Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

 குடும்ப ஸ்பெஷல் | திருமணம்

எப்படி மன்னிப்பது?

எப்படி மன்னிப்பது?

சவால்

கணவனோ மனைவியோ உங்கள் மனதைக் காயப்படுத்தும் விதத்தில் பேசிவிட்டால் அல்லது ஏதாவது செய்துவிட்டால் உங்களால் அதை மறக்கவே முடியாது. அவர்கள்மேல் நீங்கள் வைத்திருக்கும் அன்பு குறைந்துவிடும்; கோபம் அதிகமாகும். ‘இதற்கு வேற வழியே இல்லையா? கடைசிவரைக்கும் அன்பே இல்லாத ஒருத்தரோட வாழணுமா?’ என்று நீங்கள் யோசிக்கலாம்.

ஆனால், கோபத்தை மறந்து, உங்களால் அவரை மன்னிக்க முடியும். முதலில், கோபப்படுவதால் வரும் பிரச்சினைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்.

ஏன் முக்கியம்?

கோபத்தை வளர்ப்பது, சந்தோஷமான மணவாழ்க்கைக்கு தடையாக இருக்கும்

மன்னிக்காமல் இருந்தால் மணவாழ்வு முறிந்துவிடும். கோபத்தை வளர்த்தால் அன்பு, நம்பிக்கை போன்றவை குறைந்துவிடும். அதனால்தான், “எல்லா விதமான மனக்கசப்பையும், சினத்தையும், கடுங்கோபத்தையும் . . . உங்களைவிட்டு நீக்கிப்போடுங்கள்” என்று பைபிள் சொல்கிறது. (எபேசியர் 4:31) திருமண வாழ்க்கையில் நிறைய பிரச்சினைகள் வருவதால் கோபம் வருகிறது என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், கோபம்தான் நிறைய பிரச்சினைகளுக்குக் காரணமாயிருக்கிறது என்பதை மறந்துவிடுகிறோம்.

கோபத்தை வளர்த்துக்கொண்டால் உங்களுக்குத்தான் பாதிப்பு. உங்களை நீங்களே கண்ணத்தில் அறைந்துகொண்டு வேறொருவருக்கு வலிக்க வேண்டும் என்று நினைப்பீர்களா? மன்னிக்காமல் மனதில் கோபத்தை வளர்க்கும் ஒருவர் இப்படித்தான் நினைக்கிறார்; தன்னைக் கஷ்டப்படுத்தியவருக்குத் தண்டனை கொடுப்பதாக நினைத்துக்கொண்டு தன்னையே ஏமாற்றிக்கொள்கிறார். மார்க் ஸிக்கல் என்பவர் குடும்பங்களைப் பிணைக்க... என்ற புத்தகத்தில் (ஆங்கிலம்) இப்படிச் சொல்கிறார்: ‘நீங்கதான் அவர்மேல [குடும்பத்திலுள்ள ஒருவர்மேல்] கோபமா இருப்பீங்க. ஆனா, அவரு எதையுமே கண்டுக்காம, எப்பவும் போல ஜாலியா இருப்பார். அவரை தண்டிக்கணும்னு நினைச்சு நீங்க செய்ற எதுவும் அவரை பாதிக்காது, உங்களதான் பாதிக்கும்.’

உங்களையே கண்ணத்தில் அறைந்துகொண்டு வேறொருவருக்கு வலிக்க வேண்டுமென நினைப்பீர்களா? மனதில் கோபத்தை வளர்ப்பவரும் இப்படித்தான் நினைக்கிறார்

கோபப்படுவதா, மன்னிப்பதா என்பது உங்கள் கையில். ‘எனக்கு கோபம் வர்ற மாதிரி அவருதான் நடந்துக்கிட்டாரு’ என்று சிலர் சொல்கிறார்கள். அவர் செய்த தவறையே யோசித்துக்கொண்டிருப்பதால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. உங்கள் கணவனோ மனைவியோ எப்படிப் பேசுவார், எப்படி நடந்துகொள்வார் என்பது உங்கள் கையில் இல்லை. ஆனால், நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள், அதாவது அவர்மீது கோபப்படுகிறீர்களா அல்லது அவரை மன்னிக்கிறீர்களா என்பதுதான் உங்கள் கையில் இருக்கிறது. “ஒவ்வொருவனும் தன்தன் செயல்களைச் சோதித்துப் பார்க்கட்டும்” என்று பைபிள் சொல்கிறது. (கலாத்தியர் 6:4) எனவே, கோபத்தை விட்டுவிடுங்கள்; அவரை மன்னிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

 நீங்கள் என்ன செய்யலாம்?

“உங்கள் எரிச்சல் தணியட்டும்.” ‘அவர்தானே அப்படி நடந்துக்கிட்டாரு, அவரே வந்து பேசட்டும்’ என்று நினைக்காதீர்கள். “சூரியன் அஸ்தமிப்பதற்கு [மறைவதற்கு] முன்பு உங்கள் எரிச்சல் தணியட்டும்” என்று பைபிள் சொல்கிறது. (எபேசியர் 4:26) அதனால், அவர்மேல் கோபப்படாமல், அவரை மன்னித்துவிடுங்கள். மன்னித்து, மறந்துவிட்டால் பிரச்சினைகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.—பைபிள் ஆலோசனை: கொலோசெயர் 3:13.

தொட்டதற்கெல்லாம் கோபப்படாதீர்கள். சிலருக்கு ‘எளிதில் கோபம்’ வந்துவிடும் என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 29:22, NW) நீங்களும் அப்படித்தானா? அப்படியென்றால், உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: “நான் மனசுல பகைய வளர்க்கிறேனா? சீக்கிரத்துல புண்பட்டுவிடுகிறேனா? சின்ன விஷயத்தை எல்லாம் ஊதி பெருசாக்குறேனா?” பைபிள் இப்படிச் சொல்கிறது: “அவன் செய்த தவறையே தொடர்ந்து நீ நினைத்துக்கொண்டிருந்தால் உங்கள் நட்பை அது அழித்துவிடும்.” (நீதிமொழிகள் 17:9, ஈஸி டு ரீட் வர்ஷன்; பிரசங்கி 7:9) திருமண பந்தத்திற்கும் இந்த அறிவுரை பொருந்தும். அதனால், உங்கள் கணவனோ மனைவியோ உங்களுக்குக் கோபம் வருவதுபோல் நடந்துகொண்டால், ‘நான் இன்னும் எப்படி பொறுமையா நடந்துக்கலாம்?’ என்று யோசித்துப் பாருங்கள்.—பைபிள் ஆலோசனை: 1 பேதுரு 4:8.

கோபம் தணியும்வரை காத்திருங்கள். “மவுனமாயிருக்க ஒரு காலமுண்டு, பேச ஒரு காலமுண்டு” என்று பைபிள் சொல்கிறது. (பிரசங்கி 3:7) சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் வாக்குவாதம் செய்ய வேண்டிய அவசியமில்லை. அதனால்தான், “நீங்கள் கோபங்கொண்டாலும், பாவஞ்செய்யாதிருங்கள்; உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள்” என்று பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 4:4) உங்களைக் கஷ்டப்படுத்திய விஷயத்தைப் பற்றி கணவனிடம்/மனைவியிடம் பேச வேண்டுமென்று நினைத்தால், உங்கள் கோபம் குறையும்வரை காத்திருங்கள். பியாட்ரீஸ் என்பவர் சொல்கிறார்: “என் மனச கஷ்டப்படுத்துற மாதிரி என் கணவர் ஏதாவது சொல்லிட்டா, கோபம் குறையிற வரைக்கும் பொறுமையா இருப்பேன். அப்புறம்தான், அது ஒன்னும் அவ்ளோ பெரிய விஷயம் இல்லைனு புரியும். அதனால அவருகிட்ட கோபப்படாம பேசுவேன்.”—பைபிள் ஆலோசனை: நீதிமொழிகள் 19:11.

மன்னித்து மறந்துவிடுங்கள். பைபிளில் “மன்னிப்பது” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் வார்த்தைக்கு “விட்டுவிடு” என்று அர்த்தம். அதற்காக, ‘எதுவுமே நடக்கவில்லை, அவர் உங்களை கஷ்டப்படுத்தவே இல்லை’ என்பதுபோல் நடந்துகொள்ள வேண்டுமென்று அர்த்தமில்லை. மன்னிக்காமல், மனதில் பகையை வளர்த்துக்கொண்டால் நீங்கள்தான் பாதிக்கப்படுவீர்கள், உங்கள் மணவாழ்க்கைதான் பாதிக்கப்படும். அதனால், பிரச்சினையை அப்படியே ‘விட்டுவிடுவதுதான்’ நல்லது. ▪ (g14-E 09)