அட்டைப்படக் கட்டுரை
நீங்கள் எப்போதும் பிஸியாக இருக்கிறீர்களா?
நீங்கள் ரொம்ப பிஸியாக இருப்பதுபோல் உணருகிறீர்களா? உங்களைப் போலத்தான் மற்றவர்களும் உணருகிறார்கள். “எல்லா இடங்களிலும் எல்லாரும் ரொம்ப பிஸியாக இருப்பதுபோல் தெரிகிறது” என்று தி எக்கனாமிஸ்ட் பத்திரிகை சொல்கிறது.
2015-ல், எட்டு நாடுகளில், முழுநேரமாக வேலை செய்பவர்களிடம் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. ஒரே சமயத்தில், குடும்பத்தையும் வேலையையும் கவனித்துக்கொள்வது கஷ்டமாக இருப்பதாக அவர்களில் நிறைய பேர் சொன்னார்கள். வீட்டிலும் வேலையிலும் கூடுதல் பொறுப்புகளை நிறைவேற்றுவதும், செலவுகள் அதிகமாவதும், அதிக நேரம் வேலை செய்வதும்தான் அதற்குக் காரணம்! உதாரணத்துக்கு அமெரிக்காவில், முழுநேரமாக வேலை செய்பவர்கள் ஒரு வாரத்துக்குச் சராசரியாக 47 மணிநேரம் வேலை செய்வதாக ஒரு அறிக்கை சொல்கிறது. சுமார் ஐந்து பேரில் ஒருவர் 60-க்கும் அதிகமான மணிநேரம் வேலை செய்கிறார்!
36 நாடுகளில் நடத்தப்பட்ட இன்னொரு ஆய்வில், நான்கில் ஒரு பங்குக்கும் அதிகமானவர்கள் என்ன சொன்னார்கள்? பொழுதுபோக்கில் ஈடுபடும்போதுகூட, எல்லாவற்றையும் வேக வேகமாக செய்வதுபோல் இருப்பதாக அவர்கள் சொன்னார்கள். அடுத்தடுத்து நிறைய விஷயங்களில் ஈடுபட வேண்டியிருப்பதால் பிள்ளைகளும் பாதிக்கப்படலாம்.
கொஞ்சம் நேரத்தில் நிறைய வேலைகளைச் செய்ய தொடர்ந்து முயற்சி செய்யும்போது, நாம் மன உளைச்சலுக்கு ஆளாகலாம். இதற்கு ‘நேர அழுத்தம்’ (time pressure) என்று பெயர். இருந்தாலும், நம்மால் சமநிலையோடு வாழ முடியுமா? நம் நம்பிக்கைகள், தீர்மானங்கள், குறிக்கோள்கள் ஆகியவை எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கிறது? முதலில், சிலர் ஏன் பிஸியாகவே இருக்கிறார்கள் என்பதற்கு 4 காரணங்களைப் பார்க்கலாம்.
1 குடும்பத்தை நன்றாகக் கவனிக்க வேண்டும் என்ற ஆசை
‘பிள்ளைங்களுக்கு தேவையானதை வாங்கி தரணுங்குறதுக்காக வாரத்துல ஏழு நாளும் வேலை செஞ்சேன். நான் அனுபவிக்காததை எல்லாம் அவங்க அனுபவிக்கணும்னு ஆசைப்பட்டேன்’ என்று அப்பாவாக இருக்கும் கேரி சொல்கிறார். நல்ல நோக்கங்களுக்காக இப்படிச் செய்தாலும், தாங்கள் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதை பெற்றோர் யோசித்துப் பார்க்க வேண்டும். பண ஆசை இல்லாதவர்களோடு ஒப்பிடும்போது பணம் மற்றும் பொருள்மேல் குறியாக இருக்கிற பிள்ளைகளும் பெரியவர்களும் அந்தளவு சந்தோஷமாக, நிம்மதியாக, ஆரோக்கியமாக இருப்பதில்லை என்று சில ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.
பிள்ளைகளுடைய எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்ற ஆசையில், பிள்ளைகளை வித்தியாசமான விஷயங்களில் ஈடுபட வைத்து பெற்றோர் அவர்களைத் திணறடிக்கிறார்கள். இதில், பெற்றோருடைய நேரமும்கூட நிறைய செலவாகிறது. கடைசியில் பெற்றோரும் சரி, பிள்ளைகளும் சரி ரொம்பவே கஷ்டப்படுகிறார்கள்.
2 ‘நிறைய இருந்தால்தான் நன்றாக இருக்கும்’ என்ற நம்பிக்கை
புதுப்புது பொருள்களை வாங்கவில்லை என்றால் வாழ்க்கையில் எதையோ நாம் இழந்துவிட்டோம் என்பதுபோல் விளம்பரதாரர்கள் நம்மை உணர வைக்கிறார்கள். ‘கடைகளில் குவிந்துகிடக்கும் பொருள்களைப் பார்க்கும்போது, மக்கள் தங்களுக்குப் போதுமான நேரம் இல்லாததுபோல் உணருகிறார்கள். ஏனென்றால், தங்களுக்கு இருக்கும் குறைந்த நேரத்தில் எதைப் பார்ப்பது, எதை வாங்குவது, எதைச் சாப்பிடுவது என்றே மக்களுக்குத் தெரியவில்லை’ என்று தி எக்கனாமிஸ்ட் பத்திரிகை சொல்கிறது.
தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்களால் வேலை செய்பவர்களுக்கு நிறைய ஓய்வுநேரம் கிடைக்கும் என்று முன்னனி பொருளியல் ஆய்வாளர் ஒருவர் 1930-ல் நினைத்தார். அவர் நினைத்தது எவ்வளவு தவறு! ஏனென்றால், நியு யார்க்கர் பத்திரிகையின் எழுத்தாளர் எலிஸபெத் கோல்பர்ட் என்ன சொல்கிறார் என்று கவனியுங்கள். ‘மக்களுக்கு புது பொருள்கள் நிறைய தேவைப்படுகிறது. அந்தப் பொருள்களின் விலை அதிகமாக இருப்பதால், அதை வாங்குவதற்கு மக்கள் அதிக நேரம் உழைக்கிறார்கள். அதனால், வேலையிலிருந்து அவர்களால் சீக்கிரம் போக முடிவதில்லை’ என்று அவர் சொல்கிறார்.
3 மற்றவர்களுடைய எதிர்பார்ப்பைத் திருப்தி செய்ய முயற்சி செய்வது
முதலாளியைத் திருப்தி செய்வதற்காக சிலர் நிறைய நேரம் மிகவும் கடினமாக வேலை செய்கிறார்கள். கூடவேலை செய்பவர்கள் அதிக நேரம் வேலை செய்யலாம். ஆனால், சிலர் அப்படிச் செய்யாமல் இருக்கும்போது, அவர்களுக்குள் குற்றவுணர்ச்சி ஏற்படும் அளவுக்கு கூட வேலை செய்பவர்கள் அழுத்தம் தரலாம். பொருளாதார நிலை நிலையற்றதாக இருப்பதால், மக்கள் அதிக நேரம் வேலை செய்யவோ கூப்பிட்ட நேரத்துக்கு வேலைக்குப் போகவோ தயாராக இருக்கிறார்கள்.
அதே போல, மற்ற குடும்பங்களுடைய வேகத்துக்கு ஈடுகொடுக்க வேண்டும் என்று பெற்றோர் முயற்சி செய்தால், அதுவும் அவர்களுக்கு அழுத்தத்தைத் தரலாம்.
ஒருவேளை, அப்படிச் செய்யவில்லை என்றால் தங்களுடைய பிள்ளைகளுக்குக் கொடுக்க வேண்டியதைத் தங்களால் கொடுக்க முடிவதில்லை என்ற குற்றவுணர்ச்சியும் அவர்களுக்கு வந்துவிடலாம்.4 அந்தஸ்தையும் சொந்த ஆசைகளையும் தேடிப்போவது
அமெரிக்காவில் இருக்கும் டிம் இப்படிச் சொல்கிறார்: “என்னோட வேலை எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு. எவ்ளோ கடினமா வேலை செய்ய முடியுமோ அவ்ளோ கடினமா வேலை செஞ்சேன். வேலையில என்னோட திறமைய நிரூபிக்கணும்னு நினைச்சேன்.”
வாழ்க்கையின் வேகத்துக்கும் தங்கள் சுய மரியாதைக்கும் சம்பந்தம் இருப்பதாக டிம்மைப் போலவே நிறைய பேர் நினைக்கிறார்கள். அதன் விளைவு என்ன? “பிஸியா இருக்குறது சமுதாயத்துல அந்தஸ்த்த பெற்றிருக்கு” என்று ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட எலிஸபெத் கோல்பர்ட் சொல்கிறார். “நீங்க எந்தளவு பிஸியா இருக்கீங்களோ அந்தளவு நீங்க முக்கியமானவங்க” என்றும் அவர் சொல்கிறார்.
சமநிலையோடு இருப்பதற்குக் கற்றுக்கொள்ளுங்கள்
சுறுசுறுப்பாகவும் கடினமாகவும் உழைக்க வேண்டும் என்று பைபிள் நம்மை உற்சாகப்படுத்துகிறது. (நீதிமொழிகள் 13:4) அதே சமயத்தில், நாம் சமநிலையோடும் இருக்க வேண்டும். “ரொம்பவும் கஷ்டப்பட்டு வேலை செய்து காற்றைப் பிடிக்க ஓடுவதைவிட கொஞ்சம் ஓய்வெடுப்பது மேல்” என்று பிரசங்கி 4:6 சொல்கிறது.
வாழ்க்கையில் நாம் சமநிலையோடு இருந்தால், நம் மனதும் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் உண்மையிலேயே, நம் வாழ்க்கையில் எதையாவது குறைத்துக்கொள்ள முடியுமா? நிச்சயம் முடியும்! அதற்கான 4 ஆலோசனைகளை இப்போது கவனிக்கலாம்.
1 உங்கள் மதிப்பீடுகளும் குறிக்கோள்களும் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்
பணம் ஓரளவு பாதுகாப்பு தரும் என்று நினைப்பது இயல்புதான். ஆனால், நமக்கு எவ்வளவு பணம் தேவை? நமக்கு எது வெற்றி தரும்? நாம் வாங்கும் சம்பளமோ நம் பொருள் வசதிகளோ நமக்கு வெற்றி தருமா? அதே சமயத்தில், அதிக நேரம் ஓய்வெடுப்பதும் பொழுதுபோக்கில் ஈடுபடுவதும் ‘நேர அழுத்தத்தை’ அதிகரிக்கும்.
முன்பு குறிப்பிடப்பட்ட டிம் இப்படிச் சொல்கிறார்: “நானும் என் மனைவியும் எங்க வாழ்க்கைய பத்தி தீவிரமா யோசிச்சு பார்த்துட்டு, அதை எளிமையாக்கணும்னு முடிவு செஞ்சோம். எங்களோட தற்போதய சூழ்நிலையயும் எங்களோட புது குறிக்கோள்களயும் பட்டியல் போட்டோம். இதுக்கு முன்னாடி எடுத்த தீர்மானங்களோட விளைவுகள பத்தியும் எங்க குறிக்கோள்கள அடைய என்ன செய்யணுங்கிறத பத்தியும் நாங்க பேசுனோம்.”
2 பொருள் சேர்ப்பதைக் குறைத்துக்கொள்ளுங்கள்
‘கண்களின் ஆசையை’ கட்டுப்படுத்த வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. (1 யோவான் 2:15-17) விளம்பரங்கள் கண்களின் ஆசைகளை அதிகரிப்பதால், ஒருவர் மணிக்கணக்காக வேலை செய்யலாம். அல்லது பொழுதுபோக்கில் ஈடுபடுவதற்கு அதிக நேரத்தையோ அதிக பணத்தையோ செலவு செய்யலாம். எல்லா விளம்பரங்களையும் நம்மால் தவிர்க்க முடியாது என்பது உண்மைதான். ஆனால், நாம் பார்க்கும் விளம்பரங்களை நம்மால் குறைத்துக்கொள்ள முடியும். அதோடு, நமக்கு உண்மையிலேயே எது தேவை என்பதைக் குறித்தும் நம்மால் ஆழமாக யோசித்துப் பார்க்க முடியும்.
இந்த விஷயத்தில், உங்கள் நண்பர்கள் உங்கள்மேல் எந்தளவு செல்வாக்கு செலுத்துகிறார்கள் என்று யோசித்துப் பாருங்கள். அவர்கள் ஒருவேளை பொருள் சேர்ப்பதிலேயே குறியாக இருக்கிறார்களா? அல்லது, தங்களிடம் இருக்கிற பொருள்களை வைத்து தங்கள் வெற்றியைக் கணக்கிடுகிறார்களா? அப்படியென்றால், நல்ல விஷயங்களில் ஆர்வம் காட்டுகிறவர்களை உங்கள் நண்பர்களாக்கிக்கொள்ளுங்கள். “ஞானமுள்ளவர்களோடு நடக்கிறவன் ஞானமடைவான்” என்று பைபிள் சொல்கிறது.—நீதிமொழிகள் 13:20.
3 வேலையில் வரம்புகள் வைத்துக்கொள்ளுங்கள்
உங்களுடைய வேலையைப் பற்றியும் நீங்கள் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்பதைப் பற்றியும் உங்கள் முதலாளியிடம் பேசுங்கள். உங்கள் வேலை நேரத்தைக் கொஞ்சம் குறைத்துக்கொள்வதை நினைத்து கவலைப்படாதீர்கள். வர்க் டு லிவ் என்ற ஆங்கில புத்தகம் இப்படிச் சொல்கிறது: “வேலை மற்றும் வீட்டுப் பொறுப்புகளைச் சமநிலையோடு செய்பவர்கள் அல்லது
விடுமுறையில் போகிறவர்கள் எல்லாரும் சொன்ன ஒரு பொதுவான விஷயம் இதுதான்: ‘நீங்க போன பிறகு உலகம் ஒண்ணும் முடிவுக்கு வந்துடாது!’”முன்பு குறிப்பிடப்பட்ட கேரி, பொருளாதார ரீதியில் ஓரளவு நல்ல நிலையில் இருந்தார். அதனால், வேலை செய்யும் மணிநேரத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தார். “இதை பத்தி என் குடும்பத்துல கலந்துபேசுனேன், வாழ்க்கைய எளிமையாக்கணும்னு சொன்னேன் . . . அப்புறம், அதுக்கு தேவையான படிகளை ஒவ்வொண்ணா எடுத்தோம். ஒரு வாரத்துல கொஞ்ச நாட்கள் மட்டும் வேலை செய்றேனு என்னோட முதலாளிகிட்ட சொன்னேன், அவரும் ஒத்துக்கிட்டாரு.”
4 குடும்பத்தோடு நேரம் செலவு செய்வதை முதலிடத்தில் வையுங்கள்
கணவனும் மனைவியும் நேரம் செலவிட வேண்டும், பெற்றோர் பிள்ளைகளோடு நேரம் செலவிட வேண்டும். எப்போதும் பிஸியாக இருக்கிற மற்ற குடும்பங்களுடைய வேகத்துக்கு ஈடுகொடுக்க வேண்டும் என்று முயற்சி செய்யக் கூடாது. “ஓய்வு எடுக்கவும் பொழுதுபோக்குல ஈடுபடவும் நேரம் ஒதுக்குங்க . . . அவ்வளவு முக்கியம் இல்லாத விஷயங்கள செய்யணும்னு நினைக்காதீங்க” என்று கேரி சொல்கிறார்.
உங்கள் குடும்பத்தோடு இருக்கும்போது, டிவியோ செல்ஃபோனோ அல்லது மற்ற கருவிகளோ உங்கள் எல்லாரையும் தனிமைப்படுத்த விடாதீர்கள். ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் ஒரு தடவையாவது குடும்பத்தோடு சேர்ந்து சாப்பிடுங்கள். அந்த நேரத்தைக் குடும்பமாகப் பேசுவதற்குப் பயன்படுத்துங்கள். பெற்றோர் இந்த ஆலோசனையின்படி செய்தால், பிள்ளைகள் சந்தோஷமாக இருப்பார்கள்; பள்ளியிலும் சிறந்து விளங்குவார்கள்.
கடைசியாக, உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘என்னோட வாழ்க்கையில நான் என்ன செய்யப் போறேன்? என் குடும்பம் எப்படி இருக்கணும்னு ஆசைப்படுறேன்?’ மிகவும் சந்தோஷமான, அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டால், பைபிளில் இருக்கிற ஞானமான ஆலோசனைகளின்படிதான் வாழ்கிறீர்கள் என்பதைக் காட்டும் விதத்தில் முக்கியமான விஷயங்களுக்கு முதலிடம் கொடுங்கள்.