Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இயேசுவை உண்மையாய்ப் பின்பற்றுகிறவர்கள் ஏன் வெறுக்கப்படுகிறார்கள்?

இயேசுவை உண்மையாய்ப் பின்பற்றுகிறவர்கள் ஏன் வெறுக்கப்படுகிறார்கள்?

பைபிளின் கருத்து

இயேசுவை உண்மையாய்ப் பின்பற்றுகிறவர்கள் ஏன் வெறுக்கப்படுகிறார்கள்?

“அப்போது மக்கள் உங்களை உபத்திரவப்படுத்துவார்கள், கொலையும் செய்வார்கள்; என் பெயரை முன்னிட்டு எல்லாத் தேசத்தாருடைய வெறுப்புக்கும் ஆளாவீர்கள்.” —மத்தேயு 24:9.

இயேசு கொடூரமான முறையில் கொல்லப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு இந்த வார்த்தைகளைச் சொன்னார். மரணத்திற்கு முந்தின நாள் தம்முடைய உண்மையுள்ள அப்போஸ்தலர்களிடம், “அவர்கள் என்னைத் துன்புறுத்தியிருந்தால் உங்களையும் துன்புறுத்துவார்கள்” என்று சொன்னார். (யோவான் 15:20, 21) உண்மையில், இயேசு மற்றவர்களுக்காகத் தம்மையே அர்ப்பணித்தார், அல்லவா? நொந்த நெஞ்சங்களின் தஞ்சமாகவும் ஏழை இதயங்களின் நம்பிக்கை தீபமாகவும் இருந்தார். அப்படியானால், அன்று இயேசுவை ஏன் வெறுத்தார்கள்? இன்று அவரைப் பின்பற்றுகிறவர்களை ஏன் ஜனங்கள் வெறுக்கிறார்கள்?

இதற்கான காரணங்களை பைபிள் திட்டவட்டமாகச் சொல்கிறது. அவற்றை நாம் ஆராயும்போது, கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களும் அவரைப் போலவே ஏன் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று தெரிந்துகொள்ளலாம்.

அறியாமையால்...

“உங்களைக் கொலை செய்கிறவர்கள் கடவுளுக்குப் பரிசுத்த சேவை செய்வதாக நினைத்துக்கொள்கிற காலம் வரும். தகப்பனையும் என்னையும் அறிந்துகொள்ளாததால் அவர்கள் இவற்றைச் செய்வார்கள்” என்று இயேசு தம்மைப் பின்பற்றியவர்களிடம் சொன்னார். (யோவான் 16:2, 3) இயேசுவை எதிர்த்தவர்களும் அவர் வணங்கிய கடவுளைத்தானே வணங்கினார்கள்? உண்மைதான், ஆனால் அவர்கள் பொய்மதக் கோட்பாடுகளையும் பாரம்பரியங்களையும் உடும்புப் பிடியாய்ப் பிடித்திருந்ததால் இயேசுவை எதிர்த்தார்கள். ஆம், ‘அவர்களுக்குக் கடவுள்மீது பக்திவைராக்கியம் இருந்தது . . . ஆனால், அது திருத்தமான அறிவுக்கேற்ற பக்திவைராக்கியமாக இல்லை.’ (ரோமர் 10:2) அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் தர்சு நகரத்தைச் சேர்ந்த சவுல்; இவர்தான் பிறகு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாக மாறிய பவுல்.

ஆரம்பத்தில் சவுல், கிறிஸ்தவர்களை எதிர்த்து வந்த பரிசேயராக இருந்தார்; அரசியலில் அதிக செல்வாக்கு வாய்ந்த யூத மதத்தொகுதியைச் சேர்ந்தவர்கள்தான் பரிசேயர்கள். ‘முன்பு நான் தெய்வநிந்தனை செய்கிறவனாகவும், துன்புறுத்துகிறவனாகவும், திமிர்பிடித்தவனாகவும் இருந்தேன்; . . . அறியாமையின் காரணமாக நான் விசுவாசமில்லாமல் நடந்துகொண்டேன்’ என்று சவுலே ஒத்துக்கொண்டார். (1 தீமோத்தேயு 1:12, 13) ஆனால், கடவுளையும் அவருடைய மகனையும் பற்றிய உண்மைகளைத் தெரிந்துகொண்ட உடனேயே தன்னை மாற்றிக்கொண்டார்.

இன்றும்கூட கிறிஸ்துவின் சீடர்களை எதிர்த்த சிலர் தங்களை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமா, சவுலைப் போலவே இவர்கள் துன்புறுத்தலுக்கும் ஆளாகியிருக்கிறார்கள். இருந்தாலும், இவர்கள் பழிக்குப் பழி வாங்க நினைப்பதில்லை. மாறாக, “உங்கள் எதிரிகளிடம் தொடர்ந்து அன்பு காட்டுங்கள், உங்களைத் துன்புறுத்துகிறவர்களுக்காகத் தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள்” என்ற இயேசுவின் அறிவுரையைப் பின்பற்றுகிறார்கள். (மத்தேயு 5:44) யெகோவாவின் சாட்சிகள் இந்த அறிவுரைக்குக் கீழ்ப்படிய கடினமாக முயற்சிக்கிறார்கள். சவுலைப் போலவே எதிரிகளில் சிலரும்கூட மனம் திரும்புவார்கள் என்ற நம்பிக்கையோடு இவ்வாறு செய்கிறார்கள்.

பொறாமையால்...

அநேகர் பொறாமையின் காரணமாக இயேசுவை எதிர்த்தார்கள். ரோம ஆளுநரான பொந்தியு பிலாத்து, “பிரதான குருமார்கள் பொறாமையால்தான் [இயேசுவை] தன்னிடம் ஒப்படைத்திருந்தார்கள்,” மரணத் தண்டனை கொடுக்கும்படியும் வற்புறுத்தினார்கள் என்பதை அறிந்திருந்தார். (மாற்கு 15:9, 10) யூத மதத் தலைவர்கள் இயேசுவின் மீது ஏன் பொறாமை கொண்டார்கள்? தாங்கள் தாழ்வாக நினைத்த பொது ஜனங்கள் மத்தியில் இயேசு புகழ் பெற்றிருந்ததே அதற்குக் காரணம். “உலகமே அவன் பின்னால் போய்விட்டது” என்று பரிசேயர்கள் புலம்பினார்கள். (யோவான் 12:19) பின்னர், கிறிஸ்துவைப் பின்பற்றியவர்கள் செய்த ஊழியத்திற்கும் அநேக ஜனங்கள் சாதகமாகப் பிரதிபலித்தார்கள். இதைப் பார்த்த மத எதிரிகள் மீண்டும் “பொறாமையால் பொங்கியெழுந்தார்கள்,” கிறிஸ்தவ சீடர்களை அடித்துத் துன்புறுத்தினார்கள்.—அப்போஸ்தலர் 13:45, 50.

இன்னும் சிலர், கடவுளுடைய ஊழியர்களின் நன்னடத்தையைப் பார்த்து அவர்களை வெறுக்கிறார்கள். “அதே மோசமான சகதியில் நீங்கள் அவர்களோடு தொடர்ந்து புரளாததால், அவர்கள் திகைப்படைந்து உங்களைச் சதா பழித்துப் பேசுகிறார்கள்” என்று சக கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பேதுரு எழுதினார். (1 பேதுரு 4:4) இன்றும் நிலைமை அப்படித்தான் இருக்கிறது. உண்மை கிறிஸ்தவர்கள் கெட்ட நடத்தையைத் தவிர்க்கும் அதேசமயத்தில் சுயநீதிமான்களாகவோ தங்களைப் பற்றி உயர்வாகவோ கருதுவதில்லை. அப்படிச் செய்தால், அவர்கள் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறார்கள் என்றே சொல்ல முடியாது. ஏனென்றால், எல்லா மனிதர்களும் தவறு செய்பவர்களாக இருப்பதால் கடவுளுடைய இரக்கம் எல்லாருக்கும் தேவைப்படுகிறது.—ரோமர் 3:23.

“உலகத்தின் பாகமாக இல்லாததாலும்”...

“இந்த உலகத்தின் மீதோ, இந்த உலகத்திலுள்ள காரியங்கள் மீதோ அன்பு வைக்காதீர்கள்” என்று அப்போஸ்தலனாகிய யோவான் பைபிளில் எழுதினார். (1 யோவான் 2:15) அவர் எந்த உலகத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்? கடவுளிடமிருந்து விலகி சாத்தானிடம் அடிமைப்பட்டிருக்கும் மனிதவர்க்கத்தைப் பற்றிச் சொன்னார். ஏனென்றால் இன்று சாத்தானே, “இந்த உலகத்தின் கடவுள்.”—2 கொரிந்தியர் 4:4; 1 யோவான் 5:19.

வருத்தகரமாக, இந்த உலகத்தையும் அதன் மோசமான போக்கையும் விரும்புகிற ஆட்கள் பைபிள் நியமங்களின்படி வாழ்கிறவர்களை எதிர்க்கிறார்கள். எனவே, இயேசு தம்முடைய அப்போஸ்தலர்களிடம், “நீங்கள் இந்த உலகத்தின் பாகமாக இருந்திருந்தால், அதற்குச் சொந்தமான உங்களை இந்த உலகம் நேசித்திருக்கும். ஆனால், நீங்கள் உலகத்தின் பாகமாக இல்லாததாலும், நான் இந்த உலகத்திலிருந்து உங்களைத் தேர்ந்தெடுத்திருப்பதாலும் உலகம் உங்களை வெறுக்கிறது” என்று சொன்னார்.—யோவான் 15:19.

கண்ணுக்குப் புலப்படாத சாத்தானின் ஆதிக்கத்தில் இருக்கும் இந்த உலகை, ஆம் ஊழலும் அநீதியும் வன்முறையும் நிறைந்த இந்த உலகை, நேசிக்காத யெகோவாவின் ஊழியர்களை இந்த உலக ஜனங்கள் வெறுத்து ஒதுக்குவதைப் பார்ப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஆனால், நல்மனம் படைத்த அநேகர் இந்த உலகத்தை மாற்ற நினைக்கிறார்கள். ஆனால், சாத்தான் இந்த உலகத்தை ஆளுவதால் அவர்களால் அவனை வெல்ல முடியாது. யெகோவா தேவனால் மட்டுமே அவனை ஒரேயடியாக ஒழித்துக்கட்ட முடியும். அதை விரைவில் செய்யவும் போகிறார்.—வெளிப்படுத்துதல் 20:10, 14.

‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியில்’ இந்த முக்கியமான விஷயமும் உட்படுகிறது. இந்த அருமையான செய்தியைத்தான் யெகோவாவின் சாட்சிகள் உலகம் முழுவதும் அறிவித்து வருகிறார்கள். (மத்தேயு 24:14) ஆம், கிறிஸ்துவை அரசராகக் கொண்ட கடவுளுடைய அரசாங்கம் மட்டுமே இந்தப் பூமியில் நிரந்தர சமாதானத்தையும் சந்தோஷத்தையும் கொண்டுவர முடியும் என்று யெகோவாவின் சாட்சிகள் மனதார நம்புகிறார்கள். (மத்தேயு 6:9, 10) மனிதர்களுடைய அங்கீகாரம் அல்ல கடவுளுடைய அங்கீகாரமே ரொம்ப ரொம்ப முக்கியம் என்பதால் அவர்கள் தொடர்ந்து அரசாங்கத்தைப் பற்றி அறிவித்து வருகிறார்கள். (g11-E 05)

உங்கள் பதில்?

● தர்சு நகரைச் சேர்ந்த சவுல் கிறிஸ்துவின் சீடர்களை ஏன் எதிர்த்தார்?—1 தீமோத்தேயு 1:12, 13.

● இயேசுவை எதிர்த்த சிலருக்கு என்ன தவறான எண்ணம் இருந்தது?—மாற்கு 15:9, 10.

● உண்மை கிறிஸ்தவர்கள் இந்த உலகை எப்படிக் கருதுகிறார்கள்?—1 யோவான் 2:15.

[பக்கம் 13-ன் படம்]

1945-ல் கனடாவிலுள்ள கியுபெக்கில் நற்செய்தியை அறிவித்ததற்காக யெகோவாவின் சாட்சிகள் ஒரு வன்முறை கும்பலால் தாக்கப்பட்டார்கள்

[பக்கம் 13-ன் படத்திற்கான நன்றி]

Courtesy Canada Wide