Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளின் கருத்து

வன்முறை

வன்முறை

காலங்காலமாக வன்முறை சம்பவங்கள் நடந்துவருகின்றன. இதனால் மக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். இதற்கெல்லாம் ஒரு முடிவே வராதா?

வன்முறையைப் பற்றி கடவுள் எப்படி உணருகிறார்?

மக்கள் என்ன சொல்கிறார்கள்?

மத நம்பிக்கை உள்ள நிறையப்பேர்கூட தவறை தட்டிக்கேட்பது சரிதான் என்று சொல்கிறார்கள். பொழுதுபோக்குக்காக வன்முறை காட்சிகளைப் பார்ப்பது தவறல்ல என்று லட்சக்கணக்கானோர் நினைக்கிறார்கள்.

பைபிள் என்ன சொல்கிறது?

வடக்கு ஈராக்கில் இருக்கிற மோசுல் நகரத்துக்கு பக்கத்தில் நினிவே என்ற நகரத்தின் இடிபாடுகள் இருக்கிறது. நினிவே நகரம் அசீரிய சாம்ராஜ்யத்தின் தலைநகராக இருந்தது. அது ரொம்ப செல்வ செழிப்பாக இருந்தபோதே ‘நினிவேயைப் பாழாக்குவேன்’ என்று கடவுள் சொன்னார். (செப்பனியா 2:13) நினிவேயை “வேடிக்கையாக்கிப்போடுவேன்” எனவும் அவர் சொன்னார் ஏன்? ஏனென்றால் நினிவே ‘இரத்தப்பழிகளின் நகரமாக’ இருந்தது. (நாகூம் 1:1; 3:1, 6) கடவுள் ‘கொலை வெறியரை . . . அருவருக்கிறார்.’ அதனால், தான் சொன்னபடியே நினிவேயை அழித்தார்; நினிவே இன்றும் பாழாக கிடக்கிறது—சங்கீதம் 5:6, பொது மொழிபெயர்ப்பு.

வன்முறைக்கு மூலகாரணமாக இருந்தவன் யார் தெரியுமா? அவன்தான் சாத்தான். அவன் கடவுளுக்கும் மனிதர்களுக்கும் பரம எதிரியாக இருப்பவன். இயேசு, அவனை ‘ஒரு கொலைகாரன்’ என்று அழைத்தார். (யோவான் 8:44) “இந்த உலகம் முழுவதும் பொல்லாதவனுடைய (அதாவது, சாத்தானுடைய) கைக்குள்” இருப்பதால் மக்கள் சாத்தானைப் போலவே வன்முறையை விரும்புகிறார்கள். (1 யோவான் 5:19) அதனால்தான், இன்று மக்கள் வன்முறைக் காட்சிகளை விரும்பிப் பார்க்கிறார்கள். ஆனால் நாம் கடவுளை சந்தோஷத்தப்படுத்த என்ன செய்ய வேண்டும்? வன்முறையை வெறுக்க வேண்டும், கடவுளுக்குப் பிடித்த விஷயங்களை செய்ய வேண்டும். * அப்படி செய்ய முடியுமா?

‘வன்முறையில் நாட்டங்கொள்வோரை [கடவுள்] வெறுக்கிறார்.’சங்கீதம் 11:5, பொ. மொ

அதிகமாக கோபப்படுகிறவர்கள் தங்களை மாற்றிக்கொள்ள முடியுமா?

மக்கள் என்ன சொல்கிறார்கள்?

அடிதடி, சண்டை போன்றவை எல்லாம் மனிதர்களின் இரத்தத்திலேயே ஊறிப்போயிருக்கிறது. மனிதர்களால் தங்களை மாற்றிக் கொள்ளவே முடியாது.

பைபிள் என்ன சொல்கிறது?

“கடுங்கோபம், சினம், தீய குணம், பழிப்பேச்சு ஆகிய அனைத்தையும் அறவே விட்டுவிடுங்கள்; ஆபாசமான பேச்சு உங்கள் வாயிலிருந்து ஒருபோதும் வரக் கூடாது . . . பழைய சுபாவத்தையும் அதற்குரிய பழக்கவழக்கங்களையும் களைந்துபோட்டு . . . கடவுள் அருளுகிற புதிய சுபாவத்தை அணிந்துகொள்ளுங்கள்.” (கொலோசெயர் 3:8-10) செய்யமுடியாத ஒன்றை கடவுள் செய்ய சொல்லுவாரா? கண்டிப்பாக இல்லை. மனிதர்களால் தங்களையே மாற்றிக்கொள்ள முடியும். * ஆனால் எப்படி?

முதலாவதாக, கடவுளைப் பற்றி சரியாக தெரிந்து கொள்ள வேண்டும். (கொலோசெயர் 3:10) ஒருவர் கடவுளுடைய அருமையான குணங்களைப் பற்றி தெரிந்துகொள்ளும்போது அவரால் கடவுளை நேசிக்க முடியும். கடவுளுக்குப் பிடித்தது போல வாழவும் முடியும்.—1 யோவான் 5:3.

இரண்டாவதாக, கெட்ட நபர்களோடு பழகக்கூடாது. பைபிள் இப்படி சொல்கிறது: “கோபக்காரனுக்குத் தோழனாகாதே; உக்கிரமுள்ள மனுஷனோடே நடவாதே. அப்படிச் செய்தால், நீ அவனுடைய வழிகளைக் கற்றுக்கொண்டு, உன் ஆத்துமாவுக்குக் கண்ணியை வருவிப்பாய்.”—நீதிமொழிகள் 22:24, 25.

மூன்றாவதாக, ‘ஏன் வன்முறையில் ஈடுபடுகிறேன்’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். கோபத்தை அடக்கத் தெரியாத ஒருவர்தான் வன்முறையில் ஈடுபடுவார். அது அவருக்கு மனபலம் இல்லாததைக் காட்டுகிறது. பொறுமையாக இருப்பவர்களுக்கு மனபலம் அதிகமாக இருக்கும். “வலிமைமிக்க வீரனாக இருப்பதைவிட ஒருவன் பொறுமை மிக்கவனாக இருப்பது நல்லது” என்று பைபிள் சொல்கிறது.—நீதிமொழிகள் 16:32, ஈஸி டு ரீட் வர்ஷன்.

“எல்லா மக்களோடும் சமாதானமாய் இருக்க நாடுங்கள்.”எபிரெயர் 12:14.

வன்முறையே இல்லாத காலம் வருமா?

மக்கள் என்ன சொல்கிறார்கள்?

வன்முறையை யாராலும் ஒழிக்கவே முடியாது.

பைபிள் என்ன சொல்கிறது?

“இன்னுங் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்; . . . சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.” (சங்கீதம் 37:10, 11) சாந்தகுணமுள்ள மக்கள் சந்தோஷமாக வாழ கடவுள் என்ன செய்யப்போகிறார்? நினிவே நகரத்தாரை அழித்ததுபோல் வன்முறையில் ஊறிப்போயிருக்கிற மக்களை அவர் அழிக்கப்போகிறார். அதற்குப்பின்பு பூமியெங்கும் சமாதானம் இருக்கும். யாரும் அதை குலைக்க முடியாது!—சங்கீதம் 72:7.

“சாந்தகுணமுள்ளவர்கள் சந்தோஷமானவர்கள், ஏனென்றால் பூமி அவர்களுக்குச் சொந்தமாகும்.”—மத்தேயு 5:5.

அதனால், மற்றவர்களோடு சமாதானமாக வாழ இப்போதே முயற்சி செய்யுங்கள். கடவுள் சொல்வதுபோல் வாழுங்கள். “ஒருவரும் அழிந்துபோகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டும் என்றே” யெகோவா விரும்புகிறார்; “அதனால்தான் . . . பொறுமையாக இருக்கிறார்” என்று 2 பேதுரு 3:9 சொல்கிறது. ▪ (g15-E 05)

“அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்.”ஏசாயா 2:4.

^ பாரா. 7 இஸ்ரவேல் மக்கள் தங்கள் நாட்டின் எல்லையை பாதுகாத்துக் கொள்வதற்கு போர் செய்தார்கள். கடவுள் அதை அனுமதித்தார். (2 நாளாகமம் 20:15, 17) ஆனால், இஸ்ரவேல் மக்களை நிராகரித்து உண்மைக் கிறிஸ்தவர்களை தன்னுடைய மக்களாக கடவுள் ஏற்றுக்கொண்டார். அவர்களுக்கு எந்த தேசிய எல்லையும் கிடையாது. அதனால், அவர்கள் போர் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

^ பாரா. 11 தங்களுடைய வாழ்க்கையை மாற்றிக்கொண்ட நபர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள, காவற்கோபுரம் பத்திரிகையில் வெளிவரும், “பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது” என்ற கட்டுரைகளைப் பாருங்கள்.