Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இளைஞர் கேட்கின்றனர்

நான் எப்படி மனம்விட்டு ஜெபிக்கலாம்?

நான் எப்படி மனம்விட்டு ஜெபிக்கலாம்?

“ஸ்கூல்ல டென்ஷன், ஆபிஸ்ல டென்ஷன், நண்பர்கள் தொல்லை, வீட்டில பிரச்சினை என்று ஆயிரத்தெட்டு பிரச்சினைங்க இருக்கிறப்போ, முக்கியமா நினைக்க வேண்டிய கடவுளையே மறந்திடறாங்க.”​—⁠ஃபாவியோலா, 15, அமெரிக்கா.

“இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்.” (1 தெசலோனிக்கேயர் 5:17) “ஜெபத்தில் உறுதியாயிருங்கள்.” (ரோமர் 12:​12, NW) “உங்கள் விண்ணப்பங்களை . . . தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.” (பிலிப்பியர் 4:6) நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருந்தால் இந்த வசனங்களெல்லாம் உங்களுக்குத் தண்ணீர்பட்ட பாடாக இருக்கலாம். ஜெபம் என்பது அற்புதமான ஒருவகை பேச்சுத்தொடர்பு என்பதையும் நீங்கள் அறிந்திருக்கலாம். இதை ஒரு கணம் சிந்தித்துப்பாருங்கள்: பகலோ இரவோ, எந்த நேரத்திலும் சர்வ வல்ல கடவுளிடம் உங்களால் பேச முடியும்! ‘அவர் நமக்குச் செவிகொடுக்கிறார்’ என்றும் பைபிள் நமக்கு உறுதியளிக்கிறது. *1 யோவான் 5:⁠14.

இருந்தாலும், மேலே குறிப்பிடப்பட்ட இளைஞியைப் போல, ஜெபிப்பதென்றாலே உங்களுக்கு மகா கஷ்டமாகத் தோன்றலாம். அப்படியானால் நீங்கள் என்ன செய்யலாம்? (1) பிரச்சினையைக் கண்டுபிடியுங்கள்; (2) ஜெபம் செய்வதைக் குறித்து ஓர் இலக்கு வையுங்கள், (3) உங்கள் இலக்கை எட்டுவதற்கு “தடையாக இருக்கும் கல்லை” தகர்த்தெறியுங்கள். இதைச் செய்ய இந்தக் கட்டுரை உங்களுக்கு உதவும்.

முதலாவதாக, பிரச்சினை என்னவென்று கண்டுபிடியுங்கள். ஜெபம் செய்யும் விஷயத்தில் குறிப்பாக எந்த அம்சம் உங்களுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது?

அடுத்து, ஓர் இலக்கு வையுங்கள். நீங்கள் அடைய விரும்பும் இலக்கை ‘டிக்’ செய்யுங்கள், வேறு ஏதாவது இலக்கு இருந்தால் அதை “மற்றவை”யில் குறிப்பிடுங்கள்.

  • ❑ அடிக்கடி ஜெபம் செய்ய வேண்டும்.

  • ❑ எப்போதும் ஒரே மாதிரி ஜெபம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

  • ❑ மனம்விட்டு ஜெபம் செய்ய வேண்டும்.

  • ❑ மற்றவை .....

“தடைக்கல்லை” நீக்குதல்

ஜெபம் என்பது எந்நேரம் வேண்டுமானாலும் நீங்கள் திறக்க முடிகிற கதவைப் போல் இருக்கிறது. ஆனால், அநேக இளைஞர் அரிதாகவே அந்தக் கதவை திறப்பதாகச் சொல்கிறார்கள். நீங்களும் அப்படித்தான் என்றால், மனம் தளர்ந்துவிடாதீர்கள்! இப்போது, பிரச்சினை என்ன என்பதைக் கண்டுபிடித்துவிட்டீர்கள்; ஓர் இலக்கையும் வைத்துவிட்டீர்கள். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம், ஜெபம் செய்ய தடையாய் இருக்கும் கற்களைத் தகர்ப்பதற்கு வழி கண்டுபிடிப்பதே. இப்போது, உங்களுக்கு முன்னால் இருக்கும் சில தடைக்கற்களையும் அவற்றை தகர்ப்பதற்குச் சில வழிகளையும் சிந்திப்போம்.

தடைக்கல்: அசட்டையாக இருத்தல்.

“எனக்குத் தலைக்குமேல் வேலை இருக்கிறதினால, ஜெபம் செய்வதை அப்படியே தள்ளிப்போட்டு விடுகிறேன்.”​—⁠ப்ரீதி, 20, பிரிட்டன்.

தகர்க்க வழி: “நீங்கள் ஞானமற்றவர்களாக நடக்காமல் ஞானமுள்ளவர்களாக நடப்பதற்கு மிகுந்த கவனம் செலுத்துங்கள்; பொன்னான நேரத்தை நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்; ஏனென்றால், நாட்கள் பொல்லாதவையாக இருக்கின்றன.”​—எபேசியர் 5:​15, 16, NW.

ஆலோசனை: ஒவ்வொரு நாளும் ஜெபம் செய்வதற்கு எது ஏற்ற வேளை என்பதை முன்கூட்டியே யோசித்து வையுங்கள். ஒரு அப்பாயின்ட்மென்ட்டை குறித்து வைத்துக்கொள்வது போல் இதையும் ஒரு பேப்பரில் குறித்து வைத்துக்கொள்ளலாம். “ஜெபம் செய்வதற்கென்று ஒரு நேரத்தை ஒதுக்கி வைக்கலைன்னா வேறெதாவது வேலையில மூழ்கிடுவேன்” என்கிறாள் 18 வயது ஜப்பான் வாசி, யோஷிகோ.

தடைக்கல்: கவனச்சிதறல்.

“என் மனச ஒருமுகப்படுத்தவே முடியறதில்ல. ஜெபத்தில நான் ஒன்னு சொல்லிட்டிருப்பேன், என் மனசு வேறெங்கேயோ திரிஞ்சிட்டிருக்கும்.”​—⁠பாமெலா, 17, மெக்சிகோ.

தகர்க்க வழி: “இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்.”​—மத்தேயு 12:⁠34.

ஆலோசனை: இன்னமும் உங்கள் மனம் அலைபாய்கிறது என்றால், சுருக்கமாக ஜெபம் செய்யுங்கள். உங்கள் மனதை ஒருமுகப்படுத்த பழகிக்கொள்ளும் வரையாவது இப்படிச் செய்துபாருங்கள். மற்றொரு யோசனை: உங்களை ரொம்பவே பாதித்த விஷயங்களைப் பற்றி ஜெபியுங்கள். ரஷ்யாவைச் சேர்ந்த 14 வயது மரினா சொல்கிறாள்: “கடவுள்கிட்ட பேசுறதுதான் ஜெபம் என்பதை நான் டீன்-ஏஜ் பருவத்தை எட்டின பிறகுதான் சிந்திக்க ஆரம்பிச்சேன். அப்பதான், என் மனசுல இருப்பதையெல்லாம் கடவுளிடம் கொட்டி ஜெபம் செய்யணும்னு தோனுச்சு.”

தடைக்கல்: சொன்னதையே திரும்பத்திரும்பச் சொல்வது.

“நான் ஜெபம் செய்தபோதெல்லாம், அரைத்த மாவையே அரைப்பதுபோல் சொன்னதையே சொல்லிக்கிட்டிருந்தேன்.”​—⁠டியுப், 17, பெனின்.

தகர்க்க வழி: “உம்முடைய கிரியைகளையெல்லாம் தியானித்து, உம்முடைய செயல்களை யோசிப்பேன்.”​—சங்கீதம் 77:⁠12.

ஆலோசனை: உங்களுடைய ஜெபம் இயந்திரத்தனமாக இருக்கிறதென்றால், வாழ்க்கையில் யெகோவா உங்களை எப்படியெல்லாம் ஆசீர்வதித்திருக்கிறார் என்பதை ஒவ்வொரு நாளும் எழுதி வையுங்கள். அதற்காக யெகோவாவுக்கு நன்றி சொல்லி ஜெபியுங்கள். இப்படியே ஒரு வாரம்வரை செய்துவாருங்கள். அப்போது, சொன்னதையே திரும்பத்திரும்பச் சொல்லாமல் வாரத்திற்கு ஏழு புதுப்புது விஷயங்களைச் சொல்லி ஜெபம் செய்திருப்பீர்கள். இப்படியே ஒவ்வொரு நாளும் நடந்த விஷயங்களைக் குறித்து ஜெபம் செய்யுங்கள். “நான் ஜெபம் செய்யும்போது அன்னைக்கு நடந்த விஷயங்களைப் பற்றி கடவுளிடம் பேசுவேன்” என்கிறான் பிரேசில் நாட்டைச் சேர்ந்த 21 வயது புரூனோ. அமெரிக்காவைச் சேர்ந்த 18 வயது சமந்தாவும் இப்படியே செய்கிறாள். “வழக்கத்துக்கு மாறாக இன்னைக்கு ஏதாவது வித்தியாசமா நடந்திருந்தால் அதை ஞாபகப்படுத்திப் பார்த்து ஜெபம் செய்வேன். இதனால, நான் சொன்னதையே சொல்லி ஜெபம் செய்றத தவிர்க்க முடிஞ்சிருக்கு” என்கிறாள். *

தடைக்கல்: சந்தேகம்.

“ஒருமுறை ஸ்கூல்ல எனக்கு இருந்த ஒரு பிரச்சினையைப் பற்றி ஜெபம் செய்த பிறகும் அது தீரலை. சொல்லப்போனால், அது அதிகமாத்தான் ஆச்சு. அதனால் ‘இனிமேல் எதுக்காக ஜெபம் செய்யணும், எப்படியும் யெகோவாதான் கேக்கப்போறதில்லையே!’ என்று நினைச்சுக்கிட்டேன்.”​—⁠மினோரி, 15, ஜப்பான்.

தகர்க்க வழி: “சோதனையை நீங்கள் சகித்துக்கொள்வதற்கு [யெகோவா தேவன்] வழி செய்வார்.”​—1 கொரிந்தியர் 10:⁠13.

ஆலோசனை: ஒன்று மட்டும் நிச்சயம்: யெகோவா ‘ஜெபத்தைக் கேட்கிறவர்.’ (சங்கீதம் 65:2) ஒரு பிரச்சினையைக் குறித்து ஜெபம் செய்த பிறகு, அதைப் பல்வேறு கோணங்களிலிருந்து பார்க்க முயலுங்கள். நீங்கள் எதிர்பார்க்கிற பதிலுக்காக காத்துக்கொண்டிருக்காமல், ஏற்கெனவே வந்திருக்கும் பதிலைத் தேடிப் பாருங்கள். இந்நாள்வரை நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருக்கிறீர்கள் என்றால், உங்களுடைய ஜெபத்திற்கு யெகோவா பதிலளித்திருக்கிறார் என்றே அர்த்தம்; ​—⁠உங்கள் பிரச்சினையை நீக்குவதன்மூலம் அல்ல, அதைத் தாங்கிக்கொள்வதற்கான பலத்தை அளிப்பதன்மூலம் பதிலளித்திருக்கிறார்.​—பிலிப்பியர் 4:⁠13.

தடைக்கல்: தர்மசங்கடம்.

“லன்ச் டைம்ல சாப்பிடுவதற்கு முன்னாடி ஜெபம் செய்ய எனக்குச் சங்கடமாக இருக்கும்; என் ஃபிரெண்ட்ஸுங்க பார்த்தா என்ன சொல்வாங்களோ என்று ஒரே யோசனையா இருக்கும்.”​—⁠ஹிக்காரு, 17, ஜப்பான்.

தகர்க்க வழி: “ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு.”​—பிரசங்கி 3:⁠1.

ஆலோசனை: சில சமயங்களில் நீங்கள் மனதுக்குள் ஜெபம் செய்வதைப் பார்த்து அடுத்தவர்கள் மெச்சுவார்கள். என்றாலும், மற்றவர்கள் கண்ணில் படும் விதத்தில் நீங்கள் ஜெபம் செய்ய வேண்டிய அவசியமில்லை. உதாரணத்திற்கு, அர்தசஷ்டா ராஜாவுக்கு முன்பு நெகேமியா மனதுக்குள்ளேயே சுருக்கமாக ஜெபம் செய்தார்; அது ராஜாவுக்குத் தெரிந்திருந்ததாக பைபிளில் எந்தப் பதிவும் இல்லை. (நெகேமியா 2:1–5) அவ்வாறே நீங்களும் மற்றவர்களுடைய கவனத்தை ஈர்க்காமல் மனதுக்குள்ளேயே யெகோவாவிடம் ஜெபிக்கலாம்.​—பிலிப்பியர் 4:⁠5.

தடைக்கல்: லாயக்கற்றவன்/ள் என்ற எண்ணம்.

“என் பிரச்சினைகளைப் பற்றி யெகோவாவுக்கு ஏற்கெனவே தெரியும். அதோடு மல்லுக்கட்டி எனக்கே போதும் போதும்னு ஆயிடுச்சு. அதேமாதிரிதான் அவரும் என் புலம்பல கேட்டுக் கேட்டு வெறுத்துப் போயிருப்பாரு. அதனால அவர்கிட்ட பேசவே நான் லாயக்கில்லாதவன்னு நினைக்கிறேன்.”​—⁠எலிசபெத், 20, அயர்லாந்து.

தகர்க்க வழி: “அவர் உங்கள்மீது அக்கறையாக இருப்பதால் உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.”​—1 பேதுரு 5:​7, NW.

ஆலோசனை: லூக்கா 12:​6, 7; யோவான் 6:44; எபிரெயர் 4:16; 6:10; 2 பேதுரு 3:9 ஆகிய வசனங்களை ஆராய்ச்சி செய்து தியானித்துப் பாருங்கள்; இதை ஒரு புராஜெக்டாக எடுத்து செய்யுங்கள். உங்கள் ஜெபத்தைக் கேட்பதற்கு யெகோவா ரொம்ப ஆவலாய் இருக்கிறார். அவர் உங்களுடைய ஜெபத்தைக் கேட்க வேண்டுமென்றால், நீங்கள் நீதிமானாக இருக்க வேண்டிய அவசியமில்லை. உங்களைப் போலவே வாழ்க்கையில் பல கவலைகளையும் கஷ்டங்களையும் எதிர்ப்பட்ட சங்கீதக்காரன் தாவீது, “நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்” என்பதில் நம்பிக்கையாக இருந்தார். *சங்கீதம் 34:⁠18.

யெகோவாவே உங்களுடைய ஜெபத்தைக் கேட்கிறார் என்பதுதானே அவர் உங்கள்மீது அக்கறை வைத்திருக்கிறார் என்பதைத் தெரியப்படுத்துகிறது. “நம் ஜெபங்கள கேட்கிற பொறுப்பை தேவதூதர்களுக்கு கொடுக்காம யெகோவா தேவனே கேட்கிறதனால அவற்றை முக்கியமானதா கருதுறாருன்னு தெரியுது” என இத்தாலியைச் சேர்ந்த 17 வயது நிக்கோல் சொல்கிறாள். (g 11/08)

 

^ நீங்கள் பேசுவதைக் கேட்பதற்கு படைப்பாளர் ஒலி அலைகளைச் சார்ந்தில்லை. எனவே, உங்கள் மனதுக்குள் சத்தமில்லாமல் ஜெபம் செய்தால்கூட அவரால் ‘செவிகொடுத்து’ கேட்க முடியும்.​—சங்கீதம் 19:⁠14.

^ பக்கம் 10-⁠ல், “பைபிளின் கருத்து: எதையாவது பயன்படுத்தி ஜெபிப்பது சரியா?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.

^ நீங்கள் ஏதாவது பெரிய பாவம் செய்திருப்பதால் உங்கள் ஜெபத்தைக் கடவுள் கேட்பதில்லை என்று நினைத்தால், உங்கள் பெற்றோரிடம் இதைப் பற்றி கட்டாயம் பேசுங்கள். அதோடு, ‘[உதவிக்காக] சபையின் மூப்பர்களையும் வரவழையுங்கள்.’ (யாக்கோபு 5:14) நீங்கள் கடவுளோடு மீண்டும் ஒரு நல்ல உறவுக்குள் வர மூப்பர்கள் உதவி செய்வார்கள்.

சிந்திப்பதற்கு

  • யெகோவா முக்கியமென கருதும் என்ன விஷயங்களை உங்கள் ஜெபத்தில் குறிப்பிடலாம்?

  • மற்றவர்களுக்காக யெகோவாவிடம் ஜெபம் செய்யும்போது என்ன விஷயங்களுக்காகக் கேட்கலாம்?