Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

விரதமிருத்தல் கடவுளிடம் நெருங்கிச் செல்ல உங்களுக்கு உதவுகிறதா?

விரதமிருத்தல் கடவுளிடம் நெருங்கிச் செல்ல உங்களுக்கு உதவுகிறதா?

விரதமிருத்தல் கடவுளிடம் நெருங்கிச் செல்ல உங்களுக்கு உதவுகிறதா?

‘விரதமிருப்பது நம்முடைய ஆன்மீக நிலையைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்க உதவுகிறது; உணவு, உடை போன்றவையே வாழ்க்கையல்ல என்பதை நமக்கு உணர்த்துகிறது.’ —ஒரு கத்தோலிக்கப் பெண்.

‘விரதமிருப்பது கடவுளோடு ஒரு பந்தத்தை வளர்த்துக்கொள்ள நமக்கு உதவுகிறது.’ —ஒரு யூத போதகர்.

‘விரதமிருப்பது என்னுடைய மதத்தில் ஒரு கடமையாகக் கருதப்படுகிறது; கடவுளுக்கு என் பக்தியையும் நன்றியையும் காட்டுவதற்கான முக்கிய வழியாக இருக்கிறது. நான் கடவுளை நேசிப்பதால் விரதம் இருக்கிறேன்.’ —பஹாய் மதத்தைச் சேர்ந்த ஒருவர்.

உலகிலுள்ள புத்த மதம், இந்து மதம், இஸ்லாமிய மதம், சமண மதம், யூத மதம் போன்ற பல மதங்களைச் சேர்ந்தவர்கள் விரதமிருப்பது சகஜம். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குச் சாப்பிடாமல் நோன்பு இருந்தால் கடவுளிடம் நெருங்கிச் செல்ல முடியுமெனப் பலர் நம்புகிறார்கள்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் விரதம் இருக்க வேண்டுமா? கடவுளுடைய புத்தகமான பைபிள் இதைப் பற்றி என்ன சொல்கிறது?

பைபிள் காலங்களில் விரதம்

பைபிள் காலங்களில் மக்கள் பல காரணங்களுக்காக உபவாசம் இருந்தார்கள்; அதைக் கடவுள் ஏற்றுக்கொண்டார். சிலர் கடுந்துயரத்தில் இருந்ததை அல்லது பாவங்களிலிருந்து மனந்திரும்பியதைக் காட்டுவதற்கு உபவாசம் இருந்தார்கள் (1 சாமுவேல் 7:4-6); இன்னும் சிலர், கடவுளுடைய தயவை அல்லது வழிநடத்துதலைப் பெறுவதற்கு உபவாசம் இருந்தார்கள் (நியாயாதிபதிகள் 20:26-28; லூக்கா 2:36, 37); மற்றவர்கள், கவனத்தை ஊன்றி தியானிப்பதற்கு உபவாசம் இருந்தார்கள்.—மத்தேயு 4:1, 2.

என்றாலும், கடவுள் ஏற்றுக்கொள்ளாத சில விரதங்களைப் பற்றியும் பைபிள் குறிப்பிடுகிறது. சவுல் ராஜா ஆவியுலகத் தொடர்பு கொள்வதற்கு முன்பாக விரதமிருந்தார். (லேவியராகமம் 20:6; 1 சாமுவேல் 28:20) யேசபேலைப் போன்ற பொல்லாத ஆட்களும் அப்போஸ்தலன் பவுலைக் கொல்ல சதித்திட்டம் தீட்டிய மதவெறியர்களும் விரதமிருக்கத் தீர்மானித்தார்கள். (1 இராஜாக்கள் 21:7-12; அப்போஸ்தலர் 23:12-14) பரிசேயர்கள்கூடத் தவறாமல் விரதமிருந்ததற்குப் பேர்போனவர்களாக இருந்தார்கள். (மாற்கு 2:18) ஆனாலும், அவர்களை இயேசு கண்டனம் செய்தார்; ஏனென்றால், அவர்கள் கடவுளைப் பிரியப்படுத்தவில்லை. (மத்தேயு 6:16; லூக்கா 18:12) அதேவிதமாக, சில இஸ்ரவேலருடைய மோசமான நடத்தையினாலும் கெட்ட எண்ணத்தினாலும் அவர்களுடைய விரதத்தை யெகோவா ஏற்றுக்கொள்ளவில்லை.—எரேமியா 14:12.

இந்த உதாரணங்கள் எதைக் காட்டுகின்றன? விரதமிருப்பதால் மட்டுமே கடவுளுடைய பிரியத்தைச் சம்பாதிக்க முடியாது என்பதைக் காட்டுகின்றன. என்றாலும், நேர்மை உள்ளம் படைத்த கடவுளுடைய ஊழியர்கள் பலருடைய விரதத்தைக் கடவுள் ஏற்றுக்கொண்டார். அப்படியென்றால், கிறிஸ்தவர்கள் விரதமிருக்க வேண்டுமா?

கிறிஸ்தவர்கள் கட்டாயம் விரதமிருக்க வேண்டுமா?

வருடத்திற்கு ஒருமுறை பாவநிவாரண நாளின்போது யூதர்கள் ‘[தங்களுடைய] ஆத்துமாவை உபத்திரவப்படுத்த’ வேண்டுமென, அதாவது அவர்கள் விரதமிருக்க வேண்டுமென, மோசேயின் மூலம் கொடுக்கப்பட்ட திருச்சட்டம் கட்டளையிட்டது. (லேவியராகமம் 16:29-31, NW; சங்கீதம் 35:13) அந்த நாளில் மட்டும்தான் விரதமிருக்கும்படி யெகோவா தம் மக்களுக்குக் கட்டளையிட்டிருந்தார். a அவருடைய திருச்சட்டத்திற்குக் கீழ்ப்பட்டிருந்த யூதர்கள் அந்தக் கட்டளையின்படி நடந்திருப்பார்கள். ஆனால், அந்தத் திருச்சட்டத்தை இன்று கிறிஸ்தவர்கள் பின்பற்ற வேண்டியதில்லை.—ரோமர் 10:4; கொலோசெயர் 2:14.

திருச்சட்டத்தின்படி இயேசு விரதமிருந்தார் என்றாலும், அவர் விரதமிருந்ததற்குப் பெயர்போனவராக இருக்கவில்லை. தம்முடைய சீடர்கள் விரதமிருக்கத் தீர்மானித்தால் எதையெல்லாம் மனதில் வைக்க வேண்டுமென அவர் சொன்னார்; ஆனால், விரதமிருக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிடவே இல்லை. (மத்தேயு 6:16-18; 9:14) அப்படியென்றால், தாம் இறந்த பிறகு சீடர்கள் விரதமிருப்பார்களென இயேசு ஏன் குறிப்பிட்டார்? (மத்தேயு 9:15) அவர் அதை ஒரு கட்டளையாகக் குறிப்பிடவில்லை. மாறாக, அவர் இறந்த பிறகு சீடர்கள் மிகுந்த துக்கமடைந்து சாப்பிடக்கூட விருப்பமில்லாமல் இருப்பார்கள் என்று குறிப்பிட்டார்.

ஆரம்பகால கிறிஸ்தவர்கள் விரதமிருந்ததைப் பற்றிய இரண்டு பைபிள் பதிவுகள் என்ன காட்டுகின்றன? நல்ல எண்ணத்தோடு ஒருவர் விரதமிருக்கத் தீர்மானித்தால் அதைக் கடவுள் ஏற்றுக்கொள்கிறார் என்பதைக் காட்டுகின்றன. (அப்போஸ்தலர் 13:2, 3; 14:23) b அதற்காக, கிறிஸ்தவர்கள் கட்டாயம் விரதமிருக்க வேண்டும் என்றில்லை. ஆனால், ஒருவர் விரதமிருக்கத் தீர்மானித்தால், சில ஆபத்துக்களைக் குறித்துக் கவனமாய் இருக்க வேண்டும்.

படுகுழிகள் ஜாக்கிரதை!

விரதமிருக்கையில் தவிர்க்க வேண்டிய ஒரு படுகுழி, நம்மை நாமே நீதிமான்களாகக் கருதிக்கொள்வதாகும். “போலியாகத் தாழ்மை காட்டுவதை” பைபிள் கண்டிக்கிறது. (கொலோசெயர் 2:20-23) தவறாமல் விரதமிருந்ததால் மற்றவர்களைவிட தன்னை உயர்ந்தவனாகக் கருதிய பெருமைபிடித்த பரிசேயனைப் பற்றி இயேசு சொன்ன உவமை எதைத் தெளிவாகக் காட்டுகிறது? அப்படிப்பட்ட மனப்பான்மையைக் கடவுள் வெறுக்கிறாரெனத் தெளிவாகக் காட்டுகிறது.—லூக்கா 18:9-14.

விரதமிருப்பதை நாம் தம்பட்டம் அடிப்பதும் தவறு, வேறொருவர் சொல்வதால் நாம் விரதமிருப்பதும் தவறு. மத்தேயு 6:16-18-ல் நாம் கவனிக்கிறபடி, விரதமிருப்பது நமக்கும் கடவுளுக்கும் இடையிலான விஷயமாகவே இருக்க வேண்டுமென்றும், அதை மற்றவர்களுக்கு விளம்பரப்படுத்தக் கூடாதென்றும் இயேசு அறிவுரை கூறினார்.

விரதமிருப்பது பாவச்செயலுக்குப் பரிகாரமென நாம் ஒருபோதும் நினைத்துவிடக் கூடாது. நம்முடைய விரதத்தைக் கடவுள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றால், நாம் அவருடைய சட்டதிட்டங்களுக்குக் கீழ்ப்படிவதும் அவசியம். (ஏசாயா 58:3-7) விரதமிருப்பது அல்ல, ஆனால் உள்ளப்பூர்வமாக மனந்திரும்புவதே பாவ மன்னிப்புக்கு வழிசெய்கிறது. (யோவேல் 2:12, 13) கிறிஸ்துவின் மீட்பு பலியின் மூலம் யெகோவா காட்டியிருக்கும் அளவற்ற கருணையால்தான் நாம் மன்னிப்பு பெறுகிறோமென பைபிள் தெளிவாகக் காட்டுகிறது. விரதமிருப்பதாலோ வேறு எந்தச் செயலாலோ நாம் மன்னிப்பைப் பெறுவதற்கு வாய்ப்பே இல்லை.—ரோமர் 3:24, 27, 28; கலாத்தியர் 2:16; எபேசியர் 2:8, 9.

ஏசாயா 58:3 இன்னொரு படுகுழியைப் பற்றிக் குறிப்பிடுகிறது. விரதமிருந்ததற்குக் கைமாறாக யெகோவா தங்களுக்கு ஏதாவது செய்ய கடமைப்பட்டிருந்தாரென இஸ்ரவேலர் தப்புக்கணக்குப் போட்டார்கள்; விரதமிருந்ததால் அவருக்கு ஏதோ உதவி செய்ததைப் போலல்லவா அவர்கள் நினைத்துக் கொண்டார்கள்! “நாங்கள் உபவாசம்பண்ணும்போது நீர் நோக்காமலிருக்கிறதென்ன? நாங்கள் எங்கள் ஆத்துமாக்களை ஒடுக்கும்போது நீர் அதை அறியாமலிருக்கிறதென்ன” என்று அவரிடம் கேட்டார்கள். இன்றும் அநேகர், விரதமிருந்தால் கடவுளிடமிருந்து கைமாறாக எதையாவது பெறலாமென நினைத்துக் கொள்கிறார்கள். பைபிள் கண்டிக்கிற அப்படிப்பட்ட மரியாதையற்ற மனப்பான்மை நம்மை ஒருபோதும் தொற்றிக்கொள்ளாதபடி பார்த்துக்கொள்வோமாக!

இன்னும் சிலர், விரதமிருப்பதாலும் தங்களையே சாட்டையால் அடித்துக்கொள்வதாலும் மற்ற விதங்களில் உடலை வருத்திக்கொள்வதாலும் கடவுளுடைய அனுக்கிரகத்தைப் பெறலாமென நம்புகிறார்கள். ஆனால், இந்தக் கருத்தைக் கடவுளுடைய புத்தகம் கண்டனம் செய்கிறது; ‘உடலை வருத்திக்கொள்வது’ கெட்ட ஆசைகளை எதிர்த்துப் போராட “எவ்விதத்திலும் உதவாது” என்று அது சொல்கிறது.—கொலோசெயர் 2:20-23.

சமநிலையான கண்ணோட்டம்

விரதமிருப்பது கட்டாயமான ஒன்றல்ல, அது தவறுமல்ல. சில சந்தர்ப்பங்களில், மேற்குறிப்பிடப்பட்ட படுகுழிகளைத் தவிர்க்கையில், அது பயனுள்ளதாக இருக்கலாம். என்றாலும், விரதமிருப்பதுதானே கடவுள் ஏற்றுக்கொள்ளும் வணக்கத்தின் முக்கிய அம்சம் அல்ல. யெகோவா ‘சந்தோஷமுள்ள கடவுளாக’ இருப்பதால் தம்முடைய ஊழியர்களும் சந்தோஷமாயிருக்க வேண்டுமென விரும்புகிறார். (1 தீமோத்தேயு 1:11) அவருடைய புத்தகம் இவ்வாறு சொல்கிறது: “மனுஷர் யாவரும் புசித்துக் குடித்து தங்கள் சகலப் பிரயாசத்தின் பலனையும் அநுபவிப்பது தேவனுடைய அநுக்கிரகம்.”—பிரசங்கி 3:12, 13.

நாம் சந்தோஷமாகக் கடவுளை வணங்க வேண்டும்; ஆனால் பைபிள், விரதமிருப்பதைச் சந்தோஷத்தோடு சம்பந்தப்படுத்திச் சொல்வதே இல்லை. அதுமட்டுமல்ல, சாப்பிடாமல் இருப்பதால் நம் ஆரோக்கியம் கெட்டுவிடலாம்; அல்லது, நம் படைப்பாளர் கொடுத்திருக்கிற சந்தோஷமான வேலையை, அதாவது கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கிற வேலையை, செய்ய நமக்குச் சக்தியில்லாமல் போய்விடலாம்; அப்படி நடந்தால் விரதமிருப்பதன் நோக்கமே வீணாகிவிடும் என்பதில் சந்தேகமே இல்லை.

நாம் விரதமிருக்கத் தீர்மானித்தாலும்சரி தீர்மானிக்காவிட்டாலும்சரி, மற்றவர்களைக் குற்றப்படுத்தக் கூடாது. இந்த விஷயத்தைக் குறித்ததில், உண்மைக் கிறிஸ்தவர்களிடையே எவ்வித சர்ச்சைக்கும் இடமில்லை; ஏனென்றால், “கடவுளுடைய அரசாங்கம் சாப்பிடுவதோடும் குடிப்பதோடும் சம்பந்தப்பட்டதாக இல்லை; கடவுளுடைய சக்தியினால் உண்டாகிற நீதியோடும் சமாதானத்தோடும் மகிழ்ச்சியோடுமே சம்பந்தப்பட்டதாக இருக்கிறது.ரோமர் 14:17. (w09 4/1)

[அடிக்குறிப்புகள்]

a உபவாசம் இருக்கும்படி எஸ்தருக்குக் கடவுள் கட்டளையிடவில்லை; ஆனால், அவளுடைய உபவாசத்தை அவர் ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது. இன்று யூதர்கள், பூரீம் பண்டிகைக்கு முன்பு எஸ்தரின் உபவாசத்தை வழிவழியாகக் கடைப்பிடித்து வருகிறார்கள்.

b சில பைபிள்கள் உபவாசமிருப்பதைப் பற்றிய குறிப்புகளை வசனங்களில் சேர்த்திருக்கின்றன; ஆனால், அவை பழங்கால கிரேக்க கையெழுத்துப்பிரதிகளில் காணப்படுவதில்லை.—மத்தேயு 17:21; மாற்கு 9:29; அப்போஸ்தலர் 10:30; 1 கொரிந்தியர் 7:5; BSI.

[பக்கம் 26-ன் சிறுகுறிப்பு]

பரிசேயர்கள் விரதமிருந்தபோது போலியான தாழ்மையைக் காட்டினார்கள்

[பக்கம் 27-ன் சிறுகுறிப்பு]

“கடவுளுடைய அரசாங்கம் சாப்பிடுவதோடும் குடிப்பதோடும் சம்பந்தப்பட்டதாக இல்லை; . . . நீதியோடும் சமாதானத்தோடும் மகிழ்ச்சியோடுமே சம்பந்தப்பட்டதாக இருக்கிறது”

[பக்கம் 27-ன் பெட்டி]

லெந்து நாட்களைப் பற்றியென்ன?

கிறிஸ்து 40 நாள் உபவாசம் இருந்ததன் நினைவாக இன்று லெந்து நாட்கள் என்று அழைக்கப்படும் 40 நாள் உபவாச காலம் அனுசரிக்கப்படுகிறது. இருந்தாலும், அந்த உபவாசத்தை அனுசரிக்கும்படி இயேசு தம் சீடர்களுக்குக் கட்டளையிடவே இல்லை; அதோடு, அவருடைய சீடர்கள் அதை அனுசரித்ததற்கு எந்த அத்தாட்சியும் இல்லை. ஈஸ்டருக்கு முன்பு அனுசரிக்கப்படுகிற 40 நாள் உபவாசத்தைப் பற்றிய முதல் ஆதாரப்பூர்வ பதிவு, பொ.ச. 330-ஆம் ஆண்டைச் சேர்ந்த அதனேஸியஸின் கடிதங்களில் காணப்படுவதாகத் தெரிகிறது.

இயேசு தம்முடைய மரணத்திற்கு முன்பு அல்ல, ஆனால் ஞானஸ்நானம் எடுத்த பின்புதான் உபவாசமிருந்தார்; ஆகவே, ஈஸ்டருக்கு முந்தைய வாரங்களில் லெந்து நாட்களை சில மதப்பிரிவுகள் அனுசரிப்பது விசித்திரமாகத் தெரியலாம். என்றாலும், வருடத்தின் ஆரம்பப்பகுதியில் 40 நாள் உபவாசம் இருப்பது பூர்வ பாபிலோனியர்கள், எகிப்தியர்கள், கிரேக்கர்கள் ஆகியோர் மத்தியில் சகஜமாக இருந்தது. ஆகவே, இந்தக் “கிறிஸ்தவ” பழக்கம் அவர்களிடமிருந்தே வந்திருக்க வேண்டும்.