கார்ப்பெட் பாதுகாப்பானதா பாதகமானதா?
கார்ப்பெட் பாதுகாப்பானதா பாதகமானதா?
கார்ப்பெட்டுகள் போடப்பட்ட அறைகளில் நீங்கள் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள்? இதற்கான பதில், குறிப்பாக குழந்தைகளை பொறுத்தமட்டில் மிக முக்கியமானது என்று நியூ ஸைன்டிஸ்ட் பத்திரிகையில் ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.
“வெளிப்புறங்களைவிட அறைகளின் உள்ளேதான் மிகக் கொடிய நச்சுப் பொருட்களால் 10 முதல் 50 மடங்கு அதிகமாக நாம் பாதிக்கப்படுகிறோம்” என்று அந்த பத்திரிகை குறிப்பிடுகிறது. வீடுகளில் உள்ள கார்ப்பெட்டுகளிலிருந்து எடுக்கப்படும் தூசியின் சாம்பிள்களில், அச்சமூட்டுமளவுக்கு அதிக மாசுப் பொருட்கள் இருக்கலாம் என ஐக்கிய மாகாணங்களில் உள்ள ஜான் ராபர்ட்ஸ் என்ற சுற்றுச்சூழல் என்ஜினியர் ஒருவர் சொல்கிறார். இவற்றில் ஈயம், காட்மியம், பாதரசம், பூச்சிக்கொல்லிகள், புற்றுநோய் உண்டாக்கும் பாலிகுளோரினேட்டட் பைஃபீனால்கள் (PCBs), பாலிசைக்லிக் அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன்கள் (PAHs) ஆகியவை அடங்கும்.
பூச்சிக்கொல்லிகள் ஷூக்களிலும் செல்லப்பிராணிகளின் பாதங்களிலும் ஒட்டிக்கொண்டு வீடுகளுக்குள் புகுந்துவிடுகின்றன. இதனால் கார்ப்பெட்டுகளில் உள்ள பூச்சிக்கொல்லியின் அளவு 400 மடங்கு உயருவதாக அறிக்கை செய்யப்பட்டிருக்கிறது. இந்த மாசுப் பொருட்கள் வருடக்கணக்காக அங்கே தங்கிவிடுவதாக சொல்லப்படுகிறது. பூச்சிக்கொல்லிகளும் PAH-களும் ஓரளவுக்கு ஆவியாகும் தன்மை பெற்றவை; ஆகவே அவை ஆவியாகி, காற்றிலே கலந்து, பின் மறுபடியும் கார்ப்பெட்டுகள் மீதோ மற்ற இடங்களிலோ படிந்து விடுகின்றன.
சிறு குழந்தைகள் அடிக்கடி தரையிலே விளையாடிவிட்டு பின் தங்கள் விரல்களை வாயிலே வைத்துவிடுகிறார்கள். ஆகவே, மாசுப் பொருட்களினால் முக்கியமாக அவர்களுக்கு அதிக ஆபத்து. சிறு பிள்ளைகளுக்கு வளர்சிதை மாற்றத்தின் வீதம் அதிகமாக இருக்கிறது; ஆகவே, எடைக்கு எடை ஒப்பிட்டுப் பார்க்கையில் பெரியவர்களைவிட அவர்கள் மிக அதிகளவு காற்றை சுவாசிக்கிறார்கள்.
குழந்தைகளுக்கு ஆஸ்துமா, அலர்ஜி, புற்றுநோய் ஆகியவை திடீரென்று அதிகரித்திருப்பதற்கு காரணம், கார்ப்பெட்டுகள் அதிகமாக பயன்படுத்தப்படுவதுதானோ என்று சில ஆராய்ச்சியாளர்கள் சந்தேகிக்கிறார்கள். “சுவற்றுக்கு சுவர் கார்ப்பெட் போடப்பட்ட வீட்டில் இருக்கும் தூசியில் சுமார் பத்தில் ஒரு பங்குதான் ஒருசில சிறிய தரைவிரிப்புகள் மட்டுமுள்ள வீடுகளில் இருக்கிறது” என்று ராபர்ட்ஸ் கூறுகிறார்.
கார்ப்பெட்டுகளின் ஆபத்தைக் குறைப்பதற்கு, சக்தி வாய்ந்த ஒரு வாக்யூம் க்ளீனரை நீங்கள் உபயோகிக்க வேண்டும் என்று ராபர்ட்ஸ் ஆலோசனை அளிக்கிறார். வாரத்திற்கு ஒருமுறையாக, பல வாரங்களுக்கு, வாசலிலிருந்து 4 அடி தூரத்திற்கு 25 தடவையும், அடிக்கடி நடக்கும் இடங்களில் 16 தடவையும், கார்ப்பெட்டின் மீதமுள்ள இடங்களில் 8 தடவையும், அந்த வாக்யூம் க்ளீனரை வைத்து நன்றாக இழுத்து சுத்தம் செய்ய வேண்டும்.
இந்த சுலபமான முறையை செய்து முடித்த பிறகு, மேலே சிபாரிசு செய்யப்பட்டுள்ள எண்ணிக்கையில் பாதி தடவையாவது ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து செய்தீர்களானால் தூசியின் அளவை குறைக்கலாம். “தரமான கால்மிதியை உங்கள் வீட்டின் ஒவ்வொரு வாசலிலும் போடுங்கள். உள்ளே போவதற்கு முன்னே, உங்கள் ஷூக்களை அந்தக் கால்மிதியில் இருமுறை துடையுங்கள்” என்று ராபர்ட்ஸ் மேலும் சிபாரிசு செய்கிறார். (g02 4/22)