Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பூமியின் எதிர்காலம்—யாருடைய கையில்?

பூமியின் எதிர்காலம்—யாருடைய கையில்?

பூமியின் எதிர்காலம்​—⁠யாருடைய கையில்?

“புவிச் சூடடைதலே மனிதன் எதிர்ப்படும் மாபெரும் பிரச்சினை” என்று நேஷனல் ஜியாகிரஃபிக் அக்டோபர் 2007 பதிப்பு அடித்துக் கூறியது. இந்தப் பிரச்சினையை நாம் வெற்றிகரமாகத் தீர்க்க வேண்டுமென்றால், “வேகமாகவும் உறுதியாகவும் முதிர்ச்சியுடனும் செயல்பட வேண்டும். ஆனால், இதுவரை மனிதன் இப்படிச் செயல்பட்டதாகச் சரித்திரமே இல்லை.”

வருங்காலத்திலாவது மனிதன் இப்படிச் செயல்படுவானா? ஆனால், இதற்கு பல காரணிகள் தடங்களாக இருக்கின்றன: அக்கறையின்மை, பேராசை, அறியாமை, சுயநலம், வளர்ந்துவரும் நாடுகளில் செல்வந்தராகும் வெறி. அதோடு, ஆற்றலைச் சிக்கனமாகப் பயன்படுத்தாமல் லட்சக்கணக்கானோர் சுகபோகமாக வாழ்கிறார்கள்.

தார்மீக, சமூக மற்றும் அரசாங்க பிரச்சினைகளை நம்மால் தீர்க்க முடியாது என்பதை பூர்வகால தீர்க்கதரிசி எதார்த்தமாகச் சொல்கிறார். “மனிதர் செல்ல வேண்டிய வழி அவர்கள் கையில் இல்லை; நடப்பவன் காலடிப் போக்கும் அவர்களின் அதிகாரத்தில் இல்லை” என்று அவர் எழுதினார். (எரேமியா 10:23, பொது மொழிபெயர்ப்பு) இந்த வார்த்தைகள் நூற்றுக்கு நூறு உண்மையென மனிதனின் சோக சரித்திரம் படம்பிடித்து காட்டுகிறது. இன்று விஞ்ஞானத்திலும் தொழில்நுட்பத்திலும் நாம் வியத்தகு சாதனைகளைப் படைத்திருக்கிற போதிலும் முன்னொருபோதும் கற்பனை செய்து பார்த்திராத ஆபத்துகளை எதிர்ப்படுகிறோம். ஆகையால், நாளைய நாள் நல்ல நாளாக விடியுமென நாம் எப்படி நம்பிக்கையோடு இருக்க முடியும்?

உண்மைதான், சீதோஷ்ண மாற்றத்தையும் மனிதனின் தீய செயல்களையும் கட்டுப்படுத்துவதற்கு மனிதன் பல பேச்சுவார்தைகளை நடத்திவந்திருக்கிறான். ஆனால், எதையும் அவன் செயல்படுத்தியதாகத் தெரியவில்லை. உதாரணமாக, 2007-⁠ல் முதல் முறையாக வடமேற்கு ஜலசந்தியில் கப்பல் பயணம் ஆரம்பிக்கப்பட்டபோது தேசங்கள் எப்படி நடந்துகொண்டன? “கண்டத் திட்டுகளில் நிறைய எண்ணெய்யையும் வாயுவையும் தோண்டியெடுப்பதற்காக கண்ணியமற்ற முறையில் அடித்துப் பிடித்துக்கொண்டு அதை ஆக்கிரமித்ததாக” நியூ ஸையன்டிஸ்ட் பத்திரிகையின் தலையங்கம் பதிலளிக்கிறது.

மனிதர் ‘பூமியை நாசமாக்குவார்கள்’ என்று சுமார் 2000 வருடங்களுக்கு முன்பு பைபிள் துல்லியமாக முன்னறிவித்தபடியே இப்போது நடந்து வருகிறது. (வெளிப்படுத்துதல் 11:18, NW) இலட்சியங்களை எட்டுவதற்கும் குடிமக்களை அடிபணிய செய்வதற்கும் ஞானமும் வல்லமையும் உள்ள ஒரு தலைவர் இந்த உலகத்திற்குத் தேவை என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்தத் தகுதியை யார் பூர்த்தி செய்வார்? நேர்மையும் திறமையும் கொண்ட அரசியல்வாதியா அல்லது விஞ்ஞானியா? “ஆட்சித் தலைவர்களை நம்பாதீர்கள்; உன்னை மீட்க இயலாத மானிட மக்களை நம்ப வேண்டாம்” என்று பைபிள் சொல்கிறது.​—சங்கீதம் (திருப்பாடல்கள்) 146:3, பொ.மொ.

பூமியின் எதிர்காலம்​—⁠நம்பகமானவருடைய கையில்

ஒரேவொரு தலைவரால் மட்டுமே உலகம் எதிர்ப்படும் பிரச்சினைகளை வெற்றிகரமாய் தீர்க்க முடியும். அவரைக் குறித்து பைபிள் இவ்வாறு சொல்கிறது: யெகோவா தேவனின் “ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்; ஞானம் மெய்யுணர்வு, அறிவுரைத் திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப் பற்றிய அச்ச உணர்வு​—⁠இவற்றை அந்த ஆவி அவருக்கு அருளும் . . . நேர்மையோடு ஏழைகளுக்கு நீதி வழங்குவார்; . . . உதட்டில் எழும் மூச்சினால் தீயோரை அழிப்பார்.”​—ஏசாயா 11:2–5, பொ.மொ.

அவர் யார்? நமக்காக தமது உயிரையே அன்புடன் கொடுத்த இயேசு கிறிஸ்துவைத் தவிர வேறு யாருமில்லை. (யோவான் 3:16) இப்போது பரலோகத்தில் இருக்கும் இயேசுவுக்கு, பூமியை ஆட்சி செய்வதற்கான அதிகாரத்தையும் வல்லமையையும் கடவுள் அளித்திருக்கிறார்.​—தானியேல் 7:13, 14; வெளிப்படுத்துதல் 11:⁠15.

கடவுளுடைய படைப்பைப் பற்றி முற்றும் முழுமையாக அறிந்திருப்பதாலும் பூமியை ஆளுவதற்கு அவரே தகுதியானவர் என்று சொல்லலாம். பார்க்கப்போனால், யுகா யுகங்களுக்கு முன் கடவுள் இந்த அண்டத்தைப் படைத்த சமயத்தில் இயேசு அவர் பக்கத்தில் ‘திறமையுள்ள வேலைக்காரராக’ பணிபுரிந்தார். (நீதிமொழிகள் 8:22–31, ஈஸி டு ரீட் வர்ஷன்) எனவே, இப்படிக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: இந்தப் பூமியையும் அதிலுள்ள எல்லா ஜீவன்களையும் படைப்பதற்கு உதவிய இயேசுவால் இந்தப் பூமிக்கு மனிதன் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளை சரிப்படுத்த முடியாதா?

சரி, எப்படிப்பட்டவர்கள் அவருடைய குடிமக்களாய் இருப்பார்கள்? உண்மைக் கடவுளாகிய யெகோவாவை அறிந்து, ஆட்சியாளரான இயேசு கிறிஸ்துவுக்கு அடிபணிந்து நடக்கிற சாந்தமும் நீதியுமுள்ள மக்களே. (சங்கீதம் 37:11, 29; 2 தெசலோனிக்கேயர் 1:7, 8) பூஞ்சோலையாக மாறப்போகும் இந்தப் பூமியை அவர்கள் ‘சொந்தமாக்கிக்கொள்வார்கள்’ என இயேசு கூறினார்.​—மத்தேயு 5:5; ஏசாயா 11:6–9; லூக்கா 23:43; NW.

பைபிள் வாக்குறுதி அளித்திருக்கும் இந்த ஆசீர்வாதங்களை அனுபவிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்? இதற்கு இயேசுவே பதிலளிக்கிறார்: “ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்.”​—யோவான் 17:⁠3.

ஆம், நம்முடைய பூமி கோளம் ஆபத்தில் இருப்பதுபோல் தோன்றலாம், ஆனால் அதுவே என்றென்றும் மனிதகுலத்தின் வீடாக இருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. ஆபத்து இந்தப் பூமிக்கு அல்ல, கடவுளுடைய படைப்பைச் சின்னாபின்னமாக்கி, இயேசு கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிய மறுக்கிற ஆட்களுக்கே. எனவே, முடிவில்லா வாழ்க்கைக்கு வழிவகுக்கும் அறிவைப் பெறும்படி யெகோவாவின் சாட்சிகள் உங்களை அழைக்கிறார்கள். (g 8/08)

[பக்கம் 8-ன் பெட்டி]

விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்டது

ஆபத்துகளை நன்கு அறிந்திருக்கிற போதிலும், கோடிக்கணக்கானோர் தங்களுடைய மனதையும் உடலையும் பாதிக்கிற போதை வஸ்துக்களை இன்பத்திற்காகப் பயன்படுத்துகிறார்கள். மதுபான துஷ்பிரயோகம் செய்கிறார்கள், புகைபிடிக்கிறார்கள். உயிரை கடவுள் தந்த பரிசாக அவர்கள் கருதுவதில்லை. (சங்கீதம் 36:9; 2 கொரிந்தியர் 7:⁠1) கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், பூமியைக் குறித்ததிலும் அவர்களுக்கு இப்படிப்பட்ட மனப்பான்மைதான் இருக்கிறது, அதனால்தான் சுற்றுச்சூழல் சீர்கெட்டு வருகிறது.

அப்படியானால், இதற்கு என்னதான் தீர்வு? விஞ்ஞானத்திலும் உலகக் கல்வியிலும் இதற்குத் தீர்வு காண முடியுமா? இல்லவே இல்லை. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு ஆன்மீகத்தில்தான் இருக்கிறது. இந்த உண்மையை பைபிள் ஒத்துக்கொள்கிறது. ஆகவேதான், இந்தப் பூமிக்கு யாரும் ‘எந்தத் தீங்கும் எந்தக் கேடும் செய்யாத’ ஒரு காலம் வரும்; ‘சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறது போல், பூமி யெகோவாவை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்’ என பைபிள் வாக்குறுதி அளிக்கிறது.​—⁠ஏசாயா 11:9, NW

[பக்கம் 8, 9-ன் படம்]

கிறிஸ்துவின் ஆட்சியில், நீதியான மக்கள் இந்தப் பூமியை பூஞ்சோலையாக மாற்றுவார்கள்