யெகோவாவின் சாட்சிகள் ஏன் போர்களில் ஈடுபடுவதில்லை?
வாசகரின் கேள்வி
யெகோவாவின் சாட்சிகள் ஏன் போர்களில் ஈடுபடுவதில்லை?
எங்கு வாழ்ந்தாலும் சரி, யெகோவாவின் சாட்சிகள் போர்களில் ஈடுபடுவதில்லை. இன்றைக்கு நேற்றைக்கு அல்ல பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இதை கடைப்பிடித்து வருகிறார்கள். அது நாட்டுக்கு நாடு சண்டையாக இருந்தாலும் சரி உள்நாட்டு சண்டையாக இருந்தாலும் சரி, அவர்கள் எதிலும் பங்குகொள்வதில்லை. “போரில் யார் பக்கத்தையும் யெகோவாவின் சாட்சிகள் ஆதரிப்பதில்லை; இந்த விஷயத்தில் உறுதியாக இருக்கிறார்கள்” என்று ஆஸ்திரேலியன் என்ஸைக்ளோப்பீடியா அரை நூற்றாண்டுக்கு முன்பே சொன்னது.
போரில் சாட்சிகள் கலந்துகொள்ளாததற்கு அதிமுக்கிய காரணம், அது அவர்களுடைய மனசாட்சிக்கு விரோதமாக இருக்கிறது. ஏனென்றால், அவர்கள் தங்களுடைய எஜமானராகிய இயேசு கிறிஸ்துவின் கட்டளைகளுக்கும் அவருடைய முன்மாதிரிக்கும் ஏற்ற விதத்தில் தங்களுடைய மனசாட்சியைப் பயிற்றுவித்திருக்கிறார்கள். தம்மைப் பின்பற்றுகிறவர்கள் சக மனிதர்களை நேசிக்க வேண்டும் என இயேசு சொன்னார். “உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்” என்றும் அவர் கட்டளையிட்டார். (லூக்கா 6:27; மத்தேயு 22:39) ஒருமுறை இயேசுவின் சீடர் ஒருவர் அவரை காப்பாற்றுவதற்காக வாளை எடுத்தபோது இயேசு அவரிடம், “உனது வாளை அதன் உறையிலே திரும்பப் போடு. ஏனெனில், வாளை எடுப்போர் அனைவரும் வாளால் அழிந்து போவர்” என்று சொன்னார். (மத்தேயு 26:52, பொது மொழிபெயர்ப்பு) ஆகவே, தம்மைப் பின்பற்றுகிறவர்கள் ஆயுதங்களை எடுக்கக்கூடாது என்று இயேசு சொன்னது மட்டுமல்லாமல் செயலிலும் உணர்த்தினார்.
யெகோவாவின் சாட்சிகள் ஓர் உலகளாவிய சமுதாயமாக ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள். எனவே, போரில் ஈடுபடுவது அவர்கள் மத்தியில் சண்டையை மூட்டி விடும். அதோடு, ‘நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாய் இருங்கள்’ என்ற இயேசுவின் கட்டளைக்கு முற்றிலும் நேர்மாறாகவும் இருக்கும். (யோவான் 13:35) போரில் அவர்கள் ஈடுபடாததற்கு இது மற்றொரு காரணம்.
அன்பைப் பற்றிய இந்த நெறிமுறைகள் யெகோவாவின் சாட்சிகளுக்கு வெறும் ஏட்டுச் சுரைக்காய் அல்ல. இரண்டாம் உலகப் போரின்போது (1939-1945) அவர்கள் எடுத்த உறுதியான தீர்மானத்திலிருந்து இதைத் தெரிந்துகொள்ளலாம். ஐக்கிய மாகாணங்களில், ராணுவத்தில் சேர மறுத்ததற்காக 4,300-க்கும் அதிகமான யெகோவாவின் சாட்சிகள் தேசிய சிறையில் அடைக்கப்பட்டார்கள். பிரிட்டனில், 1,500-க்கும் அதிகமானவர்கள் போர் சம்பந்தப்பட்ட வேலைகளைச் செய்ய மறுத்ததற்காக கைது செய்யப்பட்டார்கள்; அதில் 300-க்கும் அதிகமானவர்கள் பெண்கள். நாசி ஜெர்மனியில் 270-க்கும் அதிகமான சாட்சிகள் ஆயுதம் ஏந்த மறுத்ததால் அரசு உத்தரவின் பேரில் மரண தண்டனை விதிக்கப்பட்டார்கள். நாசி ஆட்சியில் 10,000-க்கும் அதிகமான சாட்சிகள் சிறையிலும் சித்திரவதை முகாம்களிலும் அடைக்கப்பட்டார்கள். ஜப்பானில் இருந்த சாட்சிகளும் பயங்கரமான கொடுமைகளை அனுபவித்தார்கள். இரண்டாம் உலகப் போரிலோ அதற்குப்பின் நடைபெற்ற எந்தவொரு போரிலோ யாராவது தங்களுடைய அன்பானவர்களை இழந்திருந்தால் அதற்கு யெகோவாவின் சாட்சிகள் காரணம் இல்லை என்பதில் அவர்கள் நம்பிக்கையுடன் இருக்கலாம்.
20 வயது வால்ஃப்காங் குசாரோ சொன்ன கடைசி சில வார்த்தைகள் நம்மை சிந்திக்க வைப்பதோடு போரைப் பற்றிய யெகோவாவின் சாட்சிகளின் நோக்குநிலையைத் தெரியப்படுத்துகின்றன. ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த வால்ஃப்காங், 1942-ல் போருக்குச் செல்ல மறுத்ததால் நாசிக்கள் அவரைச் சிரச்சேதம் செய்தனர். (ஏசாயா 2:4) ராணுவ நீதிபதிகளுக்கு முன்பு அவர், “நான் ஒரு யெகோவாவின் சாட்சி, பரிசுத்த வேதாகமத்திலுள்ள கடவுளுடைய போதனைகளின்படி சிறு வயதிலிருந்தே வளர்க்கப்பட்டேன். மனிதகுலத்திற்குக் கடவுள் கொடுத்த மிக முக்கியமான அதேசமயம் பரிசுத்தமான கட்டளை என்னவென்றால், ‘முதலாவது கடவுளை நேசிக்க வேண்டும், அடுத்ததாக உன்னைப்போல் பிறரை நேசிக்க வேண்டும்.’ ‘யாரையும் கொலை செய்யக்கூடாது’ என்றும் அவர் கட்டளையிட்டிருக்கிறார். நம்முடைய படைப்பாளர் இதையெல்லாம் யாருக்காக எழுதி வைத்திருக்கிறார்? மரம் செடி கொடிகளுக்காகவா?” என்று சொன்னார்.—மாற்கு 12:29–31; யாத்திராகமம் 20:13.
சர்வ வல்லமையுள்ள யெகோவா தேவனால் மட்டுமே இந்தப் பூமியில் நிரந்தரமாய் சமாதானத்தைக் கொண்டுவர முடியும் என்று யெகோவாவின் சாட்சிகள் நம்புகிறார்கள். ‘பூமியின் கடைமுனைவரை யுத்தங்களை ஒழியப்பண்ணுவேன்’ என்ற கடவுளுடைய வாக்குறுதி நிறைவேறுவதைக் காண அவர்கள் ஆவலாய்க் காத்திருக்கிறார்கள்.—சங்கீதம் 46:9, NW. (w08 7/1)