Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சிறுவர் விளையாட்டுகள் வன்முறை எனும் புதிய தொற்று

சிறுவர் விளையாட்டுகள் வன்முறை எனும் புதிய தொற்று

சிறுவர் விளையாட்டுகள்—வன்முறை எனும் புதிய தொற்று

◼உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் அணி ஃபுட்பால் விளையாடுகிறது. ஆட்டம் கலாட்டாவில் முடிவடைகிறது. மிகைநேரத்திற்கு பின்பு கோல் போட்ட அணி ஆட்டத்தில் வெற்றி பெறவே பெற்றோர், பயிற்சியாளர்கள், ஆட்டக்காரர்கள் என 100-⁠க்கும் அதிகமானோர் கத்திக் கூச்சல் போடுகிறார்கள், முஷ்டியால் குத்தி தாக்குகிறார்கள்.

◼சிறுவர் சிறுமியர்களின் அணி ஃபுட்பால் விளையாடுகிறது. பத்து வயது ஆட்டக்காரன் தன்னிடம் எறியப்பட்ட பந்தை பிடிக்க தவறியபோது பயிற்சியாளர் அவனை தரையில் தள்ளி இரண்டு கைகளையும் முறித்து விடுகிறார்.

◼லிட்டில் லீக் பேஸ்பால் குழு பயிற்சியாளர், சிறுவன் ஒருவனை ஆட்டத்திலிருந்து விலக்குகிறார். சிறுவனின் தகப்பனார் அந்தப் பயிற்சியாளரை கொலை செய்வதாக பயமுறுத்துகிறார், இதனால் அவருக்கு 45 நாட்கள் சிறைதண்டனை.

◼சிறுவர்களின் ஐஸ் ஹாக்கி விளையாட்டுக்கு பயிற்சி அளிக்கையில், விளையாட்டின் விதிமுறைகளை எதிர்த்து இரண்டு தகப்பன்மாருக்கிடையே விவாதம். ஒருவர் மற்றொருவரை அவருடைய மூன்று பிள்ளைகளின் கண்ணெதிரே அடித்து கொலை செய்கிறார்.

நெஞ்சை உறையவைக்கும் இது போன்ற அறிக்கைகள் திடுக்கிடச் செய்யும் அளவுக்கு எங்கும் பிரபலமாகி விட்டன. ஆட்டக் களங்கள், கூடைப்பந்து களங்கள், பனிச்சறுக்காட்டத் திடல்கள், விளையாட்டு மைதானங்கள் ஆகிய இடங்களில் வன்முறை எனும் புதிய தொற்று பரவி வருவதாக தெரிகிறது. சண்டையிட்டாலும் பரவாயில்லை தோல்வியடையக் கூடாது என நினைக்கும் பெற்றோரும் பயிற்சியாளர்களும் நடத்தும் வன்முறையே அது. “பெற்றோர் தங்கள் பிள்ளைகளிடம் கத்தி ஆர்ப்பாட்டம் செய்வதையும் ஜெயித்தே ஆக வேண்டுமென அவர்களை உந்தி வற்புறுத்துவதையும் பார்த்திருக்கிறேன்; பெற்றோர் தூண்டிவிட பிள்ளைகள் அடிதடி செய்வதை பார்த்திருக்கிறேன்; பெற்றோர் தர்மசங்கடப்படுத்தியதால் மைதானத்தில் பிள்ளைகள் அழுதுகொண்டிருப்பதையும் பார்த்திருக்கிறேன்” என ஜுபிட்டர்-டீக்வெஸ்டா (ஃப்ளாரிடா) அத்லெட்டிக் அஸோசியேஷன் தலைவர் ஜெஃப்ரி லெஸ்லி கூறுகிறார். “இளைஞருடைய போட்டி விளையாட்டுகள்தான் உண்மையில் பெற்றோரை மட்டமாக நடந்துகொள்ள வைக்கின்றன” எனவும் அவர் கூறுகிறார். இத்தகைய வன்முறையிலிருந்து பிள்ளைகளை காப்பதற்காக, பிள்ளைகளின் போட்டி விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு பெற்றோர் சிலர் வருவதை தடை செய்வதற்கு சில சமுதாயங்களில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.

கட்டுக்கடங்காத கோபாவேசத்தால் என்ன விளைவடைந்திருக்கிறது? “இவ்வாறு கீழ்த்தரமாக நடந்துகொள்ளும் பெரியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது இளைஞருடைய போட்டி விளையாட்டுகளுக்கு பங்கம் விளைவிக்கிறது, வேடிக்கைக்கே வேட்டு வைக்கிறது, லட்சக்கணக்கான பிள்ளைகளின் மனதில் தவறான எண்ணத்தை வேர்விடச் செய்கிறது” என ஃப்ளாரிடாவைச் சேர்ந்த நேஷனல் அலையன்ஸ் ஃபார் யூத் ஸ்போர்ட்ஸ் இயக்கத்தின் ஸ்தாபகரும் தலைவருமான ஃப்ரெட் யெங் கூறுகிறார்.

ஜெயித்தே தீர வேண்டும்

தங்களுடைய பிள்ளைகள் மற்ற பிள்ளைகளையெல்லாம் விஞ்சி, எப்படியும் ஜெயித்தே தீர வேண்டும் என பெற்றோர் சிலர் ஆசைப்படுவதே இந்தப் பிரச்சினைக்கு ஆணி வேராக தோன்றுகிறது. “ஜெயிப்பதுதான் முக்கியம் என்றிருக்கும்போதும், வலிமையை காட்டுவதுதான் முக்கியம் என்றிருக்கும்போதும் தெம்பற்றவர்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகிறது. இந்தப் போட்டி விளையாட்டுகளில் தெம்பற்ற நிலையில் இருப்பது பிள்ளைகளே” என கனடாவில் பிள்ளைகளின் துஷ்பிரயோகத்தை தடுக்கும் நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவர் கூறுகிறார். இப்படிப்பட்ட அழுத்தங்களுக்கு ஆளாகும் பிள்ளைகள், “இளம் வயதிலேயே மனநல பிரச்சினைகளை எதிர்ப்படலாம். இவர்கள் வளர்ந்து பெரியவர்களாகும் போது தோல்வியை ஏற்றுக்கொள்வது பெரும் பாடாக இருக்கலாம்” என ஒன்டாரியோவிலுள்ள (கனடா) உடற்பயிற்சி மற்றும் உடல்நல கல்வி அமைப்பின் அதிகாரி ஒருவர் குறிப்பிடுகிறார்.

பெற்றோரின் கோபாவேசமும் பயிற்சியாளர்களின் ஆர்வக் கொதிப்பும் பெரும்பாலும் இந்த இளம் வீர, வீராங்கனைகளிடமே கைமாறப்படுகின்றன என்பது ஆச்சரியமல்ல. ஒருமுறை சிறுமியரின் வாலிபால் ஆட்டம் நடைபெற்றபோது, ஆட்டக்காரர்கள் நடுவர்களை ஏழுமுறை தாக்கினர். டென்னிஸ் போட்டியிலிருந்து விலக்கப்பட்ட ஒரு சிறுமி, அதற்கு பதிலடி கொடுப்பதற்கு அதிகாரி ஒருவரின் காரை நாசப்படுத்தினாள். போட்டியின்போது தவறு ஏற்பட்டதால் நடுவர் விசிலடித்து ஆட்டத்தை நிறுத்தவே உயர்நிலைப் பள்ளி மல் வீரன் ஒருவன் அவருடைய நெற்றியை தன் நெற்றியால் பயங்கரமாக மோதியதில் அவர் நினைவிழந்து போனார். “முன்பெல்லாம் சிறந்த விளையாட்டிற்கு இலக்கணமாக திகழ்ந்ததே இளைஞரின் விளையாட்டுகள்தான். ஆனால் இனி அப்படி இருக்கப் போவதில்லை. அது இனியும் விளையாட்டாக மாத்திரம் இல்லை” என கூறுகிறார் குழந்தை மனநல மருத்துவர் மற்றும் இளைஞர் விளையாட்டு மனநல மருத்துவர் டாரல் பர்னட்.

பெற்றோர் என்ன செய்யலாம்

வேடிக்கையையும் உடற்பயிற்சியையும் அனுபவித்து மகிழ வேண்டும் என்பதற்காகவே பிள்ளைகள் விளையாட்டுகளில் விரும்பி ஈடுபடுகிறார்கள் என்பதை பெற்றோர் நினைவில் வைக்க வேண்டும். சிறுவர்களின் விளையாட்டுகளை டென்ஷன் ஏற்படுத்தும் விளையாட்டாக மாற்றி அவர்களை பழிப்பேச்சுகளுக்கு ஆளாக்கும்போது அவற்றின் நோக்கமே பாழாகிப் போகிறது, அது அன்பற்ற செயலும்கூட. “பெற்றோரே, உங்கள் பிள்ளைகளை ஒருபோதும் சீற்றத்துக்கு ஆளாக்காதீர்கள்” என பைபிள் கூறுகிறது.​—எபேசியர் 6:4, த ஜெருசலேம் பைபிள்.

இந்த விஷயத்தில் பெற்றோர் தங்கள் சமநிலையைக் காத்துக்கொள்ள எது உதவலாம்? முதலாவதாக, நீங்கள் இளைஞராக இருக்கையில் என்ன நிலையில் இருந்தீர்கள் என்பதை நினைவில் வைப்பது உதவியாக இருக்கலாம். அனுபவமிக்க விளையாட்டு வீரர் போல் உங்களால் விளையாட முடிந்ததா? அந்த நிலையை எட்ட வேண்டுமென உங்களுடைய மகனிடமோ மகளிடமோ எதிர்பார்ப்பது நியாயமா? “பிள்ளைகள் மென்மையானவர்கள்” அல்லவா? (ஆதியாகமம் 33:13, NW) அதோடு, தோல்வியையும் வெற்றியையும் குறித்ததில் சரியான மனநிலையை காத்துவர முயலுங்கள். போட்டா போட்டி போடுவது “வீண் செயல்; காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகும்” என பைபிள் சொல்கிறது.​—⁠பிரசங்கி [சபை உரையாளர்] 4:4, பொது மொழிபெயர்ப்பு.

முன்னாள் பேஸ்பால் முக்கிய விளையாட்டு வீரர் ஒருவர், வெற்றியையும் தோல்வியையும் சரியான கண்ணோட்டத்தில் காணும்படி பெற்றோரை ஊக்குவிப்பது அக்கறைக்குரிய விஷயம்; பிள்ளை சரிவர விளையாடாதபோது கோபப்படவும் வேண்டாம், வெற்றி பெறும்போது அளவுக்குமீறி சந்தோஷப்படவும் வேண்டாம் என்று அவர் ஊக்குவிக்கிறார். வெற்றியிலேயே குறியாக இருப்பதற்கு பதிலாக பிள்ளைகளின் மகிழ்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும்.

பிள்ளைகளுக்கான போட்டி விளையாட்டுகள் வீணான போட்டி மனப்பான்மையை வளர்க்கின்றன என்ற முடிவுக்கு பெற்றோர்கள் சிலர் வந்துள்ளனர். என்றாலும், அவர்களுடைய பிள்ளைகள் மற்றவர்களுடன் விளையாடி மகிழ்வதில்லை என இது அர்த்தப்படுத்துவதில்லை. உதாரணமாக, தங்கள் பிள்ளைகள் சபையிலுள்ள மற்ற பிள்ளைகளுடன் சேர்ந்து வீட்டின் கொல்லைப்புறத்திலோ பக்கத்திலுள்ள பூங்காவிலோ விளையாடி மகிழ்வதை அநேக கிறிஸ்தவ பெற்றோர் கண்டிருக்கிறார்கள். இவ்விதத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடைய கூட்டுறவுகளை அதிகமாக கட்டுப்படுத்த முடிகிறது. குடும்பமாக உல்லாச பயணம் செல்வதும்கூட நல்ல விதமான விளையாட்டை அனுபவித்து மகிழ்வதற்கு சந்தர்ப்பங்களை அளிக்கலாம். வீட்டின் கொல்லைப்புறத்தில் விளையாடும்போது, போட்டி விளையாட்டில் வெற்றிபெறும் அணியில் இருப்பது போன்ற ‘த்ரில்’ கிடைக்காது என்பது நிஜமே. ஆனாலும், “சரீர முயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது . . . எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது” என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். (1 தீமோத்தேயு 4:8) விளையாட்டுகளில் இத்தகைய சமநிலையான கருத்தை மனதில் கொண்டால் வன்முறை எனும் இந்தப் புதிய தொற்றுக்கு உங்கள் பிள்ளை பலியாகாமல் பாதுகாத்திட முடியும். (g02 12/08)

[பக்கம் 11-ன் படங்கள்]

போட்டி விளையாட்டுகள் ‘விளையாட்டாக’ இருக்க வேண்டுமே ஒழிய சச்சரவின் உறைவிடமாக இருக்கக் கூடாது