Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளின் கருத்து

பொறுத்துப்போவது

பொறுத்துப்போவது

மற்றவர்களோடு ஒத்துப்போகும்போது, அவர்களை மன்னிக்கும்போது, பொறுத்துக்கொள்ளும்போது சமாதானமாக வாழ முடியும். ஆனால் இப்படி பொறுத்துப்போவதற்கு ஒரு எல்லை இருக்கிறதா?

மற்றவர்களோடு ஒத்து வாழ எது ரொம்ப முக்கியம்?

இன்றைய நிலைமை

‘நான் ஏன் பொறுத்துட்டு போகணும்?’ என்ற எண்ணம் இன்று உலகில் விஷக் காற்றை போல பரவிக்கொண்டு இருக்கிறது. ஜாதி, மதம், இனம், தேசம், கலாச்சாரம் போன்ற வேறுபாடுகள் மக்களுக்கு இடையே இருக்கும் பகையை இன்னும் அதிகமாக்குகிறது.

பைபிள் என்ன சொல்கிறது:

இயேசு கிறிஸ்துவின் காலத்தில் இருந்த நிறைய பேர் மற்றவர்களோடு ஒத்து வாழவில்லை. அன்று இருந்த யூதர்கள், சமாரியர்களை வெறுத்தார்கள். (யோவான் 4:9) பெண்களை ஆண்கள் தாழ்வாக நடத்தினார்கள்; யூத மதத் தலைவர்கள், சாதாரண ஜனங்களை இழிவாக பார்த்தார்கள். (யோவான் 7:49) ஆனால், இயேசு அப்படியில்லை. “இந்த மனுஷன் பாவிகளை வரவேற்கிறான், அவர்களுடன் சேர்ந்து சாப்பிடுகிறான்” என்று அவரை எதிர்த்தவர்களே சொன்னார்கள். (லூக்கா 15:2) இயேசு ஏன் மக்களிடம் கனிவாக, பொறுமையாக நடந்துகொண்டார், அவர்களோடு ஒத்துப்போனார்? ஏனென்றால், மக்களுக்கு கடவுளைப் பற்றி சொல்லிக்கொடுத்து, அவர்களை ஆறுதல்படுத்தத்தான் வந்தார். அவர்களை நியாயந்தீர்ப்பதற்காக வரவில்லை. மக்கள்மீது அன்பு இருந்ததால்தான் இதையெல்லாம் செய்தார்.—யோவான் 3:17; 13:34.

கடவுளைப் பற்றி சொல்லிக் கொடுத்து, மக்களை ஆறுதல்படுத்தத்தான் இயேசு பூமிக்கு வந்தார்

 

நமக்கும் அன்பு இருந்தால்தான் மற்றவர்களோடு ஒத்து வாழ முடியும். அவர்களிடம் குறைகள் இருந்தாலும் அதை பொறுத்துக்கொண்டு, சமாதானமாக இருக்க முடியும். “ஒருவர்மீது ஒருவருக்கு ஏதாவது மனக்குறை இருந்தால், ஒருவரையொருவர் பொறுத்துக்கொள்ளுங்கள், தாராளமாக மன்னியுங்கள்” என்று பைபிள் சொல்கிறது.—கொலோசெயர் 3:13.

“எல்லாவற்றுக்கும் மேலாக, ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு காட்டுங்கள்; ஏனென்றால், அன்பு திரளான பாவங்களை மூடும்.”1 பேதுரு 4:8.

பொறுத்துப்போவதற்கும் ஒரு எல்லை இருக்கிறது. ஏன்?

உண்மை சட்டம் ஒழுங்குக்கு மக்கள் கட்டுப்பட வேண்டும் என்று நிறைய அரசாங்கங்கள் எதிர்பார்க்கிறார்கள். எல்லை மீறும்போது அவர்களை தண்டிக்கிறார்கள்.

 

பைபிள் என்ன சொல்கிறது:

“[அன்பு] கேவலமாக நடந்துகொள்ளாது.” (1 கொரிந்தியர் 13:5) இயேசுவைப் போல் யாருமே மற்றவர்களோடு ஒத்து வாழ்ந்திருக்க முடியாது. இருந்தாலும், கேவலமாக நடந்துகொள்வதை, வெளிவேஷம் போடுவதை, தவறான காரியங்கள் செய்வதை அவர் பொறுத்துக்கொள்ளவில்லை. அதை அவர் வன்மையாக கண்டித்தார். (மத்தேயு 23:13) “தீய செயல்களைத் தொடர்ந்து செய்கிற ஒருவன் ஒளியை [அதாவது, கடவுள் சொல்லும் விஷயங்களை] வெறுக்கிறான்” என்று அவர் சொன்னார்.—யோவான் 3:20.

“பொல்லாததை அறவே வெறுத்து, நல்லதை இறுகப் பற்றிக்கொள்ளுங்கள்” என்று இயேசுவின் சீடரான பவுல் சொன்னார். (ரோமர் 12:9) சொன்னபடி அவர் வாழ்ந்தும் காட்டினார். ஒருசமயம் யூத கிறிஸ்தவர்கள் சிலர், யூதர் அல்லாத கிறிஸ்தவர்களோடு சேராமல் இருந்தார்கள். பவுல் ஒரு யூதராக இருந்தபோதும் அவர்கள் செய்தது தவறு என்று உறுதியாகவும் மரியாதையாகவும் எடுத்துச் சொன்னார். (கலாத்தியர் 2:11-14) அவர்கள் அப்படி நடந்துகொண்டதை பவுல் ஏன் பொறுத்துக்கொள்ளவில்லை? ஏனென்றால், “கடவுள் பாரபட்சம் காட்டாதவர்” என்று அவருக்கு நன்றாக தெரியும். தம்முடைய மக்கள் மத்தியில் இன வேறுபாடு இருந்தால், அதை கடவுள் பொறுத்துக்கொள்ள மாட்டார் என்றும் பவுல் அறிந்திருந்தார்.—அப்போஸ்தலர் 10:34.

எந்தவொரு விஷயத்தையும், பைபிள் சொல்கிறபடி செய்ய வேண்டும் என்பதில் யெகோவாவின் சாட்சிகள் உறுதியாக இருக்கிறார்கள். (ஏசாயா 33:22) அவர்களுடைய சபையில் யாராவது மோசமான தவறு செய்தால், அதை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். கடவுளுக்கு பிரியமாக வாழாதவர்கள் மற்றவர்களையும் மாற்றிவிட வாய்ப்பு இருப்பதால் அவர்களை சபையைவிட்டு நீக்கிவிடுகிறார்கள். இதன்மூலம் “பொல்லாத மனிதனை உங்கள் மத்தியிலிருந்து நீக்கிவிடுங்கள்” என்ற பைபிள் அறிவுரைக்கு கீழ்ப்படிகிறார்கள்.—1 கொரிந்தியர் 5:11-13.

“கர்த்தரில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள்.” சங்கீதம் 97:10.

கெட்ட விஷயங்களை கடவுள் பொறுத்துக்கொண்டே இருப்பாரா?

மக்கள் என்ன நினைக்கிறார்கள்:

தவறு செய்வது மனித இயல்பு. அதனால் கெட்ட விஷயங்கள் நடந்துகொண்டேதான் இருக்கும்.

பைபிள் என்ன சொல்கிறது:

கடவுள் பக்தியுள்ள ஆபகூக் இப்படி புலம்பினார்: “நீர் எனக்கு அக்கிரமத்தைக் காண்பித்து, என்னைத் தீவினையைப் பார்க்கப்பண்ணுகிறதென்ன? கொள்ளையும் கொடுமையும் எனக்கு எதிரே நிற்கிறது; வழக்கையும் வாதையும் எழுப்புகிறவர்கள் உண்டு” என்றார். கடவுள் ஏன் அநியாயத்தை பொறுத்துக்கொண்டு இருக்கிறார் என்று அவர் கேட்டார். (ஆபகூக் 1:3) யெகோவா அவரை ஆறுதல்படுத்தினார். கெட்ட ஜனங்களை நிச்சயம் அழிக்கப்போவதாக சொன்னார். தாம் சொன்ன விஷயம் ‘நிச்சயம் நடக்கும், அது தாமதிக்காது’ என்று வாக்கு கொடுத்தார்.—ஆபகூக் 2:3.

கெட்ட ஜனங்கள் தங்களை திருத்திக்கொண்டு வாழ்வதற்கு இதுவே சரியான சமயம். “துன்மார்க்கன் சாகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமோ? அவன் தன் வழிகளை விட்டுத் திரும்பிப் பிழைப்பது அல்லவோ எனக்குப் பிரியம்” என்று சர்வ சக்தி படைத்த கடவுளான யெகோவா சொல்கிறார். (எசேக்கியேல் 18:23) தங்களை மாற்றிக்கொண்டு யெகோவாவுக்கு பிரியமாக வாழ்கிறவர்களுக்கு அருமையான எதிர்காலம் காத்துக்கொண்டிருக்கிறது. “எனக்கு கீழ்ப்படிகிறவன் பாதுகாப்பாக இருப்பான் . . . அவன் தீமைக்குப் பயப்பட வேண்டியதில்லை” என்று கடவுள் சொல்கிறார்.—நீதிமொழிகள் 1:33, ஈஸி டு ரீட் வர்ஷன். ▪ (g15-E 08)

‘இன்னும் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இருக்கமாட்டான். சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.’ சங்கீதம் 37:10, 11.