“எனக்கு விவாகரத்து வேண்டும்!”
பாழாய்க் கிடக்கும் இந்த வீட்டைப் பார்த்தால் ரொம்ப நாளாகவே அதை யாரும் கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது. இந்த வீடு பல புயல்களைத் தாக்குப்பிடித்திருக்கிறது; இருந்தாலும், சில சமயங்களில் சேதமும் அடைந்திருக்கிறது. கட்டிடம் ரொம்ப பலவீனமாக இருப்பதால் இன்றைக்கோ நாளைக்கோ விழுந்துவிடும் போல் இருக்கிறது.
இன்றைக்கு பல திருமணங்கள் இதே போன்ற நிலைமையில்தான் இருக்கின்றன. உங்களுடைய திருமணமும் இப்படித்தான் இருக்கிறதென நீங்கள் நினைக்கிறீர்களா? கவலைப்படாதீர்கள், பிரச்சினைகள் இல்லாத தம்பதிகள் யாருமே இல்லை. சொல்லப்போனால், திருமணமானவர்களுக்கு “ஏராளமான தொல்லைகள்” இருக்கும் என்று பைபிள் வெளிப்படையாகவே சொல்கிறது.—1 கொரிந்தியர் 7:28, ஈஸி டு ரீட் வர்ஷன்.
பைபிள் சொல்வது உண்மை என்பதை ஓர் ஆராய்ச்சி குழுவினர் கண்டுபிடித்திருக்கிறார்கள். திருமணம் என்பது “தினம் தினம் அநேகரால் எடுக்கப்படும் ஒரு பெரிய ரிஸ்க்” என்று அந்தக் குழுவினர் சொல்கிறார்கள். “ஆயிரம் கனவுகளுடனும் எதிர்பார்ப்புகளுடனும் உதயமாகும் இந்த உறவு, நாளடைவில் எரிச்சலும் வேதனையும் நிறைந்த உறவாக மாறிவிடலாம்” என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.
உங்களுடைய திருமண வாழ்க்கை எப்படி? கீழே உள்ளவற்றில் ஏதாவது ஒன்றோ பலவோ உங்கள் திருமணத்தை பாதித்திருக்கின்றனவா?
எப்போதும் வாக்குவாதம்
குத்தலான பேச்சு
நம்பிக்கை துரோகம்
கோபதாபம்
உங்கள் திருமண பந்தம் பலவீனமடைந்துவிட்டதாகவும் இன்றைக்கோ நாளைக்கோ முறிந்துவிடும் நிலையில் இருப்பதாகவும் தோன்றினால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? விவாகரத்து விடுதலை தருமா? (g10-E 02)