Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆசீர்வாதமா ஆபத்தா?

ஆசீர்வாதமா ஆபத்தா?

ஆசீர்வாதமா ஆபத்தா?

ஒரு டிரைவர் கட்டுப்பாட்டை இழந்துவிடுவதால், கார் ஒரு கம்பத்தின்மீது மோதுகிறது; அதிலிருந்த ஒரு பயணிக்குப் பயங்கரமான காயம் ஏற்பட்டுவிடுகிறது. உதவிக்காக அந்த டிரைவர் உடனடியாக செல்ஃபோனைப் பயன்படுத்துகிறார். ஆனால், அவர் ஏன் கட்டுப்பாட்டை இழந்தார்? ஃபோன் ஒலித்ததும் ஒரு கணம் அவருடைய கண்கள் சாலையைவிட்டுத் திரும்பியதாலேயே.

இந்த உதாரணம் காட்டுகிறபடி, நவீன தொழில்நுட்ப சாதனங்கள் ஆசீர்வாதமாகவும் இருக்கலாம் ஆபத்தாகவும் இருக்கலாம்; இரண்டுமே நம் கையில்தான் இருக்கிறது. என்றாலும், ஓரளவு பழம்பாணியாகிவிட்ட சாதனங்களைப் பயன்படுத்த யாருமே விரும்பமாட்டார்கள். உதாரணமாக, நச்சுப் பிடித்த வேலைகளைச் செய்ய, ஆன்லைனில் ஆற அமர பொருள்களை வாங்க அல்லது வங்கி வேலைகளைச் செய்ய, ஈ-மெயில்/வாய்ஸ்மெயில்/வீடியோ லிங்க் மூலமாக மற்றவர்களோடு தொடர்புகொள்ள கம்ப்யூட்டர்கள் உதவுகின்றன.

முன்பெல்லாம், குடும்பத்திலுள்ளவர்கள் காலையில் வெவ்வேறு வேலையாக வெளியே சென்றுவிட்டால் சாயங்காலம் வீடு திரும்பும்வரை ஒருவரோடொருவர் பேச முடியாது. இப்போதோ, “செல்ஃபோன் வைத்திருக்கிற தம்பதியரில் 70 சதவீதத்தினர் ஒருவருக்கொருவர் தினமும் வெறுமனே ‘நலம் விசாரிக்கவும்,’ 64 சதவீதத்தினர் தங்களுடைய நேரத்தைத் திட்டமிடவும் அதைப் பயன்படுத்துகிறார்கள்; பெற்றோரில் 42 சதவீதத்தினர் தினமும் தங்களுடைய பிள்ளைகளுடன் தொடர்புகொள்வதற்கு அதைப் பயன்படுத்துகிறார்கள்” என யுஎஸ்ஏ டுடே என்ற செய்தித்தாள் அறிக்கை குறிப்பிடுகிறது.

சொத்தே சாபமாகி விடாதிருக்க

தொழில்நுட்ப சாதனங்களை மட்டுக்குமீறியோ முறைதவறியோ பயன்படுத்தினால் மன ரீதியிலும் உடல் ரீதியிலும் பாதிப்பு ஏற்படுமா? ஒரு மேற்கத்திய நாட்டைச் சேர்ந்த புதுமணத் தம்பதியரின் உதாரணத்தைக் கவனியுங்கள். ஒரு செய்தி அறிக்கை காட்டுகிறபடி, “அவர்கள் தங்களுடைய கார்களில் செல்லும்போது, உடற்பயிற்சி மையத்தில் இருக்கும்போது, வீட்டிற்குள்ளேயே வெவ்வேறு அறைகளில் இருக்கும்போது என சதா ஃபோன் பேசிக்கொண்டிருந்தார்கள்.” சில சமயங்களில், மாதத்திற்கு 4,000 நிமிடங்கள்வரை, அதாவது 66 மணிநேரத்திற்கும் அதிகமாக, பேசினார்கள். ஃபோன் இல்லாமல் தங்களால் ஒன்றுமே செய்ய முடியாது என்று அவர்கள் சொன்னார்கள். அவர்கள் “ஃபோனுக்கு அடிமையாகியிருப்பதற்கான எல்லா அறிகுறிகளும் தெரிகின்றன. அவர்கள் இருவரையும் ஒரு கருவிதான் இணைப்பதுபோல் தெரிகிறது” என்று மனநல நிபுணரான டாக்டர் ஹேரஸ் ஸ்ட்ரேட்னர் குறிப்பிட்டார்.

எல்லாருமே இந்தத் தம்பதியரைப் போல் இல்லையென நீங்கள் நினைக்கலாம்; ஆனால், இவர்களுடைய உதாரணம் கவலைக்கிடமான போக்கைக் காட்டுகிறது. நிறையப் பேருக்கு ஒரு மணிநேரம் மற்றவர்களிடம் தொடர்புகொள்ளாதிருப்பதுகூட நினைத்துப் பார்க்க முடியாத விஷயமாக இருக்கிறது. “நாங்கள் ஈ-மெயிலை எப்போதுமே பார்க்க வேண்டும், இன்டர்நெட்டை எப்போதுமே அலச வேண்டும், நண்பர்களுக்கு மெஸேஜை எப்போதுமே அனுப்ப வேண்டும்” என்று 20-களில் உள்ள ஒரு பெண் கூறினாள்.

இப்படித் தொடர்புகொள்வதிலேயே “உங்களுடைய நேரமெல்லாம் கரைந்துகொண்டிருந்தால், மற்றெல்லா வேலையையும்விட அதுவே முக்கியமானதாக ஆகிக்கொண்டிருந்தால், அது நீங்கள் ஓர் அபாய கட்டத்தில் இருப்பதற்கான தெள்ளத்தெளிவான அறிகுறி ஆகும்” என த பிஸினஸ் டைம்ஸ் ஆஃப் ஸிங்கப்பூர் என்ற ஒரு பதிப்பில் டாக்டர் ப்ரையன் யாவூ குறிப்பிடுகிறார். அதுமட்டுமல்ல, மணிக்கணக்காக எலக்ட்ரானிக் சாதனங்களே கதியென கிடப்பவர்களுக்கு, உடற்பயிற்சி செய்வதற்குக்கூட நேரமில்லாததால் இதய நோய், சர்க்கரை நோய், அல்லது வேறு பெரிய நோய்கள் வரும் ஆபத்து இருக்கிறது.

அதோடு, உடனடி ஆபத்துகளும் இருக்கின்றன. உதாரணமாக, செல்ஃபோனைக் கையில் பிடித்துக்கொண்டோ பிடிக்காமலோ அதில் பேசிக்கொண்டு வாகனங்களை ஓட்டுபவர்கள், குடித்துவிட்டு ஓட்டுகிற டிரைவர்களைப் போலவே மந்தநிலையில் இருக்கிறார்கள் என சமீபத்திய ஓர் ஆய்வு முடிவுக்கு வந்தது. வாகனத்தை ஓட்டிக்கொண்டே மெஸேஜ் அனுப்புவதும் படு ஆபத்தானது; என்றாலும், 16-க்கும் 27-க்கும் இடைப்பட்ட வயதிலுள்ள சுமார் 40 சதவீதத்தினர் வாகனங்களை ஓட்டும்போது மெஸேஜ் அனுப்புவதாக ஓர் ஆய்வு காட்டியது. அதுமட்டுமல்ல, நீங்கள் வாகனத்தை ஓட்டுகையில் செல்ஃபோனில் பேசவோ மெஸேஜ் அனுப்பவோ நினைத்தால் ஒரு விஷயத்தை மனதில் வையுங்கள்; அதாவது, விபத்து நடந்துவிட்டால் போலீஸும் சரி இன்ஸூரன்ஸ் கம்பெனியும் சரி, அதற்குச் சற்று முன்பு நீங்கள் செல்ஃபோனைப் பயன்படுத்தினீர்களா எனப் பார்க்கும் என்பதை மனதில் வையுங்கள். ஒரேவொரு ஃபோன் காலோ சின்னஞ்சிறிய மெஸேஜோகூட பேரிழப்பை ஏற்படுத்தலாம்! * 2008-ல் அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவில் 25 பேரைப் பலிவாங்கிய ஒரு ரயில் விபத்தைக் குறித்து விசாரணை நடத்தியதில், அந்த ரயில் ஓட்டுநர் விபத்திற்குச் சில வினாடிகளுக்கு முன்பு ஒரு மெஸேஜ் அனுப்பியிருந்ததாகத் தெரிய வந்தது. அவர் பிரேக்கூட போடவில்லையாம்.

அதிகமதிகமான பிள்ளைகள் செல்ஃபோன்களையும் கம்ப்யூட்டர்களையும் பொழுதுபோக்கு மீடியாக்களையும் உபயோகிப்பதால், அவற்றை ஞானமாகவும் பொறுப்பாகவும் பயன்படுத்தக் கற்றுக்கொள்வது அவசியம். அவர்களுக்கு நாம் எப்படி உதவலாம்? தயவுசெய்து அடுத்த கட்டுரையை வாசியுங்கள். (g09-E 11)

[அடிக்குறிப்பு]

^ பைபிள் போதனைகளின்படி வாழ முயற்சி செய்கிற எல்லாருமே, ஆபத்துண்டாக்கும் எந்தவொரு காரியத்தாலும் எந்தவொரு சூழ்நிலையாலும் திசைதிருப்பப்படாதபடி மிகக் கவனமாய் இருக்க வேண்டும்.—ஆதியாகமம் 9:5, 6; ரோமர் 13:1.

[பக்கம் 15-ன் படம்]

மற்றவர்களோடு தொடர்புகொள்வதிலேயே உங்களுடைய நேரமெல்லாம் கரைகிறதா?