‘என் மதத்தைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விரும்பினேன்’
‘என் மதத்தைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விரும்பினேன்’
சையரா என்ற 12 வயது சிறுமி அமெரிக்காவிலுள்ள ஃப்ளாரிடாவைச் சேர்ந்தவள். பள்ளியில் சரித்திர பாடத்தில் ப்ராஜெக்ட் ஒன்றை அவள் செய்ய வேண்டியிருந்தது. நாசி ஜெர்மனியில் யெகோவாவின் சாட்சிகள் சந்தித்த துன்புறுத்துதல் என்ற ஆர்வத்தைத் தூண்டும் தலைப்பை அதற்காக அவள் தேர்ந்தெடுத்தாள். “என் மதத்தின் சரித்திரத்தைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விரும்பியதால் இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்தேன். படுகொலை சம்பவத்தின்போது யெகோவாவின் சாட்சிகள் எப்படியெல்லாம் பாடுபட்டார்கள் என்பதை இன்னும் நன்றாக தெரிந்துகொள்ள விரும்பினேன்” என அவள் சொல்கிறாள்.
சையரா, போதுமான ஆராய்ச்சி செய்த பிறகு, மரத்தில் ஊதாநிற பிரமிட் ஒன்றை செய்தாள்; முகாம்களில் யெகோவாவின் சாட்சிகளை அடையாளங்காட்டுவதற்கு அவர்களுடைய சீருடையில் தைக்கப்பட்டிருந்த ஊதாநிற முக்கோணத்தை அந்தப் பிரமிட் பிரதிநிதித்துவம் செய்தது. அந்தப் பிரமிட்டின் எல்லா பக்கங்களிலும், விளக்கக் குறிப்புகளைக் கொண்ட படங்களை அவள் ஒட்டினாள். அதோடு, உல்ஃப்கேங் குஸ்ரோவ் என்ற ஒரு யெகோவாவின் சாட்சி தூக்கிலிடப்படுவதற்குச் சற்று முன்னர் எழுதிய கடிதத்தையும் அதில் ஒட்டினாள்; அது, நெஞ்சை நெகிழ வைப்பதும், விசுவாசத்தைப் பலப்படுத்துவதுமான ஒரு கடிதம்.—விழித்தெழு!, 1995, ஆகஸ்ட் 22, பக்கம் 5-லுள்ள பெட்டியைக் காண்க.
சையரா செய்திருந்த பிரமிட் மாடல் தெளிவாகக் காட்டியபடி, மற்ற கைதிகளுக்கு இல்லாத ஒரு வாய்ப்பு யெகோவாவின் சாட்சிகளுக்கு அளிக்கப்பட்டது; அதாவது, தங்கள் விசுவாசத்தை விட்டுக்கொடுப்பதாக ஒப்புக்கொண்டு ஓர் ஆவணத்தில் கையெழுத்திட்டால் விடுதலை பெற முடிந்தது. ஆனால் யெகோவாவின் சாட்சிகளில் பெரும்பாலோர் அதில் கையெழுத்திடவில்லை என்ற உண்மையே அவர்களுடைய உத்தமத்தன்மைக்கு அத்தாட்சி அளிக்கிறது.
இந்தத் தலைப்பைத் தன்னுடைய ப்ராஜெக்டுக்காக தேர்ந்தெடுத்ததால் பயனடைந்ததாக சையரா சொல்கிறாள். அவளது மதத்தைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள அது உண்மையிலேயே அவளுக்கு உதவியது. “ஜெர்மனியில் யெகோவாவின் சாட்சிகள் அந்தச் சமயத்தில் சிறு தொகுதியாக இருந்தாலும் அவர்களுக்கிருந்த அசைக்க முடியாத விசுவாசம் அந்தத் துன்புறுத்துதலைச் சகிக்க அவர்களுக்கு உதவியது” என்கிறாள் அவள்.
நீங்கள் பள்ளிக்குச் செல்லும் ஒரு யெகோவாவின் சாட்சியா? உங்கள் மத சரித்திரத்தைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்ல உங்களுக்கும் வாய்ப்புகள் இருக்கின்றனவா? (g05 5/8)