உலகச் செய்திகள்
மத்திய கிழக்கு —ஒரு பார்வை
மத்திய கிழக்கு நாடுகள் பழமையான நாகரிகங்களுக்கு தாயாக இருக்கிறது. அள்ள அள்ளக் குறையாத பழங்கால பொருட்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களை இங்கு சுண்டி இழுக்கிறது.
திராட்சமது தயாரித்த கானானியர்கள்
இன்றுள்ள இஸ்ரவேலில், 3,700 வருட பழமையான ஒரு பிரம்மாண்ட திராட்சமது கிடங்கை (சேமித்து வைக்கும் அறையை) 2013-ல் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தார்கள். இதில் 40 பெரிய ஜாடிகள் இருந்தன. இன்றுள்ள 3,000 பாட்டில் திராட்சமதுவை அந்த ஜாடிகளில் சேமித்து வைக்க முடியும். இந்த ஜாடிகளில் படிந்திருந்த திராட்சமதுவின் வண்டலை ஒரு ஆராய்ச்சியாளர் பரிசோதித்தபோது, திராட்சமது தயாரிப்பதில் கானான் நாட்டு மக்கள் திறமைசாலிகள் என்பதை கண்டுபிடித்தார். “எல்லா ஜாடியில் இருந்த திராட்சமதுவும் ஒரே தரத்தில் இருந்தது” என்று அவர் சொன்னார்.
உங்களுக்கு தெரியுமா? பண்டைய இஸ்ரவேலில் “மிகச் சிறந்த திராட்சமது” தயாரிக்கப்பட்டது என்று பைபிள் சொல்கிறது. அதை பெரிய ஜாடிகளில் சேமித்து வைத்தார்கள் என்றும் சொல்கிறது.—உன்னதப்பாட்டு 7:9, NW; எரேமியா 13:12.
கிடுகிடுவென உயரும் ஜனத்தொகை
எகிப்தில், 2010-ஆம் வருடத்தைவிட 2012-ல் 5,60,000 குழந்தைகள் அதிகமாக பிறந்திருக்கிறார்கள் என்று கார்டியன் செய்தித்தாள் சொல்கிறது. “எகிப்தில் வரலாறு கானாத அளவுக்கு ஜனத்தொகை உயர்ந்திருப்பதாக” பசேரா ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த மாகெட் ஆஸ்மான் சொல்கிறார். ஜனத்தொகை இதே வேகத்தில் உயர்ந்தால் சாப்பாடு, தண்ணீர் போன்ற அடிப்படை தேவைகளுக்குக்கூட தட்டுப்பாடு வந்துவிடலாம் என்று சில நிபுணர்கள் சொல்கிறார்கள்.
உங்களுக்கு தெரியுமா? பூமி தாங்கும் அளவுக்குத்தான் அதில் மனிதர்கள் இருக்க வேண்டும் என்றும் அதிலிருக்கிற வளங்கள் எல்லாருக்கும் கிடைக்க வேண்டும் என்றும் கடவுள் விரும்புகிறார்.—ஆதியாகமம் 1:28; சங்கீதம் 72:16.
புதைத்து வைத்திருந்த காசுகள் கண்டெடுக்கப்பட்டன
“நான்காம் வருடம்” என்று பொறிக்கப்பட்டிருந்த 100-க்கும் அதிகமான வெண்கல காசுகள் இஸ்ரவேலில் இருந்த ஒரு நெடுஞ்சாலையின் அருகே கண்டுபிடிக்கப்பட்டது. “நான்காம் வருடம்” என்பது இஸ்ரவேலர்கள் ரோமர்களை எதிர்த்த நான்காவது வருடத்தை குறித்தது. (கி.பி. 69-70) இப்படி எதிர்த்ததால்தான் ரோமர்கள் எருசலேமை அழித்தார்கள். தொல்பொருள் ஆராய்ச்சி இயக்குனர் பாப்லோ பெட்சேர் இப்படி சொல்கிறார்: “இந்த இடத்தில் இருந்த யாரோ ஒருவர், ரோம படை பக்கத்தில் வருவதை பார்த்திருப்பார். எருசலேம் சீக்கிரமாக அழிந்துவிடும் என்று பயந்திருப்பார் . . . அதனால், அவர் இந்த காசுகளை புதைத்து வைத்துவிட்டு பின்னர் எடுத்துக்கொள்ளலாம் என்று நினைத்திருப்பார்.”
உங்களுக்கு தெரியுமா? எருசலேமை எதிர்த்து ரோமர்கள் படையெடுத்து வருவார்கள் என்று கி.பி 33-ல் இயேசு சொன்னார். அது நடக்கும்போது கிறிஸ்தவர்களை மலைகளுக்கு ஓடிப் போகும்படி சொன்னார்.—லூக்கா 21:20-24. (g15-E 09)