Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஓர் இராணுவ படையெடுப்பு!

ஓர் இராணுவ படையெடுப்பு!

ஓர் இராணுவ படையெடுப்பு!

“பெலிஸ் நாட்டில், வளர்ச்சியடைந்து வரும் ஒரு கிராமத்தில் நாங்கள் வசிக்கிறோம். அதைச் சுற்றிலும் எங்கும் பச்சைப்பசேல்தான். ஒருநாள் காலை ஒன்பது மணியளவில் ஓர் இராணுவம் எங்கள் வீட்டை நோக்கி படை​யெடுத்தது. ஆயிரக்கணக்கான எறும்புகள் கதவுக்கு அடியிலிருந்தும் ஒவ்வொரு வெடிப்பிலிருந்தும் இரை தேடி படையெடுத்து வந்தன. எறும்புகள் படை​யெடுத்தபோது ஓரிரண்டு மணிநேரத்திற்கு வீட்டைவிட்டு வெளியேறுவதைவிட எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. நாங்கள் வீடு திரும்பியபோதோ எறும்புகள் வீட்டிலிருந்த ஒரு பூச்சிபொட்டையும் விட்டு வைக்காமல் அத்தனையையும் சாப்பிட்டுவிட்டு போயிருந்தன.”

பெலிஸ் போன்ற வெப்பமண்டல நாடுகளில் வசிக்கும் அநேகருக்கு இது சர்வசாதாரணமான அனுபவம்; இதை அவர்கள் அடியோடு வெறுப்பதும் கிடையாது. வீட்டிலுள்ள புழுபூச்சிகள், கரப்பான் போன்றவற்றை ஒழிக்க இது ஒரு வழியாகும். அதோடு, அந்த எறும்புகள் வீட்டையும் சுத்தமாக விட்டுவிட்டு போய்விடுகின்றன.

இங்கு விவரிக்கப்பட்டவை இராணுவ எறும்புகள் என்று அழைக்கப்படுவது சுவாரஸ்யமான விஷயம். அவை வாழும் விதமும் அவற்றின் செயல்பாடுகளும் இராணுவத்தை ஒத்திருப்பதால் அவ்வாறு அழைக்கப்படுகின்றன. a ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் உள்ள இந்த நாடோடி இராணுவப் படைகள் கூடுகட்டி வாழ்வதற்கு பதிலாக தற்காலிக முகாம்களை அமைக்கின்றன; அதாவது, ஏராளமான எறும்புகள் ஒன்றோடொன்றாக கால்களை பின்னிப்பிணைத்தவாறு அரசி எறும்பையும் அவள் குஞ்சுகளையும் சுற்றி திரை போல மறைத்துக் கொள்கின்றன. படையெடுத்துச் செல்லும் எறும்புக் கூட்டங்கள், உணவு தேடும் படலத்தில் இறங்குவதற்காக அந்த தற்காலிக முகாம்களிலிருந்து சாரைசாரையாக அனுப்பப்படுகின்றன. பூச்சிகளும், பல்லிகள் போன்ற சிறிய உயிரினங்களுமே அவற்றின் உணவாகும். இரையை பிடிப்பதற்காக படையெடுத்து செல்லும் இந்த எறும்புக் கூட்டத்தின் ‘தளபதிகள்,’ இடது புறமாகவும் வலது புறமாகவும் சென்று இரையை வளைத்து பிடிக்கப்போவது போல தோன்றும்படி செல்கின்றன. அதாவது, உணவை மோப்பம் பிடித்து செல்ல முடியாத சூழ்நிலையில், முன்னணியிலிருக்கும் தொழிலாளி எறும்புகள் தயங்கியபடி முன்னேறாமல் நின்றுவிடுகையில், பின்னால் வரும் எறும்புகள் நிற்காமல் தொடர்ந்து அணிவகுத்தவாறு இடது புறமாகவும் வலது புறமாகவும் செல்கின்றன. இவ்வாறே தொடர்ந்து செல்கையில் அதை பார்ப்பதற்கு சுற்றி வளைத்து இரை பிடிக்கும் முறை போலவே தோன்றும்.

இராணுவ எறும்புகள் 36 நாள் சுழற்சியில் இயங்குகின்றன. அதாவது, ஏறக்குறைய 16 நாட்கள் உணவுக்காக அலைந்து திரிந்த பிறகு 20 நாட்கள் ஒரே இடத்தில் அக்கடாவென்று தங்கிவிடுன்றன; அப்போதுதான் அரசி எறும்பு முட்டையிடுகிறது. அதற்கு பிறகு, பசியின் கொடுமை தாங்காமல் அவை மீண்டும் படையெடுத்துப் போகின்றன. படைபடையாக அணிவகுத்து செல்லும் இந்த எறும்புகளின் வரிசைகள் சுமார் 10 மீட்டர் அகலமுள்ளதாக இருக்கும்; நேராக வந்து கொண்டிருக்கும் இந்தப் படையைக் கண்டவுடனே சிலந்திகளும், தேள்களும், வண்டுகளும், தவளைகளும், பல்லிகளும் பக்கவாட்டில் தலைதெறிக்க ஓடிப்போகும். தப்பியோடும் இந்த உயிரினங்களை பறவைகள் துரத்திப் பிடித்து சாப்பிடுகின்றன, எறும்புகளையோ ஒன்றும் செய்வதில்லை.

எறும்புகள் ‘இயல்பாகவே ஞானமுள்ளவை’ என்று நீதிமொழிகள் 30:24, 25-⁠ல் (NW) பைபிள் விவரிக்கிறது. இவை சிருஷ்டிப்பின் அதிசயங்களில் ஒன்றாகும். (g03 6/8)

[அடிக்குறிப்பு]

a இக்கட்டுரை, மத்திப அமெரிக்காவிலும் தென் அமெரிக்காவிலும் காணப்படும் எசைட்டன் என்ற ஓர் எறும்பு இனத்தைப் பற்றியே கலந்தாலோசிக்கிறது.

[பக்கம் 25-ன் படம்]

இராணுவ எறும்பு

[படத்திற்கான நன்றி]

© Frederick D. Atwood

[பக்கம் 25-ன் படம்]

கால்களை பின்னிப்பிணைத்து பாலம் அமைத்தல்

[படத்திற்கான நன்றி]

© Tim Brown/www.infiniteworld.org