

    “சுவிசேஷங்களை படிக்கும்போது இயேசுவை ஒரு நிஜ நபராக உணர முடியும்.” —ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

சரித்திரம் என்ன சொல்கிறது?

மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்ற நான்கு பைபிள் புத்தகங்களை சுவிசேஷங்கள் என்று சொல்கிறோம். அதை எழுதியவர்களின் பெயர்களே அந்த புத்தகங்களுக்கு வைக்கப்பட்டு இருக்கிறது. அதில் இயேசுவின் வாழ்க்கையை பற்றியும் அவர் செய்த ஊழியத்தை பற்றியும் விவரமாக இருக்கிறது. கிறிஸ்தவர்களாக இல்லாத நிறைய பேரும் இயேசுவை பற்றி தங்கள் பதிவுகளில் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

  • டசிட்டஸ்

    (சுமார் கி.பி. 56-120) பழங்காலத்து ரோம சரித்திர ஆசிரியர்களில் மிகவும் புகழ்பெற்றவர். கி.பி. 14-68 வரை (இயேசு கி.பி. 33-ல் இறந்தார்) ரோம சாம்ராஜ்யத்தில் நடந்த சம்பவங்களை இவர் பதிவு செய்தார். கி.பி. 64-ஆம் வருஷம் ரோம் நகரம் பயங்கரமான தீயால் பற்றியெரிந்ததற்கு பேரரசர் நீரோதான் காரணம் என்று டசிட்டஸ் எழுதினார். ஆனால், நீரோ இந்த “வதந்தியை பொசுக்க” பழியை கிறிஸ்தவர்கள்மீது போட்டுவிட்டார். அப்போது டசிட்டஸ் இப்படி சொன்னார்: “கிறிஸ்து என்ற பெயரில் இருந்துதான் [கிறிஸ்தவர்கள்] என்ற பெயர் வந்தது. திபேரியு ஆட்சி செய்த காலத்தில், எங்கள் மாகாண அதிகாரியாக பொந்தியு பிலாத்து இருந்தபோது கிறிஸ்துவுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டது.”—பதிவேடுகள், XV, 44 (லத்தீன் மொழி).

  • சுடோனியஸ்

    (சுமார் கி.பி. 69-122-க்கு பிறகு) ரோம சரித்திர ஆசிரியர். இவர் சீஸர்களின் வாழ்க்கை (லத்தீன் மொழி) என்ற புத்தகத்தை எழுதினார். முதல் 11 ரோம பேரரசர்களின் ஆட்சி காலத்தில் நடந்த சம்பவங்களை அதில் பதிவு செய்தார். கிலவுதியு பேரரசர் ஆட்சி செய்தபோது யூதர்கள் மத்தியில் நடந்த பிரச்சினைகளை பற்றி அதில் குறிப்பிட்டார். அது அநேகமாக இயேசுவின் பெயரில் வந்த பிரச்சினைகளாக இருக்கலாம். (அப்போஸ்தலர் 18:2) அதை பற்றி சுடோனியஸ் இப்படி எழுதினார்: “க்றெஸ்டசின் [கிறிஸ்துவின்] தூண்டுதலின் காரணமாக யூதர்கள் அடிக்கடி பிரச்சினைகள் செய்ததால் அவர் [கிலவுதியு] அவர்களை ரோமிலிருந்து துரத்திவிட்டார்.” [தெய்வமாக்கப்பட்ட கிலவுதியு, XXV, 4 (லத்தீன் மொழி)] இயேசுதான் பிரச்சினைகளுக்கு காரணமாக இருந்தார் என்று பொய்யாக குற்றம்சாட்டினாலும் இயேசு வாழ்ந்தார் என்பதில் அவருக்கு எந்த சந்தேகமும் இல்லை.

  • இளைய பிளைனி

    (சுமார் கி.பி. 61-113) ஒரு ரோம எழுத்தாளர் மற்றும் பித்தினியாவின் (இப்போதுள்ள துருக்கி) ஆளுநர். கிறிஸ்தவர்களை என்ன செய்வது என்பதை பற்றி ரோம பேரரசர் ட்ராஜனுக்கு கடிதம் எழுதினார். அதில், கிறிஸ்தவர்கள் தங்கள் மத நம்பிக்கைகளை மாற்றிக்கொள்ளும்படி அவர் கட்டாயப்படுத்தியதாகவும் அப்படி செய்ய மறுத்தவர்களை கொன்று போட்டதாகவும் எழுதியிருந்தார். ‘என்னோடு சேர்ந்து யாரெல்லாம் [அந்நிய] தெய்வங்களிடம் வேண்டுதல் செய்தார்களோ, யாரெல்லாம் உங்கள் படத்துக்கு பூஜை செய்தார்களோ, கடைசியாக, யாரெல்லாம் கிறிஸ்துவை சபித்தார்களோ, அவர்களை எல்லாம் நான் விட்டுவிட்டேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.—பிளைனியின் கடிதங்கள், புத்தகம் X, XCVI (லத்தீன் மொழி).

  • ஃபிளேவியஸ் ஜொஸிஃபஸ்

    (சுமார் கி.பி. 37-100) யூத மத குரு, சரித்திர ஆசிரியர். அன்னாஸ் என்ற அரசியல் செல்வாக்குள்ள யூத தலைமை குருவைப் பற்றி ஜொஸிஃபஸ் இப்படி எழுதினார்: “யூத உச்சநீதிமன்ற நீதிபதிகளை [அன்னாஸ்] ஒன்றுக்கூட்டி, யாக்கோபை அவர்களுக்கு முன் கொண்டுவந்து நிறுத்தினார். யாக்கோபு, கிறிஸ்து என்று அழைக்கப்பட்ட இயேசுவின் சகோதரன்.”—ஜூயிஷ் ஆண்டிகுவிட்டீஸ், XX, 200 (கிரேக்க மொழி).

  • டால்மூட்

    டால்மூட் என்பது கி.பி. 300-600 வரையுள்ள காலப்பகுதியில், யூத மத தலைவர்கள் எழுதிய புத்தகங்களின் தொகுப்பு. இயேசு உண்மையிலேயே வாழ்ந்தார் என்று அவருடைய எதிரிகளாக இருந்த யூத மத தலைவர்கள்கூட உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டால்மூட்டில் இருக்கும் ஒரு பகுதி இப்படி சொல்கிறது: ‘பஸ்கா நாளன்று சாயங்காலம், நாசரேத் ஊரைச் சேர்ந்த யேஷு [இயேசு] கொல்லப்பட்டார்.’ இதை சரித்திர பதிவுகளும் ஒத்துக்கொள்கிறது. (பாபிலோனிய டால்மூட், சான்ஹெட்ரின் 43a, மியூனிக் கோடெக்ஸ்; யோவான் 19:14-16-ஐ பாருங்கள்.) மற்றொரு பகுதியில், “மக்கள் மத்தியில் கேவலமான பெயர் எடுத்த அந்த நாசரேத் ஊரைச் சேர்ந்தவனை போல் [இயேசுவை குறிக்க பயன்படுத்தப்பட்ட ஒரு பட்ட பெயர்] நம் மகனையோ மாணவனையோ உருவாக்க கூடாது” என்று எழுதப்பட்டிருக்கிறது.—பாபிலோனிய டால்மூட், பெரெக்கோத் 17b, அடிக்குறிப்பு, மியூனிக் கோடெக்ஸ்; லூக்கா 18:37-ஐ பாருங்கள்.

பைபிளில் இருக்கும் ஆதாரம்

சுவிசேஷ புத்தகங்களில், இயேசுவின் வாழ்க்கையைப் பற்றியும் அவர் செய்த ஊழியத்தைப் பற்றியும் விவரமாக சொல்லப்பட்டிருக்கிறது. அதோடு, அங்கு வாழ்ந்த மக்கள், இடங்கள் பற்றிய சில நுணுக்கமான விவரங்கள் அதில் இருக்கின்றன. ஒரு உதாரணத்தை கவனியுங்கள், ஞானஸ்நானம் கொடுப்பவரான யோவான் அவருடைய சேவையை எப்போது ஆரம்பித்தார் என்பதை நாம் புரிந்துகொள்ள லூக்கா 3:1, 2 உதவி செய்கிறது. இவர் இயேசு வாழ்ந்த அதே காலத்தில் வாழ்ந்தவர்.

“வேதவசனங்கள் எல்லாம் கடவுளுடைய சக்தியினால் அருளப்பட்டிருக்கின்றன.”—2 தீமோத்தேயு 3:16

“ரோம அரசன் திபேரியு அரசாண்ட பதினைந்தாம் வருடத்தில், பொந்தியு பிலாத்து யூதேயாவின் ஆளுநராகவும், ஏரோது கலிலேயாவின் மாகாண அதிபதியாகவும், அவருடைய சகோதரரான பிலிப்பு என்பவர் இத்துரேயா மற்றும் திராகொனித்தி பகுதிகளுக்கு மாகாண அதிபதியாகவும், லிசானியா என்பவர் அபிலேனே பகுதிக்கு மாகாண அதிபதியாகவும், அன்னா என்பவர் பிரதான குருமார்களில் ஒருவராகவும் காய்பா என்பவர் தலைமைக் குருவாகவும் இருந்தார்கள்; அப்போது, சகரியாவின் மகனான யோவானுக்கு வனாந்தரத்தில் கடவுளுடைய வார்த்தை அருளப்பட்டது” என்று லூக்கா எழுதினார். இந்த விவரமான பதிவிலிருந்து யோவானுக்கு “கடவுளுடைய வார்த்தை” கி.பி. 29-ல் கிடைத்தது என்பதை கண்டுபிடிக்க முடிகிறது.

லூக்கா குறிப்பிட்ட இந்த ஏழு நபர்களையும் பற்றி சரித்திர ஆசிரியர்களுக்கு நன்றாக தெரியும். ஆனால் சில காலத்துக்கு பொந்தியுபிலாத்தும் லிசானியாவும் * உண்மையிலேயே வாழ்ந்த நபர்கள் கிடையாது என்று சிலர் சொன்னார்கள். ஆனால், பழங்காலத்து கல்வெட்டுகளில் இந்த இரண்டு அதிகாரிகளின் பெயர்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் மூலம் லூக்காவின் பதிவு துல்லியமானது என்று நிரூபிக்கப்பட்டது.

இயேசுவை பற்றி நாம் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்?

கடவுளுடைய அரசாங்கம் இந்த உலகத்தை ஆட்சி செய்யும் என்று இயேசு மக்களுக்கு சொல்லிக்கொடுத்தார்

இயேசு சொல்லிக்கொடுத்த விஷயங்கள் நம் வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியமாக இருப்பதால் நாம் அவரை பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு, நாம் சந்தோஷமாகவும் திருப்தியாகவும் வாழ்வதற்கான வழியை இயேசு சொல்லிக்கொடுத்தார். * அதோடு, ‘கடவுளுடைய அரசாங்கத்தின்கீழ்’ உலகத்தில் இருக்கும் எல்லாரும் சமாதானமாகவும் பாதுகாப்பாகவும் வாழ்வார்கள் என்று வாக்கு கொடுத்தார்.—லூக்கா 4:43.

இந்த முழு உலகத்தையும் ஆட்சி செய்வதற்கான உரிமை கடவுளிடம்தான் இருக்கிறது. அதனால், இந்த அரசாங்கத்தை ‘கடவுளுடைய அரசாங்கம்’ என்று சொல்வது பொருத்தமாக இருக்கிறது. (வெளிப்படுத்துதல் 11:15) இயேசு சொல்லிக்கொடுத்த ஜெபத்தில் இந்த விஷயம் தெளிவாக தெரிகிறது: “பரலோகத்தில் இருக்கிற எங்கள் தகப்பனே, . . .  உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும். உங்களுடைய சித்தம் . . .  பூமியிலேயும் செய்யப்பட வேண்டும்.” (மத்தேயு 6:9, 10) கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்யும்போது நமக்கு என்னென்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கும்?

  • போரும் உள்நாட்டு கலவரங்களும் இருக்காது.சங்கீதம் 46:8-11.

  • பேராசை, ஊழல் போன்ற கெட்ட காரியங்களை செய்கிறவர்களும் கடவுள்பக்தி இல்லாதவர்களும் அழிக்கப்படுவார்கள்.சங்கீதம் 37:10, 11.

  • மக்களுக்கு திருப்தியான வேலையும் சந்தோஷமான வாழ்க்கையும் கிடைக்கும்.ஏசாயா 65:21, 22.

  • பூமியில் ஏராளமாகத் தானியம் விளையும். சங்கீதம் 72:16; ஏசாயா 11:9.

இது எல்லாம் நடக்காது என்று சிலர் நினைக்கலாம். ஆனால், இதை கொஞ்சம் யோசித்து பாருங்கள்: அறிவியல், தொழில்நுட்பம், கல்வி என நிறைய துறைகளில் அபார முன்னேற்றம் செய்திருந்தாலும், லட்சக்கணக்கான மக்கள் நாளைக்கு என்ன நடக்குமோ என்ற பயத்தில் வாழ்கிறார்கள். அரசியலிலும் பொருளாதாரத்திலும் மதத்திலும் நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. அதோடு, இவையெல்லாம் பேராசையிலும் ஊழலிலும் மூழ்கிப்போய் இருக்கிறது. உண்மை என்னவென்றால், மனித ஆட்சி படுதோல்வி அடைந்திருக்கிறது. அதனால், மனிதர்களை நம்புவதைவிட பைபிளில் கடவுள் சொல்லியிருப்பதை நாம் நிச்சயம் நம்பலாம்.—பிரசங்கி 8:9.

அதற்கு, நாம் இயேசுவை பற்றி தெரிந்துகொள்வது ரொம்ப முக்கியம். * “கடவுளுடைய வாக்குறுதிகள் எத்தனை இருந்தாலும், அவை அத்தனையும் அவர் [இயேசு] மூலமாக ‘ஆம்’ என்றே ஆகியிருக்கின்றன” என்று 2 கொரிந்தியர் 1:19, 20 சொல்கிறது. ▪ (g16-E No. 5)

^ பாரா. 23 லிசானியா என்ற “மாவட்ட அதிபதி”-யின் பெயர் கல்வெட்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. (லூக்கா 3:1) லூக்கா தன்னுடைய பதிவை எழுதிய அதே சமயத்தில்தான் லிசானியா அபிலேனேக்கு அதிபதியாக இருந்தார்.

^ பாரா. 25 மலை பிரசங்கம் என்று பிரபலமாக அழைக்கப்படும் இயேசுவின் போதனைகள் மத்தேயு 5-7 அதிகாரங்களில் இருக்கிறது.

^ பாரா. 32 இயேசுவைப் பற்றியும் அவர் சொல்லிக்கொடுத்த விஷயங்களைப் பற்றியும் இன்னும் தெரிந்துகொள்ள www.mt1130.com என்ற வெப்சைட்டை பாருங்கள்.