அர்மகெதோன்—நீங்கள் பயப்பட வேண்டுமா?
பைபிளின் கருத்து
அர்மகெதோன்—நீங்கள் பயப்பட வேண்டுமா?
“அர்மகெதோன்” என்றால் என்ன? சுருங்கச் சொன்னால், கடவுளுக்கும் இயேசு கிறிஸ்துவை ராஜாவாகக் கொண்ட அவருடைய ராஜ்யத்திற்கும் எதிராக உலக ஆட்சியாளர்கள் கூடிவரும் நிலைமையை அந்த வார்த்தை அர்த்தப்படுத்துகிறது. பைபிளிலுள்ள வெளிப்படுத்துதல் புத்தகத்தில், அப்போஸ்தலன் யோவான் ஒரு தரிசனத்தைப் பார்ப்பதாக விவரிக்கப்படுகிறது; அந்தத் தரிசனத்தில், அர்மகெதோன் என்று அழைக்கப்படும் ஓர் அடையாளப்பூர்வ இடத்தில் கடவுளுக்கு எதிராக ஆட்சியாளர்கள் கூடி வருகிறார்கள்.
“அர்மகெதோன்” என்ற வார்த்தை பைபிளில் ஒரேவொரு முறை மட்டுமே பயன்படுத்தப்பட்டிருந்தாலும் இன்று அவ்வார்த்தை சில மொழிகளில் உருவகமாக பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. அணு ஆயுத அழிவு முதல் கம்ப்யூட்டர் வைரஸ் வரை பெரிதும் சிறிதுமான பேரழிவுகளுக்கு இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலக முடிவென அழைக்கப்படும் காலப்பகுதியை, அதாவது அர்மகெதோனுக்கு முன்னான காலப்பகுதியை, அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதும் விற்பனையில் சக்கைபோடு போடுவதுமான புத்தகங்கள் பல இவ்வார்த்தையைப் பயன்படுத்தி இருக்கின்றன. கடந்த பத்து ஆண்டுகளில், இந்தப் பொருளில் வரிசையாக வெளிவந்த கதை புத்தகங்கள் 6 கோடிக்கும் அதிகமாக விற்பனை ஆகியிருக்கின்றன.
சிலர் அர்மகெதோனை எண்ணி பயப்படுகிறார்கள். பயங்கரவாதிகளும், போர் வெறிபிடித்த நாடுகளும், மனிதனின் கட்டுப்பாட்டை மீறிய பேரழிவுகளும், ஜீவராசிகளே வாழ முடியாதபடி இந்தப் பூமியை நாசமாக்கிவிடும் என நினைக்கிறார்கள். இன்னும் சிலரோ, குறித்த காலத்தில் கடவுள் கோபத்தில் கொதித்தெழுந்து நமது கிரகத்தையும் அதிலுள்ள அனைத்தையும் அழித்துவிடுவார் என எண்ணுகிறார்கள். இவையெல்லாம் உண்மையில் அச்சத்தை உண்டுபண்ணுகின்றன! இருப்பினும், ‘சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் [அர்மகெதோன்] யுத்தத்தை’ எவ்வாறு சரிவர புரிந்துகொள்வது?—வெளிப்படுத்துதல் 16:14, 16.
பூமி அழிக்கப்படுமா?
மனிதர்கள் அனைவரும் அர்மகெதோனில் அழிக்கப்பட மாட்டார்கள். அது நமக்கு எப்படித் தெரியும்? “கர்த்தர் [அதாவது, யெகோவா] தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார்” என பைபிள் நமக்கு உறுதியளிக்கிறது. (2 பேதுரு 2:9) அப்படியென்றால் கடவுள் தமது சர்வ வல்லமையை முழுக்க முழுக்க கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வார் என நாம் உறுதியாக நம்பலாம். கடவுளுடைய பேரரசுரிமையை எதிர்ப்பவர்கள் மட்டுமே அர்மகெதோனில் அவருடைய கோபத்துக்கு ஆளாவார்கள். ஆனால் யாருமே தவறுதலாக கொல்லப்பட மாட்டார்கள்.—சங்கீதம் 2:2, 9; ஆதியாகமம் 18:23, 25.
கடவுள், ‘பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கப்’ போகிறார் என பைபிள் நமக்குச் சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 11:18) அப்படியானால், நம்முடைய கிரகத்தை அழிப்பது யெகோவா தேவனின் நோக்கமல்ல என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் அவருடைய அரசாட்சியை எதிர்க்கும் பொல்லாத மனித சமுதாயத்தை அவர் அழித்துப் போடுவார். இது நோவாவின் நாளில் நடந்த ஜலப்பிரளயத்திற்கு ஒத்ததாக இருக்கும்.—ஆதியாகமம் 6:11-14; 7:1; மத்தேயு 24:37-39.
‘பயங்கரமான நாள்’
வரவிருக்கும் அழிவைப் பற்றிய எண்ணற்ற பைபிள் தீர்க்கதரிசனங்கள் கலக்கத்தை ஏற்படுத்துவது உண்மைதான். உதாரணமாக, ‘யெகோவாவுடைய பெரிதும் பயங்கரமுமான நாளைப்’ பற்றி தீர்க்கதரிசியாகிய யோவேல் சொன்னார். (யோவேல் 2:31) கடவுளுடைய படைக்கலச் சாலையில் உறை மழை, கல்மழை, பூமியதிர்ச்சி, கொள்ளை நோய், வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தும் மழை, அக்கினியும் கந்தகமும் பொழிதல், பயங்கர கலக்கம், மின்னல், சதை அழிந்துவிடும் வாதை போன்றவை உள்ளன. a (யோபு 38:22, 23; எசேக்கியேல் 38:14-23; ஆபகூக் 3:10, 11; சகரியா 14:12, 13) அந்தச் சமயத்தில் இறப்பவர்கள், எருவாகும்படியோ பறவைகளுக்கும் மிருகங்களுக்கும் உணவாகும்படியோ பூமி எங்கும் சிதறிக் கிடப்பார்கள் என்றும் பைபிள் தெள்ளத் தெளிவாக விவரிக்கிறது. (எரேமியா 25:33, 34; எசேக்கியேல் 39:17-20) இந்த யுத்தத்தின்போது கடவுளுடைய பகைவர்களைப் பயம் கவ்விக்கொள்ளும்.—வெளிப்படுத்துதல் 6:16, 17.
அப்படியென்றால், அர்மகெதோனில் நடக்கப்போகிற வியக்க வைக்கும் சம்பவங்களைக் குறித்து, மெய் வணக்கத்தார் பயப்பட வேண்டுமென இது அர்த்தப்படுத்துகிறதா? இல்லவே இல்லை. ஏனெனில், இந்தச் சண்டையில் பூமியிலிருக்கும் கடவுளுடைய ஊழியர்கள் பங்கெடுக்க மாட்டார்கள். சொல்லப்போனால், அவர்கள் யெகோவாவால் பாதுகாக்கப்படுவார்கள். இருப்பினும், கடவுளுடைய வல்லமை கதிகலங்க வைக்கும் விதத்தில் வெளிப்படுவதைக் கண்டு மெய் வணக்கத்தார் பிரமித்துதான் நிற்பார்கள்.—சங்கீதம் 37:34; நீதிமொழிகள் 3:25, 26.
ஆனால் அப்போஸ்தலன் யோவான் பின்வருகிற இந்த உறுதியை நமக்கு அளிக்கும்படி ஏவப்பட்டது குறிப்பிடத்தக்கது: “இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கைக்கொள்ளுகிறவன் பாக்கியவான் [அதாவது, சந்தோஷமுள்ளவன்].” அந்தத் தீர்க்கதரிசன வசனங்களைக் கைக்கொள்வதில், அர்மகெதோன் பற்றிய எச்சரிப்பைக் கைக்கொள்வதும் அடங்கும். (வெளிப்படுத்துதல் 1:3; 22:7) அர்மகெதோன் பற்றி தியானிக்கும் ஒருவர் சந்தோஷமாக இருக்க முடியுமா? அது எப்படி முடியும்?
நடவடிக்கை எடுக்க கடவுள் விடுக்கும் அழைப்பு
கடும் புயலோ சூறாவளியோ வீசப் போகிறதென்றால், மக்களின் உயிரைப் பாதுகாக்க உள்ளூர் அதிகாரிகள் எச்சரிக்கைகளைக் கொடுக்கிறார்கள். போலீஸார் எச்சரிக்கை கருவிகளுடன் அனுப்பி வைக்கப்படலாம் அல்லது எல்லாரும் அந்த எச்சரிக்கையைக் கேட்க வேண்டும் என்பதற்காக அவர்கள் வீடு வீடாக அனுப்பி வைக்கப்படலாம். இதெல்லாம் ஜனங்களைப் பயமுறுத்தும் நோக்கத்தோடு அல்ல, ஆனால் அவர்கள் உயிரைப் பாதுகாத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க உதவும் நோக்கத்தோடுதான் செய்யப்படுகிறது. விவேகிகள் எச்சரிக்கையை மனமார ஏற்கிறார்கள், அந்த எச்சரிக்கைப்படி நடப்போர் அதற்காக பிறகு சந்தோஷப்படுகிறார்கள்.
சீக்கிரத்தில் வரவிருக்கும் “சுழல்காற்று” போன்ற அர்மகெதோனைக் குறித்துக் கடவுள் தரும் எச்சரிக்கை செய்தியும் அதைப் போலவே இருக்கிறது. (நீதிமொழிகள் 10:25) யெகோவா, தம்முடைய யுத்தத்தைப் பற்றிய விவரங்களை பைபிளில் அளித்திருக்கிறார். பயமுறுத்த வேண்டுமென்பது அவருடைய ஆசையல்ல; போதுமானளவு எச்சரிக்கை கொடுக்க வேண்டும் என்பதும், அதன் மூலம் ஜனங்கள் மனந்திருந்தி, அவருக்குச் சேவை செய்ய திடத்தீர்மானம் எடுக்க வேண்டும் என்பதுமே அவருடைய விருப்பமாகும். (செப்பனியா 2:2, 3; 2 பேதுரு 3:9) இத்தகைய நடவடிக்கை எடுப்பவர்கள் தப்பிப்பிழைப்பார்கள். எனவே நெருங்கி வரும் கடவுளுடைய யுத்தத்தை எண்ணி நாம் பயப்படத் தேவையில்லை. அதற்கு மாறாக, ‘யெகோவாவுடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்’ என்ற நம்பிக்கையுடன் எதிர்காலத்தை சந்திக்கலாம்.—யோவேல் 2:32. (g05 7/8)
[அடிக்குறிப்பு]
a பைபிளின் சில பகுதிகள் ‘அடையாளங்களாக,’ அதாவது அடையாள மொழியில் எழுதப்பட்டுள்ளன என்பதைக் கவனத்தில் வைக்க வேண்டும். (வெளிப்படுத்துதல் 1:1, NW) எனவே, இந்தத் தீர்க்கதரிசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இயற்கை சக்திகள் எந்தளவுக்குச் சொல்லர்த்தமாக பயன்படுத்தப்படும் என்பதைக் குறித்து திட்டவட்டமாக நாம் கூற முடியாது.
[பக்கம் 22-ன் படம்]
கடும் புயல் வரவிருக்கும்போது மக்களின் உயிரைக் காக்க உள்ளூர் அதிகாரிகள் எச்சரிக்கை கொடுக்கிறார்கள்
[பக்கம் 23-ன் படம்]
அர்மகெதோனைப் பற்றி கடவுள் தரும் எச்சரிப்புச் செய்தி, உயிரைப் பாதுகாத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க அவர் விடுக்கும் அழைப்பாகும்