Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வெற்றிப் படியில்—பகுதி இரண்டு

வெற்றிப் படியில்—பகுதி இரண்டு

வெற்றிப் படியில்—பகுதி இரண்டு

“வெற்றிப் படியில்—பகுதி 1” காட்டியபடி, பைபிள் நியமங்கள் துன்பத்தில் தவிக்கும் குடும்பங்களைத் தாங்கி நிறுத்தக்கூடியவை. * யெகோவா தேவன், தம்முடைய நெறிமுறைகளுக்கு ஏற்ப வாழ்வோருக்கு இவ்வாறு வாக்குறுதி தருகிறார்: “நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.”—சங்கீதம் 32:8.

பணக் கஷ்டத்தைச் சமாளித்தல். பணப் பிரச்சினைகளால்தான் கணவனுக்கும் மனைவிக்கும் அடிக்கடி பயங்கர வாக்குவாதங்கள் ஏற்படுகின்றன. ஆனால், பணப் பிரச்சினையைச் சரியான கண்ணோட்டத்தில் பார்க்க பைபிள் நியமங்கள் அவர்களுக்கு உதவும். இயேசு சொன்னதைக் கவனியுங்கள்: “எதைச் சாப்பிடுவது எதைக் குடிப்பது என்று உங்கள் உயிருக்காகவும், எதை உடுப்பது என்று உங்கள் உடலுக்காகவும் கவலைப்படுவதை நிறுத்துங்கள். . . . இவையெல்லாம் உங்களுக்குத் தேவை என்று உங்கள் பரலோகத் தகப்பன் அறிந்திருக்கிறார்.”—மத்தேயு 6:25, 32.

பக்கம் 23-ல், அமெரிக்காவைச் சேர்ந்த இசக்கார் தன் அனுபவத்தைச் சொல்கிறார்; காட்ரீனா சூறாவளியால் அவருடைய வீடு இடிந்து தரைமட்டமானபோது தானும் தன் குடும்பத்தாரும் எப்படிப் பணக் கஷ்டத்தைச் சமாளித்தார்களென சொல்கிறார்.

குடும்பத்திலுள்ள ஒருவர் நோயால் அவதிப்படும்போது. மனிதர்களாகப் பிறந்த எல்லாருக்குமே நோய்நொடி வருகிறது. அது பெரும்பாலும் கொஞ்சக் காலத்திற்கே இருக்கிறது, பின்பு சீக்கிரத்தில் குணமாகிவிடுகிறது. ஆனால், குடும்பத்திலுள்ள ஒருவருக்குத் தீராத வியாதி வந்துவிட்டால்? படுக்கையில் வியாதியாய்க் கிடக்கிறவர்களை யெகோவா தாங்குவார் என பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 41:1-3) வியாதிப்பட்டவர்களைக் குடும்பத்தாரின் மூலமாக யெகோவா எவ்வாறு கவனித்துக்கொள்கிறார்?

பக்கம் 24-ல், ஜப்பானைச் சேர்ந்த ஹாஜிமெ என்பவரின் அனுபவத்தை வாசித்துப் பாருங்கள். அவருடைய மனைவி நோரிகோவுக்குக் கொடிய வியாதி வந்துவிட்டது; தானும் தன் மகள்களும் சேர்ந்து நோரிகோவை எப்படிக் கவனித்துக்கொள்கிறார்கள் என ஹாஜிமெ விளக்குகிறார்.

குழந்தை இறக்கும்போது. குடும்பத்தில் ஒரு குழந்தை இறந்துபோவது நெஞ்சைப் பிழியும் சோக நிகழ்ச்சிகளில் ஒன்றாகும். அப்படிப்பட்ட பேரிழப்பின் வேதனையால் வடியும் கண்ணீரைத் துடைக்கப்போவதாக யெகோவா வாக்குறுதி தருகிறார். (வெளிப்படுத்துதல் 21:1-4) துக்கத்தில் தவிப்பவர்களுக்கு இப்போதும்கூட அவர் ஆறுதல் தருகிறார்.—சங்கீதம் 147:3.

பக்கம் 25-ல், அமெரிக்காவைச் சேர்ந்த ஃபெர்னான்டோவும் அவரது மனைவி டில்மாவும் தங்கள் அனுபவத்தைச் சொல்கிறார்கள். அவர்களுடைய பச்சைக்குழந்தையின் இழப்பைச் சமாளிக்க பைபிள் எப்படி உதவியதென விளக்குகிறார்கள்.

சவால்களைச் சந்திக்கும் குடும்பங்களுக்கு பைபிள் நம்பகமான ஒரு வழிகாட்டியாக இருக்கிறது; பின்வரும் பக்கங்களில் நீங்கள் படிக்கப்போகும் அனுபவங்கள் இதையே காட்டுகின்றன. (g09 10)

[அடிக்குறிப்பு]

^ இந்தப் பத்திரிகையில் பக்கங்கள் 14-17-ஐப் பாருங்கள்.

[பக்கம் 23-ன் பெட்டி/படங்கள்]

பணக் கஷ்டத்தைச் சமாளித்தல்

அமெரிக்காவைச் சேர்ந்த இசக்கார் நிக்கல்ஸ் சொல்கிறார்

“காட்ரீனா சூறாவளி எங்கள் வீட்டைத் தரைமட்டமாக்கி, கான்க்ரீட் தரையை மட்டுமே விட்டு வைத்தது. நான் வேலை பார்த்த பள்ளிக் கட்டிடமும் ஒன்றரை மாதங்களுக்கு வெள்ளத்தில் மூழ்கியது.”

நானும் என் மனைவி மிஷெலும் எங்களுடைய இரண்டு வயது மகள் சிட்னியும் 2005-ல் அமெரிக்காவிலுள்ள மிஸ்ஸிசிப்பியில், செ. லூயிஸ் விரிகுடா பகுதியில் வசித்துவந்தோம். யெகோவாவின் சாட்சிகளாக நானும் என் மனைவியும் கிறிஸ்தவ ஊழியத்தில் முடிந்தளவுக்கு முழுமையாக ஈடுபடத் தீர்மானித்திருந்தோம். அருகிலிருந்த ஒரு பள்ளியில் நான் தொழில்பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றினேன்; அந்தப் பள்ளி லூயிஸியானாவின் நியூ ஆர்லியன்ஸில் இருந்தது. வாரத்தில் மூன்று நாட்கள் நான் வேலை செய்துவிட்டு, மற்ற நாட்களில் பைபிளைப் பற்றி மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்க அதிக நேரம் செலவிட்டேன். இப்படியாக எங்கள் வாழ்க்கை நல்லபடியாக ஓடியது. ஆனால், காட்ரீனா சூறாவளி தாக்கப்போகும் செய்தி திடீரென வந்தது. உடனடியாக அங்கிருந்து வெளியேற ஏற்பாடு செய்தோம்.

சூறாவளி ஓய்ந்த பின்பு திரும்பி வந்து பார்த்தபோது, எங்கள் வீடு தரைமட்டமாகியிருந்தது, நியூ ஆர்லியன்ஸில் நான் வேலை பார்த்த பள்ளிக் கட்டிடமும் சேதமடைந்திருந்தது. இன்ஷூரன்ஸ் பணத்தையும் அரசு நிதியையும் வைத்து ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்க முடிந்தது; ஆனால், நிலையான வருமானத்திற்கு வழி இல்லாமல் போனது. அதுமட்டுமல்லாமல், மாசுபட்ட தண்ணீரினால் என் மனைவிக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அவளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தது; பிற்பாடு, கொசுக்கடியால் வெஸ்ட் நைல் வைரஸ் நோய் தொற்றியது. இதற்கிடையே, இன்ஷூரன்ஸ் கட்டணமும் மற்ற செலவுகளும் கிடுகிடுவென ஏறின.

புதிய சூழ்நிலைகளைச் சமாளிக்க, சிக்கனமாகச் செலவு செய்தோம்; அவசியமான செலவுகளைக்கூட பார்த்துப் பார்த்து செய்தோம். இன்ன வேலைதான் என்றில்லாமல் எந்த வேலை செய்யவும் நான் தயாராக இருக்க வேண்டியிருந்தது.

எங்கள் உடமைகளெல்லாம் பறிபோனபோது மனதுக்கு மிகவும் வேதனையாக இருந்தது உண்மைதான். ஆனால், உயிர் தப்பியதற்காக நாங்கள் சந்தோஷப்பட்டோம். அந்த அனுபவத்திலிருந்து, பொருளுடைமைகளின் மதிப்பு குறைவுதான் என்ற உண்மை நன்றாகப் புரிந்தது. சொல்லப்போனால், இயேசுவின் இந்த வார்த்தைகள் எங்கள் ஞாபகத்திற்கு வந்தன: “ஒருவனுக்கு ஏராளமான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு வாழ்வைத் தராது.”—லூக்கா 12:15.

எங்களுடைய இழப்பு பெரிய இழப்பாக இருந்தாலும் நிறையப் பேர் எங்களைவிடவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தார்கள், அதுவும் சிலர் தங்கள் உயிரையே இழந்திருந்தார்கள் என்பதை நாங்கள் உணர்ந்தோம். நான் உடனடியாக நிவாரணப் பணியில் மும்முரமாக ஈடுபட்டதற்கு ஒரு காரணம் அதுதான்; இழப்பைச் சந்தித்த மற்றவர்களுக்கு ஆறுதல் அளிப்பதிலும் நேரம் செலவிட்டேன்.

இந்தத் துன்ப காலம் முழுவதிலும், குறிப்பாக சங்கீதம் 102:16 எங்களுக்கு மிகுந்த ஆறுதலாய் இருந்தது. யெகோவா “திக்கற்றவர்களுடைய ஜெபத்தை அலட்சியம்பண்ணாமல், அவர்கள் விண்ணப்பத்தை அங்கீகரிப்பார்” என்று அது சொல்கிறது. இந்த வார்த்தைகள் எவ்வளவு உண்மை என்பதை நாங்கள் குடும்பமாக ருசித்திருக்கிறோம்! (g09 10)

[பக்கம் 23-ன் பெட்டி]

2005-ல் காட்ரீனா சூறாவளியும் ரீட்டா சூறாவளியும் ஐ.மா. வளைகுடா பகுதியைத் தாக்கியபோது, யெகோவாவின் சாட்சிகள் உடனடியாக 13 நிவாரண மையங்களையும், 9 சேமிப்பு அறைகளையும், 4 எரிபொருள் கிடங்குகளையும் நிறுவினார்கள். யெகோவாவின் சாட்சிகளில் கிட்டத்தட்ட 17,000 வாலண்டியர்கள் நிவாரணப் பணிகளில் கைகொடுக்க அமெரிக்காவிலிருந்தும் வேறு 13 நாடுகளிலிருந்தும் திரண்டு வந்தார்கள். சேதமடைந்த ஆயிரக்கணக்கான வீடுகளை அவர்கள் சரிசெய்திருக்கிறார்கள்.

[பக்கம் 24-ன் பெட்டி/படங்கள்]

குடும்பத்திலுள்ள ஒருவர் நோயால் அவதிப்படும்போது

ஜப்பானைச் சேர்ந்த ஹாஜிமெ இடோ சொல்கிறார்

“இருவருமாகச் சேர்ந்து சமைத்துச் சாப்பிடுவதென்றால் எங்களுக்குக் கொள்ளைப் பிரியம். ஆனால், திடீரென்று என் மனைவி நோரிகோவின் உடல்நிலை மோசமானது. இப்போது அவளால் சாப்பிட முடியாது, குடிக்க முடியாது, சொல்லப்போனால் பேசக்கூட முடியாது. சக்கரநாற்காலியே கதியென்று ஆகிவிட்டாள், மூச்சுக்கருவியின் உதவியோடுதான் சுவாசிக்கிறாள்.”

நோரிகோ மே 2006-ல் சரிவர பேச முடியாமல் சிரமப்பட்டாள். சில மாதங்களில், சாப்பிடவும் குடிக்கவும்கூட கஷ்டப்பட்டாள். செப்டம்பர் மாதத்தில், எமையோட்ராஃபிக் லேட்டரல் ஸ்க்லரோசிஸ் (ALS) என்ற வியாதி அவளுக்கு வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மூளையிலும் முதுகெலும்பிலும் உள்ள நரம்பு செல்களை மெதுமெதுவாகப் பாதிக்கும் வியாதி இது. நான்கே மாதங்களில் எங்கள் வாழ்க்கை அடியோடு மாறிவிட்டது. அதுவும், நோரிகோவின் வியாதி அப்போது ஆரம்பக் கட்டத்தில்தான் இருந்தது.

பிற்பாடு நோரிகோவின் நாவும் வலது கையும் செயலிழந்தன. இரைப்பை துளைப்பு என்ற அறுவை சிகிச்சையின் மூலம் செயற்கை உணவுக் குழாய் ஒன்று அவளுடைய வயிற்றில் பொருத்தப்பட்டது. அதன்பின், மூச்சுப் பெருங்குழாய்த் திறப்பு என்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டது; அந்தச் சிகிச்சையில், காற்று உள்ளே செல்வதற்காக அவளுடைய கழுத்தில் ஒரு திறப்பு ஏற்படுத்தப்பட்டது; இதனால் அவள் பேசுவதற்கு வாய்ப்பே இல்லாமல் போனது. நோரிகோ எந்தளவுக்கு இடிந்துபோயிருப்பாள் என்று என்னால் புரிந்துகொள்ள முடிகிறது, ஏனென்றால் அவள் எப்போதுமே சுறுசுறுப்பாக நடமாடியவள். நாங்கள் யெகோவாவின் சாட்சிகள்; ஆகவே, நோரிகோவும் எங்கள் மகள்களும் முழுநேர கிறிஸ்தவ ஊழியம் செய்துவந்தார்கள். இப்போதோ சுவாசிப்பதற்குக்கூட நோரிகோவுக்கு மூச்சுக்கருவி தேவைப்படுகிறது; அவள் பெரும்பாலும் படுத்த படுக்கையாகவே இருக்கிறாள்.

என்றாலும், நோரிகோ தளர்ந்துவிடவில்லை! உதாரணத்திற்கு, மூச்சுக்கருவியுடன் சக்கரநாற்காலியில் கிறிஸ்தவக் கூட்டங்களுக்கு வருகிறாள். அவளுக்கு இப்போது காதும் சரியாகக் கேட்பதில்லை; ஆகவே, கூட்டங்களிலிருந்து அவள் பயனடைவதற்கு, அங்கு சொல்லப்படுவதை என் மகள் கொட்டை எழுத்துக்களில் எழுதிக் காட்டுகிறாள். நோரிகோ முழுநேர ஊழியத்தை நிறுத்த வேண்டியிருந்தபோதிலும், இன்னமும் கடிதங்கள் மூலம் சாட்சி கொடுக்கிறாள். எங்களுடைய கம்ப்யூட்டரில் பொருத்தப்பட்டுள்ள ஒரு விசேஷ சாதனத்தின் உதவியால் பைபிள் தரும் நம்பிக்கையைப் பற்றி மற்றவர்களுக்கு எழுதுகிறாள்.—2 பேதுரு 3:13; வெளிப்படுத்துதல் 21:1-4.

நாங்கள் குடும்பமாகச் சேர்ந்து நோரிகோவைக் கவனித்துக்கொள்கிறோம். என் இரண்டு மகள்களுமே, வீட்டில் அதிக நேரம் இருந்து உதவி செய்வதற்கு வசதியாகப் புதிய வேலையில் சேர்ந்திருக்கிறார்கள். தினமும் நோரிகோ செய்துவந்த எல்லா வேலைகளையும் இப்போது நாங்கள் மூன்று பேரும் பங்கிட்டுச் செய்கிறோம்.

சிலசமயங்களில், நோரிகோ காலையில் சோர்வாகத் தெரிவாள். ‘இன்று முழுவதும் நன்றாக ஓய்வெடு’ என்று சொல்லலாம் போல் எனக்குத் தோன்றும். ஆனால், பைபிளின் செய்தியை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்த நோரிகோ விரும்புகிறாள். நான் அவளுக்காகக் கம்ப்யூட்டரை ‘ஆன்’ செய்ததும் அவளுடைய முகம் மலர்ந்துவிடும்! அவள் கடிதம் எழுதும்போது சற்று தெம்பாக இருக்கிறாள். ‘எந்நேரமும் நம் எஜமானருடைய வேலையில் அதிகமதிகமாய் ஈடுபடுகிறவர்களாக’ இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை நான் புரிந்துகொண்டிருக்கிறேன்.—1 கொரிந்தியர் 15:58.

ஜனவரி 2006 விழித்தெழு! இதழில், இதே நோயால் பாதிக்கப்பட்ட ஜேஸன் ஸ்டுவர்ட் என்பவரின் அனுபவத்தை வாசித்தது, மனந்தளராதிருக்க நோரிகோவுக்குப் பேருதவியாய் இருந்திருக்கிறது. சொல்லப்போனால், அவளால் எப்படி உற்சாகமாக இருக்க முடிகிறதென ஆஸ்பத்திரி ஊழியர்கள் ஆச்சரியத்தோடு கேட்டபோது, அந்தக் கட்டுரையைப் பற்றி நோரிகோ அவர்களுக்குச் சொன்னாள்; அவர்களுக்கு நாங்கள் அந்தப் பத்திரிகையின் பிரதிகளைக் கொடுத்தோம். மற்றவர்களுக்குத் தன் மத நம்பிக்கைகளைப் பற்றிக் கற்றுக்கொடுப்பதுதான் என் மனைவிக்கு இப்போது உயிர்மூச்சாக இருக்கிறது.

எனக்கும் நோரிகோவுக்கும் திருமணமாகி 30 வருடங்கள் ஆகிவிட்டன; ஆனால், இத்தனை வருடங்களாக நான் அவ்வளவாகப் பொருட்படுத்தாத அவளுடைய எத்தனையோ நல்ல குணங்களைக் கடந்த மூன்று வருடங்களாகப் பெரிதும் மதிக்க ஆரம்பித்திருக்கிறேன். அவள் எனக்கு மனைவியாக வாய்த்ததற்காக நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன்! (g09 10)

[பக்கம் 25-ன் பெட்டி/படங்கள்]

குழந்தை இறக்கும்போது

அமெரிக்காவைச் சேர்ந்த ஃபெர்னான்டோ மற்றும் டில்மா ஃப்ரேடஸ் சொல்கிறார்கள்

“குழந்தை இறக்கும்போது மனம் துடிக்கிற துடிப்பை விவரிக்க வார்த்தைகளே இல்லை. இதைவிட வேதனை வேறு இல்லை.”

எங்கள் மகள் ப்ரெஷியஸை ஏப்ரல் 16, 2006 அன்று பறிகொடுத்தோம். அவள் பத்தே நாட்கள்தான் உயிரோடு இருந்தாள். என் மனைவி கிட்டத்தட்ட மூன்றுமாத கர்ப்பிணியாக இருந்தபோது, அவள் வயிற்றிலிருந்த ப்ரெஷியஸுக்குக் கொடிய இதயநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பிரசவ காலம் நெருங்கியபோது, அவள் பிறந்த கொஞ்ச நாட்களிலேயே இறந்துவிடுவாள் என்பது தெரியவந்தது; சொல்லப்போனால், அவள் உயிரோடு பிறப்பாளா என்பதே கேள்விக்குறியாக இருந்தது. இதை எங்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. எங்களுக்கு ஆரோக்கியமான மூன்று பிள்ளைகள் இருந்தார்கள். ஆகவே, இந்தக் குழந்தை இறக்கப்போவதை எங்களால் நம்ப முடியவில்லை.

ப்ரெஷியஸ் பிறந்தபின், குரோமோசோம் நோய்களில் தேர்ச்சிபெற்ற வல்லுநர் ஒருவர் அவளுக்கு ட்ரைஸோமி 18 என்ற அரிய நோய் இருப்பதைக் கண்டுபிடித்தார்; இந்நோய் 5,000 குழந்தைகளில் ஒரு குழந்தைக்குத்தான் வருமாம். ப்ரெஷியஸ் உயிர் பிழைப்பது கஷ்டம் என்பது தெளிவாகத் தெரிந்தது. எங்களால் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் மனம் அடித்துக்கொண்டது. ஆனால், ஒன்றை மட்டும் செய்ய முடியுமென நினைத்தோம்; அவள் வாழப்போகிற ஒருசில நாட்களுக்கு அவளுடனேயே இருக்க முடிவு செய்தோம். அதைத்தான் செய்தோம்.

ப்ரெஷியஸுடன் பத்து நாட்களாவது செலவிட முடிந்ததை எண்ணி மிகவும் சந்தோஷப்படுகிறோம். அந்தப் பத்து நாட்களில் நாங்களும் எங்கள் மூன்று மகள்களும் அவளோடு மிகவும் பாசமாகிவிட்டோம். அவளைக் கையில் தூக்கி வைத்துக்கொண்டோம், அவளோடு பேசினோம், அவளை அணைத்துக்கொண்டோம், அவளுக்கு முத்தம்கொடுத்தோம், அவளோடு சேர்ந்து நிறைய ஃபோட்டோ எடுத்துக்கொண்டோம். அவள் யார் ஜாடையாக இருக்கிறாள் என்றுகூட பேசினோம். அவளுக்கிருந்த நோயைக் கண்டுபிடித்த அந்த வல்லுநர் ஆஸ்பத்திரியில் தினமும் எங்களை வந்து பார்த்தார். எங்களோடு சேர்ந்து அவரும் அழுதார், மிகவும் வேதனைப்படுவதாகச் சொன்னார். எங்களோடு பேசிக்கொண்டிருந்தபோது ப்ரெஷியஸை அவர் ஞாபகம் வைப்பதற்காக அவளுடைய படத்தை வரைந்து வைத்துக்கொண்டார். எங்களுக்கும் அந்தப் படத்தின் ஒரு காப்பியைக் கொடுத்தார்.

நாங்கள் யெகோவாவின் சாட்சிகள்; பைபிள் கற்பிக்கிறபடி, கடவுள் இந்தப் பூமியை ஒரு பூஞ்சோலையாக மாற்றுவார் என்பதை நம்புகிறோம்; இறந்தவர்களை மறுபடியும் உயிரோடு கொண்டுவர அவர் ஏங்குகிறார் என்பதையும் முழுமையாக நம்புகிறோம்; ப்ரெஷியஸையும் அவளைப் போன்ற பச்சிளம் குழந்தைகளையும்கூட அவர் கண்டிப்பாக உயிரோடு கொண்டுவருவார். (யோபு 14:14, 15; யோவான் 5:28, 29) ப்ரெஷியஸை மறுபடியும் தூக்கி அணைத்துக் கொஞ்சப்போகும் அந்த நாளுக்காக நாங்கள் ஆவலாய் காத்திருக்கிறோம். அதனால், “பூஞ்சோலை” என்ற வார்த்தையைக் கேட்கும்போதெல்லாம் மனதில் உற்சாகம் பொங்குகிறது! அந்நாள் வரும்வரை, ப்ரெஷியஸ் கடவுளுடைய நினைவில் இருக்கிறாளென்றும், வேதனைப்படாமல் இருக்கிறாளென்றும் அறிந்து ஆறுதலடைகிறோம்.—பிரசங்கி 9:5, 10. (g09 10)