நம்பிக்கையில் மகிழுங்கள்
நம்பிக்கையில் மகிழுங்கள்
தீராத புற்றுநோயினால் கவலைக்கிடமாக இருந்தார் ஜோ. அவருடைய மனைவி கிர்ஸ்டனும் நண்பர்கள் சிலரும் அவருடைய படுக்கை அருகில் அமர்ந்துகொண்டு பேசிக்கொண்டிருந்தார்கள். கிர்ஸ்டன் தனது கணவரைப் பார்த்தபோது அவருடைய கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடியது. முதலில், ஜோவுக்கு வலி எடுத்திருக்கும் என்று அவள் நினைத்தாள். ஒருவேளை அவருக்கு வலி எடுத்திருக்கலாம், ஆனால் இந்தத் தடவை வலியினால் அழவில்லை என்று தனது மனைவியிடம் கூறினார்.
“இந்த இக்கட்டான சூழலில், ஜோவைச் சுற்றிலும் அவருடைய நெருங்கிய நண்பர்கள் இருந்தார்கள். அதோடு, அருமையான நம்பிக்கையும் அவருக்கு இருந்தது. அந்த நம்பிக்கை நிச்சயம் நிறைவேறும் என்பதில் முன்பைவிட இப்பொழுது அதிக உறுதியுடன் இருந்தார், அந்த நம்பிக்கையை யாரும் தன்னிடமிருந்து பறித்துக்கொள்ள முடியாது என்பதை அவர் அறிந்திருந்தார். தான் சிந்துவது ஆனந்த கண்ணீர் என்று சொன்னார். அன்று இரவு ஜோ காலமானார்” என்று கிர்ஸ்டன் கூறுகிறாள்.
நோய் தீவிரமாகியிருந்த நிலையில் ஜோவை பலப்படுத்திய அந்த நம்பிக்கை என்ன? பூங்காவனம் போன்ற பரதீஸ் பூமியில் பூரண ஆரோக்கியத்துடன் என்றென்றும் வாழ்வோம் என்ற வாக்குறுதியே. (சங்கீதம் 37:10, 11, 29) வெளிப்படுத்துதல் 21:3, 4 இவ்வாறு கூறுகிறது: “மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, . . . அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் [இன்றைக்கு எதிர்ப்படும் அநேக பிரச்சினைகளும்கூட] ஒழிந்துபோயின.”
இறந்தவர்களுக்கும் நம்பிக்கை
ஜோவின் விஷயத்தில், அவருடைய நம்பிக்கை நிறைவேறுவது என்பது கல்லறையிலிருந்து அவர் எழுந்து வருவதைக் குறிக்கும். சொல்லப்போனால், “பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும்”—கடவுளுடைய நினைவில் இருக்கும் இறந்தோர் அனைவரும்—மரணம் எனும் நித்திரையிலிருந்து எழுந்து வருவார்கள் என்ற இயேசுவின் வாக்குறுதி அவருக்கு ஆறுதல் அளித்தது. (யோவான் 5:28, 29) குடும்ப அங்கத்தினரையோ நெருங்கிய நண்பரையோ மரணத்தில் இழந்ததால் நீங்கள் துக்கமாக இருக்கிறீர்களா? அப்படியானால், உயிர்த்தெழுதல் நம்பிக்கை உங்களுக்குப் புதுத் தெம்பூட்டும். உண்மைதான், அன்பானவர்கள் மரிக்கையில் நமக்கு ஏற்படும் பெரிய இழப்பை இந்த நம்பிக்கை எடுத்துப்போடுவதில்லை. தமது நண்பன் லாசரு மறைந்தபோது இயேசுவே “கண்ணீர்விட்டார்.” ஆனால் நமக்கு இருக்கும் நம்பிக்கை நம்முடைய வேதனையைத் தணிக்கிறது.—யோவான் 11:14, 34, 35; 1 தெசலோனிக்கேயர் 4:13.
“புற்றுநோயுடன் போராடி ஜோ தோற்றபோது, நான்
இனி சந்தோஷமாக இருக்கவே முடியாதென நினைத்தேன். ஜோ இறந்து சில வருஷங்கள் ஆகிவிட்டன. ஆனால் இப்போதும்கூட என்னுடைய வாழ்க்கை முன்னால் இருந்ததுபோல இல்லை. அவருடைய இழப்பை யாராலும் ஈடுகட்ட முடியாது. இருந்தாலும், எனக்கு மீண்டும் நிம்மதியும் திருப்தியும் கிடைத்திருக்கிறது என நான் நிச்சயம் சொல்ல முடியும்.”இந்த உலகில், எப்போதுமே ஆனந்தத்தில் மிதப்போம் என எதிர்பார்க்க முடியாது என்பதை கிர்ஸ்டனுடைய வார்த்தைகள் நமக்கு நினைப்பூட்டுகின்றன. வாழ்க்கையில் மேடுபள்ளங்கள் இருக்கின்றன. சிலசமயம் சோகமாக இருக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன. அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் சந்தோஷமாக இருக்க முடியாது. (பிரசங்கி 3:1, 4; 7:2-4) சிலர் மனச்சோர்வினால் போராடிக் கொண்டிருக்கிறார்கள், அதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். என்றாலும், பைபிள் தரும் வாக்குறுதிகள் ஆறுதலின் ஊற்றாக விளங்குகின்றன, சந்தோஷத்தைக் கெடுத்துப்போடும் இந்தப் படுகுழிகளில் பலவற்றை தவிர்க்க பைபிளின் ஒப்பற்ற ஞானம் நமக்கு உதவுகிறது. “எவர் எனக்குச் செவி கொடுக்கின்றாரோ அவர் தீங்கின்றி வாழ்வார்; தீமை வருகையிலும் அச்சமின்றி அவர் மன அமைதியுடன் இருப்பார்” என கடவுள் சொல்கிறார்.—நீதிமொழிகள் 1:33, பொது மொழிபெயர்ப்பு.
யெகோவா எப்பொழுதும் நமது நலனில் அக்கறையுள்ளவராகவே இருக்கிறார். நாம் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்றே அவர் விரும்புகிறார்—வெளியில் அல்ல, ஆனால் உள்ளுக்குள் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்றே விரும்புகிறார், சில வருடங்களுக்கு அல்ல, ஆனால் என்றென்றும்! ஆகவே, எக்காலத்திற்கும் ஏற்ற இந்த வார்த்தைகளை அவருடைய குமாரன் கூறினார்: “ஆன்மீகத் தேவையைக் குறித்து உணர்வுடையோர் சந்தோஷமுள்ளவர்கள்.” (மத்தேயு 5:3, NW) இந்த வார்த்தைகளைப் பின்பற்றினால் ஞானமுள்ளவர்களாக இருப்போம்.
[பக்கம் 9-ன் பெட்டி/படம்]
மகிழ்ச்சிக்கு உதவும் ஒன்பது அம்சங்கள்
1. வாழ்க்கையில் ஆன்மீக கண்ணோட்டத்தை வளர்த்துக்கொள்வது.—மத்தேயு 5:3.
2. திருப்தியாக இருந்து, ‘பண ஆசையைத்’ தவிர்ப்பது.—1 தீமோத்தேயு 6:6-10.
3. இன்பங்களை நாடுவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காதிருப்பது. — 2 தீமோத்தேயு 3:1, 4.
4. தாராள குணமுடையவர்களாய் இருந்து, பிறருடைய மகிழ்ச்சிக்கு உதவி செய்வது.—அப்போஸ்தலர் 20:35.
5. நன்றியுள்ளவர்களாய் இருப்பது, உங்கள் ஆசீர்வாதத்தை எண்ணிப் பார்ப்பது.—கொலோசெயர் 3:15.
6. மன்னிக்கும் குணமுடையவர்களாய் இருப்பது.—மத்தேயு 6:14.
7. நண்பர்களை ஞானமாய் தேர்ந்தெடுப்பது.—நீதிமொழிகள் 13:20.
8. உங்கள் உடல் ஆரோக்கியத்தைக் கவனித்துக்கொள்வது, கெட்ட பழக்கங்களைத் தவிர்ப்பது.—2 கொரிந்தியர் 7:1.
9. பைபிள் தரும் ‘நம்பிக்கையில் களிகூருவது.’—ரோமர் 12:12.
[பக்கம் 8, 9-ன் படங்கள்]
புதிய உலகில் வாழ்க்கை என்ற பைபிள் தரும் நம்பிக்கை மிகுந்த ஆறுதல் அளிக்கிறது