ஆற்றல் சேமிப்பு—நீங்கள் என்ன தெரிந்துகொள்ள வேண்டும்?
வீடுகளைக் கதகதப்பாகவும் குளிர்ச்சியாகவும் வைக்க, வாகனங்களை ஓட்ட, நம்முடைய அன்றாட வேலைகளைச் செய்துமுடிக்க ஆற்றல் (Energy) தேவைப்படுகிறது. ஆனால், இன்று உலகம் முழுவதும் இருக்கிற மக்கள், ஆற்றல் சம்பந்தப்பட்ட நிறைய சவால்களை எதிர்ப்படுகிறார்கள்.
எரிபொருளின் விலை உயர்ந்துகொண்டே போவது, தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் கேரி என்பவருக்கு ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கிறது. “மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுவதால்” அதை நம்பியிருப்பது கஷ்டமாக இருக்கிறது என்று பிலிப்பைன்ஸில் இருக்கும் ஜெனிஃபர் சொல்கிறார். “சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதைப் பார்ப்பது கவலையாக இருக்கிறது” என்று எல் சால்வடாரில் இருக்கும் ஃபெர்னான்டோ சொல்கிறார். இந்தப் பூமியில் இருக்கிற நிறைய இடங்களில், ஆற்றல் மூலங்கள் சுற்றுச்சூழலை மாசுப்படுத்துகின்றன.
அப்படியென்றால், ‘நான் எப்படி இதையெல்லாம் சமாளிக்கிறது?’ என்று நீங்கள் ஒருவேளை யோசிக்கலாம்.
நாம் எல்லாரும் ஆற்றலை ஞானமாகப் பயன்படுத்தலாம். அதைச் சேமிப்பதும், சிறந்த முறையில் பயன்படுத்துவதும் நிறைய பலன்களைக் கொண்டுவரும். ஆற்றலைக் குறைவாகப் பயன்படுத்துவதன் மூலம் பணத்தை மிச்சப்படுத்தலாம். அதோடு, நம்முடைய சுற்றுச்சூழலையும் பாதுகாக்கலாம்; அதிகரித்துவரும் ஆற்றலின் தேவையையும் தடுக்கலாம்.
வீட்டில் இருக்கும்போதும், பயணம் செய்யும்போதும், அன்றாட வேலைகளில் ஈடுபடும்போதும் ஆற்றலை எப்படி ஞானமாகப் பயன்படுத்தலாம் என்று கவனியுங்கள்.
வீட்டில் இருக்கும்போது...
வெப்ப மற்றும் குளிர் கருவியைக் கவனமாகப் பயன்படுத்துங்கள். வெப்பத்தைக் கட்டுப்படுத்த, குளிர் காலத்தில் வெப்பச் சீர்நிலைக் கருவியை (Thermostat) வெறும் இரண்டு டிகிரி அளவுக்கு குறைத்தாலே ஒரு வருஷத்துக்கு அதிகப்படியான ஆற்றலைச் சேமிக்கலாம் என்று ஐரோப்பா நாட்டில் நடத்தப்பட்ட ஒரு அறிக்கை சொல்கிறது. “ஏசிய கூட்டி வைக்கிறதுக்கு பதிலா, ஸ்வெட்டர் போட்டுக்கறதுனால குடும்பமா நாங்க ஆற்றல சேமிக்கிறோம்” என்று கனடாவில் இருக்கும் டெரிக் சொல்கிறார்.
சீதோஷ்ண நிலை கொஞ்சம் சூடாக இருக்கிற இடங்களில் இதே முறையைப் பயன்படுத்தலாம். பிலிப்பைன்ஸைச் சேர்ந்த ரொடொல்ஃபோ, வெப்பச் சீர்நிலைக் கருவியை சரியான அளவில் வைப்பதன் மூலம் ஏசியின் பயன்பாட்டைக் குறைத்திருக்கிறார். இதனால், “பணத்தையும் ஆற்றலையும் சேமிக்க முடிகிறது” என்று சொல்கிறார்.
வீட்டைக் கதகதப்பாகவோ குளிர்ச்சியாகவோ வைக்கும்போது ஜன்னல்களையும் கதவுகளையும் மூடி வையுங்கள். * வெப்பமான காற்றோ குளிர்ச்சியான காற்றோ வெளியே போகாதபடி பார்த்துக்கொண்டால் ஆற்றலை வீணாக்காமல் இருக்க முடியும். உதாரணத்துக்கு, குளிர்காலத்தில் கதவைத் திறந்தே வைத்திருந்தால், வீடு சூடாவதற்கு அதிக ஆற்றல் தேவைப்படும்.
சிலர், ஆற்றலை சேமிக்க ஜன்னல்களையும் கதவுகளையும் மூடி வைப்பதோடு, காற்று வெளியே போகாதபடி வீட்டில் காப்பும் (insulation) பொருத்தியிருக்கிறார்கள். அதோடு, குளிர் மற்றும் வெப்பம் வெளியே போவதைத் தடுக்கும் ஜன்னல்களையும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
ஆற்றலை மிச்சப்படுத்தக்கூடிய மின்சார விளக்கைப் பயன்படுத்துங்கள். “பழைய குண்டு பல்புகள (Incandescent) பயன்படுத்துறதுக்கு பதிலா, ஆற்றல மிச்சப்படுத்துற நவீன மின் விளக்குகள பயன்படுத்துறோம்” என்று ஜெனிஃபர் சொல்கிறார். இந்த நவீன விளக்குகளின் விலை அதிகமாக இருந்தாலும், இவை
குறைவான ஆற்றலையே பயன்படுத்துகின்றன. அதனால், நாளடைவில் உங்கள் பணமும் மிச்சமாகிறது.பயணம் செய்யும்போது...
முடிந்தால் பொது வாகனங்களைப் பயன்படுத்துங்கள். “முடிஞ்சபோதெல்லாம் ட்ரெயின் இல்லன்னா சைக்கிள்ல வேலைக்கு போவேன்” என்று கிரேட் பிரிட்டனைச் சேர்ந்த ஆன்ட்ரு சொல்கிறார். “பஸ் அல்லது ட்ரெயினைப் பயன்படுத்துவதால் செலவாகும் ஆற்றலைவிட சொந்த வாகனங்களைப் பயன்படுத்துவதால் செலவாகும் ஆற்றல் மூன்று மடங்கு அதிகமாக இருக்கிறது” என்று எனர்ஜி: வாட் எவ்ரிவொன் நீட்ஸ் டு நோ என்ற ஒரு ஆங்கில புத்தகம் சொல்கிறது.
உங்கள் பயணங்களை நன்கு திட்டமிடுங்கள். முன்கூட்டியே திட்டமிட்டால், பல தடவை பயணம் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. அப்படிச் செய்வதால், ஆற்றலைச் சேமிப்பதோடு நேரத்தையும் பணத்தையும்கூட மிச்சப்படுத்தலாம்.
பிலிப்பைன்ஸைச் சேர்ந்த ஜெத்ரோ, ஒவ்வொரு மாதமும் தன்னுடைய காருக்கு இவ்வளவு எரிபொருள்தான் பயன்படுத்த வேண்டும் என்பதை முடிவுசெய்து, அதற்கான பணத்தை ஒதுக்கிவைக்கிறார். “இதனால என்னோட பயணங்கள நல்லா திட்டமிட முடியுது” என்று சொல்கிறார்.
அன்றாட வேலைகளில் ஈடுபடும்போது...
சுடுதண்ணீரை அதிகமாகப் பயன்படுத்தாதீர்கள். “ஆஸ்திரேலியாவில் இருக்கும் நகரங்களில் செலவாகும் மொத்த ஆற்றலில், தண்ணீரை சுட வைக்க சராசரியாக 1.3% ஆற்றல் செலவாகிறது. அல்லது ஒவ்வொரு வீட்டிலும் மொத்தம் செலவாகிற ஆற்றலில் 27% ஆற்றல், தண்ணீர் சுட வைப்பதற்காகச் செலவாகிறது” என்று ஒரு அறிக்கை சொல்கிறது.
தண்ணீரைச் சுட வைக்க அதிக ஆற்றல் தேவைப்படுவதால், சுடுதண்ணீரைக் குறைவாகப் பயன்படுத்துவது ஆற்றலைச் சேமிக்க உதவியாக இருக்கிறது. இந்தக் காரணத்துக்காகத்தான், “குளிக்குறதுக்கு நாங்க அதிக சுடுதண்ணீர பயன்படுத்துறது இல்ல” என்று தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் விக்டர் சொல்கிறார். ‘சுடுதண்ணீரை வீணாக்காம இருக்குறதுனால, நிறைய நன்மைகள் இருக்கு. ஆற்றலும் தண்ணீரும் மிச்சமாகுது. மின் கருவிகளோட ஆற்றலின் தேவையும் குறையுது. வீட்டுக்காரங்களோட பணமும் மிச்சமாகுது’ என்று ஸ்டீவன் கென்வே என்ற விஞ்ஞானி சொல்கிறார்.
அணைத்துவிடுங்கள். மின்சார விளக்குகள், வீட்டு உபயோகப் பொருள்கள், டிவி, கம்ப்யூட்டர் ஆகியவற்றைப் பயன்படுத்திய பிறகு, அவற்றை அணைத்துவிடுங்கள். அப்படி அணைத்த பிறகும், அவை தூங்கும் நிலையில் (sleeping mode) இருந்தால் ஆற்றல் கொஞ்சம் வீணாகிக்கொண்டேதான் இருக்கும். ஆற்றல் அப்படி வீணாவதைத் தடுக்க, அந்தக் கருவிகளைத் தூங்கும் நிலையில் வைக்காமல், அவற்றை பிளக் பாயின்டிலிருந்து கழற்றிவிடுவது நல்லதாக இருக்கும் என்று சில வல்லுனர்கள் சொல்கிறார்கள். இதை வழக்கமாகச் செய்யும் ஃபெர்னான்டோ, “நான் லைட் எல்லாம் ஆஃப் பண்ணிடுவேன், பயன்படுத்தாத கருவிகள பிளக் பாயின்ட்ல இருந்து கழட்டிடுவேன்” என்று சொல்கிறார்.
ஆற்றலுடைய பயன்பாட்டின் செலவையோ, சுற்றுச்சூழலை அது நாசமாக்குவதையோ நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், அதை நம்மால் ஞானமாகப் பயன்படுத்த முடியும். உலகம் முழுவதும் இருக்கிற மக்கள், ஆற்றலை எப்படி ஞானமாகப் பயன்படுத்தலாம் என்று ஆராய்ச்சி செய்கிறார்கள். ஆற்றலைச் சேமிக்க அதிக முயற்சியும் திட்டமிடுதலும் தேவைப்பட்டாலும், அதற்கு நிச்சயம் பலன்கள் உண்டு. “என்னால பணத்தயும் மிச்சப்படுத்த முடியுது, சுற்றுச்சூழலயும் பாதுகாக்க முடியுது” என்று மெக்சிகோவைச் சேர்ந்த வலேரியா சொல்கிறார்.
^ பாரா. 10 குளிர்-வெப்ப கருவியை கம்பெனி கொடுத்திருக்கிற அறிவுரைகளின்படி கவனமாகப் பயன்படுத்துங்கள். உதாரணத்துக்கு, சில கருவிகளுக்கு வெளிக்காற்று தேவைப்படலாம். அல்லது காற்றையோ வாயுவையோ வெளியேற்ற கதவையும் ஜன்னலையும் திறந்துவைக்க வேண்டியிருக்கலாம்.