உலகச் செய்திகள்
உலகம்
உணவு உற்பத்தியை அதிகரித்தால் பசி பட்டினியைப் போக்கிவிடலாம் என்பது தப்புக்கணக்கு. ஏனென்றால், விவசாயிகள் இன்று 1,200 கோடி பேருக்குத் தேவையான உணவைத் தயாரிக்கிறார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. தற்போதைய உலக ஜனத்தொகையைவிட இது 500 கோடி அதிகம். எனவே லாப நோக்கமும், விநியோகிப்பும், வீணடிப்பும்தான் பசி பட்டினிக்கு முக்கியக் காரணங்கள்.
பிரிட்டன், அமெரிக்கா
நிதித் துறையில் வேலை பார்க்கிற நிபுணர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், ஏறக்குறைய காற்பகுதியினர் இப்படிச் சொன்னார்கள்: “பெரிய ஆளாக ஆவதற்கு தில்லுமுல்லு திருகுதாளம் செய்ய தயாராக இருக்க வேண்டும்.” அவர்களில் பதினாறு சதவீதத்தினர், “அதில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்கு” குற்றச்செயலில் இறங்கக்கூடத் தயாரெனச் சொன்னார்கள்.
அர்ஜென்டினா
அர்ஜென்டினாவில் உள்ள ஆசிரியர்களில் ஐந்தில் மூன்று பேர் வேலை அழுத்தத்தின் காரணமாக அல்லது பள்ளியில் நடக்கும் வன்முறையின் காரணமாக வேலையிலிருந்து விடுப்பு கேட்கிறார்கள்.
தென் கொரியா
வீடுகளில் ஒற்றை ஆட்களாக வசிக்கிற கலாச்சாரம்தான் தென் கொரியா எங்கும் சீக்கிரத்தில் உருவாகப்போகிறது.
சீனா
2016 முதற்கொண்டு, ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் காற்றில் மாசு இருக்கக் கூடாதென சீன அரசு நிர்ணயித்திருக்கிறது. ஆனால், அங்குள்ள மூன்றில் இரண்டு நகரங்களால் அந்த அளவை எட்ட முடியாதென்று கருதப்படுகிறது. அதோடு, பல இடங்களில் நிலத்தடி நீரின் தரமும் “மோசமாக அல்லது படுமோசமாக” இருக்கிறதென்று தெரியவந்திருக்கிறது. (g13-E 03)