Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு கட்டுப்பாடு?

எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு கட்டுப்பாடு?

இளைஞர் கேட்கின்றனர் . . .

எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு கட்டுப்பாடு?

“மத்தவங்க எவ்வளவு லேட்டா வீட்டுக்கு வந்தாலும் அப்பா அம்மா கண்டுக்க மாட்டாங்க. ஆனா, இத்தனை மணிக்குள்ள வீட்ல இருக்கனும்னு எனக்கு மட்டும் சட்டம் போடுறாங்க. எனக்கு அப்படியே கோபம் பொத்துகிட்டு வரும்!”​— ஆலன்.

“செல்போன்ல யார்கிட்ட பேசறேன்னு கண்காணிக்கிறதுதான் பெரிய கொடுமை. என்னை இன்னும் சின்ன குழந்தையாட்டம் நடத்தறாங்க!”​— எலிசபெத்.

வீட்டின் கெடுபிடிகளைத் தாங்க முடியவில்லை என நினைக்கிறீர்களா? என்றைக்காவது வீட்டிலிருந்து பூனை போல நைசாக நழுவப் பார்த்திருக்கிறீர்களா? எதையாவது செய்துவிட்டு, அப்பா அம்மா கேட்டால் என்ன சொல்லி மழுப்புவது என யோசித்திருக்கிறீர்களா? உங்களைப் போலத்தான் ஒரு டீனேஜ் பெண்ணும் உணர்ந்திருக்கிறாள். அவள் ஏன் அப்படி நினைக்கிறாள்? தன் பெற்றோர் அளவுக்குமீறி கட்டுப்படுத்துகிறார்கள் என்றும், ‘எனக்கு கொஞ்சம் சுதந்திரம் கொடுத்தால் பரவாயில்லை’ என்றும் சொல்கிறாள்.

நீங்கள் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்பது சம்பந்தமாக உங்கள் பெற்றோரோ கார்டியனோ கட்டுப்பாடுகள் விதிக்கலாம். ஹோம்வொர்க், வீட்டு வேலை எல்லாவற்றையும் ஒழுங்காக செய்ய வேண்டும்; சொன்ன நேரத்திற்கு வீட்டுக்கு வந்துவிட வேண்டும்; போனில் அரட்டை அடிக்கக்கூடாது; டிவி, கம்ப்யூட்டரே கதியென இருக்கக்கூடாது என்றெல்லாம் சொல்லலாம். சில சமயங்களில், ஸ்கூலில் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எப்படிப்பட்ட பிள்ளைகளுடன் பழக வேண்டும் என அவர்களுடைய கெடுபிடிகள் வீட்டுக்கு வெளியிலும் நீளலாம்.

இளைஞர் நிறைய பேர் பெற்றோருடைய சட்டதிட்டங்களை அடிக்கடி மீறிவிடுகிறார்கள். ஓர் ஆய்வுக்காக இளைஞர் பேட்டி காணப்பட்டனர்; அவர்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கினர், வீட்டின் கட்டுப்பாடுகளை மீறியதால் தாங்கள் கண்டிக்கப்பட்டதாக சொன்னார்கள்; இளைஞர் தண்டிக்கப்படுவதற்கு பெரும்பாலும் இதுவே காரணமாக இருந்தது இந்த ஆய்விலிருந்து தெரிய வந்தது.

இருந்தாலும், இளைஞருக்கு சில வரம்புகளை வைக்காவிட்டால், தறிகெட்டு நடப்பார்கள்; அதனால், சில கட்டுப்பாடுகள் தேவைதான் என அவர்களில் பலர் ஒப்புக்கொள்கிறார்கள். வீட்டில் கட்டுப்பாடுகள் அவசியம்தான் என்றால், அவற்றில் சில எரிச்சலூட்டுவதேன்? பெற்றோரின் கெடுபிடிகளால் திக்குமுக்காடுவதாக நீங்கள் உணர்ந்தால், என்ன செய்யலாம்?

“நான் இன்னும் சின்னக் குழந்தை இல்லை”!

“நான் இன்னும் சின்னக் குழந்தை இல்லை, என் சொந்தக் காலில் நிற்பதற்கு எனக்கு இன்னும் கொஞ்சம் சுதந்திரம் தேவை என்பதை என் பெற்றோருக்கு எப்படித்தான் புரிய வைப்பது?” என எமிலி என்ற டீனேஜ் பெண் கேட்கிறாள். நீங்கள் எப்போதாவது இப்படி நினைத்திருக்கிறீர்களா? ஒன்றும் தெரியாத குழந்தையைப் போல உங்களை நடத்துவதாக நினைப்பதால் எமிலியைப் போலவே, கட்டுப்பாடுகளைக் கண்டு நீங்களும் எரிச்சலடையலாம். ஆனால், உங்களுடைய பெற்றோர் நினைப்பதே வேறு. உங்களைப் பாதுகாக்கவும், வளர்ந்தபிறகு பொறுப்புகளை நல்லமுறையில் ஏற்று நடத்துவதற்கு உங்களை தயார்படுத்தவும் இந்தக் கட்டுப்பாடுகள் உதவும் என அவர்கள் நினைக்கிறார்கள்.

உங்களுக்கு ஓரளவு சுதந்திரம் இருந்தாலும்கூட, வயதுக்கு ஏற்ப இன்னும் கொஞ்சம் சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டுமென நீங்கள் உணரலாம். குறிப்பாக, உங்கள் உடன்பிறப்புகளுக்கு அதிக கட்டுப்பாடுகள் இல்லாததைப் பார்க்கும்போது நீங்கள் நொந்து போகலாம். மார்ஸி என்ற இளைஞி சொல்கிறாள்: “எனக்கு 17 வயசு. வீட்டுக்கு சீக்கிரம் வந்திடனும்னு என்னோட அப்பா அம்மா கண்டிஷன் போட்டுட்டாங்க. நான் ஏதாச்சும் தப்பு பண்ணினா, வீட்டிலேயே அடைஞ்சு கிடக்கனும்றதுதான் எனக்கு தண்டனை. ஆனா என் அண்ணன் டீனேஜராக இருந்தபோது அந்தமாதிரி எந்தக் கண்டிஷனும் இல்ல, தண்டனையும் இல்ல.” தன்னுடைய டீனேஜ் காலத்தைப் பற்றி மாத்யூ இவ்வாறு சொல்கிறார்: “என்னோட தங்கைகளும், அத்தைப் பெண்களும் பெரிசா ஏதாவது செஞ்சாகூட யாரும் கண்டுக்க மாட்டாங்க!”

கட்டுப்பாடுகளே இல்லையென்றால்?

வீட்டின் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டு சுதந்திரப் பறவையாக வாழ நீங்கள் ஏங்குவது புரிகிறது. ஆனால், கட்டுப்பாடுகளே இல்லாவிட்டால், உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என நினைக்கிறீர்களா? உங்களுக்கு தெரிந்த சில இளைஞர் இரவில் ரொம்ப லேட்டாக வீட்டுக்கு செல்லலாம், இஷ்டப்படி டிரஸ் போடலாம், தோணும்போதெல்லாம் நண்பர்களோடு சேர்ந்து ஊர் சுற்றலாம். ஒருவேளை, பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என கவனிப்பதற்கு நேரமில்லாத அளவுக்கு அவர்களுடைய பெற்றோர் பிஸியாக இருக்கலாம். எப்படியிருந்தாலும், இது பிள்ளைகளை வளர்ப்பதற்கான சிறந்த முறை இல்லை. (நீதிமொழிகள் 29:15) இதுபோன்ற குடும்பங்களில் வளர்க்கப்படும் பிள்ளைகள் தன்னலம் பிடித்தவர்களாக ஆகிவிடுகிறார்கள். இந்த உலகில் அன்புக்கு பஞ்சமிருப்பதற்கு பெரும்பாலும் இப்படிப்பட்டவர்களே காரணம்.​—2 தீமோத்தேயு 3:1-5.

பிள்ளைகளைக் கண்டிக்காமல் வளர்க்கும் பெற்றோர்களைப் பற்றிய உங்கள் மனநிலை ஒருநாள் மாறலாம். அவ்வளவாக பெற்றோரின் கவனிப்போ கட்டுப்பாடுகளோ இல்லாமல் வளர்க்கப்பட்ட இளம் பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வை கவனியுங்கள்: தங்கள் டீனேஜில் பெற்றோர் கண்டிக்காமல் வளர்த்ததை அவர்களில் ஒருவர்கூட மெச்சிக்கொள்ளவில்லை. மாறாக, அவர்களுடைய பெற்றோருக்கு அவர்கள் மேல் அக்கறை இல்லை, அல்லது பிள்ளைகளை வளர்க்கத் தெரியவில்லை என்பதாகவே அவர்கள் உணர்ந்தார்கள்.

தன்னிஷ்டத்துக்கு விடப்பட்ட பிள்ளைகளைப் பார்த்து பொறாமைப்படாதீர்கள்; அதற்கு பதிலாக, உங்கள்மீது அன்பும் அக்கறையும் இருப்பதால்தான் பெற்றோர் கட்டுப்பாடுகளை வைக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ளுங்கள். நியாயமான வரம்புகளை வைப்பதன்மூலம் அவர்கள் யெகோவா தேவனைப் பின்பற்றுகிறார்கள். அவர் தம் மக்களிடம் பின்வருமாறு சொன்னார்: “நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.”​—சங்கீதம் 32:8.

ஒருவேளை இத்தகைய கட்டுப்பாடுகள் இப்போது உங்களுக்கு பாரமாக தெரியலாம். இருந்தாலும், உங்களுடைய வீட்டுச் சூழலை மகிழ்ச்சிகரமானதாக்க நீங்கள் என்ன செய்யலாம்? பயனுள்ள சில வழிகள் இதோ:

பயனளிக்கும் விதத்தில் பேசுங்கள்

இன்னும் அதிக சுதந்திரம் வேண்டுமென நீங்கள் நினைக்கலாம், அல்லது இருக்கும் சுதந்திரத்தை முழுமையாக அனுபவிக்க வேண்டுமெனவும் விரும்பலாம். அப்படியானால், பெற்றோரிடம் மனந்திறந்து பேசுங்கள். ‘என் அப்பா அம்மாகிட்ட இதப்பத்தி பேச முயற்சி பண்ணிட்டேன். ஒரு பிரயோஜனமும் இல்லை’ என சிலர் சொல்லலாம். நீங்களும் அப்படித்தான் நினைக்கிறீர்களா? அப்படியானால், ‘என் மனதில் உள்ளதை நான் இன்னும் தெளிவாக எப்படிச் சொல்வது’ என உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். மனந்திறந்து பேசுவது உங்களுக்கு இரண்டு விதங்களில் உதவியாக இருக்கும்: (1நீங்கள் கேட்பது உங்களுக்கு கிடைக்கும், இல்லையென்றால் (2அது ஏன் உங்களுக்கு கொடுக்கப்படவில்லை என்பதையாவது நீங்கள் நன்கு புரிந்துகொள்வீர்கள். பெரியவர்களை நடத்துவதுபோல உங்களையும் நடத்த வேண்டுமென நீங்கள் விரும்பினால், இன்னும் சிறந்த முறையில் பேசக் கற்றுக்கொள்வதுதானே நியாயம்!

◼உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முயலுங்கள். பைபிள் இவ்வாறு சொல்கிறது: “மூடன் தன் உள்ளத்தையெல்லாம் வெளிப்படுத்துகிறான்; ஞானியோ அதைப் பின்னுக்கு அடக்கிவைக்கிறான்.” (நீதிமொழிகள் 29:11) மனந்திறந்து பேசுகிறேன் என்ற பேரில் ஒரேடியாக குறைகூறிக் கொண்டிருக்காதீர்கள். இதனால் அவர்களிடம் இன்னும் செமத்தியாகத்தான் வாங்கிக்கட்டிக்கொள்வீர்கள்! அதேபோல, முணுமுணுப்பதை, உம்மென்று இருப்பதை, சிறு பிள்ளைத்தனமாக கத்தி கூச்சலிடுவதைத் தவிருங்கள். உங்கள் பெற்றோர் உங்களிடம் கெடுபிடியாக நடக்கும்போது, கோபத்தைக் காட்டுவதற்காக கதவை ‘படாரென்று’ அறைந்து சாத்தவோ, வேண்டுமென்றே சத்தம் வருகிறமாதிரி நடக்கவோ தோன்றலாம். அதனால் இன்னும் அதிக கட்டுப்பாடுகள்தான் வருமே ஒழிய சுதந்திரம் கிடைக்காது.

◼ பெற்றோரைப் புரிந்துகொள்ள முயலுங்கள். ஒற்றைப் பெற்றோரான தன் அம்மாவுடன் வாழும் கிறிஸ்தவ இளைஞியான டிரேஸி இது தனக்கு உதவியதாக கூறுகிறாள். அவள் இவ்வாறு சொல்கிறாள்: “எதுக்காக அம்மா ‘இதை செய்யாதே அதை செய்யாதேனு’ சொல்றாங்க? நான் நல்லா இருக்கணும்னுதானே இதெல்லாம் செய்றாங்க என்று சொல்லிக்கொள்வேன்.” (நீதிமொழிகள் 3:1, 2) இப்படி அவர்களை புரிந்துகொள்வது, உங்கள் மனதிலுள்ளதை அவர்களுக்கு தெரிவிப்பதற்கும் உதவும். உதாரணமாக, ஒரு பார்ட்டிக்கு உங்களை அனுப்புவதற்கு அவர்களுக்கு மனமில்லை என வைத்துக்கொள்வோம். தர்க்கம் பண்ணுவதற்கு பதிலாக, “அனுபவமுள்ள, நம்பகமான ஒரு நண்பர் வந்தால் என்னைப் போக அனுமதிப்பீங்களா?” என்று கேட்கலாம். சில சமயங்களில் அவர்கள் உங்கள் வேண்டுகோளை நிராகரிக்கலாம்; ஆனால் அவர்களுடைய கவலைகளை நீங்கள் புரிந்து கொண்டால், அவர்களால் ஏற்றுக்கொள்ள முடிகிற வேறொரு வேண்டுகோளை முன்வைக்க உங்களால் முடியும்.

◼ பெற்றோரின் நம்பிக்கையை சம்பாதியுங்கள். பெற்றோரின் நம்பிக்கையைப் பெறுவது வங்கியில் பணத்தை சேமிப்பதைப் போல உள்ளது. எந்தளவுக்கு பணத்தை போட்டிருக்கிறீர்களோ அந்தளவுக்குத்தான் எடுக்கவும் முடியும். அக்கௌண்டில் இருப்பதைவிட அதிக பணத்தை எடுத்தால் அபராதம் கட்ட வேண்டியிருக்கும்; அவ்வாறு திரும்பத் திரும்ப பணத்தை எடுத்தால், உங்கள் அக்கௌண்ட் ஒரேடியாக மூடப்படும். பெற்றோரிடமிருந்து கூடுதலான சலுகையைப் பெறுவதும் வங்கியிலிருந்து பணத்தை எடுப்பதைப் போலத்தான்; இதுவரை பொறுப்பான நபராக நடந்திருந்தால் மட்டுமே அது உங்களுக்கு கிடைக்கும்.

◼ எதிர்பார்ப்புகளில் எதார்த்தமாயிருங்கள். உங்களை நியாயமான அளவுக்கு கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறது. ஆகவேதான், பைபிள் “தந்தையின் கட்டளையைக்” குறித்தும் “தாயின் சட்டத்தைக்” குறித்தும் சொல்கிறது. (நீதிமொழிகள் 6:20, NW) எனினும், வீட்டிலுள்ள கட்டுப்பாடுகள் உங்கள் வாழ்க்கையைப் பாழாக்கிவிடும் என்று நினைத்துவிடாதீர்கள். மாறாக, உங்கள் பெற்றோரின் அதிகாரத்திற்கு அடங்கி நடந்தால், காலப்போக்கில், “நீ நலம் பெறுவாய்” என யெகோவா உறுதியளிக்கிறார்!​—எபேசியர் 6:1-3, பொது மொழிபெயர்ப்பு.

www.watchtower.org/ype என்ற வெப் சைட்டில் “இளைஞர் கேட்கின்றனர். . .” தொடரின் கூடுதலான கட்டுரைகளைப் பார்க்க முடியும்.

சிந்திப்பதற்கு

◼ எந்தச் சட்டத்திற்கு கீழ்ப்படிவது உங்களுக்கு அதிக கஷ்டமாக இருக்கிறது?

◼ பெற்றோரின் கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொள்ள இந்தக் கட்டுரையில் உள்ள எந்தக் குறிப்புகள் உங்களுக்கு உதவும்?

◼ உங்கள் பெற்றோரின் நம்பிக்கையை அதிகமாகப் பெற நீங்கள் என்ன செய்யலாம்?

[பக்கம் 11-ன் பெட்டி/படங்கள்]

கட்டுப்பாட்டை மீறிவிட்டால் . . .

இந்தச் சூழ்நிலை உங்களுக்கு பரிச்சயமானதாக இருக்கலாம்: சொன்ன நேரத்தைவிட லேட்டாக வீட்டுக்கு வந்திருக்கிறீர்கள், வீட்டு வேலைகளைச் செய்யாமல் இருந்திருக்கிறீர்கள், போனில் வளவள என்று ரொம்ப நேரத்திற்கு பேசியிருக்கிறீர்கள். இப்போது, உங்கள் பெற்றோருக்கு பதில் சொல்லவேண்டிய கட்டாயத்தில் நிற்கிறீர்கள்! இந்த மோசமான சூழ்நிலை படுமோசமாகாமல் இருக்க நீங்கள் என்ன செய்யலாம்?

உண்மையைப் பேசுங்கள். பெற்றோரிடம் பொய் சொல்வதால் ஒரு பிரயோஜனமும் இருக்காது. அதனால், சுற்றி வளைக்காமல் நடந்ததை நடந்தபடியே தெளிவாக சொல்லிவிடுங்கள். (நீதிமொழிகள் 28:13) கதை அளந்தீர்களென்றால், உங்கள்மீது அவர்களுக்கிருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் போய்விடும். நடந்ததை நியாயப்படுத்தவோ ‘பெரிதாக என்ன நடந்துவிட்டது’ என்பதைப் போல பேசவோ முயலாதீர்கள். “கனிவான மறுமொழி கடுஞ்சினத்தையும் ஆற்றிவிடும்” என்பதை எப்போதும் நினைவில் வையுங்கள்.​நீதிமொழிகள் 15:1, பொ.மொ.

மன்னிப்பு கேளுங்கள். உங்களால் அவர்களுக்கு ஏற்படுகிற அதிகமான கவலை, ஏமாற்றம், வேலைப்பளு ஆகியவற்றுக்காக மன்னிப்பு கேட்பதே சரியானது. இதனால், ஒருவேளை தண்டனையும்கூட குறைக்கப்படலாம். (1 சாமுவேல் 25:24) ஆனால், நீங்கள் மன்னிப்பு கேட்கையில் அது மனப்பூர்வமானதாக இருக்க வேண்டும்.

பின்விளைவுகளை ஏற்றுக்கொள்ளுங்கள். அநியாயமாக தண்டனை கொடுக்கப்பட்டதாக நினைத்தால், தகராறு பண்ணவேண்டுமென்றுதான் முதலில் தோன்றும். (நீதிமொழிகள் 20:3) ஆனாலும், உங்களுடைய நடத்தைக்கு பொறுப்பேற்பது முதிர்ச்சியைக் காட்டுகிறது. (கலாத்தியர் 6:7) பெற்றோரின் நம்பிக்கையை மீண்டும் பெற உழைப்பதே சிறந்தது.

[பக்கம் 12-ன் படம்]

உங்கள் பெற்றோரின் கவலைகளைப் புரிந்துகொள்ள முயலுங்கள்