Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளை நம்புவதற்கான காரணங்கள்

2. நேர்மை

2. நேர்மை

நம்பிக்கைக்கு அடிப்படையாக விளங்குவது நேர்மை. நேர்மையானவராக அறியப்படுகிற ஒருவரை நீங்கள் நம்புவீர்கள்; ஆனால், அவர் ஒருமுறை பொய் சொன்னால் போதும், பிறகு அவரை நம்பவே மாட்டீர்கள்.

பைபிளை எழுதியவர்கள் நேர்மையுள்ளம் படைத்தவர்கள்; அவர்கள் ஒளிவுமறைவின்றி அதை எழுதியிருக்கிறார்கள். அவர்கள் நேர்மையானவர்கள் என்பதுதானே அவர்கள் எழுதியவை எல்லாம் சத்தியம் என்பதைத் தெள்ளத்தெளிவாகக் காட்டுகிறது.

தவறுகளும் குறைகளும்.

பைபிள் எழுத்தாளர்கள் தங்களுடைய தவறுகளையும் குறைகளையும் வெளிப்படையாக ஒத்துக்கொண்டார்கள். மோசே செய்த ஒரு தவறு அவருக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது; அதை அவர் வெளிப்படையாகக் குறிப்பிட்டார். (எண்ணாகமம் 20:7-13) கெட்ட ஜனங்கள் செழிப்பாக வாழ்வதைப் பார்த்து சில காலத்திற்கு தான் பொறாமைப்பட்டதாக ஆசாப் விளக்கினார். (சங்கீதம் 73:1-14) யோனா தான் கீழ்ப்படியாமல் போனதையும், மனந்திரும்பிய பாவிகளிடம் கடவுள் கருணை காட்டியதைக் கண்டு முதலில் குறைப்பட்டுக் கொண்டதையும் தெரிவித்தார். (யோனா 1:1-3; 3:10; 4:1-3) இயேசு கைதுசெய்யப்பட்ட அன்றிரவு, தான் அவரைவிட்டு ஓடிப்போனதை மத்தேயு வெளிப்படையாய் ஒப்புக்கொண்டார்.​—மத்தேயு 26:56.

எபிரெய வேதாகமத்தின் எழுத்தாளர்கள், தங்களுடைய சொந்த ஜனமாகிய இஸ்ரவேலர் திரும்பத் திரும்ப முறுமுறுத்ததையும் கலகம் செய்ததையும் தெரிவித்தார்கள். (2 நாளாகமம் 36:15, 16) அவர்கள் தங்களுடைய தேசத்தை ஆண்ட ஆட்சியாளர்களின் குறைகளைக்கூட மூடிமறைக்காமல் தெரிவித்தார்கள். (எசேக்கியேல் 34:1-10) எழுத்தாளர்களின் ஒளிவுமறைவற்றத்தன்மையை அப்போஸ்தலர்கள் எழுதிய கடிதங்களிலும் காண முடிகிறது. பொ.ச. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த சில கிறிஸ்தவர்களும் பொறுப்புள்ள ஸ்தானத்திலிருந்த சிலரும் செய்த பெரும் தவறுகளையும் சில சபைகளிலிருந்த பெரிய பிரச்சினைகளையும் அவர்கள் குறிப்பிட்டார்கள்.​—1 கொரிந்தியர் 1:10-13; 2 தீமோத்தேயு 2:16-18; 4:10.

யோனாவைப் போலவே பைபிள் எழுத்தாளர்கள் தங்களுடைய சொந்த குறைகளை எழுதியிருக்கிறார்கள்

உண்மையை வெளிப்படுத்துகிறது.

சிலர் மற்றவர்களிடம் சொல்வதற்குச் சங்கடமாக நினைக்கிற சில விஷயங்களைக்கூட பைபிள் எழுத்தாளர்கள் பூசி மெழுகாமல் தெரிவித்திருக்கிறார்கள். அன்றிருந்த மக்கள் தங்களை மெச்சுவதற்குப் பதிலாக முட்டாள்களாகவும் இழிவானவர்களாகவும் கருதினார்கள் என்பதை முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்கள். (1 கொரிந்தியர் 1:26-29) இயேசுவின் அப்போஸ்தலர்கள் ‘படிப்பறியாதவர்களாயும் பேதைகளாயும்’ கருதப்பட்டார்கள் என பைபிள் எழுத்தாளர்கள் குறிப்பிட்டார்கள்.​—அப்போஸ்தலர் 4:13.

சுவிசேஷ எழுத்தாளர்கள், இயேசுவின்மீது ஈர்ப்பை ஏற்படுத்துவதற்காக உண்மைகளைத் திரித்துக் கூறவில்லை. மாறாக, அவர் அன்றாடம் பாடுபட்டு உழைக்கிற ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தார் என்றும் அவருடைய காலத்திலிருந்த புகழ்பெற்ற பள்ளிகளில் அவர் படிக்கவில்லை என்றும் பெரும்பாலோர் அவருடைய செய்திக்குக் காதுகொடுக்கவில்லை என்றும் அவர்கள் ஒளிவுமறைவின்றி குறிப்பிட்டிருக்கிறார்கள்.​—மத்தேயு 27:25; லூக்கா 2:4-7; யோவான் 7:15.

தெளிவாகவே, நேர்மையுள்ளம் படைத்த எழுத்தாளர்களின் கைவண்ணத்தில் உருவானதே பைபிள் என்பதற்கு அதுவே போதுமான அத்தாட்சிகளைத் தருகிறது. பைபிள் எழுத்தாளர்களின் நேர்மை பைபிள்மீது உங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகிறதா?