Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சோஷியல் நெட்வொர்க் சோஷியல் நெட்வொர்க்—சிந்திக்க நான்கு கேள்விகள்

சோஷியல் நெட்வொர்க் சோஷியல் நெட்வொர்க்—சிந்திக்க நான்கு கேள்விகள்

சோஷியல் நெட்வொர்க் சோஷியல் நெட்வொர்க்—சிந்திக்க நான்கு கேள்விகள்

சோஷியல் நெட்வொர்க்கில் மட்டுமல்ல, பொதுவாக இன்டர்நெட்டில் எதைப் பயன்படுத்தினாலும் ஆபத்து இருக்கிறது. * இதை மனதில் வைத்து, பின்வரும் கேள்விகளைக் கவனியுங்கள்.

1 சோஷியல் நெட்வொர்க் என் அந்தரங்கத்தை எப்படி அம்பலப்படுத்திவிடலாம்?

“சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற்போகாது; தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான்.” —நீதிமொழிகள் 10:19.

தெரிந்துகொள்ளுங்கள்: கவனமாக இல்லையென்றால், உங்கள் தனிப்பட்ட விவரங்கள், புகைப்படம், நிகழ்நிலை தகவல்கள் ([status updates] நண்பர்கள் பட்டியலில் இருப்பவர்களுக்கு நீங்கள் அனுப்பும் சிறிய செய்திகள்), கருத்துக்கள் (மற்றவர்களின் நிகழ்நிலை தகவல்களுக்கு நீங்கள் அனுப்பும் பதில்கள்) எல்லாம் உங்களைப் பற்றி அளவுக்கு அதிகமான தகவல்களைச் சொல்லிவிடும். உதாரணமாக, எங்கு குடியிருக்கிறீர்கள், எப்போது வீட்டில் இருப்பீர்கள் (இருக்க மாட்டீர்கள்), எங்கு வேலை செய்கிறீர்கள் அல்லது எங்கு படிக்கிறீர்கள் போன்ற தகவல்களைப் படம் போட்டு காட்டிவிடும். உங்கள் விலாச “விவரம்” ஏற்கெனவே இருக்க, “நாளைக்கு வெளியூர் போகிறோம்” என்ற சின்ன தகவலையும் போட்டுவிட்டால் போதும், அது திருடன் கையில் திறவுகோலைக் கொடுத்த மாதிரிதானே இருக்கும்!

ஈமெயில் முகவரி, பிறந்த தேதி, தொலைபேசி எண் போன்ற தகவல்களைக் கொடுத்தால் வேண்டாத தொல்லைகளும், மிரட்டல்களும் உங்களைத் தேடிவரும். அதோடு, உங்கள் அடையாளமும் திருட்டுப் போய்விடும். வருத்தகரமாக, சோஷியல் நெட்வொர்க் பக்கங்களில் அநேகர் தங்களைப் பற்றிய தகவல்களை அள்ளி வீசியிருக்கிறார்கள்.

ஆன்லைனில் ஒரு தகவலை போட்டுவிட்டால், அது காற்றில் பறக்கவிட்ட பஞ்சு மாதிரிதான் என்பதைப் பலர் மறந்துவிடுகிறார்கள். நான்கு பேருக்கு மட்டுமே நாம் அனுப்பினாலும், கடைசியில் அது யார் கைக்கெல்லாம் போகும் என்பது நம் கையில் இல்லை. ஆம், சோஷியல் நெட்வொர்க் பக்கத்தில் போடப்பட்ட தகவல்கள் எல்லாவற்றையும் எல்லாராலும் பார்க்க முடியும் அல்லது பார்க்கும்படி செய்ய முடியும்.

செய்ய வேண்டியது: ப்ரைவஸி செட்டிங்ஸ் பற்றி நன்கு தெரிந்து கொண்டபின் பயன்படுத்துங்கள். உங்கள் நிகழ்நிலைத் தகவல்கள், புகைப்படம் போன்றவற்றைப் பார்க்கும் உரிமையை நன்கு தெரிந்தவர்களுக்கு, நம்பகமானவர்களுக்கு மட்டும் கொடுங்கள்.

அப்படிச் செய்தாலும், நீங்கள் போடும் விஷயங்கள் நண்பர்கள் வட்டத்தையும் தாண்டி வெளியில் சென்றுவிடும். அதனால், அடிக்கடி உங்கள் பக்கத்தை அலசுங்கள். உங்கள் அடையாளத்தை இணையதள மோசடிக்காரர்கள் திருடுவதற்கு வசதியாக ஏதாவது தகவல்கள் இருக்கிறதா என கவனியுங்கள். நண்பர்கள்தானே என நினைத்து, உங்களுடைய அல்லது மற்றவருடைய அந்தரங்க விஷயங்களை சோஷியல் நெட்வொர்க் பக்கத்தில் பகிர்ந்துகொள்ளாதீர்கள். (நீதிமொழிகள் 11:13) அப்படிப் பகிர்ந்துகொள்ள விரும்பினால், வேறு விதங்களில் தொடர்புகொண்டு பேசுங்கள். “ஒரு விஷயத்தை யாருக்கும் தெரியாம ரகசியமா ஒருத்தர்கிட்ட சொல்லணும்னா ஃபோன்ல பேசுறதுதான் நல்லது” என்கிறாள் கேம்ரன் என்ற இளம் பெண்.

நெஞ்சில் நிறுத்த: கிம் என்ற பெண் இதை அழகாக விளக்குகிறார். “சோஷியல் நெட்வொர்கை பொறுத்தவரைக்கும் நீங்க கவனமா இருந்தா தகவல்கள் ஓரளவு வெளில கசியாம பார்த்துக்க முடியும். பிரச்சினை வர்றதும் வராம இருக்கிறதும் உங்க கையிலதான் இருக்கு.”

2 சோஷியல் நெட்வொர்க் என் நேரத்தை எப்படி உறிஞ்சிவிடலாம்?

‘மிக முக்கியமான காரியங்கள் எவையென நீங்கள் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும்’ —பிலிப்பியர் 1:10.

தெரிந்துகொள்ளுங்கள்: சோஷியல் நெட்வொர்க் உங்கள் நேரத்தை எல்லாம் உறிஞ்சிவிடும், மிக முக்கியமான வேலைகளைக்கூட செய்ய விடாமல் தன் பக்கம் இழுத்துவிடும். கே என்ற பெண் இப்படிச் சொல்கிறாள், “உங்க பட்டியல்ல நண்பர்கள் சேர சேர சோஷியல் நெட்வொர்க்ல நீங்க செலவிடுற நேரமும் அதிகமாயிட்டே போகும். கடைசில அதுக்கு அடிமையா ஆயிடுவீங்க.” இதில் மாட்டிக்கொண்ட சிலர் சொல்வதைக் கவனியுங்கள்.

“உங்களுக்கு பிடிக்கலனாலும் சோஷியல் நெட்வொர்க் சைட்டிலிருந்து வெளில வர்றது ரொம்ப கஷ்டம். அதுலயே பைத்தியம் பிடிச்ச மாதிரி கிடப்போம்.”—அலிஸ்.

“கேம்ஸ், டெஸ்ட், மியூசிக் ரசிகர்களுக்கான பக்கம்னு ஏகப்பட்டது இருக்கு. போதாகுறைக்கு ஒவ்வொரு ஃப்ரெண்டோட விவரங்களா போய் பார்த்துட்டே இருந்தா நேரம் எல்லாம் வீணா போயிடும்.”—ப்ளேன்.

“அது ஒரு சுழல் மாதிரி உங்கள அப்படியே இழுத்துக்கும். ‘இந்த வேலையெல்லாம் இன்னும் செய்யலயா’னு அம்மா கேட்டதுக்கு அப்புறம்தான் தெரியும் எல்லாத்தையும் மறந்து அதுக்குள்ள மூழ்கி போயிருந்தேன்னு.”—அனலிஸ்.

“ஸ்கூல் விட்டதும் எப்படா வீட்டுக்கு போய் ஃப்ரெண்ட்ஸ் எழுதியிருக்கிறத எல்லாம் பார்க்கலாம்னு இருக்கும். அப்புறம், அவங்களுக்கு நான் பதில் அனுப்புவேன், அவங்க புதுசா போட்டிருக்கிற எல்லா ஃபோட்டோவையும் பார்ப்பேன். ஆன்லைன்ல இருக்கும்போது யாராவது இடைஞ்சல் பண்ணுனா எனக்கு கெட்ட கோபம் வரும். எனக்கு தெரிஞ்ச சிலர் எப்பவுமே, வெளில யார் வீட்டுக்காவது போனாலும் ஆன்லைன்லதான் இருப்பாங்க. நடுராத்திரி ஆனாலும் சோஷியல் நெட்வொர்க்கே கதினு கிடப்பாங்க!”—மேகன்.

செய்ய வேண்டியது: நேரம் பணத்தைப் போன்றது, அதை வீணாக்கலாமா? அதனால், நேரத்திற்கும் பட்ஜெட் போட்டுப் பாருங்களேன். முதலில், நெட்வொர்க்கில் எவ்வளவு நேரம் செலவிடுவது நியாயமாக இருக்கும் என எழுதி வையுங்கள். அதன்படி நேரம் செலவிடுகிறீர்களா என்பதை ஒரு மாதத்திற்கு கவனியுங்கள். பிறகு, தேவையான மாற்றங்களைச் செய்யுங்கள்.

நீங்கள் ஒரு பெற்றோரா? உங்கள் டீன்-ஏஜ் பிள்ளைகள் சோஷியல் நெட்வொர்க்கில் அதிக நேரம் செலவிடுகிறார்கள் என்றால் அவர்களுக்கு ஏதாவது பிரச்சினை இருக்கும். அதைக் கண்டுபிடியுங்கள். உதாரணமாக, சோஷியல் நெட்வொர்க்கை அதிகமாக பயன்படுத்துவதற்கு கவலையும், மன அழுத்தமும், தாழ்வு மனப்பான்மையும் காரணமாக இருக்கலாம் என்று சைபர்சேஃப் கிட்ஸ், சைபர்-சாவ்வி டீன்ஸ் என்ற புத்தகத்தில் நான்ஸி ஈ. வில்லர்ட் சொல்கிறார். “அநேக டீன்-ஏஜ் பிள்ளைகள் சமுதாயத்தில் தங்களுக்கென ஒரு அந்தஸ்து வேண்டுமென நினைக்கிறார்கள். நண்பர்களிடம் பேச சோஷியல் நெட்வொர்கை எந்தளவுக்கு பயன்படுத்துகிறோமோ அந்தளவுக்கு சமுதாயத்தில் தங்களுடைய அந்தஸ்து கூடும் என அவர்கள் நினைத்தால் நிச்சயம் அதற்கு அடிமையாகிவிடுவார்கள்” என்றும் அவர் சொல்கிறார்.

உங்கள் வீட்டில் உள்ளவர்களோடு சந்தோஷமாக இருக்க வேண்டிய நேரத்தை சோஷியல் நெட்வொர்க்கோ அல்லது வேறு எந்த ஆன்லைனோ திருடிவிட அனுமதிக்காதீர்கள். க்ரோன் அப் டிஜிட்டல் என்ற தனது புத்தகத்தில் டான் டப்ஸ்காட் இப்படி எழுதினார்: “ஒரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால் வீட்டைவிட்டு தூரத்தில் இருக்கும் குடும்பத்தினரோடு சுலபமாகத் தொடர்புகொள்ள இன்டர்நெட் உதவும். ஆனால் அவர்கள் வீட்டில் இருந்தால் அவர்களிடமிருந்து விலக்கியும் வைத்துவிடும்.”

நெஞ்சில் நிறுத்த: எமிலி என்ற பெண் இப்படி சொல்கிறாள்: “எல்லார்கிட்டையும் ஃப்ரெண்ட்ஷிப் வைக்க சோஷியல் நெட்வொர்க் ஒரு நல்ல வழிதான். அதேசமயம், மணிக்கணக்கா அதுல உக்காராம சட்டுணு ‘ஷட் டவுண்’ பண்ணவும் தெரிஞ்சிருக்கணும்.”

3 சோஷியல் நெட்வொர்க் என் பெயரை எப்படி கெடுத்துவிடலாம்?

“பொன் மற்றும் வெள்ளியைவிட நல்ல பெயர் முக்கியமானது.”—நீதிமொழிகள் 22:1, ஈஸி டு ரீட் வர்ஷன்.

தெரிந்துகொள்ளுங்கள்: சோஷியல் நெட்வொர்க்கில் நீங்கள் போடும் தகவல்கள் அழிக்க முடியாத கெட்டப் பெயரை ஏற்படுத்திவிடலாம். (நீதிமொழிகள் 20:11; மத்தேயு 7:17) அதனால் வரும் ஆபத்துகளைப் பற்றி பலருக்குத் தெரிவதில்லை. “சோஷியல் நெட்வொர்க்ல ஆட்கள் எதையுமே யோசிச்சு செய்றதில்ல. நேர்ல சொல்லத் தயங்குற விஷயங்களையெல்லாம் சாதாரணமா சொல்லிடுறாங்க. பார்க்க சகிக்காததெல்லாம் ‘போஸ்ட்’ பண்ணினா பெயர் கெட்டுப்போயிடும்னு சிலர் யோசிக்கிறதே இல்ல” என்கிறாள் ராக்கெல்.

சோஷியல் நெட்வொர்கில் உங்கள் பெயரைக் கெடுத்துகொண்டால் எவ்வளவு நாட்கள் ஆனாலும் அதை மாற்றவே முடியாது. க்ரோன் அப் டிஜிட்டல் இவ்வாறு சொல்கிறது: “ஆன்லைனில் தாங்கள் போட்ட விஷயங்களால் வேலையை பறிகொடுத்தவர்கள்... வேறு வேலை தேடி அலைபவர்கள்... பற்றிய கதைகள் ஏராளம் ஏராளம்.”

செய்ய வேண்டியது: உங்கள் சோஷியல் நெட்வொர்க் பக்கத்தை வேறு யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்று யோசித்துப் பாருங்கள். உங்களிடமே சில கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘என்னை மற்றவர்கள் இப்படி பார்க்கத்தான் விரும்புகிறேனா? என்னுடைய ஃபோட்டோக்களை யாராவது பார்த்தால் நான் எப்படிப்பட்ட ஆள் என்று கணக்கு போடுவார்கள்? “ஜொள்ளு”... “செக்ஸி”... “பார்ட்டி பைத்தியம்”... என்று கணக்கு போடுவார்களா? ஒரு வேலைக்கு விண்ணப்பிக்கும் போது மேலதிகாரி என் வெப் பக்கத்தைப் பார்த்தால் என்னைப் பற்றி இப்படித்தான் நினைக்க வேண்டுமா? நான் உண்மையில் எப்படிப்பட்டவன் என்பதை இந்தப் படங்கள் காட்டுகிறதா?’

நீங்கள் ஒரு இளைஞர் என்றால், இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘என் பெற்றோர், டீச்சர் அல்லது பெரியவர்கள் யாராவது என் வெப் பக்கத்தைப் பார்த்தால் என்ன ஆகும்? அவர்கள் அதைப் பார்த்தால், படித்தால் எனக்கு தர்மசங்கடமாக இருக்குமா?’

நெஞ்சில் நிறுத்த: உங்கள் பெயரைக் காப்பாற்ற வேண்டுமென்றால், பவுலின் இந்த வார்த்தைகளை மறந்துவிடாதீர்கள்: “ஒருவன் எதை விதைக்கிறானோ அதையே அறுவடை செய்வான்.”—கலாத்தியர் 6:7.

4 சோஷியல் நெட்வொர்க்கில் நண்பர்களை எப்படி கவனமாக தேர்ந்தெடுக்கலாம்?

“ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.” —நீதிமொழிகள் 13:20.

தெரிந்துகொள்ளுங்கள்: உங்கள் நண்பர்களைப் போலத்தான் உங்களுடைய பேச்சும் செயலும் இருக்கும். (1 கொரிந்தியர் 15:33) அதனால், சோஷியல் நெட்வொர்க்கில் நண்பர்களைக் கவனமாகத் தேர்ந்தெடுப்பது முக்கியம். சிலர் பத்து, இருபது, நூறு என்று நண்பர்களை சேர்த்துக்கொண்டே போவார்கள். ஆனால் அவர்களைப் பற்றி இவர்களுக்கு அவ்வளவாக தெரியாது, சிலரை பற்றி ஒன்றுமே தெரியாது. வேறு சிலர், தங்கள் பட்டியலில் இருக்கும் எல்லாருமே நல்லவர்கள் இல்லை என்பதை பிற்பாடு கண்டுபிடித்திருக்கிறார்கள். இவர்கள் சொல்வதைக் கேளுங்கள்.

“கண்டவங்களையெல்லாம் ஃப்ரெண்ட்ஸா ஏத்துக்கிட்டா கண்டிப்பா பிரச்சினைல மாட்டிக்குவாங்க.”—அனலிஸ்.

“எனக்கு தெரிஞ்ச நிறைய பேர் அவங்களுக்கு பிடிக்காதவங்களையும் ஃப்ரெண்டா சேர்த்துக்குவாங்க. அவங்க மனச ஏன் கஷ்டப்படுத்தணும்னு சொல்லுவாங்க.”—லீயன்.

“நேர்ல பார்த்து பேசி பழகுற மாதிரிதான் இதுவும். உங்க ஃப்ரெண்ட்ஸ ரொம்ப கவனமா தேர்ந்தெடுக்கணும்.”—அலெக்ஸிஸ்.

செய்ய வேண்டியது: உங்களுக்கென்று ஒரு எல்லைக் கோட்டை வைத்துக்கொள்ளுங்கள். உதாரணத்திற்கு, சிலர் தங்களுடைய நண்பர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டுமென்று வரையறைகளை வைத்திருக்கிறார்கள்.

“தெரிஞ்சவங்க எல்லாரையுமே ஃப்ரெண்ட்ஸா வச்சிக்கமாட்டேன். நல்லா தெரிஞ்சவங்களதான் ஃப்ரெண்ட்ஸா ஏத்துக்குவேன்.”—ஜீன்.

“ரொம்ப காலமா பழகினவங்கள மட்டும்தான் என் ஃப்ரெண்டா வச்சிப்பேன். பழக்கமில்லாத யாரையும் சேர்த்துக்கமாட்டேன்.”—மோனெக்.

“என்னை மாதிரி விருப்புவெறுப்பு உள்ளவங்கள, நல்லா தெரிஞ்சவங்கள மட்டும்தான் என் ஃப்ரெண்ட்ஸா ஏத்துப்பேன்.”—ரே.

“எனக்கு தெரியாத யாராவது ஃப்ரெண்ட் லிஸ்டில் சேர விரும்புறதா கேட்டா அதுக்கு ‘ஓகே’ கொடுக்க மாட்டேன். அதுல எந்த தப்பும் இல்ல. நேர்ல பழகின ஃப்ரெண்ட்ஸ் மட்டும்தான் ஆன்லைன்லையும் எனக்கு ஃப்ரெண்ட்ஸா இருக்காங்க.”—மேரி.

“அசிங்கமா எழுதினா, சகிக்காத படங்கள போட்டா, அவங்கள என் ஃப்ரெண்ட் லிஸ்ட்ல இருந்து தூக்கிடுவேன். அதையெல்லாம் சும்மா பார்க்குறதே கெட்ட சகவாசம்தான்.”—கிம்.

“நான் சோஷியல் நெட்வொர்க்ல அக்கவுண்ட் வச்சிருந்தப்ப, என்னோட ‘ப்ரைவஸி செட்டிங்ஸ்’ பக்காவா இருந்தது. என் ஃப்ரெண்ட்ஸ் மட்டும் தான் என் வெப் பக்கத்தை பார்க்க முடியும், அவங்களோட ஃப்ரெண்ட்ஸால பார்க்க முடியாது. ஏன்னா அவங்களோட ஃப்ரெண்ட்ஸ் எனக்கு ஒத்துவருவாங்களானு தெரியாதே. முதல்ல அவங்க நல்லவங்களா கெட்டவங்களானே தெரியாதே.”—ஹெதர்.

நெஞ்சில் நிறுத்த: சைபர்சேஃப் என்ற தனது புத்தகத்தில் டாக்டர். க்வென் ஷர்கன் ஓ’கீஃப் இப்படி எழுதினார்: “நேரில் உங்களுக்கு நன்றாகத் தெரிந்தவர்களை மட்டும் ஆன்லைனில் நண்பர்களாக சேர்த்துக்கொள்வதுதான் நல்லது.” * (g12-E 02)

[அடிக்குறிப்புகள்]

^ எந்த நெட்வொர்க் தளத்தைப் பயன்படுத்தலாம், எதைப் பயன்படுத்தக்கூடாது என்று விழித்தெழு! பத்திரிகை சொல்வதில்லை. கிறிஸ்தவர்கள் இன்டர்நெட்டை பயன்படுத்தும்போது பைபிள் நெறிகளை மீறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.—1 தீமோத்தேயு 1:5, 19.

^ சோஷியல் நெட்வொர்க் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, 2012 ஜனவரி-மார்ச் விழித்தெழு! பத்திரிக்கையில் பக்கங்கள் 14-21-ஐப் பாருங்கள்.

[பக்கம் 31-ன் பெட்டி]

பத்திரம்!

உங்கள் அக்கவுண்டை ‘சைன் இன்’ (sign in) செய்தபடியே விட்டுவிட்டால், நீங்கள் இல்லாத நேரத்தில் மற்றவர்கள் உங்கள் வெப் பக்கத்தில் ஏதாவது போட்டுவிடலாம். வழக்கறிஞர் ராபர்ட் வில்சன் இப்படி அறிவுரை சொல்கிறார்: “அக்கவுண்டை ‘சைன் இன்’ செய்தபடியே விட்டுவிடுவது உங்கள் பர்ஸ் அல்லது செல் ஃபோனை ஒரு பொது இடத்தில் வைத்துவிட்டு வருவதைப் போல இருக்கும். உங்கள் வெப் பக்கத்தில் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் போட்டுவிடலாம். அதனால், ‘சைன் அவுட்’ (sign out) செய்ய ஒருபோதும் மறக்காதீர்கள்.”

[பக்கம் 31-ன் பெட்டி]

புலி வாலைப் பிடித்தால்?

சோஷியல் நெட்வொர்கை பயன்படுத்துபவர்கள் “மோசடி, அடையாளத் திருட்டு, மிரட்டல்கள் போன்ற ஆபத்துகளில் தாங்களாகவே மாட்டிக்கொள்கிறார்கள். 15% தாங்கள் எங்கே இருப்பார்கள், எங்கெல்லாம் போவார்கள் என்ற தகவல்களைப் போட்டுவிடுகிறார்கள், 34% பிறந்த தேதியை சொல்லிவிடுகிறார்கள், 21% பிள்ளைகளின் விவரங்கள், போட்டோக்களை போட்டுவிடுகிறார்கள்.”—கன்ஸ்யூமர் ரிப்போர்ட்ஸ் நடத்திய ஆய்வு அறிக்கை.