உலகை கவனித்தல்
உலகை கவனித்தல்
◼ “பிரிட்டனில் வசிக்கும் சராசரி ஆறு வயது குழந்தை டிவி பார்ப்பதிலேயே ஒரு முழு வருடத்தை கழித்திருக்கும். மூன்று வயது பிள்ளைகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவர்களின் படுக்கை அறையில் டிவி இருக்கிறது.”—தி இன்டிப்பென்டன்ட், பிரிட்டன். (g 1/08)
◼ சீனாவில் 16 வயதைத் தாண்டிய சிலரை வைத்து நடத்தப்பட்ட ஒரு சுற்றாய்வில் 31.4 சதவீதத்தினர் தங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருப்பதாக அறிக்கை செய்திருக்கிறார்கள். முழு நாட்டையும் இதன்படி கணக்கிட்டால் “கிட்டத்தட்ட 30 கோடி பேருக்கு கடவுள் நம்பிக்கை இருப்பதாகத் தெரிகிறது . . . ஆனால், 10 கோடி பேருக்குத்தான் கடவுள் நம்பிக்கை இருப்பதாக அதிகாரப்பூர்வ கணக்குகள் தெரிவிக்கின்றன.”—சைனா டெய்லி, சீனா. (g 1/08)
நன்மை என்ற பெயரில் தீமை
சில வருடங்களுக்கு முன், டச்சு அரசியல்வாதிகளும் சுற்றுச்சூழல் ஆய்வாளர்களும், தட்டுப்பாடின்றி சதா கிடைக்கக்கூடிய ஒரு எரிபொருளைக் கண்டுபிடித்துவிட்டதாக நினைத்தார்கள். அதாவது, இயற்கை எரிபொருளை வைத்து முக்கியமாக, பாமாயிலை வைத்து ஜெனரேட்டர்களை இயக்கலாம் என்று அவர்கள் நினைத்தார்கள், ஆனால், அவர்களுடைய நம்பிக்கை கனவுகள் எல்லாம் “சுற்றுச்சூழலின் சீரழிவுக்கு வழிவகுத்தது” என்கிறது த நியு யார்க் டைம்ஸ். “ஐரோப்பாவில் பாமாயிலின் கிராக்கி கிடுகிடுவென பெருகியதால் தென்கிழக்கு ஆசியாவிலுள்ள மழைக்காட்டின் பெரும்பாலான பகுதி வெட்டி அழிக்கப்பட்டது, அதோடு இரசாயன உரங்களும் அளவுக்கதிகமாகப் பயன்படுத்தப்பட்டன.” எண்ணெய் பனைமர தோப்புகளை உருவாக்குவதற்காக மண்ணில் நிலக்கரியாகப் படிந்திருக்கும் மக்கிப்போன இலை தழைகள் உலரவைக்கப்பட்டு, பின்னர் எரிக்கப்பட்டன. இப்படி எரிக்கையில் “அதிகளவில்” வெளியேறிய கார்பன் வாயுக்கள் காற்றுமண்டலத்தைச் சென்றடைந்தன. இதன் விளைவாக “கார்பன் வாயுவை வெளியேற்றும் நாடுகளிலேயே” இந்தோனேஷியா இப்போது “மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது; இந்த வாயுதான் புவி வெப்பமடைந்து வருவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்” என்று டைம்ஸ் பத்திரிகை சொல்கிறது. (g 1/08)
“அழிவுநாள் கடிகாரம்” முன்னால் நகர்கிறது
புல்லட்டின் ஆஃப் அட்டாமிக் சயின்டிஸ்ட்களால் (BAS) உருவாக்கப்பட்ட இந்த அழிவுநாள் கடிகாரம், மனிதகுலம் அணு ஆயுதப் பேரழிவுக்கு எவ்வளவு அருகில் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. இதன் முள் இரண்டு நிமிடம் முன்னுக்கு தள்ளிவைக்கப்பட்டது. அதாவது நள்ளிரவைத் தொட இன்னும் ஐந்து நிமிடங்களே இருக்கின்றன. நள்ளிரவு என்பது “அடையாள அர்த்தத்தில் இந்த நாகரிகத்தின் முடிவை” குறிக்கிறது. இந்த கடிகாரத்தின் 60 ஆண்டு சரித்திரத்தில் 18 முறைதான் இது நகர்த்தி வைக்கப்பட்டுள்ளது. நியு யார்கில் இருந்த உலக வர்த்தக மையம் தாக்கப்பட்ட பிறகு பிப்ரவரி 2002-ல் இது கடைசியாக நகர்த்தி வைக்கப்பட்டது. ஏற்கெனவே அணு ஆயுதங்கள் குவிந்திருக்க, நாளுக்கு நாள் இன்னும் புதுப்புது ஆயுதங்களும் கண்டுபிடிக்கப்படுகின்றன; அதோடு அணுசக்தி பொருள்களையும் பத்திரமாக வைக்க முடிவதில்லை. இவை, “பூமியில் மிக பயங்கரமான பேரழிவை உண்டுபண்ணும் தொழில்நுட்பத்தால் எழும் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாததற்கான அறிகுறிகளாக இருக்கின்றன” என்று BAS சொல்கிறது. “சீதோஷ்ண மாற்றங்களால் வரும் ஆபத்துகள், கிட்டத்தட்ட அணு ஆயுதங்களால் வரும் ஆபத்துகளின் அளவுக்கு அச்சுறுத்தலாகி வருவதாக” அது மேலும் சொல்கிறது. (g 1/08)
கர்ப்பகாலத்தில் கவலைப்பட்டால்
கர்ப்பிணி பெண்கள், தங்கள் துணையிடம் அடி உதைகளை வாங்குவதாலும் அவர்களுக்கிடையே எழும் வாக்குவாதங்கள் காரணமாகவும் அனுபவிக்கும் மனவேதனைகள், பிறக்காத குழந்தையின் மனவளர்ச்சியை பெருமளவிற்கு பாதிக்கிறது என்று சமீபத்திய ஆராய்ச்சி தெரிவிக்கிறது. லண்டனிலுள்ள இம்பீரியல் கல்லூரி பேராசிரியரான விவேட் க்ளாவர் இவ்வாறு சொல்கிறார்: “கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண்ணின் துணை [அவளுடைய] உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ளாமல் கொடூரமாக நடந்துகொள்பவராக இருந்தால் அது குழந்தையின் எதிர்கால வளர்ச்சியை பெருமளவிற்குப் பாதிக்கும் என்று நாங்கள் கண்டுபிடித்திருக்கிறோம். இதில் தந்தை பெரும் பங்கு வகிக்கிறார்.” தாய் தந்தை மத்தியில் உள்ள உறவு, “தாயின் உடலில் ஹார்மோன் சுரப்பதிலும் இரசாயன இயக்கத்திலும் உள்ள சமநிலையைப் பாதிக்கும். இது குழந்தையின் மூளை வளர்ச்சியைப் பாதிக்கிறது” என்கிறார் அவர். (g 1/08)
அத்துப்படியான சாலையும் ஆபத்தே
ஒரே சாலையில் தினமும் வாடிக்கையாக சென்றுகொண்டிருப்பவர்கள், வாகனங்களை ஓட்டும்போது பெரும்பாலும் எதையோ யோசித்துக்கொண்டே ஓட்டுகிறார்கள் என்கிறார் ஜெர்மனியில் டூயிஸ்பர்க்-எஸ்ஸென் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த போக்குவரத்து ஆய்வாளர் மைக்காயெல் ஷரேக்கன்பெர்க். நன்கு பழக்கமான சாலையில் செல்லும்போது ஓட்டுனர்கள் போக்குவரத்தில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக மற்ற விஷயங்களில் மூழ்கிப்போய்விடுகிறார்கள். இதன் விளைவாக, வரப்போகும் ஆபத்தை சுதாரித்துக்கொள்வதற்கு அதிக நேரம் எடுக்கிறது. எனவே, வாடிக்கையாக செல்லும் சாலையிலும் முழு கவனத்தையும் செலுத்தவேண்டும் என்று ஓட்டுனர்கள் அடிக்கடி தங்களைத் தாங்களே நினைவுபடுத்திக்கொண்டு, ஓட்டுகையில் கவனம் சிதறாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும் என ஷரேக்கன்பெர்க் அறிவுறுத்துகிறார். (g 1/08)