Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மிதமீறி குடிப்பது உண்மையிலேயே தவறா?

மிதமீறி குடிப்பது உண்மையிலேயே தவறா?

பைபிளின் கருத்து

மிதமீறி குடிப்பது உண்மையிலேயே தவறா?

கடந்த பல வருடங்களாக, குடிகார காமடியன்கள் இல்லாத நாடகங்களும் சினிமாக்களுமே இருந்ததில்லை என்று சொல்லலாம். அவர்கள் வெறுமனே நடிக்கிறார்கள் என்பது உண்மைதான்; ஆனால், அவர்களுடைய நகைச்சுவை, மிதமீறி குடிப்பதன் பேரில் பலருக்கு இருக்கும் இரண்டுங்கெட்டான் கருத்துக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. குடித்து வெறிப்பது கெட்ட பழக்கம்தான் என்று ஒத்துக்கொள்கிறார்கள், ஆனால் அதில் எந்தத் தீங்குமில்லை என்றும் நினைக்கிறார்கள்.

நிஜத்தை எடுத்துக்கொண்டால் அதில் எந்த நகைச்சுவையும் இல்லை. மதுபான துஷ்பிரயோகம் உலகெங்கிலும் வாழும் மக்களின் உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் மிக ஆபத்தான பழக்கங்களில் ஒன்று என உலக சுகாதார நிறுவனம் மதிப்பிடுகிறது. புகையிலைக்கு அடுத்ததாக, அடிமைப்படுத்தும் வேறெந்த வஸ்துவின் துஷ்பிரயோகத்தையும்விட மதுபான துஷ்பிரயோகத்தாலேயே அதிக மரணங்களும் வியாதிகளும் ஏற்படுகின்றன என சொல்லப்படுகிறது. மேலும், அமெரிக்க பொருளாதாரத்தில் மட்டுமே ஆண்டுக்கு 18,400 கோடிக்கும் அதிகமான டாலரை இது விழுங்கிவிடுகிறது.

இந்த உண்மைகளின் மத்தியிலும், மிதமீறி குடிப்பது தவறு என்பதை அநேகர் சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை. நீண்ட காலமாக துஷ்பிரயோகம் செய்வதால் ஏற்படக்கூடிய தீங்கான விளைவுகளை ஒப்புக்கொள்கிற போதிலும், எப்பொழுதாவது குடித்து வெறிப்பதில் எந்தத் தவறுமில்லை என்றே அவர்கள் நினைக்கிறார்கள். உலகில் சில இடங்களில் வாழும் இளைஞர் மத்தியில், குடிவெறி என்பது பெரிய மனுஷனாகிவிட்டதற்கு அடையாளமாக கருதப்படுகிறது. சுகாதார நிறுவனங்கள் கடும் எச்சரிக்கை விடுத்தபோதிலும்கூட, ஒரே தடவையில் ஐந்து அல்லது அதற்கும் அதிகமான ‘பெக்’ குடிக்கும் போக்கு எல்லா வயதினர் மத்தியிலும் திடுக்கிடும் அளவுக்கு அதிகரித்து வருகிறது. ஆகவே, மிதமீறி குடிப்பது உண்மையிலேயே தவறா இல்லையா என அநேகர் யோசிக்கின்றனர். பைபிள் என்ன சொல்கிறது?

திராட்சரசமும் மதுபானமும் கடவுளிடமிருந்து வரும் பரிசுகள்

திராட்சை மதுவையும் மற்ற மதுபானங்களையும் பற்றி பைபிளில் பல இடங்களில் பேசப்படுகிறது. சாலொமோன் அரசன் இவ்வாறு எழுதினார்: “நீ போய், உன் ஆகாரத்தைச் சந்தோஷத்துடன் புசித்து, உன் திராட்சரசத்தை [“திராட்சை மதுவை,” NW] மனமகிழ்ச்சியுடன் குடி; தேவன் உன் கிரியைகளை அங்கீகாரம் பண்ணியிருக்கிறார்.” (பிரசங்கி 9:7) “மனுஷனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும் திராட்சரசத்தை [“திராட்சை மதுவை,” NW]” தருபவர் யெகோவா தேவனே என்பதை சங்கீதக்காரன் ஒத்துக்கொண்டார். (சங்கீதம் 104:14, 15) மனிதகுலத்திற்கு யெகோவா அருளிய ஆசீர்வாதங்களில் திராட்சை மதுவும் ஒன்று என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

திராட்சை மது அருந்துவதை இயேசு அங்கீகரித்தார் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. சொல்லப்போனால், அவருடைய முதல் அற்புதமே ஒரு திருமண விருந்தில் தண்ணீரை உயர்தரமான திராட்சை மதுவாக மாற்றியதாகும். (யோவான் 2:3-10, NW) கர்த்தருடைய இராப்போஜனத்தை ஆரம்பித்து வைத்தபோது திராட்சை மதுவை தனது இரத்தத்திற்கு பொருத்தமான அடையாளமாக அவர் பயன்படுத்தினார். (மத்தேயு 26:27-29, NW) திராட்சை மது மருத்துவ குணம் படைத்தது என்பதையும் பைபிள் குறிப்பிடுகிறது; ஏனென்றால் ‘உன் வயிற்றிற்காக . . . கொஞ்சம் திராட்சை மதுவை சேர்த்துக்கொள்’ என்று சொல்லி தீமோத்தேயுவை அப்போஸ்தலன் பவுல் உற்சாகப்படுத்தினார்.​—1 தீமோத்தேயு 5:23, NW; லூக்கா 10:34, NW.

மிதமாக குடிப்பதே முக்கியம்

“கொஞ்சம் திராட்சை மது” குடிக்கும்படி பவுல் கூறியதை கவனியுங்கள். மதுபானத்தை மிதமிஞ்சி குடிப்பதை பைபிள் கண்டனம் செய்கிறது என்பது தெளிவாக தெரிகிறது. யூத ஆசாரியர்கள் தங்கள் பணிகளை செய்யாத சமயங்களில் மிதமாக குடிப்பதற்கு அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால் ஆசாரிய பணிகளைச் செய்யும்போது எந்தவித மதுபானம் அருந்துவதும் தடை செய்யப்பட்டது. (லேவியராகமம் 10:8-11) குடிவெறியர் “தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை” என பல ஆண்டுகளுக்குப்பின் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு எச்சரிப்பு கொடுக்கப்பட்டது.​—1 கொரிந்தியர் 6:9, 10.

மேலும், தீமோத்தேயுவுக்குப் பவுல் அறிவுரைகள் வழங்கியபோது, சபையில் முன்னின்று வழிநடத்துகிறவர்கள் ‘மதுபானப் பிரியராக’ இருக்கக் கூடாது என கூறினார். a (1 தீமோத்தேயு 3:3, 8) சொல்லப்போனால், மனந்திரும்பாத குடிவெறியர்கள் சபையிலிருந்து நீக்கப்பட வேண்டுமென பைபிள் கட்டளையிடுகிறது. (1 கொரிந்தியர் 5:11-13) “திராட்சை மது பரியாசம் செய்யும்” என வேதாகமம் பொருத்தமாகவே குறிப்பிடுகிறது. (நீதிமொழிகள் 20:1, NW) ஒருவர் மதுபானத்தை மிதமீறி அருந்துவது, சமநிலை தவறி, நியாயத்தை சரிவர வழங்காதபடி செய்துவிடுகிறது.

மிதமீறி குடிப்பதை கடவுளுடைய வார்த்தை கண்டனம் செய்வதற்கு காரணம்

நாம் எதையாகிலும் துஷ்பிரயோகம் செய்யும்போது, அது நமக்கும் பிறருக்கும் தீங்கிழைக்கிறது என்பதை ‘பிரயோஜனமாயிருக்கிறதை நமக்குப் போதிக்கிற’ யெகோவா அறிந்திருக்கிறார். (ஏசாயா 48:17, 18) மதுபானங்களை அருந்தும் விஷயத்தில் இது உண்மையாக இருக்கிறது. “ஐயோ! யாருக்கு வேதனை? யாருக்குத் துக்கம்? யாருக்குச் சண்டைகள்? யாருக்குப் புலம்பல்? யாருக்கு காரணமில்லாத காயங்கள்? யாருக்கு இரத்தங்கலங்கின கண்கள்?” என கடவுளுடைய வார்த்தை கேட்கிறது. “மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கித் தரிப்பவர்களுக்கும், கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர்களுக்குந்தானே” என அது பதிலளிக்கிறது.​—நீதிமொழிகள் 23:29, 30.

போதையில் இருக்கும்போது ஆட்கள் யோசனையில்லாமல் நடந்திருக்கிறார்கள், ஆபத்தான அநேக காரியங்களை செய்திருக்கிறார்கள், அதாவது குடித்துவிட்டு வண்டி ஓட்டும்போது தங்களுக்கும் மற்றவர்களுக்கும் ஆபத்தை வருவித்தல், இன்னொருவரின் துணை மீது ஆசை வைத்து நல்ல உறவுகளுக்குப் பங்கம் விளைவித்தல், முட்டாள்தனமாக பேசுதல் மற்றும் நடந்துகொள்ளுதல் அல்லது நெறிமுறை தவறுதல் போன்றவை. (நீதிமொழிகள் 23:33) இன்று மனிதகுலத்தைப் பீடித்திருக்கும் எல்லா சமூக தொல்லைகளிலும் மிக மோசமானது மதுபான துஷ்பிரயோகமே என சரியாகவே சொல்லப்படுகிறது. “மதுபானப் பிரியரை . . . சேராதே” என பைபிள் புத்திமதி அளிப்பதில் ஆச்சரியமில்லை!​—நீதிமொழிகள் 23:20.

கலாத்தியர் 5:19-21-⁠ல், கடவுளுடைய ஆவிக்கு விரோதமான ‘மாம்சத்தின் கிரியைகளில்’ குடிவெறிகளையும் களியாட்டுக்களையும் பவுல் பட்டியலிடுகிறார். மிதமீறி குடிப்பது கடவுளுடன் ஒருவர் கொண்டுள்ள உறவை பாதிக்கும். அப்படியானால், மதுபானத்தை மிதமீறி குடிப்பதை கிறிஸ்தவர்கள் தவிர்க்க வேண்டும் என்பதில் சந்தேகமே இல்லை. (g04 3/8)

[அடிக்குறிப்பு]

a சபையை மேய்க்கும் கண்காணிகளும் உதவி ஊழியர்களும் தங்களால் இயன்றவரை யெகோவாவின் உயர்ந்த தராதரங்களை வெளிக்காட்டி, நியாயம் வழங்குவதிலும் நடத்தையிலும் மந்தைக்கு சிறந்த முன்மாதிரிகளாக திகழ வேண்டும் என்பதால், இந்தக் கட்டளை பிற கிறிஸ்தவர்களுக்கும் நியாயமாகவே பொருந்துகிறது.