Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உண்மையிலேயே ஜொஸிஃபஸ்தான் எழுதினாரா?

உண்மையிலேயே ஜொஸிஃபஸ்தான் எழுதினாரா?

முதல் நூற்றாண்டைச் சேர்ந்த சரித்திராசிரியர் ஃபிளேவியஸ் ஜொஸிஃபஸ், ஜூவிஷ் ஆண்டிக்விட்டீஸ் XX-என்ற ஆங்கில புத்தகத்தில், “கிறிஸ்து என்றழைக்கப்பட்ட இயேசுவின் சகோதரனான யாக்கோபின்” மரணத்தைப் பற்றி குறிப்பிட்டார். பல அறிஞர்கள் இந்த வார்த்தைகளை நம்புகிறார்கள். ஆனால், இதே புத்தகத்தில் இயேசுவைப் பற்றி சொல்லப்பட்டுள்ள இன்னொரு விபரத்தை சிலர் சந்தேகிக்கிறார்கள். அந்த விபரம் டெஸ்டிமோனியம் ஃபிளேவியானம் என்று அழைக்கப்படுகிறது; அதில் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது:

“ஏறக்குறைய இந்தச் சமயத்தில் இயேசு என்ற ஒரு ஞானமுள்ள மனிதன் வாழ்ந்து வந்தார். அவர் அற்புதங்களைச் செய்ததால் அவரை மனிதன் என்று சொல்வது சரிதானா என்று தெரியவில்லை. அவர் அப்பேர்ப்பட்ட போதகராக இருந்ததால் அவர் சொன்னதை மக்கள் ஆவலோடு கேட்டார்கள். அநேக யூதர்களும் புற தேசத்தாரும் அவருடைய போதனையால் கவர்ந்திழுக்கப்பட்டார்கள். அவர்தான் [அந்த] கிறிஸ்து. நம் மத்தியிலிருந்த பெரும்புள்ளிகளின் பேச்சைச் கேட்டு அவரை பிலாத்து சிலுவையில் அறைந்தாலும், ஆரம்பத்திலிருந்தே அவர்மீது அன்பு காட்டியவர்கள் அவரைப் புறக்கணிக்கவில்லை. அவர் மூன்றாம் நாளில் உயிரோடெழுந்து அவர்கள் முன் தோன்றினார். அவரைப் பற்றிய இந்த விஷயங்களையும் பத்தாயிரக்கணக்கான பிற விஷயங்களையும் கடவுளுடைய தீர்க்கதரிசிகள் முன்னறிவித்திருந்தார்கள். அவருடைய பெயரைத் தழுவியே கிறிஸ்தவர்கள் என்ற பெயர் பிறந்தது. இந்த மக்கள் இன்றுவரை இருக்கிறார்கள்.”—ஜொஸிஃபஸ்—த கம்ப்ளீட் உவர்க்ஸ், வில்லியம் விஸ்டன் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டது.

16-ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்தே, இந்த விபரத்தை நம்பியவர்களுக்கும் இதை ஜொஸிஃபஸ்தான் எழுதினாராவென சந்தேகிக்கிறவர்களுக்கும் இடையே கடும் விவாதம் எழுந்திருக்கிறது. கடந்த நான்கு நூற்றாண்டுகளாக நடந்துவந்த இந்தப் பெரும் விவாதத்திற்கு முடிவுகட்ட குறியாய் இருந்தவர்தான் செர்ஸ் பார்டே. இவர் பிரெஞ்சு சரித்திராசிரியர் மட்டுமல்ல, கிரேக்க இலக்கிய வல்லுநருங்கூட. அவர் தன்னுடைய படைப்புகளை லா டெஸ்டிமோனியம் ஃபிளேவியானம்—எக்ஸாமன் இஸ்டோரிக் கன்ஸிடேரேஷன்ஸ் இஸ்டோரியோகிரேஃபிக்ஸ் (த டெஸ்டிமோனியம் ஃபிளேவியானம்—எ ஹிஸ்டாரிக்கல் ஸ்டடி வித் ஹிஸ்டாரிக்கல் கன்ஸிடரேஷன்ஸ்) என்ற புத்தகத்தில் வெளியிட்டார்.

எழுத்தாளரான ஜொஸிஃபஸ் ஒரு கிறிஸ்தவர் அல்ல. அவர் ஒரு யூத சரித்திராசிரியர். அதனால், பெரும்பாலான விவாதங்களுக்குக் காரணம், இயேசுவுக்கு “அந்த கிறிஸ்து” என்ற சிறப்புப் பெயர் சூட்டப்பட்டிருப்பதே. ஜொஸிஃபஸ் ஒரு யூதர் என்றாலும் கிரேக்க மொழியில்தான் எழுதினார். கிரேக்க மொழியில் ஒரு பெயருக்கு முன் சுட்டுப்பெயரைப் பயன்படுத்துவது வழக்கமாக இருந்ததால் “அந்த கிறிஸ்து” என ஜொஸிஃபஸ் எழுதியிருக்கலாம் என்று பார்டே சொல்கிறார். இயேசுவை “அந்த கிறிஸ்து” என ஜொஸிஃபஸ் சொல்ல வாய்ப்பே கிடையாதென சொல்ல முடியாது. ஆனால், இயேசு உண்மையில் வாழ்ந்த ஒரு நபர் என்பதற்கான ஆதாரங்களையே ஜொஸிஃபஸ்ஸின் வார்த்தைகள் தருகின்றன. இந்தக் குறிப்பை விமர்சகர்கள் கவனிக்கத் தவறிவிட்டார்கள் என பார்டே சொல்கிறார்.

அப்படியென்றால், ஜொஸிஃபஸின் எழுத்து நடையை காப்பி அடித்த வேறொரு எழுத்தாளர் இந்தச் சுட்டுப் பெயரைச் சேர்த்திருப்பாரா? சரித்திரத்தையும் எழுத்து நடையையும் ஆராய்ந்து பார்த்து, அப்படி காப்பி அடிப்பது முடியாத விஷயம் என்று பார்டே சொல்கிறார். காப்பி அடிப்பதில் ஒருவர் என்னதான் புலியாக இருந்தாலும் ஜொஸிஃபஸின் எழுத்து நடையைப் பின்பற்றவே முடியாது. ஏனென்றால், அவருடைய எழுத்து நடையே தனிதான்.

அப்படியானால், ஏன் இத்தனை குழப்பங்கள்? பிரச்சினையின் ஆணிவேரைப் பற்றி பார்டே குறிப்பிடுகிறார்: “பூர்வகாலத்திலிருந்த அநேக பதிவுகளைவிட டெஸ்டிமோனியத்தைக் குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளதால் இதைச் சந்தேகிக்கிறார்கள்.” இயேசுவை கிறிஸ்து என ஏற்றுக்கொள்ள விருப்பம் இல்லாததே அவர்களுடைய சந்தேகத்திற்கு முக்கிய காரணம். அதனால் ஏதேதோ சாக்குபோக்குகளை அள்ளி வீசுகிறார்கள்.

டெஸ்டிமோனியம் ஃபிளேவியானத்தின் பேரில் பார்டே ஆராய்ச்சி செய்தவற்றை பார்த்த பிறகாவது அறிஞர்கள் தங்கள் கருத்தை மாற்றிக்கொள்வார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பார்டேயின் படைப்பை பிரபல சரித்திராசிரியர் பியர் ஸோல்ட்ரன் உண்மையென ஏற்றுக்கொண்டிருக்கிறார். இவர் கிரேக்க-யூத மதம் மற்றும் ஆரம்பகால கிறிஸ்தவத்தின் சரித்திராசிரியர். அந்த டெஸ்டிமோனியம் இடையில் சேர்க்கப்பட்டது என அவர் பல காலமாக நம்பினார், டெஸ்டிமோனியத்தை நம்பியவர்களை கேலியும் செய்தார். ஆனால், தன் கருத்தை மாற்றிகொண்டார். பார்டேயின் படைப்புகளே அதற்குக் காரணம் என்று அவர் சொல்கிறார். “ஜொஸிஃபஸ்தான் இந்தப் பதிவை உண்மையிலேயே எழுதினாரா என இனிமேல் யாரும் சந்தேகிக்கக் கூடாது” என்று ஸோல்ட்ரன் எச்சரித்தார்.

யெகோவாவின் சாட்சிகளுக்கோ, இயேசுவை கிறிஸ்து என ஏற்றுக்கொள்வதற்கு இன்னும் நிறைய காரணங்கள் இருக்கின்றன. அதற்கான சான்றுகள் பைபிளில் உள்ளன.—2 தீ. 3:16.