உலகை கவனித்தல்
உலகை கவனித்தல்
அதிக விலையுயர்ந்த குடிநீர்
“இது காலம் செய்த கோலம். நவநாகரிக மாணவர்கள் எப்போதும் தங்களுக்குப் பிடித்த பிராண்ட் குடிநீர் பாட்டிலை எடுத்துச் செல்கிறார்கள். நியு யார்க்கில் புதுமைப் பித்தர்கள் குடிநீர் ‘பார்’-களில் கூடிவருகிறார்கள். ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில், பன்னாட்டு முத்திரை பதித்த, தரம் பிரித்த மினரல் வாட்டரை மட்டுமே வெயிட்டர்கள் பரிமாறுகிறார்கள். பொதுவாக உயர்தர ஒயின்தான் இவ்வாறு தரம் பிரிக்கப்படும்; இப்போதோ சாதாரண குடிநீரும் அவ்வாறு தரம் பிரிக்கப்படுகிறது” என ஜெர்மானிய செய்தித்தாளான நாடூர்+காஸ்மாஸ் சொல்கிறது. குடிநீர் மலிவாகக் கிடைப்பதில்லை. ஆகவே, “மினரல் வாட்டருக்காக மக்கள் எக்கச்சக்கமாகச் செலவு செய்கிறார்கள், அவற்றை அழகிய பாட்டில்களில் எடுத்துச் செல்கிறார்கள்” என அந்தக் கட்டுரை சொல்கிறது. ஹோட்டல்கள் சிலவற்றில் ஒரு லிட்டர் உயர்தர குடிநீரின் விலை 3,650 ரூபாயாக இருக்கலாம். பிரபல பிராண்ட் குடிநீரைக் குடிப்பதை ஒருவர் நாகரிகமாகக் கருதினாலும் அது சாதாரண குடிநீரைவிட நல்லதென சொல்ல முடியாது. தயாரிப்பாளர்கள் சிலர் அது மனதுக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் அழகுக்கும் உகந்ததென அடித்துச் சொல்லலாம். ஆனால் அது சாதாரணக் குடிநீரைவிட எந்த விதத்திலும் மேம்பட்டதாக இல்லையென அநேக நிபுணர்கள் கருதுகிறார்கள். உதாரணத்திற்கு ஜெர்மனியில் குழாய்த் தண்ணீரின் தரம், உலகின் மறுகோடியிலிருந்து வரும் மினரல் வாட்டரைவிட எந்த விதத்திலும் குறைந்ததல்ல என அந்தக் கட்டுரை உறுதியளிக்கிறது. அந்தக் குழாய்த் தண்ணீருக்குப் பிளாஸ்டிக் பாட்டில்கள் அவசியமில்லை, அதை பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டருக்குத் தூக்கி செல்லவும் அவசியமில்லை. (g05 5/8)
பிரான்சு நாட்டவரின் டயட் இரகசியங்கள்
“பிரான்சு நாட்டவர் எக்கச்சக்கமான கொழுப்புச் சத்துமிக்க உணவை சாப்பிடுகிறார்கள்” என சொல்கிறது யூஸி பெர்க்லி வெல்னஸ் லெட்டர். “ஆனாலும் அவர்கள் அமெரிக்கர்களைவிட ஒடிசலாகவே காணப்படுகிறார்கள், அதோடு அந்தளவுக்கு அவர்கள் பருமனாகவும் ஆவதில்லை. இருதய நோயால் இறக்கும் பிரான்சு நாட்டவர்களின் விகிதம் அமெரிக்கர்களுடன் ஒப்பிட பாதியளவே இருக்கிறது, [ஐரோப்பிய யூனியனிலுள்ள] வேறு எந்த நாட்டினரையும்விட குறைவாகவே இருக்கிறது.” ஏன் இந்த முரண்பாடு? பிரான்சு நாட்டவர் “கொஞ்சம் கலோரியே புசிப்பதால்” இருக்கலாம் என பதிலளிக்கிறது வெல்னஸ் லெட்டர். பிரான்சு நாட்டவர் மிகக் குறைவாகச் சாப்பிடுகிறார்கள் என பாரிஸ் நகரத்திலும், அமெரிக்காவிலுள்ள பென்ஸில்வேனியாவின் பிலடெல்ஃபியா நகரத்திலும் உள்ள ரெஸ்டாரென்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வு காட்டியது. அவர்களது சமையல் கலை புத்தகங்களும் வித்தியாசமாக இருந்தன. உதாரணமாக, அப்புத்தகங்களில் மிகக் குறைந்தளவு இறைச்சியே பரிமாறுவதற்குப் போதுமான அளவாக சொல்லப்பட்டிருந்தது. “கவனத்தை ஈர்க்கும் கண்டுபிடிப்பு என்னவென்றால் பிரான்சு நாட்டவர் அந்தக் கொஞ்ச உணவை நீண்ட நேரம் சாப்பிடுகிறார்கள். அவர்களில் சராசரி நபர் ஒருவர், சாப்பிடுவதற்கு மட்டுமே தினமும் சுமார் 100 நிமிடங்களைச் செலவழிக்கிறார், ஆனால் அமெரிக்கர்களோ அறுபதே நிமிடங்களில் ‘அன்றாட அப்பத்தை’ (அதோடு வேறு எது கிடைத்தாலும்சரி) வாரி வாரி விழுங்கிவிடுகிறார்கள்” என அந்தக் கட்டுரை குறிப்பிடுகிறது. இதிலிருந்து என்ன முடிவுக்கு வருகிறோம்? எத்தனை கலோரிகள் சாப்பிடுகிறீர்கள் என்பதைக் குறித்து ஜாக்கிரதை. ஊட்டச்சத்துமிக்க உணவை மிதமானளவு சாப்பிடுங்கள். உணவை மெல்ல ரசித்துச் சாப்பிடுங்கள். நிறைய உணவு பரிமாறப்படும்போது மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் அல்லது பாதி உணவை வீட்டுக்கு எடுத்துச் செல்லுங்கள். “வீட்டில் உணவு அருந்துவதை இனிய விஷயமாக்குங்கள்.” (g05 5/8)
உங்கள் புத்தகங்களைப் பாதுகாத்திடுங்கள்
“காலமும் ஈரப்பதமும் [புத்தகங்களின்] முக்கிய எதிரிகள்” என மெக்சிகோ நாட்டு டியா சையிடி பத்திரிகையில் வெளியான கட்டுரை சொல்கிறது. அவற்றை நல்ல விதத்தில் பாதுகாப்பதற்கு வருடத்திற்கு ஒரு முறையாவது அவற்றை எடுத்துத் தூசி தட்டி துடைத்து வைக்க வேண்டுமென அந்தக் கட்டுரை சிபாரிசு செய்கிறது. எனினும், தூசி தட்டும்போது அது பக்கங்களுக்குள் சென்றுவிடாதிருப்பதற்குப் புத்தகத்தை இறுக்கமாகப் பிடித்துக்கொள்ள வேண்டும். ஈரப்பதமான சீதோஷ்ணநிலைகளில், புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் டால்கம் பவுடரைத் தூவுவது, சில நாட்களுக்கு அதன்மீது கனமான பொருளை வைப்பது, பின்னர் அந்த டால்கம் பவுடரைப் பிரஷ்ஷால் அகற்றுவது போன்றவற்றின் மூலம் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்தலாம். ஈரப்பதத்தால் பூஞ்சணம் பிடிக்க ஆரம்பித்தால் மெல்ல அதை ரேசர் பிளேடால் சுரண்டி எடுங்கள், பிறகு ஆல்கஹால் போட்டு துடையுங்கள். புத்தகத்தை அலமாரியிலிருந்து எடுக்கையில் அதன் மேற்புற விளிம்பைப் பிடித்து இழுக்காதீர்கள். அதன் நடுப்பகுதியை இரண்டு விரல்களில் பிடித்துக்கொண்டு அதை மெல்ல மெல்ல ஆட்டி, இரு புறமுமுள்ள புத்தகங்களிலிருந்து பிரித்த பின்னர் கவனமாக வெளியே எடுப்பதுதான் சிறந்தது. மிகப் பெரிய புத்தகங்கள், அதுவும் பழைய புத்தகங்கள் இருக்குமானால் அவற்றின் கனத்தாலேயே சேதமடைவதற்கு வாய்ப்பிருக்கிறது. எனவே அவற்றைப் புத்தக அலமாரியில் கிடைமட்டமாக வைப்பதன் மூலம் பாதுகாக்கலாம். (g05 5/8)
வயதாகையில் உயரம் குறைகிறது
ஜனங்களுக்கு வயதாகையில் பொதுவாக அவர்களது உயரம் குறைகிறது. “அதற்கான காரணம், புவியீர்ப்பு விசையைப் பெருமளவு சார்ந்திருக்கிறது” என அறிக்கை செய்கிறது ஆஸ்திரேலியாவில் வெளியாகும் த டெய்லி டெலிகிராஃப் என்ற செய்தித்தாள். புவியீர்ப்பு விசை காரணமாக ஒரு நபரின் உயரம் நாள் முழுவதும் மாறிக்கொண்டே இருக்கும். தூங்கும்போது மட்டுமே அவரது உண்மையான உயரம் மீண்டும் வரும். “வயதாகி நம் உடல்கள் பலவீனமடையும்போது உயரம் குறைவது நிலையானதாகிவிடும்” என அந்தச் செய்தித்தாள் சொல்கிறது. “ஜனங்களுக்கு வயதாகையில் அவர்கள் தசைப்பற்றையும் கொழுப்பையும் இழக்கிறார்கள். வயதாகும்போது இது நடப்பது இயல்புதான், ஹார்மோன் மாற்றங்கள் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. வயதாகையில் முள்ளெலும்பு சீர்கேடடைய ஆரம்பிக்கலாம், இதனால் முதுகெலும்பு 2.5 செ.மீ. [ஓர் அங்குலம்] குறுகிவிடலாம்.” இப்படிக் குறுகுவதற்கு எலும்பு மெலிதல் (Osteoporosis) காரணமாக இருக்கலாம். (g05 5/8)
இருமொழி பேசும் பிள்ளைகளை வளர்த்தல்
“பொறுமையாகவும் புத்திசாலித்தனமாகவும் பிள்ளைகளுக்கு பல மொழிகளைக் கற்றுக்கொடுத்து வளர்க்கும்போது அது அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பங்களுக்கும் சமுதாயத்திற்கும் பெரும் வரப்பிரசாதமாக இருக்கலாம்” என மெக்சிகோ நகரில் வெளியாகும் மிலென்யோ செய்தித்தாள் சொல்கிறது. “ஒரு மொழியை மட்டும் பேசும் பிள்ளைகளைவிட இரு மொழிகளைப் பேசும் பிள்ளைகள் பள்ளியில் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள்” என ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. பிள்ளைகள் ஒரு வாக்கியத்தில் இரு மொழிகளையும் போட்டுக் குழப்பிக் கொள்கையில் அல்லது ஒரு மொழியின் விதிகளை மற்றொன்றுக்குத் தவறுதலாகப் பயன்படுத்துகையில் பெற்றோர் சில சமயங்களில் கவலைப்படுகிறார்கள். “இந்த இலக்கணப் ‘பிழைகள்’ சாதாரணமானவையே, அவை சீக்கிரத்தில் சரியாகிவிடும்” என சொல்கிறார் பேராசிரியர் டோனி கிளைன்; இவர் பிள்ளைகளின் மொழி வளர்ச்சி சம்பந்தப்பட்ட மனநல நிபுணர் ஆவார். பெற்றோர் இருவருடைய மொழிகளையும் பிள்ளைகளுக்குப் பிறந்ததிலிருந்தே கற்பிக்கும்போது, அவற்றை அவர்கள் இயல்பாகவே புரிந்துகொள்வார்கள், காலப்போக்கில் அந்த இரண்டு மொழிகளையும் தனித்தனியாக பேசுவார்கள். (g05 5/8)
மாசுபட்ட டயட்
டாக்ஸிக்ஸ் லிங்க் என்ற சுற்றுச்சூழல் அமைப்பு மேற்கொண்ட ஆய்வின்படி தெற்கு ஆசிய நாடுகளிலுள்ளவர்கள் புசிக்கும் அன்றாட உணவில் ஆபத்துண்டாக்கும் நச்சுப் பொருட்கள் கலந்திருக்கின்றன என இந்தியாவில் வெளியாகும் த ஹிண்டு செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. இறைச்சி, மசாலாக்கள், எண்ணெய் போன்ற அடிப்படை உணவுப்பொருள்களில் முற்றிலுமாகவோ ஓரளவோ தடைசெய்யப்பட்ட பொருட்கள் இருப்பதை அந்த ஆய்வு கண்டுபிடித்தது. பாலிக்ளோரினேட்டட் பைஃபினைல் (PCB) போன்ற வெகு தாமதமாகச் சிதைவுறும் நச்சுத்தன்மையுள்ள கரிமப் பொருட்கள் சுற்றுச்சூழலுக்குள் நுழைந்திருக்கின்றன; அவை PCB-க்குத் “தடை விதிக்கும் முன்பு இறக்குமதி செய்யப்பட்ட பழைய டிரேன்ஸ்ஃபார்மர்களையும் கப்பாசிட்டர்களையும் சரியான விதத்தில் அப்புறப்படுத்தாததன் காரணமாக ஒருவேளை நுழைந்திருக்கலாம்” அல்லது அவை கப்பல்கூடங்களிலிருந்து வெளியேறியிருக்கலாம் என அந்த அறிக்கை சொல்கிறது. காய்கறிகளிலும் கருவாடுகளிலும் DDT இருப்பது வேறு ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டது. இத்தகைய நச்சுக்களைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் பன்னாட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருக்கின்றன; ஆனாலும், ‘DDT, HCB, அல்டிரின், டீல்டிரின், [டையாக்ஸின்], ஃபியூரான்கள், PCB-கள் போன்றவை பெருமளவு மாசு ஏற்படுத்தியிருப்பதானது, தாய் பால், கொழுப்பு சாம்பிள்கள், மனித இரத்தத்தின் சாம்பிள்கள் ஆகியவற்றில் தெரிகிறது’ என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. (g05 5/22)