பேட்டி | ராஜேஷ் கலாரியா
மூளை ஆராய்ச்சியாளர் தன் கடவுள் நம்பிக்கையைப் பற்றி சொல்கிறார்
நியூகேஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ராஜேஷ் கலாரியா 40 வருஷங்களுக்கும்மேல் மனித மூளையைப் பற்றி ஆராய்ச்சி செய்திருக்கிறார். ஆரம்பத்தில் பரிணாமத்தை நம்பிய இவர், பிறகு தன் கண்ணோட்டத்தை மாற்றிக்கொண்டார். அவருடைய வேலை மற்றும் கடவுள் நம்பிக்கையைப் பற்றி விழித்தெழு! நிருபரிடம் அவரே சொல்கிறார்.
உங்கள் மதப் பின்னணியைப் பற்றி எங்களுக்குச் சொல்லுங்கள்.
என் அப்பா இந்தியாவில் பிறந்தவர். அம்மா, உகாண்டாவில் பிறந்தவர்; ஆனால், அவருடைய பூர்வீகம் இந்தியா. அவர்கள் இரண்டு பேரும் இந்துமத சம்பிரதாயங்களிலேயே மூழ்கியிருந்தார்கள். அவர்களுடைய மூன்று பிள்ளைகளில், நான் இரண்டாவது பிள்ளை. கென்யாவில் இருக்கிற நைரோபியில்தான் நாங்கள் இருந்தோம். இந்து மதத்தைச் சேர்ந்த நிறைய பேர் எங்கள் அக்கம் பக்கத்தில் இருந்தார்கள்.
அறிவியலில் உங்களுக்கு எப்படி ஆர்வம் வந்தது?
எனக்கு விலங்குகள் என்றால் ரொம்ப பிடிக்கும். நானும் என் நண்பர்களும் அடிக்கடி நீண்ட தூரம் பயணம் செய்வோம், வனவிலங்குகளை ரசிப்பதற்காக கூடாரங்களில் தங்குவோம். ஆரம்பத்தில், ஒரு கால்நடை அறுவை சிகிச்சை மருத்துவராக ஆக வேண்டும் என்பது என் குறிக்கோளாக இருந்தது. ஆனால், நைரோபியில் இருக்கும் தொழில் கல்லூரியில் பட்டம்பெற்ற பிறகு, லண்டன் பல்கலைக்கழகத்தில் நோயியலை (pathology) பற்றி படிப்பதற்காக இங்கிலாந்துக்குப் போனேன். பிறகு, மனித மூளையைப் பற்றி ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தேன்.
உங்களுடைய ஆராய்ச்சி உங்கள் மத நம்பிக்கையைப் பாதித்ததா?
ஆம்! அறிவியலைப் பற்றி படிக்க படிக்க, மிருகங்களையும் உருவங்களையும் வழிபடுவது போன்ற இந்து புராணக்கதைகள்மேலும், பாரம்பரியங்கள்மேலும் எனக்கு இருந்த நம்பிக்கை குறைய ஆரம்பித்தது.
பரிணாமத்தின் மேல் உங்களுக்கு எப்படி நம்பிக்கை வந்தது?
நான் சின்னப் பையனாக இருந்தபோது, என்னைச் சுற்றியிருந்த நிறைய பேர் ஆப்பிரிக்காவில்தான் பரிணாமம் ஆரம்பித்தது என்று சொன்னார்கள். இதைப் பற்றி நாங்கள் அடிக்கடி பள்ளியில் பேசுவோம். அதோடு, விஞ்ஞானிகள் எல்லாரும் பரிணாமத்தை நம்பியதாக பள்ளி ஆசிரியர்களும், பல்கலைக்கழக பேராசிரியர்களும் சொன்னார்கள்.
காலப்போக்கில், உயிர் எப்படி ஆரம்பமானது என்ற கேள்வியைப் பற்றி நீங்கள் ஏன் மறுபடியும் யோசிக்க ஆரம்பித்தீர்கள்?
உயிரியல் மற்றும் உடற்கூரியல் பற்றி நான் சில வருஷங்களாகப் படித்துக்கொண்டிருந்தேன். அப்போது, என்கூட படித்த மாணவன் ஒருவன், யெகோவாவின் சாட்சிகளோடு பைபிள் படிப்பதாகச் சொன்னான். எனக்கும் அதன்மேல் ஆர்வம் வந்தது. எங்கள் கல்லூரியின் மன்றத்தில் யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாடு ஒன்று நடந்தது; நான் அதில் கலந்துகொண்டேன். பிறகு, இரண்டு மிஷனரி சகோதரிகள் பைபிள் போதனைகளைப் பற்றி எனக்கு விளக்கினார்கள். மகத்தான வடிவமைப்பாளர்மேல் அவர்களுக்கு இருந்த நம்பிக்கையும், வாழ்க்கையின் மிக முக்கியமான கேள்விகளுக்குக் கடவுளால் பதில் சொல்ல முடியும் என்ற விஷயமும் எனக்குப் புராணக்கதைபோல் தெரியவில்லை. அவர்கள் சொன்னது நியாயமானதாகத் தெரிந்ததால் என்னுடைய ஆர்வம் அதிகரித்தது.
மருத்துவ துறையில் உங்களுக்கு இருந்த அறிவு, படைப்பைப் பற்றிய உங்கள் நம்பிக்கைக்கு முட்டுக்கட்டையாக இருந்ததா?
இல்லை! உடற்கூரியலைப் பற்றி படித்தபோது, உயிரினங்கள் எவ்வளவு அருமையாகவும் சிக்கல் வாய்ந்ததாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன என்பதை என்னால் பார்க்க முடிந்தது. இந்தளவு சிக்கலானது எதுவும் தானாகவே உருவாகியிருக்க முடியாது என்பதைப் புரிந்துகொண்டேன்.
ஒரு உதாரணம் சொல்ல முடியுமா?
1970-களின் ஆரம்பத்திலிருந்து நான் மனித மூளையைப் பற்றி படித்துக்கொண்டிருக்கிறேன். இந்த அற்புதமான உறுப்பைப் பற்றி என்னால் ஆச்சரியப்படாமல் இருக்கவே முடியவில்லை. யோசனைகள் மற்றும் ஞாபகங்களின் பிறப்பிடமே மூளைதான்! நிறைய உடல் உறுப்புகளின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதும் இதுதான்! அதோடு, உடலுக்கு உள்ளே இருந்தும் வெளியே இருந்தும் வருகிற தகவல்களைப் புரிந்துகொள்ளும் உணர்வுகளின் மையமாகவும் இது இருக்கிறது.
மூளை இப்படி இயங்குவதற்கு அதன் சிக்கல் வாய்ந்த வேதியியலும் மூளையின் முக்கிய செல்களான நியுரானின் சிக்கலான அமைப்பும்தான் காரணம். மூளையில் கோடிக்கணக்கான நியுரான்கள் இருக்கின்றன. நார் போன்ற நீண்ட ஆக்ஸான்கள் (axons) மூலம் இவை ஒவ்வொன்றும் பேசிக்கொள்கின்றன. கிளைகள் போன்ற நார்களான டெண்ட்ரைட்டுகள் (dendrites) மூலம் ஒவ்வொரு நியுரானும் மற்ற நியுரான்களோடு ஆயிரக்கணக்கான இணைப்புகளை ஏற்படுத்துகின்றன. இப்படி ஏற்படுகிற இணைப்புகளின் எண்ணிக்கை, நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இருக்கிறது! நியுரான் மற்றும் டெண்ட்ரைட்டுகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் அவற்றின் வடிவமைப்பு தாறுமாறாக இல்லாமல், சீராகவே இருக்கிறது. இதை ஒரு அற்புதமான கம்பியமைவு (wiring) என்று சொல்லலாம்!
இதைப் பற்றி விளக்க முடியுமா?
குழந்தை கர்ப்பப்பையில் இருக்கும்போதும், அது பிறந்த பிறகும் கம்பியமைவு சீராக நடைபெறுகிறது. சில சென்டிமீட்டர் (செல்களுக்கு இவை பெரிய தூரம்) தூரத்தில் இருக்கிற நியுரான்களை நோக்கி மற்ற நியுரான்கள் நார்களை அனுப்புகின்றன. ஒவ்வொரு நாரும் (fibre) ஒரு குறிப்பிட்ட ஒரு செல்லின் பாகத்தை நோக்கி போகிறது.
ஒரு நியுரானிலிருந்து ஒரு புதிய நார் உருவாகி, அது போக வேண்டிய இடத்துக்குப் போவதற்கு “நில்,” “போ,” “திரும்பு” போன்ற ரசாயன சிக்னல்கள் உதவுகின்றன. தெளிவான தகவல்கள் இல்லையென்றால், இப்படி உருவாகிற நார்கள் காணாமல் போய்விடும். நம்முடைய டிஎன்ஏ-ல் தகவல்கள் எழுதப்படுவது தொடங்கி, இந்த முழு செயல்பாடும் சிறப்பாக ஒழுங்கமைக்கப் பட்டிருக்கிறது.
இவையெல்லாம் நமக்குத் தெரிந்திருந்தாலும், யோசனைகள், உணர்ச்சிகள், எண்ணங்கள் ஆகியவை மூளையில் எப்படி உருவாகின்றன என்று, அதாவது, மூளை எப்படி உருவாகிறது என்றும், எப்படிச் செயல்படுகிறது என்றும் நம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. மூளை எவ்வளவு அருமையாக செயல்படுகிறது, எவ்வளவு அழகாக உருவாகிறது என்பதையெல்லாம்விட அது வெறுமனே செயல்படுகிறது என்பதே நம்முடைய அறிவுக்கு எட்டாத விஷயம்!
நீங்கள் எப்படி ஒரு யெகோவாவின் சாட்சியாக ஆனீர்கள்?
பைபிள், கடவுளுடைய வார்த்தை என்பதற்கு யெகோவாவின் சாட்சிகள் ஆதாரம் காட்டினார்கள். உதாரணத்துக்கு, பைபிள் ஒரு அறிவியல் புத்தகம் கிடையாது. இருந்தாலும், அறிவியல் சம்பந்தப்பட்ட விஷயங்களைச் சொல்லும்போது அது எப்போதும் சரியாகவே இருக்கிறது. பைபிளில் துல்லியமான தீர்க்கதரிசனங்களும் இருக்கின்றன. பைபிள் போதனைகளின்படி நடக்கிறவர்களுடைய வாழ்க்கை தரமும் உயர்கிறது. இதற்கு என்னுடைய வாழ்க்கையே அத்தாட்சி! நான் 1973-ல் யெகோவாவின் சாட்சியாக ஆனேன்; அந்தச் சமயத்திலிருந்தே பைபிள் என்னுடைய வழிகாட்டியாக இருந்துவருகிறது. அதனால், என் வாழ்க்கை உண்மையிலேயே திருப்தியாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்கிறது.